தமிழ்நாட்டிற்கு நாம் ஏன் நீட் வேண்டாம் என்கிறோம்?

இந்த வருட முடிவுகளைக் கொண்டே விளக்குவோம்.

மருத்துவக் கவுன்சில் (MCI) கணக்குப்படி இந்தியாவில் மருத்துவக் கல்லூரி இடங்கள்: 63835

இந்திய முழுவதும் கடை விரித்திருக்கும் ‘ஆகாஷ் ஃபவுன்டேஷன்ஸ்’ (Aakash Foundations) என்ற தனியார் பயிற்சி மய்யத்தில் மட்டும் பயிற்சி எடுத்து வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கை : 61649

அதாவது 63835 மருத்துவ கல்லூரி இடங்களில் 96ரூ இடங்களை இந்த ஒரு தனியார் நீட் பயிற்சி மய்யத்தில் பயின்ற மாணவ மாணவிகள் கைப்பற்றியிருக்கின்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களிடம் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை.

இந்த ஆகாஷ் ஃபவுண்டேஷன் என்ற தனியார் பயிற்சி மய்யத்தில் கட்டணம் என்ன என்று பாருங்கள்...

ஓராண்டுக்கு கட்டணம்  - ரூ. 1,36,526

இரண்டாண்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சிக்கு - ரூ. 3,33,350

குறுகிய கால பயிற்சி - ரூ. 32,804

நல்லா கண்ணை விரிய திறந்து பார்த்துக்கொள்ளுங்கள்.

+2 முடித்துவிட்டு விடுமுறையில் 1 மாதம் நடத்தக்கூடிய குறுகிய கால பயிற்சிக் கட்டணம் மட்டுமே ரூ. 32,804.

குறைந்தபட்சம் ரூ.32804/- இருந்தால் மட்டுமே உங்கள் குழந்தையும் என் குழந்தையும் நீட் தேர்வு பயிற்சிக்குப் போய், படிச்சு, நீட் தேர்வு எழுதி பாசாகி டாக்டர் ஆக முடியும்.

இதற்கும் இந்தியாவில் இருக்கும் CBSE, ICSE, State Board போன்ற எந்தவிதமான ளுலடடயரௌ-க்கும் எந்த தொடர்பும் இல்லை. நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12-ஆம் இடமும் பெற்ற கீர்த்தனா படித்தது சென்னையின் பெரிய பள்ளிகளில் ஒன்றான ‘பி.எஸ்.பி.பி.’ பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். ஆனாலும் கீர்த்தனா இந்த ஆண்டு +2 முடித்துவிட்டு  நேரடியாக நீட் தேர்வு எழுதி இந்த வெற்றியை அடையவில்லை. அவர் +2 முடித்த ஆண்டு 2016.

அதாவது சென்னையில் பெரிய பள்ளிகளில் ஒன்றான ‘பி.எஸ்.பி.பி.’-யில், சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் +2 முடித்த ஒருவர் 2 ஆண்டு தனியார் பயிற்சி மய்யத்தில் இலட்சக்கணக்கான பணம் செலவு செய்து இந்த வெற்றியை அடைந்திருக்கிறார். அவருடைய பேட்டி இணையத்தில் இருக்கிறது. பேட்டியின் போது அவரை சுற்றி பயிற்சி மய்ய ஆசிரியர்கள் குழுமியுள்ளனர். அவர்கள் கழுத்தில் தொங்கும் பட்டைகளே அதற்கு சான்று.

இதனால் தான் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம்.

23 அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

இந்த 23 மருத்துவக் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் கூட எம்.பி.பி.எஸ். படிக்க ஆண்டு கட்டணம் ரூ.32,804 கிடையாது.

ஆனால், ஆகாஷ் மய்யம் குறுகிய கால பயிற்சிக்கு மட்டுமே ரூ.32000/- வாங்குகிறது.

அனிதாவும் பிரதீபாவும் இந்த 23 அரசு கல்லூரிகளில் இருந்த மருத்துவக் கல்லூரி இடங்களுக்குத் தான் போட்டியிட்டார்கள்.

அதற்கான தகுதியும் அவர்கள் இருவருக்கும் இருந்தது,

அனிதா 1175/1200,

பிரதீபா 1125/1200

ஆனால் நீட் என்ற ஒரு தடுப்பை வைத்து அவர்களைப் “பரலோகம்” அனுப்பியாச்சு.

நாங்களும் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இந்த 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 2500+ இடங்களுக்கு மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறோம். போரூரில் இருக்கும் இராமச்சந்திரா  போன்ற தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அல்ல. தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்டமும் இதைத் தெளிவாக சொல்லியிருக்கிறது.

இதைத் தான் தரம் என்று நம் மீது திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு அவர்கள் நோக்கம் தரத்தை கொண்டு வருவதல்ல. பணக்காரர்களை தவிர வேறு யாரும் மருத்துவர் ஆக கூடாது என்பதுதான்.

ஏதோ தமிழ்நாடு மட்டுமே நீட் தேர்வை எதிர்ப்பதாக ஒரு பொய்யான பிம்பத்தை காவி பக்தர்கள் கூட்டம் கட்டமைக்கிறது. இவர்களின் பிதாமகர் உத்தமசீலர் மோடியே குஜராத் முதல்வராக இருந்த போது நீட் தேர்வை எதிர்த்தவர் தான்.

முதல்வராக இருந்த காலத்தில் ஒன்றை எதிர்ப்பதும் ; பிரதமரான பின் அதை ஆதரிப்பதும் உத்தமசீலருக்கு ஒன்றும் புதிதல்ல.

ஆதார் அட்டை , ஜிஎஸ்டி, நீட்  இது மூன்றுமே குஜராத் முதல்வராக மோடி “அய்யா” எதிர்த்தது தான்.

எங்கள் வீட்டில் யாரும் 1200க்கு +2 தேர்வில் 1000 மார்க்கைத் தாண்டியதில்லை. அதனால் 1175 மார்க் வாங்கிய அனிதாவும், 1125 மார்க் வாங்கிய ப்ரதீபாவும் எங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறார்கள். அந்த குழந்தைகளின் மரணங்கள் எங்களுக்கு உயிர் வலியைத் தருகிறது. அதற்காக இந்த தேர்வு முறையை எதிர்க்கிறோம்.

பரம்பரை பரம்பரையாக கல்வியை தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக கொண்டிருப்போர்களுக்கு இது சாதாரணமாக தெரிவதில் வியப்பேதுமில்லை. ஏனென்றால் 1200க்கு 1000 மார்க் என்பது அவர்களுக்கு சர்வ சாதாரணம்.

பணம் + ஜாதி = ‘நீட்’

நீட் ஒரு நவீனத் தீண்டாமை!

Pin It