2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய போரின் போது, நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய குழு செய்திகளை ஆராய்ந்து வெளியிட, ஐ.நா. சபையின் தலைமைச் செயலர் பான். கி. மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு, 2010 செப்டம்பர் திங்களில் தமது பணியை தொடங்கி 8 மாதங்கள் ஆய்வு செய்து 2011 ஏப்ரல் திங்கள் 12 ஆம் நாள் 196 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை ஆதாரத்துடன் சமர்பித்தது.

இக்குழுவில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த மார்சுகி டருவுமன் தென் ஆப்பிரிக்காவைச் சார்ந்த யாஸ்மின் சூக்கா அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ரட்னார் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

இக்குழு தமது அறிக்கையில், இலங்கை அரசு 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்திய போரில் பெருமளவு போர் குற்றங்களை செய்துள்ளது எனவும், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் உட்பட பொதுமக்கள் பலர் பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளனர் என பதிவு செய்ததோடு, போரின் போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளையும் பட்டியலிட்டுள்ளது.

எறிகணைத் தாக்குதல்கள் மூலம் பெருமளவில் பொதுமக்களைப் படுகொலை செய்தது.

மருத்துவமனைகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் மீது தாக்குதல் நடத்தியது.

மனிதாபிமான உதவிகளைத் (உணவு, மருந்துகள்) தடுத்தது.

போரில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும், மனித உரிமை மீறல்களை மேற்கொண்டது (பாலியல் வல்லுறவுகள்)

மேற்கண்ட குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது மேலும், இந்தக் குற்றங்களில் ஈடுபட்ட சிங்களப்படை அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இலங்கை அரசோ, ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை எதிர்த்ததோடு அந்த அறிக்கையைக் கொச்சைப்படுத்தியுள்ளது.

உலகின் பெரும்பான்மையான நாடுகள் இந்த நிபுணர் குழுவின் அறிக்கையை வரவேற்றதோடு, இலங்கை அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளன. போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால்தான், எதிர்காலத்தில் எந்த நாடும் இதுபோன்ற மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடாது என்றும் கூறியுள்ளன.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய போருக்கு ரஷ்யா, சீனா, மற்றும் இந்தியா உதவியாக இருந்தன என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது. இந்நிலையில் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்க இந்திய எதிர்கிறது என்ற செய்தி தற்பொழுது வெளிவந்துள்ளது. இச்செய்தி உலகில் வாழும் 10 கோடி தமிழர்களின் தலையில் விழுந்த பேரிடியாகக் கருதப்படுகிறது.

இதன் மூலம் இந்தியா தமிழர்களுக்கு எதிரான நாடு என்று உலக மக்கள் கருதமாட்டார்களா? இந்தியா தமிழர்களின் பூர்வீக நாடல்லவா? இமயம் முதல் குமரி வரை இந்தியாவை ஆண்டவர்கள் தமிழர்களல்லவா? ஏன் ஈழத்திலும் பல்லாண்டுகள் தன்னிகரில்லா ஆட்சி செய்தவன் தமிழனல்லவா? இன்னும் சொல்லப்போனால் "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்பது வரலாறல்லவா? ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா விடுதலை பெற ஆயுதம் ஏந்தி போராடிய மாவீரன் நேதாஜி சுபாஸ் சந்திர போசோடு தோளோடு தோள் நின்று போராடியவர்கள் தமிழர்களல்லவா? இதனை இந்திய ஆட்சியாளர்கள் ஏன் மறந்தனர்? ஏன் தமிழர்களுக்கு எதிராக? செயல்படுகின்றனர்.

தந்தை பெரியார் ஒரு முறை சொன்னார் “காங்கிரஸ் கட்சியில் இருப்பவன் ஒரு போதும் தமிழனாக இருக்க மாட்டான்'' என்றார். அவர் கூறியதையே உண்மையாக்குகின்றனர் காங்கிரசு கட்சியைச் சார்ந்தவர்கள்.

இன்று உலக நாடுகளில் இலங்கைக்கு ஏற்பட்ட அவலநிலை நாளை இந்தியாவிற்கும் ஏற்பட வேண்டுமா? ஆட்சியாளர்களே அநீதிக்குத் துணை போகாதீர்கள். தொன்மை குடியான தமிழர்களுக்கென ஒரு தனி நாடு கிடைப்பதற்கு இந்தியா தடையாக இருக்குமானால் எதிர்காலத் தமிழ்ச் சமூகம் உங்களை ஒரு போதும் மன்னிக்காது.         

Pin It