amitsha sasikalaஇன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை - சசிகலா சிறை விட்டு வெளிவந்து! அதற்குள் பாவம் அரசியல் துறவி ஆகிவிட்டார் - இல்லை - ஆக்கப்பட்டுவிட்டார்! ‘தீவிர அரசியலில் இறங்குவேன்' என்று சென்ற வாரம் முழக்கமிட்டவர், இன்று அரசியலை விட்டே ஒதுங்குகிறேன் என்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் என்று எழுதிக் கையொப்பமிட்டவர், இன்று வெற்றுத்தாளில் வெறுமனே ‘வி.கே. சசிகலா' என்று மட்டுமே ஒடுங்கிப் போகிறார்.

அவர் சிறை விட்டு வரும்போதுதான் எவ்வளவு ஆர்ப்பாட்டம்! வருகின்ற வழியெல்லாம் வாக்கு வங்கியின் வலிமை காட்டப்பட்டது. வீட்டிற்கு வந்தபிறகும், எதிர்பாராத விருந்தினர்கள் அவரை வந்து சந்தித்தனர். இயக்குனர் இமயமே கொஞ்சம் குனிந்து வந்து பார்த்துவிட்டுப் போனது.

மண்டியிடாத மானத்திற்குச் சொந்தக்காரர், அன்று ஒருநாள் மட்டும் மண்டியிடலாம் என்று பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுத்தார். நன்றி மறக்காத ஒருவர் நான்கு வருடங்களுக்குப் பிறகு நன்றியுணர்ச்சி சட்டென்று மேலிட, தன் மனைவியோடு வந்து தியாகத் தலைவியைச் சந்தித்தார்.

எல்லோரையும் தூக்கி அடிப்பது போல், ஊழலை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர், ‘ட்ராபிக்' கையே சற்று நேரம் நிறுத்திவிட்டு, சசிகலாவை வந்து பார்த்து, அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று சான்றிதழ் வழங்கினார்.

இவ்வளவும் நடந்தபோதெல்லாம் அமைதியாக இருந்த சசிகலா ஏன் திடீரென்று இப்படி ஒரு முடிவெடுத்தார்?

எந்த போதி மரத்தடியில் ஞானம் பெற்றுப் புத்தராய் மாறினார் அவர்? தில்லியில் தயாரிக்கப்பட்ட மரமாகத்தான் அது இருக்க முடியும். வேறு எந்த மரத்திற்கு அவ்வளவு வலிமை வந்து சேரும்?

இவையெல்லாம் வெறும் யூகங்கள் இல்லை. அரசியலை விட்டு ஒதுங்குவதாய்ச் சொல்லும் அந்த அறிக்கை,‘திமுக வை ஆட்சியில் அமர்த்தி விடக்கூடாது' என்னும் வேண்டுகோளுடன் சேர்ந்தே வருகிறது என்றால், இது அரசியல் இல்லாமல் வேறு என்ன?

சரி, அரசியலை விட்டு ஒதுங்குவதற்கும், திமுக எதிர்நிலைக்கும் என்ன தொடர்பு? சசிகலா கட்சி தனித்துப் போட்டியிட்டால், திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரியும். அப்படியானால், சசிகலாவையும், எடப்பாடியையும் சேர்த்து வைத்து விடலாமே? தில்லியின் மிரட்டலுக்கு இங்குள்ள இரட்டையர்கள் பணியாமலா இருப்பார்கள்? இவர்கள்தான், அமித்ஷா அங்கு வரும்போதே, இங்கு குனிய ஆரம்பித்து விடுகின்றனரே! பிறகென்ன, இருவரையும் அல்லது இரண்டு கட்சிகளையும் சேர்த்து விட்டால், வாக்குகள் பிரியாதே என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் அதற்குள் இன்னொரு கணக்கு இருக்கிறது.

ஊழலையும், ஊழலையும் ஒன்று சேர்த்தால் அது மகா ஊழல் கூட்டணி என்று ஆகிவிடாதா? அதிமுக வின் ஊழலாவது இன்றுவரையில் விசாரிக்கப்படாத ஊழல். சசிகலாவின் ஊழலோ, தண்டிக்கப்பட்ட ஊழல். எனவே சேர்த்தாலும் சிக்கல், பிரித்தாலும் சிக்கல்.

ஆகவேதான் புதுவழி ஒன்றைக் கண்டுபிடித்தது பாஜக. அரசியலை விட்டு விலகிக் கொண்டால், சொத்துகளைக் காப்பாற்றிக் கொண்டு, அமைதியாகவாவது வாழலாம். இல்லையென்றால் எல்லாச் சொத்தும் பறிபோய்விடும் என்னும் ஒரே ஒரு மிரட்டல் போதாதா?

பளிச்செனப் புலப்படும் இந்தப் பாஜக வின் அரசியல்தான், சசிகலாவின் திடீர்க் கடிதம். பாஜக வின் தந்திரம் பலித்துவிட்டது.

அரசியலில் தந்திரங்கள் கைதட்டும். ஆனாலும், உண்மைதான் இறுதியில் முரசு கொட்டும்!.

- சுப.வீரபாண்டியன்

Pin It