nupur sharmaகடந்த மே மாதம் 26ஆம் நாள் “டைம்ஸ் நவ்” என்ற தொலைக்காட்சி, நுபுர் ஷர்மா என்ற பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளரை, கியான்வாபி மசூதியில் இருப்பதாகப் புரளி கிளப்பிவிடப்பட்டிருக்கும் சிவலிங்கத்தைப் பற்றி பேச அழைத்திருக்கிறார்கள். நவிகா குமார் என்ற அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இது போன்று இந்துத்துவத் தலைவர்களுக்கு ஒரு ஊடக வெளி உருவாக்கி நச்சுக் கருத்துகளைத் தொடர்ந்து பரப்பி வருவதாகவே தெரிகிறது.

அந்த நிகழ்ச்சியில் நுபுர்ஷர்மா, குரான் சொல்வதாக முகமது நபி அவர்களின் திருமணம் பற்றிய செய்தியை வாசிக்கிறார். 6 வயது கொண்ட ஆயிஷா என்ற பெண்ணை 39 வயது கொண்ட முகமது அவர்கள் திருமணம் செய்துகொண்டார் என்று சொல்லி அவருடைய செயல் பலாத்காரம் ஆகாதா என்ற தொனியில் நாகரிகமற்ற சொற்களைப் பயன்படுத்தி உள்ளார்.

 நபிகள் நாயகத்தை அவமதித்ததாக அவர் மீது உடனடியாக இசுலாமிய மத நிறுவனங்கள் புகார் அளித்தனர்.

வளைகுடா நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டிருந்த இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி திரு.வெங்கையா நாயுடு அவர்கள் ஜூன் 4ஆம் நாள் கட்டார் நாட்டுக்கு பயணம் செய்திருந்த நிலையில், இந்தியத் தூதரை அழைத்து ஒரு (கண்டனக்) கடிதத்தை அளித்தனர். அதில், உலகில் இருக்கும் 200 கோடி இசுலாமியர்களை அவமதித்த கருத்துக்கு வருத்தமும், இந்தியாவிடம் இருந்து நபிகள் குறித்த கருத்துக்கு மன்னிப்பும் கோரியிருந்தனர். துணை ஜனாதிபதி அங்கு இருக்கையில் அவர்கள் எடுத்த இந்த நடவடிக்கையானது விரைவில் காட்டுத் தீ போல பற்றியது. குவைத், இரான், எகிப்து, சவுதி, ஓமன், பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளும், இசுலாமிய ஒத்துழைப்புக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன. இந்தியப் பொருட்களை சந்தையிலிருந்து அப்புறப்படுத்தவும், இசுலாம் வெறுப்புடன் கூடிய இந்தியத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

அடுத்த நாள் ஜூன் 5 அன்று, பாரதிய ஜனதா கட்சி தன் வெறுப்பு அரசியலுக்கு தயார் செய்து வைத்த முக்கிய இரு செய்தித் தொடர்பாளர்களான நுபுர் ஷர்மாவையும், நவீன் குமார் ஜிண்டாலையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கியது. இந்தியா எல்லா மதங்களையும் மதிக்கிறது என்றும் அறிக்கை விட்டது. வளைகுடா நாடுகளின் கண்டனங்கள் குறைந்தபாடில்லை. இப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இந்தியாவின் மரியாதையை மீட்கப் போராடிக்கொண்டிருக்கிறார்!

நம்முடைய கவலையெல்லாம் இது போன்று ஒரு திருப்புமுனையிலாவது நம் மண்ணில் வாழும் இசுலாமியச் சகோதர மக்களின் வாழ்வும் மாண்பும் இந்துத்துவ பயங்கரவாதிகளிடமிருந்து மீண்டுவிடாதா என்பதுதான்.

- சாரதாதேவி

Pin It