கடவுள், மத நம்பிக்கை உடையவர்களே இன்றும் தமிழ்நாட்டில் மிக மிகப் பெரும்பான்மையினர் என்பதுதான் உண்மை. தமிழ்நாட்டில் மட்டுமில்லை, உலகம் முழுவதும் பகுத்தறிவாளர்களின் எண்ணிக்கை குறைவுதான். எல்லா காலங்களிலும், எல்லா நாடுகளிலும் இந்த நிலைதான் இருந்திருக்கிறது, இருக்கும்! இது ஓர் இயற்கையான நிலை. இதற்காக நாம் வெட்கப்படத் தேவையில்லை!

srivilliputhur priests dancingஆனால் அந்தக் கடவுள், மத நம்பிக்கைகளை வைத்துக் கொண்டு அரசியலில் அதிகாரம் செலுத்த முடியும் என்பதை இந்தியாவின் வட மாநிலங்கள் சிலவற்றில் நம்மால் பார்க்க முடிகிறது! தமிழ்நாட்டில் இன்று வரையில் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை!

எப்படியாவது மத நம்பிக்கையை மூலதனமாக வைத்து அரசியலில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்னும் எண்ணத்தின் அடிப்படையில் தான், அண்மையில் மதுரையில் முருக பக்தர்களின் மாநாடு ஒன்று கூட்டப்பட்டது !

அந்த மாநாட்டில் பெருங்கூட்டம் கூடியது என்பது உண்மைதான் என்றாலும், இறுதி விளைவு என்னவோ, அவர்கள் நோக்கத்திற்கே எதிராக முடிந்து விட்டது. அதர்மத்தின் அடையாளங்களாகப் பெரியார், அண்ணா, கலைஞர் படத்தை அவர்கள் மேடையில் காட்டிய போது, தங்கள் கூட்டணிக்குள்ளேயே ஒரு சலசலப்பை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களே, வேறு வழியின்றி, அதற்கு மறுப்பு அறிக்கை கொடுக்க நேர்ந்தது. அண்ணாவைப் பற்றித் தரக்குறைவாக பேசும் போது, அதிமுகவினர் அங்கே வெட்கமற்று அமர்ந்திருந்தார்கள் என்னும் விமர்சனமும் வெளிவந்தது! நயினார் நாகேந்திரன் உள்பட, பாஜகவின் மாநிலப் பொறுப்பாளர்கள் பலரும், அந்தக் காணொளியை நாங்கள் பார்க்கவே இல்லை என்று நம்ப முடியாத பொய்யைச் சொல்லி நழுவினர்.

இன்னொரு பக்கம், மதுரை ஆதீனம் தன்னைக் கொல்லச் சதி நடக்கிறது என்று ஓர் அறிக்கை விட்டதும், அது இப்போது முழுப் பொய் என்று தெரிந்ததோடு, அவருடைய கார்தான் தவறான பாதையில் வந்திருக்கிறது என்பதும் புகைப்படக் கருவிகளின் பதிவின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், அவர்மீது நான்கு பிரிவுகளின் கீழ், வழக்கும் தொடரப்பட்டுள்ளது !

இவை போதாதென்று, திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கையொட்டி, கன்னியாகுமரியில் இருந்து அங்கு வந்திருந்த அர்ச்சகர்கள் சிலர், குடித்துவிட்டுக் குத்தாட்டம் போட்ட காணொளி வெளியாகி, ஊரே சிரித்துக் கொண்டிருக்கிறது! ஒரு பெண்ணின் முகத்தில் விபூதி அடித்து, அந்தப் பெண் மூச்சு திணறுவதைப் பார்த்து அவர்கள் சிரித்துக் கும்மாளமிட்டிருக்கிறார்கள். இதுதான் அர்ச்சகர்கள் செய்யக்கூடிய காரியமா என்று எண்ணி, பக்தர்களே இப்போது வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

பாஜகவினர் இப்போதாவது, ஒன்றை நெஞ்சில் நிறுத்திக் கொள்வது நல்லது. மதங்கொண்ட அரசியல் ஒரு நாளும் தமிழ்நாட்டில் எடுபடாது!

- சுப.வீரபாண்டியன்