மதுரையில் கடந்த 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில், பாஜகவின் கையாளான இந்து முன்னணி பெயரில்
ஒரு மாநாட்டை பாஜகவே நடத்தியிருக்கிறது.
திராவிடத்தை வீழ்த்த...
மோடியை வாழ்த்த....
இந்துக்களின் வாக்கைப் பெற....
முருக வியூகம் அமைத்து மாநாடு கூட்டியிருக்கிறது பாஜக. இதுவே பாஜகவின் முதல்கட்ட அரசியல் தோல்வி தான். எந்தக் காலத்திலும் அந்தக் கட்சியால் தமிழ்நாட்டில் ஒற்றை இலக்க வாக்கு விகிதத்தைத் தாண்டவே முடியாது என்பதற்கு நடந்து முடிந்த மதுரை மாநாடே சாட்சி. அவர்கள் மொழியில் சொல்வதானால் முருகனே சாட்சி.
பா.ஜ.க தனது கொள்கையையோ அல்லது தனது பெயரையோ வெளிப்படையாக அறிவிப்பதற்கே துணிவில்லாமல், அவர்கள் மொழியில் சொன்னால் சாணக்கியத்தனத்தோடு முருக பக்தர்களின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு மாநாடு கூட்டுகிற நிலைமையில் தான் அது இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தொடங்கிய நூறாவது ஆண்டிலும் தமிழ்நாட்டில் அந்த இயக்கத்தின் நிலைமை இப்படி இருக்கிறது என்கிறபோது அவர்கள் ஆட்சியைப் பிடிப்பார்களாம்...? இந்த ஓட்டைத் தோணியில் வலுக்கட்டாயமாக அ.தி.மு.க.வையும் ஏற்றிவிட்டு ' ஞே ' என்று முழித்துக் கொண்டு நிற்கிறது எடப்பாடி பழனிசாமி வகையறா.
1925 ஆம் ஆண்டுதான் இந்திய அரசியல் வரலாற்றின் பல்வேறு திருப்புமுனைகள் நடைபெற்ற ஆண்டு ஆகும். 1924 ஆம் ஆண்டில் சிந்துவெளி நாகரிகம் குறித்த அகழாய்வு முடிவுகளை சர் ஜான் மார்ஷல் தலைமையிலான குழு வெளியிட்டதைத் தொடர்ந்து, ஆரியர்கள் வந்தேறிகள் என்கிற உண்மை வெளிப்பட்டு, " ஓ... நீயும் வந்தேறியா? நாங்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள். நீ ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்தவன் இவ்வளவுதான் வித்தியாசம்!? "
என்று ஆங்கிலேயர்கள் பார்ப்பனர்களைப் பார்த்துக் கேலி பேசியபோதுதான் பார்ப்பனர்களுக்கு ஆபத்து புரிந்தது. வந்தேறி என்கிற தங்கள் மீதான அடையாளத்தை ஆதாரத்தை மடைமாற்ற, இந்து - முசுலீம் பிரிவினைவாத அரசியலைச் செயல்படுத்தத் திட்டமிட்டனர் வடநாட்டு சித்பவன் பார்ப்பனர்கள். அந்தத் திட்டம் தான் 1925 அக்டோபரில் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். என்கிற ஒரு மத பயங்கரவாத அமைப்பு.
அதே 1925 ஆம் ஆண்டில் தான், வர்ணாசிரம - சனாதன ஜாதீய அடுக்கு முறையால் அடிமைப் படுத்தப் பட்டிருந்த பார்ப்பனர் அல்லாதார் சமுதாய மக்களின் உரிமைகளுக்கான சமூகநீதிக் குரலை ஓங்கி முழங்கியபடி, பார்ப்பனர்கள் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்த அன்றைய காங்கிரஸ் கட்சியில் இருந்து தந்தை பெரியார் வெளியேறினார். சுயமரியாதை இயக்கம் தோன்றியது.
அதாவது, 2025 ஆம் ஆண்டு என்பது திராவிடமாடலின் தோற்றுவாயான சுயமரியாதை இயக்கத்திற்கும் நூற்றாண்டு.
ஆரியமாடலின் வழிகாட்டியான சங்க்பரிவார் கூட்டத்திற்கும் நூற்றாண்டு.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கடந்த ஓராண்டு காலமாக தமிழ்நாடு முழுவதும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு திராவிட இயக்கங்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு மாபெரும் மக்கள் விழாவாக, மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் என இன்னமும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1925 ஆம் ஆண்டில் எந்தெந்த முழக்கங்களை சுயமரியாதை இயக்கம் முன்வைத்ததோ அவற்றை எல்லாம் உரிய சட்ட வாய்ப்புகளை, அதிகார வாய்ப்புகளைப் பயன்படுத்தி திமுகவும், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களும் செம்மொழிக் .காவலர் இனஉரிமைத் தலைவர் கலைஞர் அவர்களும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் முன்பே செயல்படுத்தத் தொடங்கி, அது பல்வேறு வடிவங்களில் வளர்ந்து இன்றைக்கு தமிழ்நாட்டை, இந்தியாவின் முன்னேறிய மாநிலப் பட்டியலில் முதல் வரிசையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
2021 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியமைந்த நூற்றாண்டில் மீண்டும் திமுகழகத்தை அரியணையில் அமர்த்தினார்கள் தமிழ்நாட்டு மக்கள். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று இன்னும் ஒருபடி மேலே போய், பார்ப்பனர் அல்லாத சமுதாய மக்களின் நலன் காக்கும் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை, நீதிக்கட்சியின் திட்டங்களை எல்லாம் நவீன வடிவில் செயல்படுத்தி திராவிடமாடல் ஆட்சியை முன்னெடுத்து நடத்தி வருகிறார்.
திராவிட இயக்கங்கள் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையை வெளிப்படையாக அறிவித்து, அதன் தேவையைச் சொல்லி, மக்களைத் திரட்டி, மாநாடுகள் கூட்டி, மீண்டும் அடுத்த நூற்றாண்டுக்கான தீர்மானங்களையும் இயற்றி தமது பயணத்தைத் தொடர்கிறது.
ஆனால், ஆரியம் என்ன செய்கிறது? 1971 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டு மக்களால் வெளுத்து விரட்டப்பட்ட, ராம் ராம் முழக்கத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு, முப்பாட்டன் முருகன் என்கிற முழக்கத்தைக் கையிலெடுத்து அதையும் "பக்தர்கள்" முகமூடி போட்டு, மதுரைத் தெருக்களில் இழுத்து வந்திருக்கிறது பார்ப்பனக் கும்பல்.
ஆறுபடை முருகனையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம்! பக்தி சுற்றுலா போகலாம்! மதுரைய சுற்றிப் பார்க்கலாம்! என்றெல்லாம் பல்வேறு வித்தைகள் காட்டி, தலைக்கு 500 , பயணச் செலவில்லை, உணவுச் செலவுமில்லை, ஞாயிற்றுக் கிழமை விடுமுறையை கொண்டாடலாம்!
என்றெல்லாம் ஆடி ஆஃபர்களை அறிவித்து மக்களை அழைத்து வந்து அதிலே இழுத்து வரப்பட்ட அ.தி.மு.க வினரையும் உட்கார வைத்து, நீதிமன்றத்தில் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை தாங்களே மதிக்காமல் தீர்மானங்களைப் போட்டு, இந்த வாரம் முழுவதும் நெட்டிசன்களுக்கு கண்டன்ட்டும் , பொதுமக்களுக்கு பேசி சிரித்து காறி உமிழ ஒரு வாய்ப்பும் வழங்கியிருக்கிறது மதுரை பாஜக மாநாடு.
திராவிட சமுதாய இன மக்கள் மானமும் அறிவும் உள்ள இனமாக வாழ வேண்டும் என்பதற்காகவே உழைக்கிறது திராவிடமாடல்!
பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெரும்பாண்மைச் சமுதாய மக்களின் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, வாழ்வுரிமைகளுக்காகவும், இன்றைக்கும் அதிகாரத்திலும், களத்திலும் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கிறது திராவிட இயக்கம்.
பெரும்பான்மை மக்களை கடவுளின் பேரால், மதத்தின் பேரால், சாஸ்த்ர - சம்பிரதாயங்களின் பேரால் அடக்கியாண்டு மூன்று விழுக்காடு பார்ப்பன நலனைப் பாதுகாக்கத் துடிக்கிறது ஆரியமாடல்.
எனவே, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும், தமிழ்நாட்டுத் தெருக்களில் ஆரியம் கேலிப் பொருள்தான். திராவிடம் தான் எங்கள் உரிமைக் குரல் என்பதை, உரத்துச் சொல்லியிருக்கிறது மதுரை முருகன் மாநாடு.
அதை 2026 இன்னும் வலிமையாக ஓங்கிச் சொல்லி நிரூபிக்கும். அதற்கான பணிகளை, தீர்மானங்களை, வேலைத் திட்டங்களை அறிவிக்க அதே மதுரையில் சூலை 27ஆம் தேதி கூடுகிறது 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை!'
- காசு.நாகராசன்