ஒடிசா இரயில் விபத்திற்கும் உக்ரைன் போருக்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு சாமானிய மனிதனுக்கு அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் ஒன்றே.

ஜூன் 2 ஆம் தேதி மாலை பாலசோர் - பத்ரக் இரயில் நிலையங்களுக்கு இடையே மூன்று இரயில்கள் ( கோரமண்டல் அதிவிரைவு வண்டி, பெங்களூரு - ஹவுரா விரைவு வண்டி மற்றும் சரக்கு வண்டி) மோதியதால் ஏற்பட்ட விபத்தைக் கண்டிப்பாக எவராலும் மறக்க முடியாது.

 இந்த அரை நூற்றாண்டில் காணாத, ஒரு பெரும் விபத்து இது. கிட்டத்தட்ட 290 உயிரிழப்புகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது விபத்தா? கவனக்குறைவா? அல்லது சதியா? என்பதை விசாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்திற்குக் காரணமானவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் அல்லது தண்டிக்கப்படலாம். அதைக் காலம்தான் முடிவு செய்யும். ஆனால் சமீப காலங்களில் இந்திய ரயில்வே துறையின் சில செயல்பாடுகளை நாம் கவனிக்க வேண்டும். கடந்த 2017 முதல் 2021 வரை மட்டும் 1392 முறை ரயில்கள் தடம் புரண்டுள்ளன. இது ஒன்றும் கற்பனை அல்ல, சிஏஜியின் அறிக்கை. ஒன்று, இரண்டு அல்ல, 1392 முறை. இத்தனை முறை இரயில்கள் தடம் புரண்ட பிறகும் அதை சரி செய்ய ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை ஒன்றிய அரசால் பட்டியலிட முடியுமா?

உலகில் மிகப் பெரிய ஒன்றிய அரசு நிறுவனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்திய இரயில்வே துறையில் இன்று மூன்று லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. குளிரூட்டப்பட்ட பெட்டியில் செல்பவர்களுக்குப் போர்வை எடுத்துத் தரும் பணி காலியாக இருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் இந்த மூன்று லட்சம் பணியிடங்களில் இரண்டு லட்சம் பணியிடங்கள் பயணிகள் பாதுகாப்பு தொடர்புடையவை. ஏன் அந்தப் பணியிடங்கள் இன்றும் நிரப்பப்படவில்லை என்று ஒன்றிய அரசு பதிலளிக்குமா?

கடந்த பிப்ரவரி 8 அன்று தென் மேற்கு மண்டலத் தலைமைச் செயற்பாட்டு மேலாளர் ஒன்றிய அரசிற்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில் தென்மேற்கு மண்டலத்தில் இரயில்வே சிக்னல்கள் தொடர்ச்சியாகப் பழுதடைந்து வருவதாகவும் அதன் காரணமாக விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். அந்த கடிதத்திற்குப் பிறகாவது, ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

ரயில்களில் விபத்தைத் தடுக்க ‘கவச்’ எந்திரம் பொருத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது, விளம்பர நோக்கமா? அல்லது மக்கள் நலன் நோக்கமா?. மக்கள் நலன் தான் நோக்கம் என்றால் 13,200 இரயில் எஞ்சின்களில் வெறும் 65 எஞ்சின்களில் மட்டுமே கவச் எந்திரம் பொருத்தப்பட்டது ஏன்? இந்த எண்ணிக்கை 0.5% விடக் குறைவு என்பது வருத்தத்திற்கு உரியதாகும்.

உக்ரைனில் போர் ஏற்பட்ட பொழுது, அங்கு உள்ள இந்தியர்களைக் குறிப்பாக மருத்துவம் படிக்கும் மாணவர்களை இந்தியா அழைத்து வர ஏற்பட்ட பிரச்சினைகளை நாம் அறிவோம். ஏர் இந்தியா பொதுத்துறை நிறுவனத்தைத் தனியாருக்கு விற்றதால் ஏற்பட்ட நிலை அது. உக்ரைனில் இருந்து அவர்களை அழைத்து வர எந்தத் தனியார் விமான நிறுவனமும் முன்வரவில்லை. ஒரு வேளை ஏர் இந்தியா பொதுத்துறை நிறுவனமாக இருந்திருந்தால், அரசு உத்தரவுப்படி நாம் இந்தியர்களை அழைத்து வந்திருக்க முடியும். ஆனால், கடைசியில் ராணுவ விமானங்களின் உதவியுடன் தான் நாம் அவர்களை அழைத்துவர முடிந்தது. அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதன் அவசியத்தை ஒன்றிய அரசு உணருமா?.

ஒடிசாவில் இரயில் விபத்து ஏற்பட்ட பொழுது கூட, அரசு இயந்திரங்கள் தான் மீட்பு பணியில் ஈடுபட்டன. இரயில்வே துறையைத் தனியாரிடம் ஒப்டைக்கத் திட்டமிடுகிறது ஒன்றிய அரசு என்தை அறிகிறோம். தனியார்வசம் இரயில்வே இருந்து, ஒடிசா விபத்து ஏற்பட்டிருந்தால் தனியார் நிறுவனம் உதவிக்கரம் நீட்டுமா?

 கொரானா காலகட்டத்தில் 50% பயணிகளோடு மட்டுமே பேருந்து இயக்கப்பட வேண்டும் என்று அரசு சொன்ன பொழுது, அது தங்களுக்கு இலாபத்தைத் தராது என்று பேருந்துகளை இயக்க மறுத்தவர்கள் தான் இந்தத் தனியார் முதலாளிகள் என்பதை நாம் மறக்கக் கூடாது. ஒடிசா இரயில் விபத்தின்போது, பாதிக்கப்பட்டவர்களை மீட்க, சென்னையிலிருந்து ஒடிசா செல்ல முயன்றவர்களுக்கு விதித்த விமானக் கட்டணத்தின் விலை ரூ.69, 000. கேட்கவே மனம் அஞ்சுகிறது. தனியார் முதலாளிகளுக்கு இலாபம் தான் குறிக்கோளே தவிர, மக்கள் சேவை அல்ல.

காங்கிரசு ஆட்சியும் பா.ஜ.க. ஆட்சியும் ஒன்றுதான்; திமுக ஆட்சியும் அதிமுக ஆட்சியும் ஒன்றுதான் என்று சில ‘அறிவு ஜீவிகள்’ பேசுவார்கள். ஆனால், ஒடிசா இரயில் விபத்தும் உக்ரைன் போரும் உணர்த்துவதும் ஒன்றுதான். நாம் யாரால் ஆளப்படுகின்றோம் என்பது மிக முதன்மையானது. அவர்கள் விளம்பர விரும்பிகளா அல்லது மக்கள் நலன் கருதிச் சிந்திப்பவர்களா? பெண்களுக்கு வழங்கப்படும் நாப்கின்களுக்கு அதிக வரி விதிப்பவர்களா அல்லது பெண்கல்வியை ஊக்குவிப்பவர்களா? மத அரசியல் செய்பவர்களா அல்லது சனநாயகத்தை விரும்புபவர்களா?

பேராசிரியர் புருனோ சந்திரசேகர்

Pin It