கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

modi and nirmala sitharaman 596மெகா பட்ஜெட் திரைப்படங்களுக்கு விளம்பரம் கொடுப்பது போல் இரண்டாம் நிதித் தொகுப்பு இதோ வருகிறது அதோ வருகிறது என்று 7-8 வாரங்களுக்கு ஓட்டினார்கள். நாமும் பெரிதாக எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கப்பட்டோம், 10% ஜிடிபி மதிப்பளவில் 20 லட்சம் கோடி நிதித் தொகுப்பு என்றார்கள். கடைசியில் பார்த்தால் ‘தாராள’ மனதுடன் இல்லாத கணக்கில் எழுதப்பட்ட வெற்றுக் காசோலையைத் தந்துள்ளார்கள். கண்ணில் காசைக் காட்டாமலே அதில் பல கட்டங்களையும் காட்டியுள்ளார்கள். உடனடி துயர்துடைப்பு நிதி எதுவும் வழங்காமல் யாவும் வருங்காலத்திற்கான கடன் திட்டங்களாகவே அறிவிக்கப்பட்டுள்ளன. தலைமை வங்கி எவ்வளவுதான் வங்கிக் கடன் வீதத்தைக் குறைத்தாலும், அதன் பயன்பாடு இடைநிலையில், கடைநிலையில் உள்ள பயனாளிகளை அடையவே இல்லை என்பதுதான் எதார்த்தம்.

தலைமை வங்கி வங்கிகளைக் கடன் வழங்கச் செய்வதற்காகவும், பணப் புழக்கத்தை அதிகரிக்கவும் தலைகீழ் வங்கிக் கடன் வீதத்தை (‘ரிவர்ஸ் ரெபோ’) 3.75%ஆகக் குறைத்துள்ளது. இது வங்கிகளிடமிருந்து தலைமை வங்கி பெறும் வைப்புத் தொகைக்கான வட்டிவீதம். வங்கிகள் வாராக் கடன் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்க அதீத எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகின்றன. அதனால் வட்டிவீதம் குறைந்தாலும் சரி, கடன் கொடுப்பதற்கு பதில், தலைமை வங்கியிலேயே பணம் பாதுகாப்புடன் இருக்கட்டும் என 8.5 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை கடன் கொடுக்கப் பயன்படுத்தாமல், தலைமை வங்கியில் வரவு வைத்துள்ளன.

பணக் கொள்கையில் என்னதான் தலைகீழ் மாற்றங்கள் கொண்டு வந்தாலும், நடைமுறையில் இங்கிருக்கும் வங்கி அமைப்பின் மூலம், ஜனநாயக முறையில் கடன் விநியோகம் தேவையானவர்களை சென்றடைவதற்கான வாய்ப்புகள் இல்லை. பெருநிறுவனங்களே வங்கிகளிடம் பெரும்பங்கு வாராக்கடன் வைத்துள்ளன என்ற போதிலும், வங்கிகள் செய்வதென்ன? கடன் தேவைப்படும் சிறு நிறுவனங்களுக்குத் தர முன்வராமல், முதலீடு செய்ய முன்வராத பெரும் நிறுவனங்களுக்கே கடன் தர முன்வருகின்றன.

“மத்திய, மாநில அரசுகளும் பெருநிறுவனங்களும் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலுவைத்தொகை வைத்துள்ளன” என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். நிதியமைச்சரோ சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி அளவிற்கு வங்கிக் கடன் வழங்கப்படும் என அறிவித்தார். மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மொத்தக் கடன் தொகை, அரசு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைக் காட்டிலும் மிகக்குறைவு. அதனால்தான் ”கடன் கொடுத்தது யார், வாங்கியது யார்? இரு அமைச்சர்களும் பேசி முடிவெடுங்கள்” என ப. சிதம்பரம் கேட்டுள்ளார்.

மத்திய அரசு, சிறு குறு பயனாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாக சிறு குறு நிறுவனத்திற்கான முதலீட்டு வரம்பை அதிகரித்துள்ளது. சிறு குறு மத்திய நிறுவனங்களுக்கான முதலீட்டு உச்ச வரம்பை 50 கோடியாகவும், ஆண்டுப் புரள்வை 200 கோடியாகவும் உயர்த்தியுள்ளது. ஆயிரங்களில் வருமானம் பெறும் குறு நிறுவனங்களை, கோடிகளில் வருமானம் பெறும் நிறுவனங்களுடன் ஒரே அமைப்பு வரையறையில் வைப்பது, சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடன் மற்றும் பிற சலுகைகளை அதிலுள்ள பெருநிறுவனங்களே பெற்றுக் கொள்ளும் சூழலுக்கே வழி வகுக்கும். மத்திய அரசு வேளாண்மை உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்குக் கூடுதலாக ஒரு பைசா கூட செலவு செய்யாமல் அதற்கான 13 பில்லியன் டாலர் நிதித் தொகையை நபார்ட் வங்கியின் பொறுப்பில் விட்டுள்ளது. ஆனால் நபார்டு வங்கிக்கான அரசின் ஆதரவோ குறைந்து கொண்டே வருகிறது. மத்திய அரசு 2018-19ல் நபார்டு வங்கிக்கு ஒதுக்கிய நிதித் தொகை 2,000 கோடி, 2019-20ல் ஒதுக்கிய தொகை1,500 கோடி, 2020-21ல் 1,000 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.

போராட்டங்கள் முடக்கப்பட்ட இந்த ஊரடங்குச் சூழலைப் பயன்படுத்தி எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மக்கள் விரோதத் திட்டங்களை நடைமுறைபடுத்தியுள்ளது பாஜக அரசு. பொதுத் துறை நிறுவனங்களை வரைமுறை இல்லாமல் தனியார்மயப்படுத்தும் பாஜக, எஞ்சியுள்ள பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்க முடிவெடுத்துள்ளது. முக்கியமான துறைகளில் செயல்படும் நான்கு பொதுத்துறை நிறுவனங்களை மட்டும் விட்டு வைத்து விட்டு மற்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்க முடிவெடுத்துள்ளது.

‘தற்சார்பு’ என்ற பெயரில் பொருளாதாரத் தற்சார்பை அழிக்கும் விதமாக 8 திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. நிலக்கரி உற்பத்தி, சுரங்க வேலைகள்-தாது உற்பத்தி, பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தி, விமானத் துறை, மின் விநியோகம், விண்வெளி ஆய்வு, அணு ஆற்றல் என எஞ்சியிருந்த துறைகளிலும் அரசின் முற்றுரிமையை நீக்கி அவை முற்றிலுமாகத் தனியாருக்குத் திறந்து விடப்பட்டுள்ளன. நிலக்கரி, பாதுகாப்புத் துறையில் நேரடி முதலீட்டின் உச்ச வரம்பை 49%இலிருந்து 74% ஆக உயர்த்தியுள்ளது. ‘மின்சார சட்டத் திருத்த மசோதா - 2020’இன் மூலம் மின்சார உற்பத்தியையும், மின் விநியோகத்தையும் முற்றிலும் தனியார்மயப்படுத்தும் திட்டத்தால், மின் கட்டணத்தை நிர்ணயிக்கும், வசூலிக்கும் உரிமை அனைத்தும் தனியார் நிறுவனங்களிடமே சென்று விடும். இதனால் மின் கட்டணம் கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. விவசாய வேலைகள், சிறு, குறு நிறுவனங்கள், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் அனைவரையும் இது கடுமையாக பாதிக்கும்.

பேரிடர் மேலாண்மை விதியைப் பயன்படுத்தி மாநிலங்களின் உரிமைகளில் வரம்பின்றி தலையிடுகிறது மத்திய அரசு. மாநில அரசுகள் செலவினங்களுக்கான நிதியில்லாமல் அல்லாடும் நிலையில் இறுதியாக மாநில அரசுகளின் கடன் பெறும் உச்ச வரம்பு 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசுகள் கூடுதலாக ரூ.4 லட்சம் கோடி கடன் பெற முடியும் என்ற போதிலும், அதிலும் கூட மாநில அரசுகளின் கழுத்தில் கத்தி வைத்துள்ளது பாஜக அரசு. இந்த 2% கூடுதல் கடனில் 0.5% கடனை மட்டுமே மாநில அரசுகள் நிபந்தனையின்றிப் பெற முடியும், மீதமுள்ள 1.5% கடனைப் பெற வேண்டுமானால் மத்திய அரசு பரிந்துரைத்துள்ள மேலே கூறப்பட்ட மக்கள் விரோதத் திருத்தங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். பொது விநியோகம், மின் விநியோகம் ஆகியவற்றை தனியார்மயப்படுத்த வேண்டும், தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்க வேண்டும். இல்லையென்றால் கூடுதல் கடன் கிடையாது என மாநிலங்களை தவிக்கவிட்டுள்ளது பாஜக அரசு.

இனிமேல் விவசாயிகள் தம் விருப்பம் போல், விரும்பிய விலையில் எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்பது போல் படங்காட்டி விவசாயச் சந்தைகளை முற்றிலும் தனியார்மயமாக்கப் போகிறது பாஜக அரசு. இதன் மூலம் விலையை நிர்ணயிக்கும் உரிமை அரசிடமிருந்து விவசாயிகளுக்கு செல்லவில்லை, அரசிடமிருந்து முற்றிலும் தனியாருக்குச் சென்றுள்ளது. அரசின் உதவியுடன் விலை நிர்ணயம் செய்யும் அமைப்புமுறை விவசாய விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதன் மூலம் தனியார் சந்தைகளின் விலைவீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்து வந்தது. அதை நீக்கும் விதமாக இப்போது விவசாயச் சந்தைகளை முற்றிலும் தனியார்மயப்படுத்த உள்ளதால் விலையை நிர்ணயம் செய்யும் முற்றுரிமை தனியார் பெருநிறுவனங்களிடம் சென்று விடும். இதனால் விலைவீழ்ச்சியால் விவசாயிகள் மேலும் கடுமையாக பாதிக்கப்படவுள்ளார்கள். ஆனால் இது வெறும் விவசாயிகளுக்கான பிரச்சினை மட்டுமல்ல. விவசாய சந்தைகள் முற்றிலும் தனியார்மயமாக்கப்படுவதால் பொது விநியோக முறையும் முடிவுக்கு வரவுள்ளது.

உணவு கார்ப்பரேசன் விவசாயிகளிடம் குறைந்தபட்ச ஆதார விலை தந்து விவசாய விளைபொருட்களைக் கொள்முதல் செய்வதன் மூலமே பொது விநியோக முறை செயல்பட்டு வந்தது. குடும்ப அட்டைகளின் மூலம் மாதம்தோறும் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் பெற்று வாழும் கோடிக்கணக்கான எளிய மக்களின் வயிற்றில் மண் வார்க்கவுள்ளது. இத்திட்டத்தினால் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குகிறோம் என இதுவரை ஏமாற்றிவந்தார்கள். இப்போழுது விவசாய விளைபொருட்களின் சந்தையை முற்றிலும் தனியார்மயப்படுத்துவதால் குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் கூட இல்லாமல் விவசாயிகளை நிர்க்கதி நிலைக்குத் தள்ளியுள்ளனர்.

பாஜக அரசு இந்தியாவெங்கும் 461,589 ஹெக்டேர் நிலங்களைப் பெருநிறுவனங்களுக்குத் தாரைவார்க்கவும் தயாராக உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் பயணத்துக்காக விடப்பட்டிருந்த ரயில்களை ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுக்காக வேண்டி ரத்துச் செய்த கர்நாடகாவின் பாஜக அரசு, தொழில் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நிலங்களை கையகப்படுத்துவதற்கான சட்டம் கொண்டுவந்துள்ளது.

இந்த ஆண்டில் இது வரை இந்தியாவிலிருந்து 16 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய முதலீடுகள் வெளியேறியுள்ளன. மே மாதத்தில் மட்டும் 21,418 கோடிக்கு மேல் அந்நிய முதலீடுகள் வெளியேறியுள்ளன. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ந்து வருகிறது. இந்நிலையில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, குறிப்பாக சீனாவிலிருந்து வெளியேறும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்க வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆணையிட்டு வருகிறது.

தொழிலாளர்களை சித்திரவதை செய்துதான் அந்நிய முதலீடுகளை அழைத்து வர வேண்டுமா என்ன? சீனாவைக் காட்டிலும் இந்தியாவில் கூலி குறைவாக இருப்பதை அறிந்திருந்தும் இதுவரை வராத அந்நிய முதலீட்டாளர்களா இந்தப் பொருளாதார மந்தநிலையிலா முதலீடு செய்ய வரப்போகிறார்கள்?

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் 27.1%ஆக எகிறியுள்ளது. கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க எந்தத் திட்டங்களும் இல்லை. உழைப்பை மலிவாக்கி, உழைப்புச் சுரண்டலைக் கடுமையாக்கவே திட்டம் வகுத்துள்ளது பாஜக அரசு. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கியுள்ளார்கள். தொழிலாளர் நலச் சட்டங்கள் நீக்கப்பட்டதால் நிறுவனர்கள் நினைத்தபடி தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்ய முடியும்; அவர்களின் கூலியைக் குறைக்க முடியும்; இதனால் தொழிற்சங்கங்களுடைய கூலி நிர்ணயிக்கும் ஆற்றல் பறிக்கப்பட்டுள்ளது, வேலை-நாள் 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் சுகாதாரமான சூழலில், பாதுகாப்பாக வேலை செய்வதற்கான குறைந்தபட்ச உத்தரவாதமும் இதன் மூலம் அழிக்கப்பட்டுள்ளது.

வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஏப்ரல் மாதத்திற்கான அறிக்கையின் படி மார்ச் மாதத்தில் எட்டு முதன்மைத் தொழில்துறைக் குறியீட்டின் வளர்ச்சி விகிதம் (-9%) சரிந்தது, ஏப்ரல் மாதத்தில் (-38.1%) மேலும் சரிந்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோயால் ஏப்ரல் மாதத்தில் நடைமுறைபடுத்தப்பட்ட நாடு தழுவிய பொருளாதார முடக்கத்தால் பல்வேறு தொழில்துறைகளின் உற்பத்தியிலும் கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தி (-15.5%), கச்சா எண்ணெயின் உற்பத்தி (-6.4%), இயற்கை எரிவாயு உற்பத்தி (-19.9%), சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி (-24.2%) உர உற்பத்தி (-4.5%), உருக்கு உற்பத்தி (-83.9%), சிமெண்ட் உற்பத்தி (-86%), மின்சார உற்பத்தி (-22.8%) எல்லாமே குறைந்துள்ளன.

மார்ச் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் (ஐஐபி) படி உற்பத்தித்துறையின் இருபத்துமூன்று தொழில் வகைகளில் சுரங்கத் துறை தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் உற்பத்தி வளர்ச்சி எதிர்மறையாக உள்ளது. உற்பத்தித் துறை (-20.6%) குறுக்கமடைந்துள்ளது. உணவுப் பொருட்களின் உற்பத்தி (-10.5%) குறைந்துள்ளது. முதன்மைப் பொருட்களின் உற்பத்தி (-3.1%), மூலதனப் பொருட்களின் உற்பத்தி (-35.6%), இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி (-18.5%), உள்கட்டமைப்பு/கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி (-23.8%), நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி (-33.1%), உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி (-16.2%) எல்லாமே குறைந்துள்ளன.

2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டின் (ஜனவரி-மார்ச்) பொருளாதார நிலை: 2019-20ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2019-2020 நிதியாண்டின் மொத்த வளர்ச்சி தற்காலிக மதிப்பீட்டில் 4.2% ஆகக் குறைந்துள்ளது. மொத்த மூலதன உருவாக்கத்தின் மதிப்பு 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 31.7% ஆக இருந்தது, 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 28.8% ஆகக் குறைந்துள்ளது. 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 20.8%ஆக இருந்த ஏற்றுமதி 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 18.5% ஆகக் குறைந்துள்ளது. மொத்த மதிப்பாக்கம் (GVA) அடிப்படையில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 5.2% ஆக இருந்தது 2019-20 நான்காம் காலாண்டில் 0.2% ஆகக் குறைந்துள்ளது. கட்டுமானத் துறையின் வளர்ச்சி 2.1%ஆக இருந்தது -1.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. சிமெண்ட் உற்பத்தி 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 11.7% ஆக இருந்தது 2019-20 நான்காம் காலாண்டில் -4.9% ஆகக் குறைந்துள்ளது. அதே போல் உருக்கின் நுகர்வும் 9.4%லிருந்து -3.9%ஆகக் குறைந்துள்ளது. வாகன விற்பனையும் 3.8%இலிருந்து -42.1%ஆகக் குறைந்துள்ளது.

வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு, சேவை, ஒளிபரப்பு ஆகியவற்றின் வளர்ச்சி 2018-19ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 6.9 சதவீதமாக இருந்த நிலையில் 2019-20 நான்காம் காலாண்டில் 2.6% சதவீதமாகக் குறைந்துள்ளது. வேளாண்துறை உற்பத்தி சென்ற நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 1.6% ஆக இருந்து 2019-20 நான்காம் காலாண்டில் 5.9% ஆக குறைந்துள்ளது. உற்பத்தித் துறையின் வளர்ச்சி, 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 2.1% ஆக இருந்து, 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் -1.4% ஆகக் குறைந்துள்ளது. கட்டுமானத் துறையிலான வளர்ச்சி 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 6% ஆக இருந்து 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் -2.2% ஆகக் குறைந்துள்ளது. நிகர மொத்த மதிப்பாக்கம் 2018-19 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 5.6% ஆக இருந்து 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 3%ஆகக் குறைந்துள்ளது.

கச்சா எண்ணெயின் விலை படுவீழ்ச்சி அடைந்த நிலையிலும் கூட அதன் பலன்களை மக்களுக்கு வழங்காமல் பெட்ரோலில் லிட்டருக்கு 13 ரூபாயும், டீசலில் லிட்டருக்கு 10 ரூபாயும் ’கலால்’ வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. தமிழக அரசும் மதிப்புக் கூட்டல் வரி மூலம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.25, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2.50 உயர்த்தியுள்ளது.

நோய்த் தொற்று, பொருளாதார நெருக்கடி என இரட்டை அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகளின் துயர்தணிக்கவும் நிதி ஒதுக்கவில்லை. அவர்களுக்கு உதவாததோடு, விவசாயிகளுக்கு இதுவரை அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவையும் நீக்கி, தொழிலாளர் நலச்சட்டங்களையும் நீக்கி அவர்களின் வாழ்வுரிமைகளை அழித்து சாவதற்கான உரிமையை மட்டுமே தாராளமய பாஜக அரசு வழங்கியுள்ளது. இந்த நெருக்கடியிலும் அவர்கள் தலையில் பேரிடி விழச் செய்து அதை ‘தற்சார்பு’ என்ற பெயரில் கொண்டாடுவது அரசியல் பொருளாதார வரலாற்று வக்கிரங்களுள் உச்சக்கட்டமாகும். இந்துத்துவ வெறியர்களை நடுநிலையாளர்கள், தேசப்பற்றாளர்கள் என்றும், உண்மையான தேசப்பற்றாளர்களை தேசவிரோதிகள் என்றும் எல்லாவற்றுக்கும் தலைகீழாக முத்திரை குத்தும் பாஜக அரசின் அகராதியில் ‘தற்சார்பு’ என்பது உண்மையான தற்சார்பிற்கான இறுதிச் சடங்காகவும், உழைக்கும் மக்களுக்கான சாவுரிமையாகவுமே உள்ளது.

- சமந்தா