aishakosh 450இந்தியாவில் தற்போது 940 பல்கலைக் கழகங்கள் உள்ளன. அரசின் ஆய்வறிக்கையின்படி அவற்றுள் முதலாவதாகத் திகழ்வது தில்லியில் உள்ள சவகர்லால் நேரு பல்கலைக் கழகம் (ச.நே.ப.) ஆகும். ச.நே.ப. 1969-இல் தொடங்கப் பட்டது. ச.நே.ப. தொடங்கப்பட்டது முதலே சுதந்தர மனப்போக்கிற்கும், எதையும் கேள்வி கேட்கும் அறிவாண்மைக்கும், அதிகாரத்துக்கு எதிரான போராட்டங்களுக்கும் பன்மைத்துவத்துக்கும் களமாக இருந்து வருகிறது. ச.நே.ப.-வில் படிப்பது பெருமைக்குரியதாக இளைஞர்களால் கருதப்படுகிறது. ச.நே.ப., ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகும்.

1973-இல் ச.நே.ப. மாணவர்களின் போராட்டத்தின் விளைவாக மாணவர் சேர்க்கையில் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. பழங்குடியினர், பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதுடன் மாற்றுத் திறனாளிகள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், வேளாண் தொழிலாளர்கள், ஊரகப் பகுதியினர், வடகிழக்கு மாநிலத்தவர், படை வீரர்களின் பிள்ளைகள் என்று வகைப் பிரித்து மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். எந்த அளவுக்குப் பின்தங்கிய நிலையினராக இருக்கின்றனரோ, அந்த அளவிற்குக் கூடுதல் மதிப்பெண் தரப்படுகிறது.

ஆகவே, ச.நே.ப. மாணவர்களில் அய்ம்பது விழுக்காட்டினருக்கு மேற்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட - எளிய குடும்பங்களிலிருந்து வந்தவர்களாக இருக்கின்றனர். எனவேதான் பீகாரில் எளிய குடும்பத்திலிருந்து வந்த கன்னையா குமார் போன்றவர்கள் ச.நே.ப.-வில் மாணவர் தலைவராக வர முடிகிறது.

ஒவ்வொரு மாணவரும் தன் முழு ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கான சுதந்தரமான கல்விச் சூழல் ச.நே.ப.-வில் நிலவுவது அதன் சிறப்புக் கூறாகும். அடிப்படை அறிவியல், கலை, இலக்கியம், சமூக அறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம், மானுடவியல் என எண்ணற்ற துறை சார்ந்த கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. நாள்தோறும் ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் உள்ள பல்துறை அறிஞர்கள் இவற்றில் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடுகின்றனர். மாணவர் விடுதிகளில் இரவுகளில் விவாதக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. சுதந்தரமான, அறிவார்ந்த சூழல் காரணமாக ச.நே.ப.வில் படித்தவர்கள் இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி (IPS) போன்ற உயர் பதவிகளிலும், பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகவும், பல்துறை வல்லுநர்களாகவும் விளங்கி வருகின்றனர்.

2019 அக்டோபர் மாதம் ச.நே.ப. நிர்வாகம் மாணவர்களின் விடுதிக் கட்டணத்தை உயர்த்தியது. விடுதியின் விதிகளை மாற்றியது. இதன் படி உணவு விடுதிகளின் ஊழியர்கள், தங்கும் விடுதிகளின் பணியாளர்கள் ஆகியோரின் ஊதியத்தை மாணவர்களே ஏற்க வேண்டும். மேலும் இச்செலவுக்காக ஆண்டுதோறும் பத்து விழுக்காடு கட்டணம் உயர்த்தப்படும். தற்போது நூலகம் 24 மணிநேரமும் திறந்திருப்பது என்பது இரவு 11 மணிக்கு மூடப்படும் என்று அந்த அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

கட்டண உயர்வால் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படும் என்பதால் இந்த ஆணையைத் திருப்பப் பெறக் கோரி சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்தனர்; கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்; ச.நே.ப. வளாகத்திற்குள்ளும், தில்லி வீதிகளிலும் ஊர்வலங்கள், பேரணிகள் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்திற்கு ச.நே.ப. ஆசிரியர் சங்கமும் ஆதரவளித்தது. கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.-இன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்தியார்தி பரிசத் (ஏபிவிபி) தொடக்கத்தில் கலந்து கொண்டது. நவம்பர் மாதம் விலகிக் கொண்டு ச.நே.ப. நிர்வாகத்துக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கியது.

144 தடை ஆணையை மீறி ஊர்வலமாகச் சென்ற ச.நே.ப. மாணவர்களைக் காவல்துறையினர் தாக்கினர்; தளைப்படுத்தினர்; அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அந்நிலையில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ச.நே.ப.-வில் இயல்பு நிலை திரும்புவதற்கான வழிகளைக் கண்டறியுமாறு பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் தலைவர் வி.எஸ். சவுகான் தலைமையில் மூவர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்தது. அக்குழு அளித்த அறிக்கையில், “இப்போது உயர்த்தப் பட்டுள்ள கட்டண உயர்வு முழுமையாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். ச.நே.ப.-வின் நிதிப் பற்றாக்குறையை யு.ஜி.சி. வழங்கும் எதிர்காலத்தில் கட்டணம் உயர்த்தப்படும் போது மாணவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்” என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. உயர்கல்வித் துறையின் செயலாளர் இக்குழுவின் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தில்லி உயர்நீதிமன்றம் இப்பிரச்சனையைத் தீர்க்க ச.நே.ப. நிர்வாகம் மாணவர்களுடன் பேச வேண்டும் என்று ஆணையிட்டது. அதன் பிறகே துணைவேந்தர் எம். ஜெகதீ சுகுமார் மாணவர் விடுதிகளின் மாணவர் தலைவர்களை அழைத்துக் கட்டணத்தைத் தரப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாணவரும் மாதந்தோறும் ரூ.5,000 கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்கினார். விடுதிகளின் மாணவர் தலைவர்கள் இதை ஏற்க மறுத்தனர். மாணவர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேசுமாறு கூறினர். அச்சமயத்தில் துணைவேந்தரும் மற்ற அதிகாரிகளும் பேச்சு வார்த்தைக் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

2019 நவம்பர் 18 அன்று காவல்துறையினர் ச.நே.ப. வளாகத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களைக் கடுமையாகத் தாக்கினர். இதற்குக் கல்வியாளர்களும் எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் ச.நே.ப. நிர்வாகம் 2019 நவம்பர் 25 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் உணவு விடுதிகளிலும் மாணவர்கள் தங்கும் விடுதிகளிலும் பணியாற்றும் ஊழியர்களின் செலவுகளை மாணவர்களே ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 2019 திசம்பர் 9 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற மாணவர்களைக் காவல் துறையினர் தாக்கியதைக் கண்டித்தும், கட்டண உயர்வு திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோரியும் மாணவர் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. ச.நே.ப. வளாகத்தைச் சுற்றிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

இரண்டு மாதங்களாக மாணவர் போராட்டம் நடந்து வரும் நிலையில் குளிர்கால பருவ காலத்திற்கான படிப்புக்கு 2020 சனவரி 1 முதல் 5 ஆம் நாளுக்குள் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று ச.நே.ப. நிர்வாகம் அறிவித்தது. கட்டண உயர்வைத் திரும்பப் பெறாத வரையில் பருவப் படிப்புக்குப் பதிவு செய்ய மாட்டோம் என்று மாணவர் சங்கம் அறிவித்தது. ஆனால் ஏ.பி.வி.பி.யினர் பதிவு செய்வோம் என்று அறிவித்தனர். இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

2020 சனவரி 3 அன்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தகவல் தொடர்பு அறையில் நுழைந்து ‘சர்வரை’ச் செயலிழக்கச் செய்ததுடன், கருவிகளைச் சேதப்படுத்தியதாக ச.நே.ப. நிர்வாகம் காவல் துறையில் புகார் அளித்தது. (அதன்பின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளித்த ச.நே.ப. நிர்வாகம், “எங்கள் அலுவலகத்தின் சர்வர் அறை சூறையாடப் படவில்லை. கண்காணிப்புப் படக்கருவிகள் உடைக்கப் படவில்லை. மீன் விநியோகம் இல்லாததால் சர்வர் சனவரி 3 அன்று செயலிழந்தது. கண்காணிப்புப் படக்கருவியில் அதனால் தொடர்ச்சியாகக் காட்சிகள் பதிவாகவில்லை” என்று கூறியது - இந்து தமிழ் திசை 22.1.2020).

2020 சனவரி 5 மாலை ச.நே.ப. வளாகத்தில் சபர்மதி மாணவர் விடுதியின் (மாணவர் விடுதிகளுக்கு இந்திய ஆறுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன). அருகில் முப்பது ஆசிரியர்களும் மாணவர் தலைவர் ஆய்சேகோஷ் உள்ளிட்ட இருநூறு மாணவர்களும் வளாகத்திற்குள் அமைதியான சூழலைக் கொண்டு வருவது பற்றிக் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினர். அச்சமயம் சுமார் எழுபது பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் திடீரென வந்து மாணவர்களைக் கற்களாலும் தடிகளாலும் இரும்புக் கம்பிகளாலும் தாக்கினர். மேலும் விடுதிகளுக்குள் புகுந்து தலித்துகள், இசுலாமியர்கள், காஷ்மீர் மாணவர்களைக் குறிவைத்துத் தாக்கினர். அறைகளில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கினர். சன்னல், கதவுகளை உடைத்தனர். பார்வைக் குறைபாடு உடைய சூரிய பிரகாசு என்கிற மாணவரின் அறையில் அம்பேத்கர் படம் வரையப்பட்டிருந்தது என்கிற காரணத்தாலேயே அவரைத் தாக்கினர்.

suryaprakash 600மாணவர் சங்கத் தலைவர் அய்சேகோசும் மற்றவர்களும் உதவி கோரி ச.நே.ப. நிர்வாகத்திற்கும் காவல் துறைக்கும் கைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொள்ள முயன்றனர். மாணவர் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் ஆசிரியர்களும் வெறிக்கும்பலால் தாக்கப்பட்டனர். அவர்களின் குடியிருப்புகளும் மகிழுந்துகளும் தாக்கப்பட்டன. மூன்று மணி நேரம் இத்தாக்குதல் நீடித்தது. ச.நே.ப. நிருவாகம் இத்தாக்குதலைத் தடுக்க காவல்துறையை அழைக்கவில்லை. பல்கலைக் கழகத்தின் பாதுகாப்புப் பிரிவினரும் இதைத் தடுக்க வில்லை. தெரு விளக்குகள் திட்டமிட்டு அணைக்கப்பட்டு, வெறிக்கும்பல் வெளியேறிட உதவி செய்யப்பட்டது.

சனவரி 5 அன்று அடையாள அட்டை உடைய மாணவர்கள் மட்டுமே காவல்துறையால் ச.நே.ப. வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறெனில் வெளியிலிருந்து குண்டர்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள்? ஆர்.எஸ்.எஸ்.-இன் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.யினர் ச.நே.ப. நிர்வாகத்தின்-காவல் துறையின் துணையுடன் வெளியிலிருந்து இந்துத்துவ குண்டர்களை வரவழைத்து இத்தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். போராடும் மாணவர்களை அச்சுறுத்தி அடிபணியச் செய்வதே இத்தாக்குதலின் நோக்கமாகும்.

அய்தராபாத் பல்கலைக்கழக நிர்வாகமும் ஏ.பி.வி.பி.யினரும் சேர்ந்து தலித் மாணவர் ரோகித் வெமுலாவை 2016 சனவரி 17 அன்று தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளினர். அதே ஆண்டு பிப்ரவரி மாதம் ச.நே.ப.மாணவர் சங்கத் தலைவர் கன்னைய குமார் ஏ.பி.வி.பி.யினரால் தாக்கப்பட்டார். அவர் மீது பல வழக்குகள் பதியப்பட்டன. சாவர்கர் கூறிய ‘அரசியலை இந்து மயமாக்கு; இந்து மதத்தை இராணுவ மயமாக்கு’ என்கிற கோட்பாட்டைச் செயல்படுத்துவதில் முன்னணியில் நிற்கும் ஏ.பி.வி.பி. பல்கலைக்கழகங்களை இந்துத்துவ மயமாக்குவதற்காக நரேந்திர மோடி 2014-இல் ஆட்சிக்கு வந்தது முதல் வன்முறை வழிகளைக் கையாண்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதிதான் ச.நே.ப. மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல். இத்தாக்குதலில் பலரின் மண்டை உடைந்தது; கை, கால் எலும்புகள் முறிந்தன. மாணவர் சங்கத் தலைவர் அய்சேகோஷ் என்கிற இனப் பெண்ணின் தலையில் 16 தையல்கள் போடப்பட்டன. அவரின் இடது கை எலும்பு முறிந்தது. காயமடைந்த அய்ம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ உதவி செய்யப்பட்டது.

2019 திசம்பரில் ஜாமியா மிலியா இசுலாமியா பல்கலைக்கழகம் மற்றும் அலிகர் முசுலீம் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் வளாகத்திற்குள் நுழைந்து காவல் துறையினர் மாணவர்களைத் தாக்கியதற்கு மக்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது போல் ச.நே.ப. மாணவர்கள் மீது சனவரி 5 அன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்திய அளவில் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். உலக அளவில் பல்துறை சார்ந்த 250 அறிஞர்கள் கையொப்பமிட்ட அறிக்கை மூலம் இத்தாக்குதலைக் கண்டித்தனர்.

இத்தாக்குதல் நடந்து அய்ந்து நாள்கள் கழித்து தில்லி காவல்துறை இத்தாக்குதலுக்கு ச.நே.ப. மாணவர் சங்கத் தலைவர் அய்சேகோஷ் உள்ளிட்ட ஏழு பேரும் ஏ.பி.வி.பி.யினர் இரண்டு பேரும் காரணம் என்று கூறி இத்தாக்குதலுக்கு எழுந்த கண்டனத்தைத் திசை திருப்ப முயன்றது. முகமூடி யணிந்து தாக்குதல் நடத்திய காட்சிகள் வெளியான பிறகும் இதுவரை (சனவரி 26) அவர்களில் ஒருவரையும் கைது செய்யவில்லை என்பது ஏ.பி.வி.பி.யினர் - காவல் துறையினரின் கூட்டுச் சதியே இத்தாக்குதல் என்பதைக் காட்டுகிறது.

சவகர்லால் நேரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட காலம் முதலே சுதந்தரமான சிந்தனைப் போக்கிற்கும், மாறுபட்ட கருத்துகளை அறிவார்ந்த முறையில் வெளிப்படுத்துவதற்கும் இடமளிப்பதாக விளங்கி வருவதால் மாணவர்களுக்கிடையே வன்முறையான மோதல் நிகழ்ந்ததில்லை. கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கத்தின் கீழ் ச.நே.ப. மாணவர்கள் இருப்பதாக சங் பரிவாரங்கள் தொடர்ந்து கூறி வந்தன. ஆனால் 2008-இல் மேற்கு வங்கத்தில் சிங்கூரில் டாடாவின் சிறிய மகிழுந்து திட்டத்திற்கு மேற்கு வங்கத்தில் சி.பி.எம். தலைமையிலான ஆட்சி உழவர்களின் நிலத்தைப் பறித்து அளித்ததை எதிர்த்து ச.நே.ப. மாணவர்கள் போராட்டம் நடத்தினர். சி.பி.எம். கட்சியுடன் தொடர்புடைய இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) அதன்பின் பத்து ஆண்டுகள் மாணவர் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

பிரதமராக இருந்த இந்திரா காந்தி ச.நே.ப.-இன் அலுவல்சாரா துணைவேந்தர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று ச.நே.ப. மாணவர்கள் பேரணியாக இந்திரா காந்தி வீட்டிற்குச் சென்று விண்ணப்பமளித்தனர். எனவே ச.நே.ப. வளாகம் இடதுசாரிகளின் கூடாரமாக இருக்கிறது என்று சங்பரிவாரங்கள் கூறுவது தங்கள் ஆதிக்கத்தை அங்கு நிலைநாட்டுவதற்கான சூழ்ச்சியே ஆகும். ச.நே.ப. மாணவர்கள் எந்தவொரு ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடும் சனநாயகப் பண்பு கொண்டவர்கள் என்பதே உண்மையாகும்.

தற்போது ச.நே.ப. துணைவேந்தர் எம். ஜெகதீசுகுமார் 2016 சனவரியில் இப்பதவியில் அமர்த்தப்பட்டார். அது முதல் நிர்வாக அலகுகுளின் தலைமைகளிலும் துறைத் தலைவர் பதவிகளிலும் தனக்குக் கீழ்படிந்து நடக்கக் கூடியவர்களையே நியமித்தார். தனித்து முடிவெடுக்கக் கூடிய அமைப்புகளின் அதிகாரங்களைப் பறித்தார். இப்போக்கினை ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்த்தனர். இண்டர்-ஹால் (Inter-Hall) நிர்வாகக் குழுவில் மாணவர்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டது. இக்குழுதான் விடுதிக் கட்டணத்தை உயர்த்தியது. துணைவேந்தரின் சர்வாதிகாரப் போக்கும், முறைகேடுகளும் மாணவர்களின் போராட்டத்துக்கு மூலகாரணங்களாக உள்ளன. எனவே மாணவர்கள் துணைவேந்தர் பதவியிலிருந்து ஜெகதீசுகுமார் விலக வேண்டும் என்று கோருகின்றனர். மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கட்டண உயர்வு சிக்கலை மாணவர்களுடன் கலந்து பேசி தீர்க்குமாறு இரண்டு தடவை அறிவுறுத்தியும் அதன்படி செயல்படாத ஜெகதீசு குமாரைத் துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பா.ச.க.வின் முன்னாள் அமைச்சர் - மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.

தில்லியில் சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் விடுதிக் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் நடத்தும் போராட்டம் என்கிற அளவில் இச்சிக்கலைச் சுருக்கிப் பார்க்க முடியாது. இதை சமூக, பொருளாதார, அரசியல் பின்னணியில் வைத்து விரிவாக ஆராய வேண்டியுள்ளது. அப்போதுதான் இதன் பின்னால் உள்ள சாதிய - மத - அரசியல் ஆதிக்கத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

1990 முதல் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் தாராள மயம், தனியார் மயம், உலக மயம் எனும் கொள்கையைச் செயல்படுத்தி வருவதால் விளைந்த முதல் பெருங்கேடு, கல்வி அளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகி, கல்வி தனியார் மயமாக்கப்பட்டதே ஆகும். அரசிடம் கல்விக்குச் செலவிட பணம் இல்லை என்பதால் கல்வியில் தனியார் அனுமதிக்கப் படுவதாகக் கூறப்பட்டது. மக்களாட்சியில் பள்ளிக் கல்வி வரை இலவயமாகவும், உயர்கல்வியை மிகக் குறைந்த செலவிலும் அளிக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா! 1990 வரை உயர்கல்வி கிட்டத்தட்ட முழுவதுமாக அரசால் அளிக்கப்பட்டது.

sif police 600ச.நே.ப.வில் கட்டண உயர்வுக்கான காரணம் ஆண்டு தோறும் ச.நே.ப. வரவு-செலவில் ரூ.45 கோடி பற்றாக்குறை ஏற்படுவதே ஆகும் என்று சொல்லப்படுவது வெட்கக் கேடானதல்லவா! 2006 - 2007 ஆம் ஆண்டு முதல் கல்விச் செலவுக்காகக் கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து 2017-ஆம் ஆண்டு தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலக அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. கல்விச் செலவுக்காகக் கூடுதல் வரியாகத் திரட்டப்பட்ட நிதியில் 7.73 விழுக்காடு மட்டுமே செலவிடப்பட்டுள்ளது; மீதி ரூ.83,497 கோடி செலவிடப்படாமல் இருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒன்றிய அரசு கல்விக்காக நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) 2013 - 2014 இல் 0.6 விழுக்காடு ஒதுக்கியது. 2018 - 19 இல் இது 0.2 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.64,500 கோடி என ஒதுக்கப்பட்டது. ரூ.41,200 கோடியாகக் குறைக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் பெருமுதலாளிகளுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை 2013 - 14 இல் ஜி.டி.பி.யில் 1.7 விழுக்காடாக இருந்தது. 2017 - 18 இல் 2.8 விழுக்காடாக உயர்த்தப் பட்டுள்ளது. அதாவது 2018 - 19 ஆம் நிதி ஆண்டில் ரூ.1,67,000 கோடி பெருமுதலாளிய நிறுவனங்களுக்கு வரிச்சலுகையாக அளிக்கப்பட்டுள்ளது. இதைக் குறைத்தாலே அரசின் கல்விச் செலவுக்குத் தேவையான நிதி கிடைக்கும். ஆனால் இந்த அரசுகள் முதலாளிகளின் - பெருவணிகர்களின் நலன் காப்பவை; வெகு மக்களுக்கு விரோதமானவை என்பதை மக்கள் புரிந்து கொண்டு போராடும் நிலை ஏற்படும் போது தான் இந்த மாற்றம் நிகழும்.

பெருமுதலாளிய நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் அளித்தால்தான் தொழில்களில் முதலீடுகள் பெருகும்; நாட்டின் உற்பத்தி வளர்ச்சியடையும்; புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று அரசும், முதலாளியப் பொருளியல் வல்லுநர்களும் கூறுகின்றனர். ஆனால் 2016 நவம்பரில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்தபின் - 2017-இல் சரக்கு-சேவை வரிவிதிப்பை (GST) நடைமுறைப்படுத்திய பின் ஒன்றிய அரசு பெருமுதலாளிய நிறுவனங்களுக்கு இன்னும் கூடுதலான வரிச் சலுகைகளையும், வங்கிக் கடன்களையும் வாரி வழங்கிய போதிலும் பொருளாதாரம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது; கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை இருக்கிறது.

ஆனால் ஆண்டுதோறும் இந்தியாவில் கோடீசுவரர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. உலக வறுமையை ஒழிப்பதற்கான ‘ஆக்ஸ்ஃபாம்’ அமைப்பு 2020 சனவரியில் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் பணக்காரர்களின் சொத்தில் ஒவ்வொரு நாளும் ரூ.2,200 கோடி அதிகரிக்கிறது. மேல் தட்டில் உள்ள 10 விழுக்காட்டினரிடம் நாட்டின் வளத்தில் 77.4 விழுக்காடு இருக்கிறது. உச்சியில் உள்ள 1 விழுக்காட்டினரிடம் 51.53 விழுக்காடு சொத்து இருக்கிறது. கீழ்த்தட்டில் உள்ள 60 விழுக்காட்டினரிடம் தேசிய வளத்தில் 4.8 விழுக்காடு மட்டுமே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது (இந்து தமிழ் திசை 24.01.2020). எனவே கல்விக்கு நிதி ஒதுக்கிட அரசிடம் பணம் இல்லை என்கிற காரணம் ஒரு ஏமாற்று.

ச.நே.ப. மாணவர் போராட்டத்தின் போது தொலைக்காட்சி விவாதங்களில் பார்ப்பன - மேல்சாதி அறிவாளிகள் இரண்டு கருத்துகளை முன்வைத்தனர். வசதியற்ற மாணவர்களுக்குக் குறைந்த கட்டணமும், மற்றவர்களுக்கு அதிகக் கட்டணமும் நிர்ணயிக்கலாம் என்று கூறினர். இடஒதுக்கீட்டுப் பிரிவின்கீழ் சேரும் மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்களில் இழிவாக நடத்துவது போல், குறைந்த கட்டணத்தில் சேரும் மாணவர்களையும் இழிவாக நடத்துவார்கள். அடுத்த கட்டமாக வசதியற்ற மாணவர்களுக்கு மிகவும் குறைந்த இடங்களை மட்டும் ஒதுக்கிவிட்டு, பெரும் பகுதி இடங்களை இவர்களே கைப்பற்றிக் கொள்வார்கள். மேல்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டால் இவர்களின் உள்நோக்கத்தை விளங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு பேசுகின்றவர்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் உயர் கல்வி பெற்ற நயவஞ்சகர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பார்ப்பன - மேல்சாதி அறிவாளிகள் முன்வைத்த மற்றொரு கருத்து - மக்களின் வரிப்பணத்திலிருந்து தரப்படும் கல்வி மானியத்தில் படிக்கும் மாணவர்கள் படிக்கின்ற வேலையை மட்டும் செய்யாமல், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடலாமா? என்பதாகும். ச.நே.ப. மாணவர்கள் எந்த வொரு சமூக, அரசியல் ஆதிக்கத்திற்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வருபவர்கள். சமூக அநீதிகளையும் அரசியல் அட்டூழியங்களையும் எதிர்த்துக் கேள்வி கேட்காமல் ஆளும் வர்க்கத்தின் அநியாயங்களுக்கு அடங்கி ஒடுங்கி நடக்கும் இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதே பார்ப்பன - மேல்சாதி ஆதிக்கவாதிகளின் நோக்கமாகும். மேலும் காலங் காலமாக சாதியின் பேரால் கல்வி உரிமை மறுக்கப்பட்ட சூத்திரர்களையும் தலித்துகளையும் கட்டண உயர்வு என்கிற ஆயுதத்தால் உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து விரட்டுவதும் இவர்களின் நோக்கமாகும்.

இந்தியாவில் தற்போது 940 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றுள் தனியார் பல்கலைக் கழகங்கள் 340, நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் 126 (தனியார் துறையில் மட்டும் 466), ஒன்றிய அரசின் கீழ் 50, மாநில அரசுகளின் கீழ் 424 பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. இவற்றில் மொத்தம் 40,000 கல்லூரிகள் உள்ளன. இவற்றுள் 70 விழுக்காடு கல்லூரிகள் தனியாரிடம் உள்ளன. உயர்கல்வி எந்த அளவுக்குத் தனியார்மயமாகி உள்ளது என்பதையே இது காட்டுகிறது. தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு இல்லை. எனவே பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பழங்குடி வகுப்பு மாணவர்கள் அரசுக் கல்லூரிகளை தம் உயர் கல்விக்குச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் கட்டணத்தை உயர்த்துவது ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிப்பதாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் (IIT) கட்டணம் உயர்த்தப் பட்டதால் இடஒதுக்கீட்டின் மூலம் இடம்பெற்ற மாணவர் ஒருவர் ஆண்டிற்கு மூன்று இலக்கம் உருபாவுக்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளது. கடுமையாக உழைத்துப் படித்து இத்தகைய உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான தகுதியைப் பெற்றாலும் பெருந்தொகையைச் செலவிட முடியாமையால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட முடியாத நிலை ஏற்படுகிறது.

1990-க்குப்பின் உயர்கல்வி என்பது பெருமுதலாளிய நிறுவனங்களில் வேலை செய்வதற்கான இளைஞர்களை உருவாக்குவதே என்பதாகி விட்டது. முதலாளியச் சந்தையில் கல்வி ஒரு பண்டம் போல் ஆகிவிட்டது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆங்கிலம் கற்றவர்கள் தேவை என்பதால் மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி வரையில் ஆங்கில வழிக் கல்வி மேலோங்கியது. முதலாளியச் சந்தையின் தேவைக்கு ஏற்ப பொறியியல், மேலாண்மை இயல், வணிகவியல் கல்லூரிகள் புற்றீசல் போல் முளைத்தன. இத்தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டுத்தளையற்ற கல்வி வணிகக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன.

பள்ளிகளையே முதன்மையாகக் கொண்டுள்ள வேலம்மாள் கல்வி நிறுவனங்களில் இந்த சனவரி மாதம் வருமான வரித் துறையினர் நடத்திய ஆய்வில் ரூ.100 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பும் ரூ.520 கோடிக்குக் கணக்கில் காட்டப்படாத சொத்தும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலம்மாள் கல்விக் குழுமம் ஒரு மீன்தான்; திமிங்கிலங்கள் நிறைய இருக்கின்றன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அதிகக் கட்டணம் வாங்குவது, ஆசிரியர்களுக்கு அடிமாட்டு விலையில் ஊதியம் தருவது ஆகியவற்றின் மூலமே கல்வி வணிகக் கொள்ளை நடந்து வருகிறது. உயர் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இக்கொள்ளையில் பங்கு பெறுகின்றனர்.

கல்வியின் நோக்கம் வயிற்றுப் பிழைப்புக்கான வேலைக்குச் செல்வது என்பதைத் தாண்டி, மனித விழுமியங்களை அடைவதற்கான வாயில்களைத் திறப்பதாக இருக்க வேண்டும். அரசுத் துறையில் - தனியார் துறையில் அமைப்பு சார்ந்த பிரிவில் (Organised Sector) 8 விழுக்காட்டினர் மட்டுமே வேலை செய்கின்றனர். மீதி 92 விழுக்காட்டினர் அமைப்பு சாராப் பிரிவுகளில் வேலை செய்கின்றனர். எனவே கல்வி என்பது முதலாளியச் சந்தையின் தேவையை நிறைவு செய்வது என்பதுடன் சுருங்கி நிற்காமல், ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள ஆற்றல்களும் அறிவும் முழுமையாக வெளிப்படுவதற்கான வாய்ப்பை அளிப்பதாகவும், மானுட விழுமியங்களைப் பேணி வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் எல்லாத் தளங்களிலும் சமூகம் மேம்பாடு அடையும். கல்வி அளிக்கும் பொறுப்பு அரசிடம் இருக்கும் போது மட்டுமே இத்திசை நோக்கிப் பயணிக்க முடியும்.

உயர்கல்வியில் தனியார் மயத்தைப் படிப்படியாகக் குறைத்து, அரசு உயர் கல்வி நிறுவனங்களைப் பெருக்க வேண்டும். அப்போதுதான் ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞர்கள், குறிப்பாகப் பெண்கள் உயர்கல்வி வாய்ப்பைப் பெற முடியும். சவகர்நேரு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் உயர்கல்விக்கும், சமூக மேம்பாட்டுக்குமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய போராட்டங்களுக்கு மக்கள் துணைநிற்க வேண்டும்.