மனைவியின் பிறந்த நாளை எப்படி மறக்காமல் இருப்பது?

அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.

ஓரே ஒரு முறை மறந்துதான் பாருங்கள். பிறகு உங்களுக்கு கிடைக்கும் சிகிச்சை மூலம் வாழ்நாள் முழுவதும் மறக்காது என நகைப்புக்காகச் சொல்லுவார்கள்.

ஆனால், அவசர உலகில் எல்லா நாளின் மகத்துவமும் எப்போதும் நம் நினைவில் வைத்திருப்பது சாத்தியமில்லை என்பதே உண்மை. 

1990களில் சட்டைப்பைக்குள்ளே நாட்குறிப்பு புத்தகத்தை பெரும்பாண்மையோர் வைத்திருப்பதைக் கண்டிருக்கிறேன். எந்த நாளில் என்ன வேலை, நிகழ்ச்சி நிரல், நினைவூட்டு, சந்திப்பு என அதில் குறப்புகள் நிறைந்திருக்கும்.

இப்போதெல்லாம் அக்குறிப்பேடுகள் கால ஓட்டத்தில் காணமல் போய்விட்டன. கைக்கணினி என்றாகிவிட்ட திறன்பேசியின் வரவு காலக்கோட்டில் ஒரு மைல் கல்லை போன்று கால மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

நமது திறன் பேசியில் இருக்க வேண்டிய மிக முதன்மையான செயலி கூகுள் காலண்டர்.  இந்த செயலியை தரவிரக்கம் செய்து கொண்டால் உங்களின் உற்ற நண்பனாக, தனிச்செயலராக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆம். கைபேசிக்குள் இருக்கும் திறன் பொதிந்த நாட்காட்டி இது. கிழமை வாரியாகவோ, திங்கள் வாரியாகவோ எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் பார்க்க கூடிய வசதி இதில் இருக்கிறது.  நாளொன்றுக்கு 24 மணி நேரம் போதவில்லை என கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு வேகமெடுப்பவர்களுக்கு இந்த செயலி வெகுவாகப் பயனளிக்கும்.

எந்தெந்த நாளில் என்னென்ன பணிகள் இருக்கிறது என்பதையும், அதை எந்த நேரத்தில் நினைவூட்ட வேண்டும் என்பதையும் மிகச்சரியாக உங்களது தனிச்செயலர் போன்று அவ்வப்போது உங்களுக்கு உணர்த்தும்.

இதனால் உங்கள் நண்பரின் பிறந்த நாள், உங்கள் பயண நிரல் உட்பட நீங்கள் தவறவிடுவதற்கான வாய்ப்பு ஏதுமில்லை.

வண்ண, வண்ண அமைப்பில் நாம் இதனை மாற்றிக்கொள்ள முடியும் என்பது மட்டுமில்லாமல் உங்கள் மின்னஞ்சலுக்கு வரும் பயணச்சீட்டு விவரங்களை அதுவாக உங்களது நாட்காட்டியின் நிரல் குறிப்பில் எழுதி உங்களுக்கு நினைவு படுத்தும் வேலையையும் இது செய்யும். எடுத்துக்காட்டாக 10 மணிக்கு வானூர்தி எனில் உங்களுக்கு அன்று காலையே நினைவுபடுத்தும்.

மிக முக்கியமாக, ஒரு நாளில் நாம் என்ன, என்ன பணிகள் செய்ய வேண்டும் என குறித்து விட்டால், அவ்வப்போது சரியான நேரத்தில் நினைவூட்டும்.  அந்த நினைவூட்டலை மின்னஞ்சலாகவோ, குறுஞ்செய்தியாகவோ ஆகவோ கூட அனுப்பக் கட்டளையிடலாம். உங்களது திறன் பேசிகளில் வேறேதும் நாட்காட்டி இருக்கமானால் அதனை ஒத்திசைவும் செய்து கொள்ளும்.

நீங்கள் தரவேற்றம் செய்யும் பதிவு கணினி, டேப், திறன்பேசி என எல்லாவற்றிலும் ஒத்திசைவு ஆகிவிடும்.

உங்களது பயண நிரலை நீங்கள், உங்கள் நண்பரோடு உங்கள் அலுவலகப் பணியாளரோடு எளிதில் பகிர்ந்து கொள்ள முடியும். அதில் ஏதேனும் மாற்றம் செய்யும் அதிகாரத்தைக் கூட வழங்க முடியும்.

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்’ என வள்ளுவர் பெருந்தகை கூறிவிட்ட பிறகு யாதொரு மேல் முறையீடும் இருக்க வாய்ப்பில்லை. காலத்தைப் போன்றதோர் உற்ற தோழனில்லை.

கூகுள் நாட்காட்டியினைப் பயன்படுத்தி கால நிர்வாகத்தைக் கடைபிடிக்கப் பழகுவோம்.

இந்தச் செயலியினைத் தரவிரக்கம் செய்ய இந்த இணைப்பைச் சுட்டவும்.

https://play.google.com/store/apps/details?id=com.google.android.calendar

Pin It