திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும் வெற்றிகரமாகத் தொடர்ந்திட "ஓரணியில் தமிழ்நாடு" என்ற பரப்புரையின் மூலம் உறுப்பினர் சேர்க்கையை திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியிருக்கிறது.

dmk campaign 398தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணை போகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை ஜூலை 1 முதல் 45 நாட்களுக்கு முன்னெடுக்கப்படுகிறது.

மேலோட்டமாக பார்க்கையில் இந்த முன்னெடுப்பு தி.மு.கவுக்கான உறுப்பினர் சேர்க்கை போலத் தோன்றும். உண்மையில் இது தமிழ்நாட்டின் நலன் காக்க மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டும் முயற்சி ஆகும்.

தமிழ்நாட்டில் உள்ள 68,000 வாக்குச்சாவடிகளிலும் உள்ள வாக்காளர் எண்ணிக்கையில் குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்களை கழக உறுப்பினராக இணைப்பது என்ற இலக்கை நோக்கி இப்பரப்புரை திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் (எதிர்க்கட்சியினர் இல்லங்கள் உட்பட) அந்தந்த வாக்குச் சாவடியைச் சேர்ந்த பூத் லெவல் ஏஜென்ட், பூத் டிஜிட்டல் ஏஜென்ட், இளைஞரணி பொறுப்பாளர், மகளிரணி பொறுப்பாளர், வட்ட / கிளை செயலாளர், மாநில / மாவட்ட நிர்வாகி / மக்கள் பிரதிநிதி என ஆறு பேர் தி.மு‌.கவின் சார்பில் சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகளையும், மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு தரும் நெருக்கடிகளையும் எடுத்துரைப்பார்கள். அக்குடும்பம் சார்பில் அரசுக்கு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டால் அவற்றை அவர்கள் குறித்துக் கொள்வார்கள் விருப்பம் உள்ளவர்களை கழக உறுப்பினராக "ஓரணியில் தமிழ்நாடு" செயலி மூலமும், உறுப்பினர் சேர்க்கை படிவம் மூலமும் இணைத்துக் கொள்வார்கள்.

ஐந்தாம் ஆண்டில் அரசு நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கட்சி வீடு வீடாக சென்று மக்களைச் சந்திக்கிறது என்றால் அதிருப்தியற்ற ஆட்சியை அக்கட்சி அளித்து வருகிறது என்று பொருள். இந்த ஆட்சியின் திட்டங்களால் ஒவ்வொரு வாக்காளரும் ஏதோ ஒரு வகையில் பலன் அடைந்திருக்கிறார்கள் என்பதை உறுதி செய்வதே "ஓரணியில் தமிழ்நாடு" பரப்புரையின் மைய நோக்கமாகும்.

"மக்களிடம் செல், மக்களுடன் வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள், மக்களை நேசி, மக்களுக்கு சேவை செய்" என்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் வாய்மொழிக்கேற்ப நடத்தப்படும்"ஓரணியில் தமிழ்நாடு" பரப்புரை " வெல்வோம் இருநூறு படைப்போம் வரலாறு" என்ற முழக்கத்தை சாத்தியமாக்கும் என்றால் அது மிகையாகாது.

- வழக்கறிஞர் இராம. வைரமுத்து

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.