தே.மு.தி.க. தனித்துப் போட்டி என்று அறிவித்த பிறகு, அது தொடர்பாகப் பல்வேறு கருத்துகள் அரசியல் அரங்கில் பேசப்படுகின்றன. ஒரு வாரத்துக்கு முன்பே ஒரு தொலைக்காட்சியில் சுமந்த் சி. ராமன்,ஒரு கருத்தைக் கூறியிருந்தார். அதனை இன்று வேறு நண்பர்கள் சிலரும் திரும்பக் கூறுகின்றனர்.

vijayakanth 342தே.மு.தி.க. - தி.மு.க. இணைந்துவிடக் கூடாது என்பதில் பலரும் மிகக் கவனமாக இருந்துள்ளனர். தி.மு.க.வின் மாபெரும் வெற்றி தடுக்கப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கம். ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளைப் பிரித்துவிட்டால், குறைந்த அளவு வேறுபாட்டிலாவது அ.தி,மு.க. வெற்றி பெற்றுவிடும் என்பது அவர்களின் கணக்கு. ஒருவேளை அதற்கும் வாய்ப்பின்றிப் போனாலும் இழுபறி நிலைதான் ஏற்படும் என்று அவர்கள் நம்புகின்றனர். அப்படி ஒரு தொங்கு சட்டமன்றம் ஏற்படுமானால், குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தி விடலாம்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி என்பதால், இங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது மறைமுகமாகப் பா.ஜ.க. ஆட்சியாகிவிடும் என்ற கருத்தும் உள்ளதாம். எனவே, அ.தி.மு.க. அல்லது பா.ஜ.க ஆட்சி என்பதே அவர்களின் இலக்கு!

இப்படித்தான் 1971 ஆம் ஆண்டும் கணக்குகள் போடப்பட்டன. காமராஜர், ராஜாஜி என இரு பெரும் தலைவர்கள் அன்று தி.மு.க.வை எதிர்த்து நின்றனர். சோ, கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகிய மூவரும் ஊர் ஊராகச் சென்று தி.மு.க.விற்கு எதிரான கடும் பரப்புரைகளில் ஈடுபட்டனர். தி.மு.க. ஆட்சி இத்துடன் முடிந்தது என்று ஏடுகள் எழுதின. சேலத்தில் நடைபெற்ற ராமர்- செருப்பு விவகாரம் வேறு பெருவடிவம் எடுத்திருந்தது. ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே காமராஜர் அவர்களைப் பார்த்துப் பூங்கொத்து கொடுத்தார். பூரிப்பில் இருந்தது அந்தத் தரப்பு.

ஆனால் மக்கள் முடிவோ வேறு மாதிரியாக வந்து சேர்ந்தது. 184 இடங்களில் தி.மு.க.மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது!

இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு வெற்றி தி.மு.க.விற்குக் காத்திருக்கிறது. எதிரிகளின் கணக்குகள் தகர்ந்து போகவிருக்கும் நாள்தான் மே 16.

சின்னச் சின்னக் கணக்குகளில் மகிழ்ச்சியடையும் நண்பர்களே, மறந்து விடாதீர்கள், அரசியல் என்றால் ஆயிரம் இருக்கும்!!

Pin It