இராமர் கோவில் கட்டுவது, இராமர் கட்டிய பாலம் என்று சேது கால்வாய்த் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவது, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருவது, பொது சிவில் சட்டம் இயற்றுவது, போன்ற மதம் சார்ந்த செயல்பாடுகளை மட்டுமே முன்வைத்து பாஜக அரசியல் நடத்தி வருகிறது. நாட்டை எப்போதுமே பதற்றத்தில் வைத்திருக்கும் இது போன்ற மதவாதச் செயல்திட்டங்களைக் கொண்டு மக்களின் கண்களை மறைத்து அடிப்படைப் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புவது பாஜகவின் பெயரில் இயங்கும் பார்ப்பனியத்தின் அரசியல் ஆகும்.
பொது சிவில் சட்டம் இயற்றக்கோரி பாஜக மாநிலங்களவை உறுப்பினர் கிரோடி லால் மீனா தனிநபர் மசோதாவை அண்மையில் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். பாஜகவின் குறிக்கோளே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதுதான் என்கிற போது, எதற்காக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தனிநபர் மசோதா தாக்கல் செய்ய வேண்டும்?இந்திய விடுதலைக்குப் பின் அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் தொடங்கியது. ஆனால் அனைவருக்குமான பொது சிவில் சட்டக் கோரிக்கை கைவிடப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து பொது சிவில் சட்டம் விவாதத்துக்குள்ளாகி வருகிறது. பலமுறை நீதிமன்றங்களும் வேறு மாதிரியான தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன.
அரசமைப்புச் சட்ட நாளன்று, ‘இந்தியா - ஜனநாயகத்தின் தாய்’ என்னும் தலைப்பில், ஜாதிய அமைப்புகளைப் பாதுகாக்கும் கட்டப்பஞ்சாயத்துகளை உயர்த்திப் பிடிக்கும் வகையில், அவற்றை ஜனநாயக அமைப்புகளாகச் சித்தரித்து நிகழ்வுகளைப் பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கச் சொன்னார்கள். தற்போது எல்லா மதங்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவதில் அதிக முனைப்புக் காட்டுகிறார்கள். ஜாதிக்கு ஒரு பஞ்சாயத்து, உள்ளூர் பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும் என்று சொல்பவர்கள், எல்லா மதங்களுக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்று சொல்வது அவர்களின் கயமையைக் காட்டுகிறது.
பழக்கவழக்கம் பாரம்பரியம் என்கிற பெயரில், பார்ப்பனர் அல்லாதோரை சூத்திரர்களாக வைத்திருக்கும் ஜாதியைப் பாதுகாக்கும் சட்டங்களை ஒழிக்காமல், பொது சிவில் சட்டம் என்று கொண்டு வருவதன் நோக்கம் சனாதனத்தைப் பாதுகாக்கவும் சிறுபான்மையினரை நசுக்கவுமே ஆகும்.
திருமணம், மணமுறிவு, வாரிசு, சொத்துரிமை போன்றவற்றிற்கு எல்லா மதத்தினருக்கும் பொதுவான சட்டம் இயற்றுத் துடிப்பது, இந்து மதத்தின் கூறுகளைப் பிற மதத்தினர் மீதும், மதமற்றவர்களின் மீதும் திணிப்பதற்காகும். மேலும், குடும்பம், கணவன்-மனைவி-குழந்தை என்கிற வரையறைகள் மாறிவரும் காலகட்டத்தில், LGBTQ உரிமைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் காலகட்டத்தில், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவது என்பது, மதத்தைக் கடந்த பொதுவான சட்டம் உருவாக்குவதற்கு அல்ல. மாறாக மதச்சிறைக்குள் அனைவரையும் அடைப்பதற்கு.
பல்வேறு நாடுகளிலும் சிறுபான்மையினருக்கு, சட்டங்களில் சில விலக்குகளும் உரிமைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவை சிவில் சட்டங்கள்தாம். குற்றவியல் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதேயாகும்.
மதவாதத்தின் அடிப்படைக் கூறு என்பது, மக்களை மதச்சட்டத்தின் கட்டுக்குள் வைத்திருப்பது. அந்த மதச் சட்டங்கள் மனித நேயத்திற்கு எதிரானவையாகவும்; கல்விக்கு, அறிவியலுக்கு எதிரானவையாகவும்; ஜனநாயகத்திற்கு எதிரானவையாகவும் இருக்கக்கூடியவை. அவற்றை அவ்வளவு எளிதில் யாரும் மாற்றி விடவோ, சீர்திருத்தி விடவோ முடியாது. பெண்களுக்கான சொத்துரிமையைப் பெற அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத் திருத்ததை (Hindu Code Bill) எதிர்த்த மதவாதக் கும்பலை நாம் வரலாற்றில் பார்த்திருக்கிறோம். அந்த மதவாதக் கும்பல்தான் இன்று ஒன்றியத்தில் ஆட்சியில் அமர்ந்து கொண்டு, அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை இயற்றுவதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது. இவர்கள் என்ன மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வருவார்கள் என்பதற்கு அவர்கள் வரலாறே சான்றாகும். அச்சட்டம் ஒரு நவீன மனுதர்மமாகவே இயற்றப்படும்.
பார்ப்பனியத்தால் மூளையில் போடப்பட்ட விலங்குகளை உடைத்து மக்கள் வெளிவர நாம் போராடிக் கொண்டிருக்கின்ற வேளையில், மேலும் பல விலங்குகளைப் போட்டு மதச்சிறையிலடைக்கும் வண்ணம் உருவாக இருக்கும் பொது சிவில் சட்டம் அல்லது “மனுதர்மம் 2.0” வை, பல்வேறு தரப்பினரும் ஒன்றுபட்டு எதிர்த்திட முன்வர வேண்டும்.
- மா.உதயகுமார்