சில நாள்களுக்கு முன்னர், மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களைப் பற்றித் தோழர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தன் ஒரு நிமிட செய்தியில் நினைவு கூர்ந்தார். தமிழுலகம் மறக்கக் கூடாத அறிஞர்களுள் மயிலையாரும் ஒருவர்.

Mayilai Srinivenkadasamy 40மயிலை சீனிவேங்கடசாமி 1900ஆவது ஆண்டு டிசம்பர் 16ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார்.

இவரின் கல்வி 10ஆம் வகுப்பு- வரைதான். பின்னர் இடைநிலை ஆசிரியாரகவே பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

படித்தது பத்தாம் வகுப்பு என்றாலும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு இணையாக இவர் ஆய்வுப் பேரறிஞராகத் திகழ்ந்தார்.

இவர் நீதிக்கட்சிக் காலத்தில் வெளிவந்த ‘திராவிடன்’, பெரியாரின் ‘குடிஅரசு’ ஆகிய இதழ்களில் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றும், கட்டுரைகள் எழுதியும் வந்தார்.

“வேதம், புராணம், கடவுள், கோயில், விதி, வினை என்று சொல்லிக்கொண்டு நாளுக்கு நாள் முட்டாள்களாகிக் கொண்டிருக்கும் வழக்கத்தை விட்டுவிட்டு எந்த விசயத்தையும் பகுத்தறிவு- கொண்டு ஆராயும் படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குடிஅரசு இதழில் எழுதிய பகுத்தறிவாளர் இவர்.

கல்வெட்டு, நாணயவியல், பிராமி, கிரந்தம், தமிழ், கன்னடம், மலையாளம் என்று இவரின் ஆய்வுகளின் விளைவாக, பௌத்தமும் தமிழும் - சமணமும் தமிழும் - கிருஸ்தவமும் தமிழும் - பௌத்த கதைகள் - புத்த ஜாதகக் கதைகள் - மகாபலிபுரத்து ஜைன சிற்பங்கள் - நரசிம்மவர்மன் - மூன்றாம் நரசிம்மன் - மகேந்திரவர்மனின் ‘மத்தவிலாசம்’ (தமிழ் மொழிபெயர்ப்பு) - களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - கொங்கு நாட்டு வரலாறு - துளுவநாட்டு வரலாறு- சங்ககால வரலாற்றில் சில செய்திகள் - சங்ககால சேர, சோழ, பாண்டியர் - சேரன் செங்குட்டுவன் - கல்வெட்டெழுத்துகள் - இறையனார் களவியலுரை ஆராய்ச்சி போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

தொல்காப்பியர் காலத்தால் பிற்பட்டவர் என்று வாதிட்டார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை.

அவரின் வாதத்தை முற்றிலும் நிராகரித்தார் மயிலையார். பிராமி எழுத்து வருவதற்கு முன்பே தமிழ் எழுத்து வழக்கில் இருந்ததைச் சான்றுகளுடன் நிறுவி காலத்தால் முற்பட்டவர் தொல்காப்பியர் என்றார்.

களப்பிரர்கள் காலத்தை இருண்ட காலம் எனப் பலர் கூறுகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மயிலையார் -

தமிழ் பிராமி (தமிழி) எழுத்திலிருந்து தமிழ் வட்டெழுத்து வடிவம் பெற்றது களப்பிரர் காலத்தில்.

இதுவே சோழ, பல்லவர் காலத்துக்குப் பின்னர் இன்றைய நவீன வடிவத் தமிழ் எழுத்துக்கு அடிப்படை என்றார்.

திருக்குறள், கார்நாற்பது, களவழி நாற்பது, திரிகடுகம், ஏலாதி, இனியவை நாற்பது, சீவக சிந்தாமணி, முதுமொழிக்காஞ்சி, விளக்கத்தார் கூத்து, நரிவிருத்தம், எலிவிருத்தம், முத்தொள்ளாயிரம் போன்ற இலக்கியங்களும்,

அபிநயம், நத்தத்தம், பல்காயம், பல்காப்பியம், காக்கைப் பாடிணியம் போன்ற இலக்கண நூல்களும் களப்பிரர் காலத்தவை என்றார்.

முன்னர் இருந்த வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பா வகைகள் தாழிசை, விருத்தம், துறை என்று விரிவுபெற்றதும் களப்பிரர் காலத்தில் என்று விளக்கினார்.

பார்பனர்களிடமிருந்து இறையிலி நிலங்கள் பிடுங்கப்பட்ட சமணர்களின் காலமே களப்பிரர்களின் ஒளிமிக்க காலம் என்று உறுதிபடக் கூறினார்.

நரசிம்மவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட மாமல்லபுரப் பாறைச் சிற்பங்களில் ஒன்றைப் பாரதக் கதையின் அர்ஜுனன் தபசு என்றும், இராமாயணத்தின் பகீரதன் தபசு என்றும் இருவேறு கதைகளைக் சொல்வார்கள்.

அந்த கதைகளைத் தவறானவை என்று தன் ஆய்வின் மூலம் மறுத்துரைக்கும் மயிலையார், உரிய சான்றுகளுடன் அச்சிற்பங்கள் இரண்டாம் சமணத் தீர்த்தங்கரர் அஜிதநாதரின் புராணத்தில் வரும் சகர சக்கரவர்த்தியின் சமண கதைச்சிற்பங்கள் என்பதை உறுதி செய்கிறார்.

இன்றைய காஞ்சிபுரம், கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் பௌத்தர்களின் காஞ்சி மாநகராக இருந்தது. சீத்தலைச்சாத்தனாரின் பௌத்த காப்பியமான ‘மணிமேகலை’யின் காப்பியத் தலைவி மணிமேகலை இறந்தது காஞ்சியில்.

அதனால் அன்று காஞ்சியில் இருந்த பௌத்த ஆலயமான தாராதேவி ஆலயத்தில் மணிமேகலையின் உருவச்சிலை வைக்கப்பட்டது.

அன்றைய பௌத்த தாராதேவி ஆலயம் இன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயிலாக ஆக்கப்பட்டு விட்டது. அதனுள் இருந்த மணிமேகலை சிலை இன்று அன்னபூரணி இன்று இந்து தெய்வமாக மாற்றப்பட்டு விட்டது.

அன்று மணிமேகலை, சம்பாபதி, தாராதேவி ஆகிய பௌத்த சிறு தெய்வங்கள், இன்று காளி, பிடாரி, திரௌபதி அம்மன் ஆகிய பெயர்களில் இந்து தெய்வங்களாக மாற்றிவிட்டார்கள் என்ற வரலாற்று உண்மைகளைத் தன் ஆய்வின் மூலம் பதிவு செய்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.

சோழர்கள் காலத்தில் நிலவிய தேவரடியார் என்ற கொடுமையான பெண்ணடிமைத் தனத்தை, அதனை ஊக்கப்படுத்தி வளர்த்த பார்ப்பனர்கள் சோழர்கள் குறித்து நாம் அறிவோம்.

முதலாம் குலோத்துங்கன்: இவன், செயங்கொண்டார் எழுதிய ‘கலிங்கத்துப்பரணி’யின் தலைவன்.

இவனின் 29ஆம் ஆட்சியாண்டின் சாசனங்களில் சோழர் கோயில்களில் தேவரடியார் பெண்கள் விலைக்கு விற்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி பதிவாகி இருக்கிறது.

இதனைச் சுட்டிக்காட்டும் மயிலை சீனி.வேங்கடசாமி, 1926இல் இவர் எழுதிய கட்டுரைகளில் பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், குழந்தைத் திருமண ஒழிப்பு ஆகியவைகளைப் பற்றி விரிவாக எழுதினாலும், தேவரடியார் குறித்த அவரின் பதிவு விரிவாக இல்லை என்பது வியப்பாக இருக்கிறது.

1950 காலகட்டங்களில் இவரின் தீவிர ஆய்வுகளைத் தொடர்ந்து ஏறத்தாழ முப்பது நூல்களும் திராவிடன், குடிஅரசு, செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில், ஆராய்ச்சி, ஊழியன், இலட்சுமி போன்ற இதழ்களில் ஏராளமான ஆய்வுகட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.

இவரின் நூல்கள் அனைத்தும் இன்று நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

1963&64 இவ்விரு ஆண்டுகளில், சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

“கோயில்களில் நடைபெறும் திருப்பாவாடை நிகழ்வை ஆய்ந்து, அது ஓர் இனிப்புப் பண்டம் என்று விளக்குகிறார் மயிலை சீனி.வேங்கடசாமி. அத்தரி என்னும் கோவேறு கழுதையைப்பற்றி சொல்லாய்வு செய்துமிருக்கிறார். கந்தி, கவுந்தி என்பன அருகக் கடவுளைத் தொழும் சமணப்பெண் துறவிகள் என்றார். அவ்வை என்ற சொல் வயது முதிர்ந்த பெண்ணைக் குறிப்பதாகச் சொல்லும் இவர், அவ்வை ஏன் இளமையில் கிழவியானாள் என்பதை விளக்க முற்படவில்லை” இப்படிப் பகுத்தறிவு ஆய்வாளராக மு.சிவகுருநாதனால் புகழப்படும் மயிலை சீனி.வேங்கடசாமியை -

தமிழையே வணிக மாக்கி

            தன்வீடும் மக்கள் சுற்றம்

தமிழிலே பிழைப்ப தற்கு

            தலைமுறை தலைமு றைக்கும்

தமிழ்முத லாக்கிக் கொண்ட

            பல்கலைத் தலைவன் எல்லாம்

தமிழ்சீ னிவேங்க டத்தின்

            கால்தூ சும்பெறா றென்பேன்!

- என்று போற்றிப் பாடுகிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள். ஆய்வுப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் 1981ஆம் ஆண்டு மே திங்கள் 8ஆம் நாள் தன் ஆய்வை நிறுத்தி, மரணத்தின் மூலம் ஓய்வு எடுத்துக் கொண்டார்.  

இவரை நாம் மறக்க முடியுமா?

Pin It