முன்னுரை:

உலகில் தோன்றிய எப்பெரும் தலைவரும் அவரவர் காலத்துக் கருத்துக்கள் சூழ்நிலைகளால் உருவாக்கப்பட்டவரே ஆவார். காலத்துள் அடக்கி உருவாக்கப்பட்ட அவரவர் கருத்துக்கள், காலம் கடந்த கருத்துக்களாய் சிந்தனைகளாய் உண்மைகளாய் மாறி விட்டன. இந்த நிலையில் தான் புத்த சமயக் கோட்பாடுகள் உருவாகின. கி.மு. ஆறாம் நூற்றாண்டு இந்திய வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நூற்றாண்டாகும். இந்த நூற்றாண்டில் இந்தியா ஒரு நிலையான ஆட்சியில் ஒன்றுபட்டு இருக்கவில்லை. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த அரசர்கள் தங்களின் மேலாண்மையை நிலைநாட்டுவதற்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். வட இந்தியாவைப் பொருத்தமட்டில் கி. மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டு வரை குழப்பம் நிறைந்ததாகவே இருந்தது. ஆனால் இதே சமயத்தில் தான் இந்தியாவில் இரு பெரும் சமயங்களை தோற்றுவித்த மகாவீரரும் புத்தரும் தோன்றினர் என்று Philosophy of History (வரலாற்றின் தத்துவம்) எனும் நூலில் இந்தியாவைப் பற்றியும் பௌத்தத்தைப் பற்றியும் மேலைநாட்டு தத்துவ அறிஞர் ஹெகல் (1770-1831) பல செய்திகளை குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

Buddha 470கி.மு. ஆறாம் நூற்றாண்டை ஒரு பெரும் சிந்தனை காலம் என்று குறிப்பிடலாம். வேதகாலக் கருத்துக்கள் எண்ணங்கள் சமய, சடங்காச்சாரங்கள், சமுதாய அமைப்புகள் என்பவற்றிற்கு எதிரான அறைகூவல்கள் எழுப்பப்பட்ட காலம், பார்ப்பனிய (உயர்குடி என்று தங்களைக் கூறிக்கொள்ளும்) அமைப்பையும் தத்துவங்களையும் பிடுங்கி எறிந்து ஒரு புதிய அறிவுப் புரட்சியையும் புத்துயிர் எழுச்சியையும் விழிப்புணர்ச்சியையும் கண்ட காலம் அது. குறிப்பாக வட இந்தியாவின் நிலைமையைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு மகா வம்சம், தீப வம்சம் ஆகிய நூல்களும், புத்த சமய புனித நூல்களான பீடகங்களும் ஜாதகக் கதைகளும நமக்கு ஆதாரமாகக் கிடைக்கின்றன. புத்தர் கால சமூக சமய வரலாற்றுப் பின்புலங்கள் நமக்குக் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் விளக்கப்பட்டும், புத்தரைப் பற்றியும் சமணரைப் பற்றியும் கூறுகின்ற அநேக நூல்களும் பர்கூத், சாஞ்சி, அமராவதி போன்ற இடங்களில் கி. மு இரண்டாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களும் கி. மு. ஆறாம் நூற்றாண்டைப் பற்றி அறிய உதவுகின்றன என்று பேராசிரியர் ஜே.தர்மராஜ் ‘இந்திய வரலாறு’ எனும் நூலில் குறிப்பிட்டள்ளார்.

இந்தியாவில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் ஒரு புதுயுக கனவு புகுந்த காலம் அந்த காலம். யூதர்கள் நடுவிலே ஏசாயா போன்ற இறைவாக்கினரும் கிரேக்க நாட்டில் பைத்தாகாரஸ் போன்ற மெய்யியல் அறிஞரும் சீனாவில் கன்புயூசியஸ் போன்ற மெய்யியலாளர்களும் தோன்றி அறிவுப் புரட்சியைத் தோற்றுவித்தனர் என்று புத்த சமயம் என்ற நூலில் M. A.இரத்தின ராஜா என்பவர் குறிப்பிடுகின்றார்.

அரசியல் நிலைமை:

கி. மு. ஆறாம் நூற்றாண்டில் இமயமலைக்கும் நர்மதை நதிக்கும் இடைப்பட்ட பகுதியில் 16 பேரரசுகள் இருந்தன. இவைகள் மகாஜனப் பதாக்கள் என்றழைக்கப்பட்டன. தற்காலத்தில் பீகார் மாநிலத்தையும் மத்தியப் பிரதேசத்தையும் உள்ளடக்கியப் பகுதியாகும். சில பேரரசுகளில் முடியாட்சியும் சிலவற்றில் குடியாட்சியும் நிலவியது. 16 மகாஜனப்பதாக்கள் பின்வருமாறு:

1 வங்கதேசம்.

இது தற்போது பசல்பூர் என்ற பகுதியைக் குறிக்கும். இதன் தலைநகர் சம்பா ஆகும். பிம்பிசாரர்காலத்தில் இது மகதநாட்டுடன் இணைக்கப்பட்டது.

2. மகதநாடு

16 மகாஜனப் பதாக்களில் இது மிகப்பெரியதாகும். இதன் சுற்றளவு சுமார் 300 மைல். இந்த நாட்டைத் தோற்றுவித்தவர் ‘பிரகத்திராதா’ என்பவர் ஆவார். இந்நாடு பிம்பிசாரர், அஜாதசத்ரு என்பவருடைய காலத்தில் மிகவும் புகழ்பெற்றுவிளங்கியது. தன் அருகில் உள்ள பல சிறுபகுதிகளை வென்று பலம்பொருந்திய நாடாக மகதநாடு விளங்கியது.

3. காசி

காசி தற்கால வாரணாசியைக் குறிக்கும். புத்தர்காலத்திற்கு முன்பு காசி ஒரு வளம்மிகுந்த நாடாக திகழ்ந்தது. காசிக்கும் கோசலை நாட்டுக்கும் அடிக்கடி போர்கள் நடந்தன. கும்சா என்ற கோசலை அரசர் காலத்தில் காசி தோற்க்கடிக்கப்பட்டு கோசலை நாட்டுடன் இணைக்கப்பட்டது.

4. கோசலம்:

கோசலை நாடு தற்போது உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஆவாத் என்ற பகுதியைக் குறிக்கும். இதன் தலைநகரமாக சரஸ்வதி விளங்கியது. புத்தர்காலத்தில் கோசலை நாட்டிற்கும் மகதநாட்டிற்கும் அடிக்கடி போர் ஏற்படுவதுண்டு அப்போது கோசலை நாட்டு மன்னராக இருந்தவர் பிரஜெயின் என்பவராவர். இவர் ஒரு பெரிய கொடை வள்ளல். இரண்டு முக்கிய நகரங்களை பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கினார். ஆஜாதசத்ருவுக்கும் இவருக்கும் பகைமை ஏற்பட்டது. புpரஜெயின் காலத்திற்குப் பிறகு கோசலை மகத நாட்டுடன் இணைக்கப்பட்டது.

5. வஜ்ஜி

வஜ்ஜி நாட்டில் லிச்சாவி வம்சத்தவரும் வித்திலர் வம்சத்தினரும் பெயர் பெற்றவர்கள் ஆவர். ஜகை மன்னர் காலத்தில் வித்திலர்கள் பெருமை அடைந்தனர். லிச்சாவி வம்சத்தின் தலைநகரம் வைசாலியாகும். மகாவீரரின் தாய் லிச்சாவி அரச குடும்பத்தைச் சார்ந்தவராவார்.

6. மல்லா:

மல்லா நாட்டில் குடியாட்சி காணப்பட்டது. இவர்களின் தலைநகரம் குஸூ நகரமாகும். குஸூ நகரமும் பாவாவும் புத்தமார்க்கத்தில் புகழ் பெற்றவை. புத்தர் தனது இறுதி உணவை பாவா என்ற இடத்தில் உண்டு முடித்து முக்தியடைந்தார் என்று கூறப்படுகின்றது.

7. சேதி:

தற்காலத்திய பந்தல்கண்ட் என்ற இடத்தைக் குறிக்கிறது. இது யமுனை நர்மதை நதிகளுக்கிடையே உள்ள பகுதியாகும். இதன் தலைநகரம் சுத்தமதி ஆகும்.

8. வத்சா:

இங்கு முடியாட்சி நிலவியது. இதன் தலைநகரம் கௌசாம்பியாகும். இதனைக் கி. மு. ஆறாம் நூற்றாண்டில் உதயணன் என்பவர் ஆட்சி புரிந்தார். இவரிடம் மிகப்பெரிய படை ஒன்று இருந்தது. இவர் முதலில் புத்த மதத்தின் எதிரியாக இருந்தார். ஆனால் பிற்காலத்தில் புத்த மதத்தை ஆதரித்தார்.

9. குரு நாடு:

தற்காலத்திய டெல்லி, மீரட் ஆகிய இடங்கள் தான் அக்காலத்திய குருநாடாக விளங்கியது. வேதகாலத்தில் குருநாடு சிறப்புப் பெற்று விளங்கியது. ஆனால் கி. மு. ஆறாம் நூற்றாண்டில் அதன் புகழ் மங்கியது.

10 பாஞ்சாலம்:

தற்போது உள்ள ரோகில்கண்டைக் குறிக்கும் குருநாட்டைப் போன்றே இதுவும் கி. மு. ஆறாம் நூற்றாண்டில் அதன் சிறப்பை இழந்தது. இதன் தலைநகரம் கம்பில்லா ஆகும்.

11. மத்சயநாடு:

இது தற்போதைய ஜெய்பூரைக் குறிக்கும் இதன் தலைநகர் விராட் ஆகும்.

12. சூரசேன நாடு:

இது மத்சய நாட்டின் தென்பகுதியில் அமைந்திருந்தது. இதன் தலைநகர் மதுரா ஆகும்.

13. அசாக்கா:

அவந்தியின் அருகாமையில் அமைந்திருந்தது. ஆசாக்கா இதன் தலைநகரம் பாட்டிலியா ஆகும்.

14. அவந்தி:

மாளவ நாட்டைக் குறிப்பிடுவது அவந்தியாகும். இதன் தலைநகர் உஜ்ஜையினி ஆகும் புத்தர் காலத்தில் அவந்தியை ஆண்ட மன்னர் பிரதியோட்டா என்பவராவர். அவந்தி புத்தமத வளர்ச்சிக்கு முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.

15. காந்தாரம்:

தற்காலத்தில் காஷ்மீர் தட்சசீலம் போன்ற இடங்களே காந்தாரம் ஆகும். இதன் தலைநகரம் தட்சசீலம். குhந்தாரம் கல்வி வளர்ச்சிக்கு பெயர் பெற்ற இடமாகக் கருதப்படுகின்றது.

16. காம்போசா:

இது துவாரகையைத் தலைநகராகக் கொண்டது. இதன் தலைநகர் தொர்க்கா ஆகும். இந்த நாடு வடமேற்கு எல்லைப்புறத்தில் அமைந்திருந்தது. இதைப்பற்றி யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். அதேடு டி.டி.கோசாம்பி அவர்களின் பண்டைய இந்தியா என்னும் ஆங்கில நூலிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட பண்பாடும் நாகரீகமும் என்ற நூலில் கூறப்பட்ட நாடுகளும் பெருத்தம் நிறைந்து காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

அரசன் (முடியாட்சி):

மேற்கூறப்பட்ட நாடுகளில் சத்திரிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களே அதிகம் காணப்பட்டனர். அதோடு சத்திரியர் அல்லாதவர்களும் அரசர்களாக இருந்தனர். அரசன் பரம்பரையாகப் பட்டத்திற்கு வந்தான். அரசன் பல சலுகைகளைப் பெற்று எதேச்சதிகார ஆட்சி செலுத்திவந்தான். நிலத்தின் விளைச்சலில் அரசனுக்கு பத்தில் ஒரு பங்கு கொடுக்கப்பட்டது. ஒரு அரசனுக்கு ஆண்குழந்தை பிறந்தாள் அந்த பிறப்புநாள் பொது விழாவாகக் கொண்டாடப்படும் அப்போது குடிமக்கள் ஒவ்வொறுவரும் பால்பணம் என்ற ஒரு சிரிய தொகையைக் கொடுப்பர்.

அரசன் நீதிக்குத் தலைவனாகக் கருதப்பட்டான். ஆவனிடம் பல அலுவலர்கள் இருந்தனர். பலவகைப்பட்ட நீதி மன்றங்கள் காணப்பட்டன. அரசனது தீர்ப்பே முடிவாகக் கருதப்பட்டது. அரசனிடம் நிலையானப் படை ஒன்று இருந்தது. அப்படை நான்கு பிரிவுகளாக இருந்தது. போர்களில் வில், அம்பு, ஈட்டி, வாள் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டன. அரசனுக்கு வேட்டையாடுவது வழக்கமாக இருந்தது.

குடியாட்சி முறை:

குடியாட்சி முறைக்கு உதாரணமாக வஜ்ஜி நாட்டைக் குறிப்பிடலாம். இதில் மக்கள் தாங்களாகவே நேரடியாக ஆட்சியை வழி நடத்துவார்கள். எல்லோரும் ஓரிடத்தில் கூடி முக்கிய முடிவுகளை எடுப்பர். அந்த இடத்திற்குப் பொது இடம், போதி, சங்கா என்று பெயர். குடியாட்சி நடைபெற்ற நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாடாளுனர் அல்லது ராஜன் என்று பெயர். லுpச்சாவி நாடு ராஜன்களால் ஆளப்பட்டது. எதிரிகள் தங்கள் நாட்டின் மீது போர் தொடுக்கும் போது எல்லாக்குடியாட்சிகளும் ஒன்றுகூடி எதிரியைத் தாக்குவர். அப்பொழுது போர்த் தலைவனாக ஒரு பொதுத் தலைவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் மரபு இருந்து வந்துள்ளது.

நாட்டின் வருமானம்:

நிலவரி முக்கிய ஆதாரமாக இருந்தது. நிலவரி ஆறில் ஒரு பங்காகும். இதைத் தவிர சிற்றரசர்கள் கொடுக்கும் பணமும் அரசனின் வருமானத்தோடு சேர்க்கப்பட்டது. வியாபாரிகளும் வரியைச் செலுத்தினர். மக்கள் அரசனுக்கு நன்கொடை வழங்கினர். இப்படிச் சேர்ந்த பணம் படை அரசாங்க அலுவல்கள் அரசகுடும்பம் சமுதாய வளர்ச்சி ஆகியவற்றிற்கு உபயோகப்படுத்தப்பட்டன. வருவாய் கிராமத்தலைவனால் வசூல் செய்யப்பட்டது.

பொருளாதார நிலை:

மக்கள் பலர் கிராமங்களில் வாழ்ந்துவந்தர். விவசாயம் அவர்களின் முக்கிய தொழிலாகும். வீடுகள் நெருக்கமாக அமைந்திருந்தன. வீட்டைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் காணப்பட்டன. நிலங்கள் வேலிகளால் அடைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. ஒரு கிராமத்தில் 30 முதல் 1000 வீடுகள் வரை இருந்தன. குடும்பத்தில் தந்தையே தலைவன். குடும்பம் சிறப்பாகக் காணப்பட்டது. கிராமத்தில் சபா என்ற ஒரு அமைப்பு இருந்ததாக பேராசிரியர் ஜே. தர்மராஜ் குறிப்பிடுகிறார்.

கிராம வாழ்க்கை எளிமையாகவும் மகிழ்ச்சி நிறைந்தும் காணப்பட்டன. குற்றங்கள் அதிகமாக நடந்ததாகத் தெரியவில்லை. முன்னேற்றத்திற்கு மக்கள் மிகவும் ஒத்துழைத்தனர். கிராமங்களில் காடுகள் புல்வெளிகள் நீர்பாசன வசதி நெல.; காய்கனிகள். பூக்கள். கரும்பு ஆகியவைப் பயிரிடப்பட்டன. மீன்பிடித்தல் வேட்டையாடுதல் பானை சட்டி செய்தல், மரம் ஏறுதல் ஆகிய தொழில்கள் நடைபெற்றன. வெளிநாடுகளுக்கு கம்பளி பட்டு வாசனைத் திரவியங்கள் அனுப்பப்பட்டன. பண்டமாற்று முறை கைவிடப்பட்டு நாணயமுறை புலக்கத்திலிருந்தது.

சமுதாய நிலை:

இந்திய சமுதாயமானது பல ஜாதிகளால் பிரிக்கப்பட்டடிருந்தது. பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்ற பாகுபாடு காணப்பட்டது. ஜாதி வேற்றுமை சமுதாய முன்னேற்றத்தைத் தடுத்தது. அவரவர்கள் ஜாதிக்கேற்ற தொழில்களைச் செய்தனர். சமுதாயத்தில் அடிமைகள் இருந்தனர் சிலர் தவ வாழ்க்கையை மேற்கொண்டனர். பெண்களின் நிலை திருப்திகரமாக இல்லை. மணமாகாத பெண்கள் சந்தையில் விற்கப்பட்டதாக கிரேக்க எழுத்தாளர்கள் கூறுகின்றனர். உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகின்றது. இக்காலத்தில் மாமிச உணவு மிகவும் குறைக்கப்பட்டது. சைவ உணவு மிகவும் விரும்பப்பட்டது. பசுவதை நிறுத்தப்பட்டதாக அறிகிறோம். மக்கள் பருத்தி ஆடையையே விரும்பி அணிந்தனர். செல்வந்தர்கள் பட்டாடை அணிந்தனர். பெண்கள் ஆபரணங்கள் அணிந்தனர்.

சமயநிலை:

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தான் உலக மேதைகளான ஹெராக்ளிட்டஸ், கன்பூயூசியஸ் ஆகியோர் வாழ்ந்து வந்தனர். இந்தியாவிலும் புத்தமதம் புத்தராலும் சமணம் மகாவீரராலும் தோற்றுவிக்கப்பட்டன. இந்த நூற்றாண்டில் இந்து மதக் கோட்பாடுகளான ஆத்மா அழியாதது, உயிர் கூடுவிட்ட கூடு பாயும், கர்ம வினை தொடர்ந்து வரும் ஆகிய மூன்றும் நாடெங்கிலும் பரவி நின்றன. இந்த உயர்ந்த கொள்கையை படித்தவர்களும், துறவிகளும் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. மற்றவர்கள் உருவ வழிபாட்டைத் தழுவி வந்த இந்து சமயத்தைப் பின்பற்றி வந்தனர். மேலும் ஜாதிகளுக்கேற்ற வழிபாட்டு முறையும் காணப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் தான் சமண மதமும் புத்த மதமும் இந்தியாவில் தோன்றின என்ற வரலாற்று அறிஞர்களின் கருத்துக்கள் ஏறக்குறைய ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகவே பார்க்க முடிகின்றன.

புதிய சமயங்கள் தோன்றக் காரணங்கள்:

1.            இந்து சமயக் கருத்துக்களின் புரியாத தன்மை:

இந்து சமயத்தில் ஒரு சாதாரண மனிதனுக்கு வேதங்கள் மற்றும் சமய நெறி நூல்களில் கூறப்படும் சடங்குகளும் சமபிரதாயங்களும் அப்பாற்பட்டே இருந்தன. பார்ப்பனர்களுக்கு மட்டுமே விளங்கக் கூடியதாக, சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாத சமயமாக இந்து மதம் காணப்பட்டது. ஆரிய இலக்கியங்கள் அனைத்தும் சமயஸ்கிருத மொழியிலேயே இருந்ததால் அவை சாதாரண மக்களால் உணர முடியவில்லை. இந்த சூழ்நிலை தான் பௌத்த சமயம் தோன்ற முதற்காரணமாக அமைந்தது.

2.            இந்து சமயத்தில் காணப்பட்ட மூடப்பழக்கங்கள்:

இந்து சமயத்தில் மூடப்பழக்கங்களும் ஆடம்பரச் சடங்குகளும் அதிகமாக வளர்ந்தது. உயிர் பலியிடுதல் வளர்ந்து வந்தது மனித இனத்திற்க மிகவும் தேiவாயன விலங்குகளான ஆடு, பசு, காளைமாடு போன்றவற்றை கடவுளுக்கு பலியிடப்பட்டது. இளகிய மனம் படைத்த இந்துக்களாலேயே வெறுக்கப்பட்டது.

3.            மந்திரங்களில் மீது மோகம்:

வேதங்களின் காணப்பட்ட கருத்துக்களை மறந்து மந்திரங்களின் மீது மக்கள் மோகம் கொண்டனர். மந்ததிரத்தினால் நோயைக் போக்கவும் போரில் வெற்றி பெறவும். உற்பத்தியை அதிகரிக்கவும் முடியும் என்று மக்கள் நம்பினர். எனவே, வேதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அறிவற்ற எண்ணத்திலிருந்து மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பினர்.

4.            வேள்விகளின் கடினத்தன்மை:

வேள்விகள் பார்ப்பனர்களால் செய்யப்பட்டால் தான் கடவுளால் ஏற்கப்படும் என்றதால் பிற இனத்தவர் வெறுத்தனர். அதோடு வேள்விகளுக்கு செலவழிக்கப்படும் தொகையும் அதிகமாக காணபட்டன. செல்வந்தர்களால் மட்டுமே வேள்விகள் நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது. வேள்விகளுக்கான பசு, குதிரை ஆகியவையே. காளைகள் பலியிடப்படுதல் மக்களை வெறுப்படையச் செய்தது. எனவே, எளிமையான சமயத்தை நோக்கி ஏங்க ஆரம்பித்தனர். வேள்வி மூலம் அல்லாமல் வேறு வழிகளால் முக்தி பெறுவதற்கு மாற்று வழிகளைக் காண முற்பட்டனர். ஆக்கால மக்கள் மாற்று ஒரு சமயத்தை பின்பற்ற எண்ணினர்.

5.            பார்ப்பனர்களின் ஆதிக்கம்

பார்ப்பனர்கள் சமுதாயத்தில் எல்லா நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தினர். அவர்கள் வரிவிலக்கும் மரண தண்டனைகளிலிருந்து விலக்கு பெற்றனர். அரசியலில் மன்னர்கட்கு ஆலோசகர்களாக வழிகாட்டிகளாக இருந்தனர். அவர்கள் தனித்தன்மையும் உயர்வையும் கொண்டவர்களாக மதிக்கப்பட்டனர். இந்து சமயம் அரசியல் சமுதாயம் ஆகியவற்றில் காணப்பட்ட பார்ப்பன ஆதிக்கம் புதிய சமயக் கருத்துக்கள் தோன்றக் காரணமாயின. தமிழகத்தில் முற்சங்க காலத்தில் அந்தணர், ஐயர் என்ற சொல் வழக்கில் இருந்து வந்துள்ளது. பார்ப்பனர்களை எதிர்த்து சத்திரியர்களால் ஆரம்பிக்கப்பட்ட சமயமே சமண சமயம் மற்றும் புத்த சமயம் ஆகியனவாகும்.

6.            சமுதாயத்தில் காணப்பட்ட சாதிமுறை:

இந்து சமயத்தில் சாதிக்கொடுமை உச்சநிலை அடைந்தது. சூத்திரர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோர் பார்ப்பனர்களால் குறைவாக மதிக்கபட்டனர். சாதிக் கட்டுப்பாட்டுத் தளைகளிலிருந்து மீண்டு சுதந்திரமாக வாழ மக்கள் விரும்பினர். புதிய சமயக் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் இக்கட்டுப்பாடுகளை களைய முற்பட்டனர். மேற்கண்ட சூழ்நிலைகளின் காரணமாக புத்தசமயம், சமண சமயம் தோன்றியது. கி. மு. ஆறாம் நூற்றாண்டில் இந்திய மக்களின் ஆன்மீக தேவையை நிறைவ செய்யவே இச்சமயங்கள் தோன்றின. புத்த சமயமானது தற்பொழுத இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதம் போன்று ஒரு பெரும் உலக மதமாகத் திகழ்கின்றது. ஆனால் தற்சமயம், தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், சீனா, பர்மா, இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பல இலட்சக்கணக்கான மக்கள் இம்மதத்தைப் பின்பற்றுகின்றனர். சமண சமயத்தைப் போன்று இந்து மதத்தில் காணப்பட்ட கண்மூடித்தானமான பழக்கவழக்கங்களைக் களையத் தோன்றிய ஓர் சீர்திருத்த இயக்கமே புத்த சமயம் ஆகும். கேளதம புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட புத்த சமயம் மக்களுக்கு புதிய சமயக்கருத்துக்களை போதித்து அவர்களை நல்வழிப்படுத்தியது. கேளதம புத்தரின் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டது புத்த மதம் ஆகும். இப்படிப்பட்ட கால நிலையில் கௌதம புத்தர் தோன்றி ஒரு புதுமை செய்தார் என்ற கருத்து வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

இந்திய வரலாற்றில் புத்த சமயத்திற்கு குறிப்பிடத்தக்கதோர் இடமுண்டு. கி. மு. ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய கௌதம புத்தர் பிராமணிய இந்த சமயத்தின் வேள்வி சடங்குகளையும் அவற்றுடன் தொடர்படைய சமயக் கருத்துக்களையும் சமூகப் பிரிவுகளையும் கடிந்தார். அவற்றிற்குப் பதிலாக எளிய தியானம், வழிபாடு, வேறுபட்ட சமயக்கருத்துக்களையும் வெளியிட்டார். எல்லா வர்ணத்தவரும் (சாதியினரும்), பெண்களும் அவருக்கு பின்னடியார்களாயினர். பின்னய அரசாட்சி முறையை விடவும் முன்னய குடியாட்சி முறை சிறந்தது என்பதை நிறுவ குடியாட்சிகளின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப பௌத்த துறவிகள் இயக்கம் (சங்கம்) உருவாகியது. இதன் செல்வாக்கை பொதுமக்களிடமும் சில அரசர்களிடமும் காண முடிந்தது.

முடிவுரை:

புத்த சமயம் பற்றிய அறிவும் ஆய்வும் என்று இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் பெரிதும் போற்றப்படுகிறது. அமைதிக்கும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் புத்தரின் எண்ணங்கள் மிகவும் இன்றியமையாதவை என்று கருதப்படுகின்றன. இத்தகு நோக்கங்களை மனதில் கொண்டு பணி செய்ய பல பௌத்த இயக்கங்கள் செயல் படுகின்றன. ஆகவே, இன்று உலகப் பெருஞ் சமயங்களில் புத்தசமயம் ஒன்றாக திகழ்கின்றது. மேற்கூறப்பட்ட செய்திகள் வாயிலாக கி. மு. ஆறாம் நூற்றாண்டில் பௌத்தம், சமணம் தோன்றுவதற்கு முன்னும் அதற்குப் பின்னும் சமூக சமய வரலாற்றுப் பின்புலங்கள் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளன.

பயன்பட்ட நூல்கள்:

1.            இந்திய வரலாறு, Vol. I, பேரா. ஜே. தர்மராஜ், டென்சி பப்ளிக்கேஷன்ஸ், சிவகாசி.

2.            புத்த சமயம், எம், ஏ. இரத்தின ராஜா, தமிழ்நாடு இறையியல் நூலோர் குழு, மதுரை.

3.            புத்தர் அருள் அறம், ஜி. அப்பாத்துரையார், ஆழி பப்ளிசர்ஸ்

4.            பண்டைகால இந்தியா, ஆர். எஸ். சர்மா, தமிழில். மாஜினி.

5.     பஃற்றுளியிலும் அதற்கு அப்பாலும் பழந்தமிழ் சங்க கால நாகரீகமும் பண்பாட்டு ஏகாதிபத்தியமும் - மா. வாவூசி, தொகுதி 1. ஜென்ஸ் வெளியீட்டாளர்கள், ஊரப்பாக்கம், சென்னை. 

- மா.மாணிக்கம், முனைவர் பட்ட ஆய்வாளர், சைவ சித்தாந்தத் தத்துவத்துறை, சமயங்கள், தத்துவம் மற்றம் மனிதநேயச் சிந்தனைப்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை