சமற்கிருதம் மிகவும் தொன்மையான மொழி எனவும் கடவுளின் மொழி எனவும் செம்மொழி எனவும் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி எனவும் அம்மொழி பேசாத உலகியல் விடயங்கள் எதுவும் இல்லை எனவும் பலவாறு புகழப்பட்டு வருகிறது. இவற்றில் அடங்கியுள்ள உண்மைகளை அறிந்து கொள்வதும் உலக மொழிகளோடும் தமிழ் மொழியோடும் சமற்கிருத மொழியின் நிலை என்ன என்ற ஒரு மதிப்பீட்டைப் பெறுவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

சமற்கிருதம் வடமொழி எனவும் தமிழில் அழைக்கப்படுகிறது. ஆனால் சங்க காலத்தில் வடமொழி என்பது பெரும்பாலும் பிராகிருத மொழியைக் குறிக்கத்தான் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சங்கம் மருவிய காலத்திற்குப் பின்னரே வடமொழி என்பது சமற்கிருத மொழியைக் குறிப்பதாக ஆகியது. அந்த வடமொழியைக் கூட சமற்கிருதப் பண்டிதர்கள் இரு பிரிவுகளாகப் பிரித்தே வழங்கி வருகின்றனர். சமற்கிருதத்தின் தந்தை எனப்படும் சமற்கிருத இலக்கண ஆசிரியர் பாணினி அவர்களின் காலத்திற்கு முந்தைய வேதங்கள் முதல் உபநிடதங்கள் வரை இருந்த பண்டைய கால வேத மொழி வைதீக மொழி எனவும் அதற்குப் பிந்தைய பாணினி அவர்களால் செம்மைப்படுத்தப்பட்டு மெருகிடப்பட்ட மொழிதான் சமற்கிருத மொழி எனவும் கூறுகிறார் கா. கைலாசநாத குருக்கள். மேலும் அவர் பிராகிருதம் முந்தைய மொழி எனவும் அதனைச் சீர்படுத்தி உருவாக்கப்பட்ட மொழிதான் சமற்கிருதம். எனவும் கூறுகிறார் (1) 29. ஆகவே பண்டைய வைதீக மொழியையும், முந்தைய பிராகிருத மொழியையும் இணைத்து அவற்றைச் சீர்படுத்திப் பண்படுத்தி பாணினி உருவாக்கிய மொழிதான் சமற்கிருதம். ஆதலால்தான் அவர் சமற்கிருத மொழியின் தந்தை எனப்படுகிறார்.

சமற்கிருதம் ஒரு இந்தோ-ஐரோப்பிய மொழி. இதன் வேதகால வைதீக மொழி ஈரானின் அவெத்தான் (Avestan) மொழியோடு பலவகைகளிலும் ஒப்புமையுடையது. சமற்கிருதம் இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தி, வங்காளி, குசராத்தி, மராத்தி, காசுமீரி, அரியான்வி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைத்திலி, சிந்தி, பஞ்சாபி போன்ற வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாகக் கருதப்படுகிறது. தென் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவைகளின் மூல மொழி தமிழ் என்ற போதிலும் இம்மொழிகளில் வடமொழிச் சொற்கள் அதிகம் இருக்கிறது. தமிழ் மொழிக்கு கி.பி. 2004ஆம் ஆண்டில் செம்மொழித் தகுதி வழங்கப்பட்டபின், கி.பி. 2015-ஆம் ஆண்டில் சமற்கிருத மொழிக்கும் செம்மொழி தகுதி வழங்கப்பட்டது.

வேதகால நூல்கள்:

இருக்கு, யசூர், சாமம் ஆகிய மூன்றும் தான் முதலில் வேதங்களாகக் கருதப்பட்டன. இந்த மூன்று வேதங்களையும் ‘திரயீவித்யா’ எனக் குறிப்பிட்டனர். நான்காவது வேதமான அதர்வண வேதம் நெடுங்காலத்திற்குப் பின்னரே நான்காவது வேதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த ஒவ்வொரு வேதத்துடனும் பிற்காலத்தில் மூன்று பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அவை பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் ஆகியன. இருக்கு வேதம் சங்கிதை எனப்படும் பாடல்களைக் கொண்டது. ஆகவே அது இருக்குவேத சங்கிதை எனப்பட்டது. அதன் பிராமணங்கள் இருக்குவேத பிராமணங்கள் எனவும் அதன் ஆரண்யங்கள் இருக்குவேத ஆரண்யங்கள் எனவும், அதன் உபநிடதங்கள் இருக்குவேத உபநிடதங்கள் எனவும் அழைக்கப்பட்டன. இதுபோன்று நான்கு வேதங்களுக்கும் தனித்தனிப் பிரிவுகள் இருந்தன. வேதங்களின் எல்லை உபநிடதங்கள். அந்தம் என்றால் முடிவு என்பதால் உபநிடதங்கள் வேதாந்தங்கள் எனவும் மறைமுடிவு எனவும் பெயர்பெற்றன. பரம்பரை பரம்பரையாக வேதங்கள் வாயால் ஓதிச் செவியால் கேட்டு வந்ததால் வேதம் ‘சுருதி’ எனவும் எழுதாமறை எனவும் கூறப்பட்டது. பதம், கிரமம், சடை, கனம் என நான்கு முறைகளைக் கடைப்பிடித்தே வேதம் ஓதப்படும். இவற்றை ஆசிரியர்களிடம் பயின்று ஓதுவதற்கு உரிய திறமை பெற்றவர்களை கனபாடிகள் என்பர். இவ்வாறு விதிமுறைகளை அமைத்து ஓதி வந்ததால்தான் சங்கிதையாகிய வேதங்கள் இன்றுவரை மாறாமல் இருந்து வருகின்றன என கருதப்படுகிறது (2).

இருக்கு வேதம்:

வைதீக மொழியில் முதலில் தோன்றியதும் முதன்மையானதும் இருக்கு வேதம். இருக்கு வேதசங்கிதை என்பது பல தனிப்பாடல்களின் தொகுதி. இந்த இருக்கு வேத சங்கிதை பத்து மண்டலங்களைக் கொண்டது. இரண்டாம் மண்டலம் முதல் ஏழாம் மண்டலம் வரை உள்ளவைதான் மிகப்பழைய பாடல்களைக் கொண்டவை. ஒவ்வொரு மண்டலத்துக்குமான இப்பாடல்கள் ஒரே குடியில் பிறந்த இரிசிகளால் பல பரம்பரைகளில் பாடப்பட்டு வந்தவை. இரண்டாம் மண்டலம் முதல் ஏழாம் மண்டலம் வரை பாடிய வம்சபரம்பரைகள் முறையே கிருத்சமதர், விசுவாமித்திரர், வாமதேவர், ஆத்திரேயர், பாரத்துவாசர், வசிட்டர் ஆகிய இரிசிகளின் பரம்பரைகள். எட்டாம் மண்டலம் கண்வர், அங்கிரசு ஆகிய இரு இரிசிகளின் வழித்தோன்றல்களால் பாடப்பட்டவை. முதலாம் ஒன்பதாம் பத்தாம் மண்டலங்கள் பல இரிசிகளின் வம்சங்கள் பாடியவை. இதில் பெண் கவிகள் பாடிய பாடல்களும் உள்ளன. இம்மண்டலங்களில் முதலாம் பத்தாம் மண்டலங்கள் மிகவும் பிற்காலத்தைச் சேர்ந்தவை. இரிக்வேதப் பாடல்கள் மிக எளிய நடையில் உள்ளன. தெய்வங்களைப் போற்றியும், அதற்குத் தாம் அளிக்கும் பொருட்களைக் குறிப்பிட்டும், தமக்கு வேண்டும் பொருள்களை தெய்வத்திடம் இரந்து வேண்டியும் பாடப்பட்ட பாடல்கள் இவை (3).

இரிக் வேதகாலப் பாடல்கள் நாகரிக வளர்ச்சி பெற்ற மக்களின் இலக்கியத் தரமிக்க பாடல்கள் அல்ல. இவை இனக்குழு கால மக்களின் நாட்டார் பாடல்கள். இவற்றில் இருப்பது போன்ற கருத்துகளைக் கொண்ட பாடல்களை, உலகில் உள்ள வேறு சில இனக்குழு காலப் பழங்குடிச் சமூகங்களும் பாடியுள்ளன. சுமேரியருடைய திருமுறைகள், பாபிலோனியப் புலம்பல் பாடல்கள், சீனர்களது வேள்விப் பாடல்கள், கிரேக்கர்களது இறைவேண்டல் பாடல்கள் ஆகியன இவற்றில் உள்ள கருத்துகளைக் கொண்டனவாக உள்ளன (4). இவற்றின் கருத்துகளை தத்துவ முதிர்ச்சியின் வெளிப்பாடுகளாகக் காண இயலாது எனக் கூறவந்த இரைசு டேவிட்சு (T.W. Rhys Davids), ‘உண்மையில் கூறப் போனால் வேத நம்பிக்கைகள் அனைத்தும் மூடத்தனமானவை, குழப்பமானவை, தத்துவ முதிர்ச்சியின் வெளிப்பாடுகளாக இவற்றைக் கருதுவது இயலாத காரியம்’ எனக் கூறுகிறார் (5).

வேத காலப் பாடல்கள் ‘அறிவுத் தாகத்தால் தூண்டப்பட்டிருந்தாலும், அவர்களது சிந்தனைகள் பேதமை நிறைந்ததாகவும், பொருளற்றதாகவும், சிறுபிள்ளைத் தனமானதாகவும் இருக்கின்றன’ எனவும், ‘ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வேதகாலக் கவிஞர்களும், முனிவர்களும் விட்டுச் சென்ற புனைவுகள் மானிடவியல் பண்பாட்டுக்குச் சிறந்த கொடை எனக் கூறமுடியாது’ எனவும் கூறுகிறார் பசாசு (6). இரிக் வேதகாலப் பாடல்கள் 10 மண்டலங்களையும் 848 சூக்தங்களையும், 10,522 பாடல்களையும் கொண்டதாக உள்ளது. மிகவும் பிற்காலத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் முதலாம், பத்தாம் மண்டலங்களின் பாடல்கள் மட்டும் 3760. (7). இரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் உள்ள 90ஆவது சூக்தம்தான் நால் வருணங்கள் குறித்துப் பேசுகிறது (8). இது பிற்காலத்திய இடைச்செருகல்.

யசூர், சாம, அதர்வண வேதங்கள்:

யசூர் வேதம் 1975 மந்திரங்களைக் கொண்டுள்ளது. இது யாகங்கள் செய்வதற்கான விளக்கங்களையும் நடைமுறைகளையும் கொண்ட ஒரு தொகுப்பு. யாகங்கள் செய்யும் புரோகிதர்களின் தேவையை ஒட்டியே இது உருவாகியுள்ளது. சாம வேதம் பெரும்பாலும் இசைப்பாக்களால் ஆனது. இவை பெரும்பாலும் காயத்ரி யாப்பு முறைக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1810 பாடல்கள் உள்ளன. பெரும்பாலான பாடல்கள் இருக்கு வேதத்தின் எட்டாம், ஒன்பதாம் மண்டலங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. சாம வேதமும் யாகங்கள் செய்விப்பதற்காக இயற்றப்பட்டவைதான். யசூர் வேதம், சாம வேதம் ஆகிய இரண்டும் புரோகிதர்களுக்கு மட்டுமே பயன்படக் கூடியவை. அதர்வண வேதத்திற்கு அதர்வாங்கிரசு என்பது பழைய பெயர். இது எல்லாவிதமான பில்லி சூனிய மந்திரவாதப் பாடல்களையும் எதிரிகளை ஒழித்துக்கட்டும் மந்திரவாதப் பாடல்களையும் கொண்டுள்ளது. தொடக்க காலத்தில் ஆரியனது சமூக வாழ்வில் ஏற்பட்ட நோய் அல்லது இயற்கை அழிவுகளைத் தடுப்பதற்காக இந்த மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன (9).

அதர்வண வேதத்திலுள்ள பெரும்பாலான மாயமந்திரப் பாடல்களும், மந்திரங்களின் நடைமுறைகளும் அற்பத்தனமான கற்பனைகளே எனக் கூறுகிறார் வின்டர்நிட்சு. இதுபோன்ற மந்திரச்சடங்குகள் பல்வேறு இன மக்களிடையேயும் நடைமுறையில் இருந்து வந்துள்ளன எனவும் அவைகளுக்கும் அதர்வ வேதம் கூறும் மாய மந்திரச் சடங்குகளுக்கும் இடையே வியப்பூட்டும் வகையில் ஒரே மாதிரியான நடைமுறைகள் உள்ளன எனவும் வட அமெரிக்கச் சிவப்பிந்தியர்கள், மங்கோலியர்கள், மலேய நாட்டினர், கிரேக்கர்கள், உரோமானியர்கள், ஐரோப்பிய நாட்டுப்புற மக்கள் அனைவரும் செய்யும் மாய மந்திரச்சடங்குகளுக்கும் அதர்வ வேதம் கூறும் மாயமந்திரச் சடங்குகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை எனவும் கூறுகிறார் வின்டர்நிட்சு (Winternitz) (10).

கி.மு. 1200 முதல் கி.மு. 1000 வரை இரிக் வேதமும் அதன்பின் கி.மு. 1000 முதல் கி.மு. 800 வரை யசூர், சாம, அதர்வண வேதங்களும் தோன்றின எனவும் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்பது பிராமணங்கள் ஆரண்யங்கள் தோன்றிய காலம் எனவும் கருதப்படுகிறது. கி.மு. 7ஆம் 6ஆம் நூற்றாண்டு வரையான காலம் உபநிடதங்கள் தோன்றிய காலம். இவை அனைத்துமே வாய் மொழியாகவே மிக நீண்ட காலம் இருந்து வந்தன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு பிந்தைய காலங்களில்தான் இவை அனைத்தும் எழுத்து வடிவம் பெற்றன. அப்பொழுது பிராமணங்கள், அதர்வண வேதம் முதலியன பெருத்த மாறுதல்களுக்கும், திருத்தங்களுக்கும் இடைச்செருகல்களுக்கும் உள்ளாகின.

பிராமணங்கள்:

யாகங்கள் செய்வதற்கான, செய்விப்பதற்கான விரிவான விளக்கங்களின் தொகுப்புதான் பிராமணங்கள். பிராமணர்கள் இந்த பிராமணங்களைக் கொண்டு தங்களது சமூக மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள முயன்றார்கள். யாகங்களுக்கான தத்துவ விளக்கம் அவற்றில் இல்லை. ஆனால் பிராமணங்கள், பார்ப்பனப் புரோகிதர்களின் தகுநிலையை எட்டாத உயரத்துக்கு ஏற்றி வைத்ததோடு, கடவுளுக்குச் சமமாகவும் அவர்களை இருக்க வைத்தது எனக் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு. டாக்டர் தாசுகுப்தா, ‘வறட்டுத்தனமான சட்டங்கள், மனம்போன போக்கில் புனைவு செய்யப்பட்ட குறியீடுகள், வரையறையற்ற கற்பனைகள், யாக நடைமுறை பற்றிய விளக்கங்கள்’ இவைதான் பிராமணங்கள் என்கிறார். லேவி என்பார், ‘பிராமணங்களின் இறையியல் கருத்துக்களைவிட, பண்பற்ற, பகுத்தறிவற்ற, ஆன்ம இழிநிலையை வெளிப்படுத்தும் வேறு ஒன்றைக் கண்பது அரிதினும் அரிது. பிராமணங்கள் கூறும் இறையியலில் ஒழுக்கப் பண்புக்கு இடமே இல்லை’ எனக் கூறுகிறார். ஆகவே பிராமணங்கள் என்பன தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ளவும், தாங்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளவும், மற்றவர்களைக் கீழானவர்கள் எனக் கூறிக் கொள்ளவும் கி.பி. முதல் நூற்றாண்டுக்குப்பின்னர் பார்ப்பனர்களால் திருத்தப்பட்ட, இடைச் செருகல்களால் நிறைக்கப்பட்ட, புரட்டல்களையும் புனைவுகளையும் கொண்ட நூல்கள் (11).

ஆரண்யங்கள், உபநிடதங்கள்:

மொத்தம் உள்ள 200க்கும் மேற்பட்ட உபநிடதங்களில் 108 உபநிடதங்கள் மட்டுமே, வேதங்களோடு இணைத்துப் பார்க்கப்படுபவை பல்வேறு தருணங்களில் பற்பல அறிஞர்களால் உள்ளுணர்வால் உணர்ந்து சொல்லிய கருத்துகள்தான் உபநிடதங்களாகத் தொகுத்து அமைக்கப்பட்டன. உபநிடதங்களில் தத்துவக் கருத்துக்கள் பல சிதறுண்டு கிடக்கின்றன. சுவம்சவேதம் போன்ற ஒரு சில முக்கிய உபநிடதங்கள் மூடநம்பிக்கைக்கு எதிரானதாகவும், பகுத்தறிவு சிந்தனை கொண்டனவாகவும் இருந்தன எனவும் மறுபிறப்பு, மறுஉலகம், முழுமுதற்காரணம், கடவுள், ஆன்மா ஆகியவற்றை மறுக்கும் கருத்துகளைக் கொண்டனவாகவும் அவை இருந்தன எனவும் பசாசு கூறுகிறார் (12). ஆனால் அதுபோன்ற கருத்துக்களைக் கொண்ட உபநிடதங்கள் பல இல்லாது போயின. மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபுக்குரிய, தொல் கபிலரின் எண்ணியம் எனப்படும் சாங்கியக் கருத்துகள் அன்று வட இந்தியா முழுவதும் பரவின. அதனால் பொருள்முதல்வாதக் கருத்துக்களைக் கொண்ட உபநிடதங்களும் உருவாகி இருந்தன. ஆரண்யங்கள் உபநிடதங்களைப் போன்றவைதான். அவை காடுகளில் வசித்த இரிசிகளால் படைக்கப்பட்டவை.

பாணினியின் இலக்கண நூல்:

ஆரியர்கள் கி.மு. 1750 முதல் இந்தியாவிற்கு வரத் தொடங்கினர். அப்பொழுது சிந்துவெளி நாகரிகத்திலும், வட இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழிய (திராவிட) மொழிகளே பேசப்பட்டு வந்தன. இந்தத் தமிழிய (திராவிட) மொழிகள் ஆரியர்களின் வேதமொழியோடு சேர்ந்து பல பிராகிருதக் கிளை மொழிகளாக உருவாகி மக்களால் பேசப்பட்டு வந்தன. இந்த பிராகிருத மொழியையும், பண்டைய வேதமொழியையும் இணைத்துத்தான் பாணினி சமற்கிருத மொழிக்கான இலக்கணமான அசுடாத்தியாயியை உருவாக்கினார். இவர் இந்தியாவின் வடமேற்கில் இருந்த தட்சசீலத்தைச் சேர்ந்தவர் எனக் கருதப்படுகிறது. இவரது காலம் கி.மு. 350 என்கிறார் ஏ. பெரீடேல் கீத் (A. Berriedale Keith). ஆனால் இவரது காலம் கி.மு. 300 எனக்கூறுகிறார் ஆர்தர் ஏ. மக்டொனெல் (Arthur A. Macdonell) (13). பாணினிக்கு முன்பு வேதங்களின் இலக்கணமாக பிராதிசாக்கியங்கள் இருந்தன. இருக்கு பிராதிசாக்கியம் மிகப் பழமையானது. ஆனால் பாணினிக்குப் பிறகு அந்தப் பிராதிசாக்கியம் திருத்தப்பட்டுள்ளது. பிற மூன்று வேதங்களின் பிராதி சாக்கியாக்களும், தைத்திரிய பிராதிசாக்கியா, காத்யாயனப் பிராதி சாக்கியா போன்றவைகளும் பாணினிக்குப்பின் திருத்தப்பட்டவைகள்தான். பாணினியத்தை விடவும் பிராதிசாக்கியங்கள் முழுமையானதாகவும், மனநிறைவு தருவதாகவும், பாணினீயத்தில் உள்ள குறைகளை நீக்கியதாகவும் இருப்பதால் இவை பாணினியின் காலத்திற்கு பிந்தயவை எனக் கூறுகிறார் கோல்டுசுடக்கர் (Goldstucker) (14).

பதஞ்சலி, தனது மகாபாசியத்தில் பாணினியில் உள்ள 3983 பாடல்களுக்குப் பதிலாக 1720 பாடல்களுக்கு மட்டுமே விளக்கம் தந்துள்ளார். மேலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி யுவான் சுவாங் (Hiouen-Thsang) பாணினியின் நூலில் 1000 பாடல்கள் மட்டுமே இருந்தன எனத் தெளிவாகக் கூறியுள்ளார். பாணினியின் பாணினீயத்தில் வரும் பரிபாசைகள் சில பாணினி அறியாதவை எனவும் அவை பின்னால் சேர்க்கப்பட்டவை எனவும் மார்க்சுமுல்லர் குறிப்பிட்டுள்ளார். பாணினீயத்தின் பின் இணைப்புகள் யாவும் கி.பி. 5ஆம் நூற்றாண்டுவரை சேர்க்கப்பட்டவை எனவும் வேர்ச்சொல் ஆய்வில் பாணினீயத்தில் முரண்பட்ட தகவல்கள் தரப்பட்டுள்ளன எனவும் கூறுகிறார் ஏ.சி.பர்னெல் (A.C. Burnell). தாதுபதா பற்றிய பகுதியில் பல ஆசிரியர்களின் பங்களிப்பைக் காணலாம் என கோல்டுசுடக்கர் கூறுகிறார். ஔஃபிரெக்ட் (Aufrecht) என்ற வடமொழி அறிஞர் வேறு பல இடைச்செருகல்களும் உள்ளன எனச் சுட்டிக்காட்டியுள்ளார் (15).

பாணினீயத்திற்கு பின் இணைப்பாகத் தரப்பட்ட உணாதி சூத்திரங்கள் இடைச்செருகல்கள் என மார்க்சுமுல்லர் தனது பழம் சமற்கிருத இலக்கியம் (Ancient Sanskrit Literature) என்ற நூலில் நிறுவியுள்ளார். இதைப்போன்றே தாதுபாதா, கணபதா, இலிங்கானுசாசனா, பரிபாசாக்கள் போன்றவையும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவைதான் என்பதை வடநூல் வல்லார் அறிவர். வடமொழியில் உள்ள இலக்கண நூல்கள் பல கள்ளப்படிவங்கள் (Forgeries) என பர்னெல் சான்றுகளோடு சுட்டிக் காட்டியுள்ளார். அவர் பாணினீயம் உள்ளிட்ட வடமொழி இலக்கண நூல்கள் வரலாற்று ஆய்வுகளுக்குப் பயன்படா எனக் கூறுகிறார் (16). பாணினி பட்டியலிடும் வேர்ச்சொற்களில் 60 விழுக்காட்டிற்கு மேல் கற்பனையான பொருளைத் தருபவை எனவும் அவை வடமொழி இலக்கியங்களில் காணப் படாதவை எனவும் மேலை வடமொழிக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர் (17).

பர்னெல் தனது THE AINDRA SCHOOL OF SANSKRIT GRAMMARIANS என்ற ஆங்கில நூலில் 87 முதல் 108 வரையான 22 பக்கங்களில் பல வகைகளில் ஆய்வு செய்து, பின் இணைப்புகளும் இடைச்செருகல்களும் கொண்ட பாணினி இலக்கண நூலின் காலம் கி.பி. 300 எனத் தெரிவித்துள்ளார். இக்காலம் பலருக்கு வியப்பைத்தரலாம். ஆனால் அவரது ஆய்வில் பல உண்மைகள் உள்ளன. இத்துடன் அவர் சாகடாயண இலக்கணம், ஜினேந்திரரின் இலக்கணம் போன்றவற்றிற்கும் பாணினியின் இலக்கணத்திற்கும் உள்ள தொடர்புகளை ஆய்வு செய்து அவற்றின் காலத்தையும் தந்துள்ளார். மேலும் தொல்காப்பியம், பாணினி ஆகியவர்களின் இலக்கண நூல்கள் ஐந்திர இலக்கணச் சிந்தனைப்பள்ளியை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாகின என பர்னெல் கூறுகிறார் (18). இந்த ஐந்திர இலக்கணச் சிந்தனைப்பள்ளி தமிழ்ச் சிந்தனை மரபைச் சேர்ந்தது. பர்னெல் தொல்காப்பியத்தில் உள்ள பல சொற்களை சமற்கிருதத்தில் இருந்து வந்ததாகக் கூறுவதற்கு, தமிழின் தொன்மை மற்றும் சிறப்பு குறித்த அறியாமையே காரணம். இவரது நூலில் இருந்துதான் பேரா. ப. மருதநாயகம் முன்பு குறிப்பிட்டுள்ள பல கருத்துக்களை எடுத்தாண்டுள்ளார். ஆகவே பாணினியின் காலம் என்பது கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை எனலாம்.

பாணினியின் காலம் குறித்த நம்பத்தக்க சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. கி.பி. 7ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த ஆதி சங்கரரின் நூலில்தான் பாணினி குறிப்பிடப் பட்டுள்ளார். குமாரில பட்டர் பாணினி குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. பாணினீயத்திற்கு பதஞ்சலி எழுதிய மகாபாசியத்தின் மூலபாடம் கிடைக்கவில்லை என்பதால் அதனைக் கொண்டு பாணினியின் காலத்தை அறிந்துகொள்ள இயலாது (19). காத்யாயனா தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர் எனப் பதஞ்சலி கூறுகிறார் எனவும் காத்யாயனாரின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனவும் பெரிடேல் கூறுகிறார் (20). அன்றைய காலத்தில் தெற்குப் பகுதியில் காத்யாயனா என்ற பார்ப்பன இலக்கண அறிஞர் இருந்தார் என்பதை ஏற்க இயலாது என்பதால் அவரது காலம் பிற்காலத்தது என்பதே உண்மை. பதஞ்சலி, காத்யாயனா போன்றவர்களின் காலம் அவர்களின் நூல்களில் உள்ள சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப் படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பர்னெல் அவர்கள் கூறுவதுபோல் வடமொழி இலக்கண நூல்களில் உள்ள சான்றுகளை வரலாற்றுக் காலத்திற்கு எனப் பயன்படுத்த முடியாது. பாணினியின் இலக்கணம் போன்ற ஒரு நூல் உருவாவதற்கு ஒரு தேவை இருக்க வேண்டும். கி.பி. முதல் நூற்றாண்டுவரை மக்களின் மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, எழுதும் மொழியாகவோ சமற்கிருதம் இருக்கவில்லை. பிராகிருதம்தான் இருந்து வந்தது. ஆகவே சமற்கிருத இலக்கணத்திற்கான தேவை கி.மு. 187க்குப்பின் வைதீக பார்ப்பனியம் தோன்றிய பின்னரே உருவாகிறது. கி.பி. முதல் நூற்றாண்டின் சைமினி சூத்திரம் சமற்கிருத மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. ஆகவே பர்னெல் கூறிய கி.பி. 300 என்பதையும் கணக்கில் கொண்டு, பாணினியின் இலக்கணம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்திலோ அல்லது அதன் பின்னரோதான் உருவாகி இருக்க வேண்டும். அது உருவாகிய பின்னரும் அதில் கி.பி. 5ஆம் நூற்றாண்டுவரை இடைச்செருகல்களும் திருத்தங்களும் செய்யப்பட்டு வந்துள்ளன என்பது உண்மை.

பார்ப்பனிய இலக்கியங்கள்:

கி.மு. 187இல் பார்ப்பனனான புசியமித்திரன் மௌரிய வம்சத்தை அகற்றிவிட்டு மகதப் பேரரசைக் கைப்பற்றிக் கொண்டான். அதன் விளைவாக ஏற்பட்ட சமூக அரசியல் மாற்றங்களால் வைதீக பார்ப்பனியம் உருவாகி, பார்ப்பனிய இலக்கியங்கள் தோன்றின. கி.மு. 2ஆம் நூற்றாண்டிலும் அதன் பின்னரும்தான் மீமாம்ச சூத்திரம், பிரம்ம சூத்திரம், மனு சுமிருதி போன்ற நூல்களும் அதன்பின்னர் இராமாயணம், மகாபாரதம், கீதை, புராணங்கள் ஆகியவைகளும் உருவாகின. ஆதலால் பாணினியின் சமற்கிருத இலக்கணமும் கி.மு. 187க்குப்பின்னர்தான் தோன்றியிருக்க வேண்டும்.

மீமாம்ச சூத்திரம்:

வைதீக பார்ப்பனியத்தின் தத்துவ அடிப்படையாக, சைமினியின் மீமாம்ச சூத்திரமும், பரதராயணாரின் பிரம்ம சூத்திரமும் இருக்கின்றன. மனித வாழ்வு முக்தி அடைவதற்கு கருமம் (யாகம்) செய்தல் வேண்டும் என்பதே மீமாம்சத்தின் உள்ளடக்கம். வேதச்சடங்குகளை ஆதரிப்பதே அதன் நோக்கம். வேதம் அழிவில்லாதது, அது சுயமாகத் தோன்றி இருப்பு கொண்டது. வேதங்கள் இறைத்தன்மை வாய்ந்தவை வேதங்களின் முன்பு கடவுளர்கள் கூட அற்பமானவர்கள். வேதங்களும் பிராமணங்களும் மனிதனுக்குத் தேவையான அனைத்து மெய்யறிவையும் கொண்டுள்ளன. வேதங்களின் மெய்ப்பொருள் சமற்கிருத மொழி மூலமே வெளிப்படும். ஆதலால் வேதத்தை வழிமொழிவதற்கு சமற்கிருதமே ஏற்ற மொழி. இவை போன்ற கருத்துக்களைக் கொண்டதுதான் மீமாம்ச சூத்திரம். அதை எழுதியவர் மீமாம்ச நிறுவனர் சைமினி. இவருடைய காலத்தை கி.பி. முதல் நூற்றாண்டு எனலாம். பொதுவாக மீமாம்சம் கர்ம காண்டத்தையும், பிரம்ம சூத்திரம் ஞானகாண்டத்தையும் வலியுறுத்துகிறது (21).

பிரம்ம சூத்திரம்:

உபநிடதங்களில் உள்ள ஆன்மா சார்ந்த தத்துவக் கருத்துகளைத் தொகுத்து, ஒழுங்கு செய்து 555 சூத்திரங்களைக் கொண்டு உருவாக்கிய நூல்தான் ‘பிரம்ம சூத்திரம்’. அதனை எழுதியவர் பாதராயணர். இதன் சூத்திரங்களை உரையாசிரியர் உதவியின்றிப் புரிந்து கொள்ள முடியாது. கி.பி. 8ஆம் நூற்றாண்டு ஆதி சங்கரர், கி.பி. 11ஆம் நூற்றாண்டு இராமானுசர் ஆகிய இருவரின் பிரம்ம சூத்திர உரைகள்தான் சிறந்தன. இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தொல்கபிலரின் சாங்கியக் கொள்கைகள் வேதங்களுக்கு எதிரானவை என்கிறது பிரம்ம சூத்திரம். பிரும்மம் பருப்பொருட்களால் ஆனது அல்ல. அதைப் புலன்களால் உணர முடியாது; உள்ளத்தால் மட்டுமே உணர முடியும். உயிருள்ள மற்றும் சடப்பொருட்கள் அனைத்தும் பிரம்மத்திலிருந்தே தோன்றுகின்றன. உலகம் நிலையற்றது; பொய்யானது; அழிவுறும் தன்மையுடையது. ஆனால் பிரும்மம் மெய்யானது; அழிக்க முடியாதது; என்றும் நிலைத்திருப்பது. இவை பிரம்ம சூத்திரம் கூறுபவை. பிரம்ம சூத்திரத்தின் காலம் கி.பி. 200 என பேராசிரியர் கீத் கூறுகிறார் (22).

மனு சுமிருதி:

மனு சுமிருதியை எழுதியவன் சுமதி பார்கவா என்பவன். அவன் தனது விதிகளுக்குப் பெருமை சேர்க்கவும் மதிப்பை ஏற்படுத்தவும் பண்டைய காலத்தில் புகழ்பெற்ற அரசனாக இருந்த மனுவின் பெயரை திட்டமிட்டு தனது நூலுக்கு வைத்துள்ளான். வர்ணங்களைச் சாதிகளாக மாற்றியமைப்பதும், அதனை நிரந்தரமாக நிலை நிறுத்துவதும், பார்ப்பனனை அனைத்துச் சாதிகளுக்கும் மேலானவனாக, கடவுளுக்கு நிகரானவனாக ஆக்குவதும்தான் அதன் அடிப்படை நோக்கம். மனுவின் விதி 11:35, பிராமணனே உலகைப்படைத்தவன் என அறிவிக்கிறது. அதன் விதிகளின் நோக்கம் சாதியத்தைப் பாதுகாப்பதுதான். பெண்கள், சூத்திரன் ஆகியவர்கள் குறித்த மனுவின் சட்டவிதிகள் மனிதத் தன்மையற்றவை; கொடுமையானவை. ஆக, இன்றைய சாதியத்தீமைகளின் மூலம் மனு சுமிருதி. இதன் காலம் கி.பி. 150 எனலாம் (23).

மகாபாரதம்:

வியாசர் எழுதிய மூலநூல் வெற்றி என்ற பெயரையும் 8800 பாட;ல்களையும் கொண்டதாக இருந்தது.. இது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த போரைப் பற்றிக் கூறும் ஒரு சிறு நூலாக இருந்தது. இதனை இரண்டாவதாக எழுதிய வைசம்பாயணர் (Vaishampayana) என்பவர் பாரதம் என்ற பெயருடன் 24000 பாடல்களைக் கொண்டதாக மாற்றினார். மூலக்கதையோடு இதில் பல்வேறு அறிவுரைகள் இடம்பெற்றன. சாதாரண வரலாற்றுக்கதையாக எழுதப்பட்ட இந்நூல் சமூகத் தார்மீக, சமய கோட்பாடுகளைப் போதிக்கும் ஒரு கட்டளை நூலாக வடிவமெடுத்தது. கடைசியாக எழுதிய சவுதி (Sauti) இத்துடன் பல தனித்தனிக் கதைகளையும் தொல்கதைகளையும் இணைத்து வெளியிட்டார். இத்துடன் கீதை நூலும் இணைக்கப்பட்டது. ஆதலால் மகாபாரதம் சகல அறிவும், கலையும் நிறைந்த ஒரு கருவூலமாக கருதப்பட்டு 96,836 பாடல்களைக் கொண்டு மூல நூலைவிட 11 மடங்கு பெரிதாக உருவாகியது. இதன் காலம் பொதுவாக கி.பி. 200இல் இருந்து கி.பி. 400 வரை எனலாம். ஆனால் முகம்மது கோரியின் படையெடுப்பு வரை அதாவது கி.பி. 12ஆம் நூற்றாண்டுவரை இதில் திருத்தங்கள் செய்யப்பட்டு வந்தன (24).

இராமாயணம்:

வால்மீகியால் எழுதப்பட்ட இக்கதை முதலில் சீதையைக் கடத்தியதால் ஏற்பட்ட, இராமனுக்கும் இராவணனுக்கும் இடையேயான போரைப்பற்றிய வரலாற்றுச் சிறுகதையாகவே இருந்தது. இரண்டாவது பதிப்பில் சமூகம், நீதி, சமயம் ஆகியவற்றிற்கு மக்கள் ஆற்ற வேண்டிய கடமைகளைப்பற்றி எடுத்துரைக்கும் ஒரு அறிவுரை நூலாக மாறியது. மூன்றாவது பதிப்பில் தொல்கதைகள், அறிவு, கல்வி, தத்துவம், கலை முதலிய அனைத்தையும் கொண்ட கருவூலமாக ஆகிப் போனது. இராமாயணத்தை எழுதிய காலமும் மகாபாரதத்தை எழுதிய காலமும் ஒன்றாகவே இருந்தாக வேண்டும் என அம்பேத்கர் கூறுகிறார். மகாபாரதம் போன்றே பலமுறை திருத்தப்பட்டதுதான் இராமாயணம் (25).

புராணங்கள்:

சூதர்கள் (Sutas). தான் தொடக்ககாலப் புராணங்களை இயற்றியவர்கள். தொடக்க காலத்தில் புராணங்கள் அறிவுக் களஞ்சியங்கள் எனப்பட்டன. கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்குப் பின் பார்ப்பனர்கள் புராணங்களை எழுதும் பணியைத் தாங்கள் எடுத்துக் கொண்டு புராணங்களைத் தங்களுக்கு ஏற்றவாறு திருத்தி எழுதிக் கொண்டனர். அப்பொழுதான் கடவுள்களை வழிபடுவது குறித்தும் கடவுளின் அவதாரங்கள் குறித்தும் புராணங்கள் பேசின. சிவன், விசுணு போன்ற கடவுள்களை வழிபடும் புராணங்கள் 18. அவற்றின் காலத்தை அசாரா (Mr. Hazara) என்பவர் கி.பி. 200 முதல் கி.பி. 1100 வரை என கணித்து பட்டியலிட்டுள்ளார் (26). இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம், இந்த 18 புராணங்கள் ஆகியவற்றின் நோக்கம் என்பது வைதீக பார்ப்பனியத்தையும், சாதியத்தையும் பாதுகாப்பதுதான்.

சமற்கிருத இலக்கியங்கள்:

மகதப்பேரரசு காலத்தில் சிசுநாகர், மௌரியர் காலம் வரை படைப்பிலக்கியம் எதுவும் உருவாகவில்லை எனக் கூறுகிறார் பேராசிரியர் டி.டி.கோசாம்பி (27). சமற்கிருத இலக்கியத்தில் முதலில் நாடகங்கள்தான் உருவாகின எனக் கருதப்படுகிறது. அசுவகோசர்தான் முதல் நாடக ஆசிரியர். இவரது காலத்தை கி.பி. 100 அல்லது கி.பி. 320 எனலாம் (28). கோசாம்பி இவர் குறித்து, இவர்தான் பிற்காலத்தில் தோன்றிய நாடக ஆசிரியர்களுக்கும், கவிஞர்களுக்கும் ஒரு உருமாதிரியை வகுத்துக் கொடுத்தார். அவர் எழுதிய சௌந்திராநந்தா என்ற பாடல் காவியம், அரண்மனை சுக போகங்களையும், காமசுகங்களையும் விவரிக்கிறது. அவர் எழுதிய புத்த சரிதம், சாரி புத்திர போன்றவை முழுமையாகக் கிடைக்கவில்லை. இவருக்குப்பின் தோன்றிய வல்லனா போன்றவர்களின் தனிப்பாடல்கள் கிடைக்கிறது. சிருங்காரச்சுவையே இக்காலப் படைப்புகளின் சிறப்புக்கூறாக இருந்துள்ளது. அடுத்த நாடக ஆசிரியர் பாசர். அவர் எழுதியதில் ‘வாசவதத்தாவின் கனவு’ சிறந்தது. உயர்குடி மக்களின் மொழியாகிய சமற்கிருதத்தில் உயர்குடி மக்களுக்காவே நாடகங்கள் எழுதப்பட்டன. அந்நாடகங்களில் மேல்குடியைச் சேர்ந்த கதாபாத்திரங்கள் சமற்கிருத மொழியிலும், கீழ்நிலை வேலைக்காரர் போன்றோர் பிராகிருத மொழியிலும் பேசினர் (29).

பாசருக்குப் பிறகு குப்தர் காலத்தில் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய காளிதாசர்தான் மிகவும் புகழ்பெற்றவர். கோசாம்பி காளிதாசரின் படைப்புகள் குறித்து, ‘காளிதாசரது படைப்புகளில் நேர்த்தியானது ‘மேகதூதம்’. அவரது இரகுவம்சம் இராமரின் தலைமுறைகளைப் பற்றிக் கூறுகிறது. அவரது குமாரசம்பவம் முற்றுப் பெறவில்லை. சீரமைதியும், சொல்லமைதியும் பெற்றுவிளங்கும் இந்த மூன்று காவியங்களும் சமற்கிருத இலக்கிய வரிசையில் உயர்ந்த இடத்தைப் பெற்றவை. ஆனால் இவற்றின் கதைக்கரு பார்ப்பன சார்புடையது. மேலும் மாளவிகா அக்னிமித்ரா, விக்கிரம-ஊர்வசி, சகுந்தலையின் அங்கீகரிப்பு போன்ற நாடகங்களை அவர் எழுதியுள்ளார். மனிதனின் மெய்ப்பாட்டு உணர்வுகளையும், மனக் கிளர்ச்சிகளையும் வைத்து ஆழமுடன் கதை புனைவதில் காளிதாசருக்கு இணையானவர் எவருமிலர்’ என்கிறார். காளிதாசருக்கு அடுத்தபடியாகச் சொல்லக் கூடியவர் பவபூபதி. அவருடைய நாடகம் மாலதி-மாதவா. அதன் கடைசிக்காட்சி, பார்ப்பவர்களை நிலைகுலைய வைக்கும். அடுத்து, மாகா, பாரவி போன்ற கவிஞர்களின் படைப்புகள் முழுமையானவை. இன்றும் படித்து இன்புறத்தக்கவை. பேரரசர் அர்சர், ‘நாகா நந்தா’ போன்ற நாடகங்களை இயற்றியுள்ளார். அடுத்து இராசசேகர் என்பவர் செயற்கைத் தன்மை மிக்க நாடகங்களை இயற்றியுள்ளார். சூத்ரகரின் மிருச்ச கடிகம் (பொம்மை மண்தேர்) ஒரு உயர்தர நாடகம். இந்நாடகம் சிறந்த நடிப்பிற்கும், மேடைக்காட்சிக்கும் நல்ல வாய்ப்புகளை வழங்குகிறது. படித்து மகிழ்வதற்கும் ஏற்றது (30).

பல்லவ அரசன் இராசசிம்மன் அவையில் இருந்த பாரவியின் கொள்ளுப் பெயரன் தண்டி தென்னாட்டவர். 7ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தைச்சேர்ந்த இவர் வடமொழியில் காவியா தர்சம், அவந்தி சுந்தரி கதா போன்ற நூல்களை எழுதியுள்ளார் (31). இவர் ஒரு சிறந்த கவிஞர். ஆனால் சமற்கிருத மொழியில் தனக்கிருந்த முழுமையான புலமையால், புரிந்துகொள்ள முடியாத சொற் சிலேடைகளை, தனது எழுத்தில் பயன்படுத்தினார். அது உடனே தொற்றுநோய் போல் பற்றிப் பரவியது. ஒரே கூட்டுச்சொல்லுக்கு பல்வேறு விதமாகப் பதம்பிரித்து வெவ்வேறு பொருள்களைப் பெற்றுச் சிலேடை அமைப்பதுதான் அதன்பின் வந்த ஆசிரியர்களின் யுக்தியாக இருந்தது. இந்நடையைத் தோற்றுவித்தவரில் பாணரும் ஒருவர். இவரது நூல் ‘காதம்பரி’ இத்தகைய நடையைக் கொண்டதுதான். பாணர் கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அர்சரின் அரசவைப் புலவராக இருந்தவர். இவரது ‘அர்ச சரித்திரம்’ உரைநடை இலக்கியத்தில் ஒரு தலை சிறந்த படைப்பு. இவர் எழுதிய காதம்பரியின் அச்சுப்பதிப்பில் தொகைச்சொற்கள் ஒவ்வோன்றும் வரிக்கணக்கில் நீண்டு செல்வதைப் பார்க்கிறோம். தண்டி, பாணர் போன்றவர்களின் நூல்களில் இருந்த மொழிநடைகளைப் பின்பற்றியதன் காரணமாக 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் சமற்கிருதப் படைப்பிலக்கியமானது, அறிவுத் துறையில் ஒரு குறுக்கெழுத்துப் போட்டியின் மட்டத்துக்குத் தாழ்ந்து போனது. இந்தச் சொல்லாக்க நடைமுறையைப் பின்பற்றி, சடங்குகளுக்குரிய பழைய சொற்களிலிருந்து அனுகூலமான பொருள்களைக் கண்டு பிடித்து பிராமணங்களுக்கும், உபநிடதங்களுக்கும் நகைப்பிற்குரிய பல சொல்லாக்க விளக்கங்கள் தரப்பட்டன (32).

பாணருக்கு முற்பட்ட சுபந்துவின் ‘வாசவதத்தா’ அரேபிய இரவுக் கதைகளைப்போல் கதை சொல்லும் பாணியைக் கொண்டது. ஆனால் இதன் உரைநடை காதம்பரியின் உரைநடையைப் பின்பற்றியதால் தரமற்றதாக ஆகியது. படைப்பிலக்கியத்தில் மிகச்சிறந்த கடைசி முயற்சி செயதேவரால் இயற்றப்பட்ட ‘கீத-கோவிந்தம்’. இது கிருசுணனும் இராதாவும் கொண்ட தெய்வீக இணைப்பை மெட்டமைத்துப் பாடக்கூடிய கவிதை நாடகம். காமரசம் ததும்பிய தெய்வீகக்கதைதான் இதன் உள்ளடக்கம். இவரது காலம் சுமார் கி.பி. 1200. உலக இலக்கியத்திற்கு இந்தியாவின் மிகச் சிறந்த பரிசு ‘பஞ்ச தந்திரக் கதைத்திரட்டு.’. முறைப்படியான எழுத்தறிவைப் பெறுவதில் விருப்பமில்லாது இருந்த இளவரசர்களுக்கு நல்லோழுக்க அறிவுரையாக இக்கதைத் தொகுதி இருந்தது. இது பின்னர் சிரியா, அரபிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மேலைநாடுகளை அடைந்தது (33).

பார்வை:

1.வடமொழி இலக்கிய வரலாறு, கா. கைலாசநாத குருக்கள், காலச்சுவடு பதிப்பகம், நான்காம் பதிப்பு, நவம்பர், 2012. பக்: 29.

2. பக்: 42-44.

3. பக்: 47-48.

4 5, 6. இந்திய வரலாற்றில் பகவத் கீதை, பிரேம்நாத் பசாசு (Premnath Bazaz), கே.சுப்ரமணியன் - தமிழாக்கம், விடியல் பதிப்பகம், சனவரி -2016, பக்; 49, 50.

7. இரிக் வேதம், தமிழ் – ஆங்கிலம், பகுதி-3, செவ்விதாக்கம் - வீ.அரசு, அலைகள் வெளியீட்டகம், டிசம்பர்-2004, தொகுதி-1, பக்: 516; தொகுதி-3, பக்: 226, 671.

8. “ “ “ தொகுதி-3, பக்: 485-489.

9, 10. இந்திய வரலாற்றில் பகவத் கீதை, பிரேம்நாத் பசாசு (Premnath Bazaz), கே.சுப்ரமணியன் - தமிழாக்கம், விடியல் பதிப்பகம், சனவரி -2016, பக்: 29, 30. & வடமொழி இலக்கிய வரலாறு, கா. கைலாசநாத குருக்கள், காலச்சுவடு பதிப்பகம், நான்காம் பதிப்பு, நவம்பர், 2012. பக்: 98, 127.

11. இந்திய வரலாற்றில் பகவத் கீதை, பிரேம்நாத் பசாசு (Premnath Bazaz), கே.சுப்ரமணியன் - தமிழாக்கம், விடியல் பதிப்பகம், சனவரி -2016, பக்: 57-61.

12. பக்: 80-82, 88-90.

13. A.Berriedale Keith, A History of Sanskrit Literature, Motilal Banarsidass Publishers, 2019, p: 426. & Arthur A. Macdonell, A History of Sanskrit Literature, Life Span Publishers, 2018, p: 295.

14. தமிழும், வடமொழியும்: மெய்யும், பொய்யும், பேரா.ப. மருதநாயகம், பரிசல், சூன்-2022, பக்: 171-173.

15, 16. தமிழும், வடமொழியும்: மெய்யும், பொய்யும், பேரா.ப. மருதநாயகம், பரிசல், சூன்-2022, பக்: 171-181.

17. பக்: 265.

18. A.C. Burnell, Aindra School Sanskrit Grammarians, Basel Mission Book, 1875, pp: 87-108 & 8-32.

19. தமிழும், வடமொழியும்: மெய்யும், பொய்யும், பேரா.ப. மருதநாயகம், பரிசல், சூன்-2022, பக்: 173-174.

20. A.Berriedale Keith, A History of Sanskrit Literature, Motilal Banarsidass Publishers, 2019, pp: 426, 427.

21, 22. சாதியின் தோற்றம்: 6 – பிராமணிய இலக்கியங்கள், கணியன்பாலன், கீற்று இணையதளம்.

23. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 7, பக்: 165, 166 & இந்திய வரலாற்றில் பகவத் கீதை, பிரேம்நாத் பசாசு (Premnath Bazaz), கே.சுப்ரமணியன் - தமிழாக்கம், விடியல் பதிப்பகம், சனவரி -2016, பக்: 217-220.

24, 25, 26. சாதியின் தோற்றம்: 6 – பிராமணிய இலக்கியங்கள், கணியன்பாலன், கீற்று இணையதளம்.

27. பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, NCBH, 2006, பக்: 410.

28. A.Berriedale Keith, A History of Sanskrit Literature, Motilal Banarsidass Publishers, 2019, p: 55.

29. பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, NCBH, 2006, பக்: 411-414.

30. பக்: 415 – 418.

31. பல்லவர் வரலாறு, மா. இராச மாணிக்கனார், பாரதி பதிப்பகம், 2022, பக்: 189-190.

32, 33. பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, NCBH, 2006, பக்: 418-421.

- கணியன் பாலன்