நாட்டுப் பற்று என்ற பெயரில் அரசியல் கேள்விகளைப்  பற்றிய விவாதங்களுக்குத் தடை

ஜோத்பூரில் உள்ள ஜெய் நாராயன் வியாஸ் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை, “இலக்கியங்கள் மூலம் வரலாற்றை மீண்டும் கட்டுதல் – தேசம், அடையாளம், பண்பாடு” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை பிப்ரவரி 2, 2017 இல் ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு மறு நாள், அந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய ஒரு பேராசிரியர் “தேச விரோத கருத்துக்களை” வெளியிட்டதாகக் கூறி ஆளும் பாஜக-வின் மாணவர் பிரிவான அகில் பாரதிய வித்யார்த்தி பாரிசத் (ஏபிவிபி) பல்கலைக் கழகத்தை மூடி ஆர்பாட்டம் நடத்தினர். இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்து நடத்திய ஆசிரியரை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், பணியிடை நீக்கம் செய்திருக்கிறார்.

தில்லி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ராம்ஜாஸ் கல்லூரியின் ஆங்கிலத் துறை, “எதிர்ப்புகளின் பண்பாடுகள்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை பிப்ரவரி 21, 2017 அன்று நடத்தினர். இந்தக் கூட்டத்தில் ஏபிவிபி-யைச் சேர்ந்த மாணவர்கள் இடையூறு விளைவித்தனர். அவர்கள், ஜேஎன்யூ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் பேச்சாளர்களாகப் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒராண்டிற்கு முன்னர் திருத்தம் செய்யப்பட்ட விடியோ பதிவுகளின் அடிப்படையில் இந்த இரு மாணவர்களும் “தேச விரோதிகளாக” முத்திரை குத்தப்பட்டுள்ளனர். அந்தக் கல்லூரியின் முதல்வர், அந்தக் கருத்தரங்கை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். அடுத்த நாள் காவல் நிலையத்தில் ஒரு புகாரைப் பதிவு செய்வதற்காக கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் ஒரு அணியாகத் திரண்டு சென்ற போது, ஏபிவிபி-ஐச் சேர்ந்த ஒரு கும்பல், எதிர்ப்பாளர்களை வன்மையாகத் தாக்கி அவர்களைக் கலைக்க காவல் துறை அனுமதித்திருக்கிறது.

பல்வேறு மாநிலங்களிலும் பல்கலைக் கழகங்களில் இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. இவற்றை நியாயப்படுத்தி பல்வேறு அமைச்சர்கள் கூறிவருவன, இந்தத் தாக்குதல்களுக்கு அதிகாரத்தில் உள்ளவர்களுடைய முழு ஆதரவு இருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. பிப்ரவரி 25 அன்று இலண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் அன்ட் பொலிட்டிகல் சயன்சஸில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய நிதியமைச்சர் ஜெட்லி, “இந்தியாவில் தேசங்களைப் பற்றியும், தேசிய இனங்களின் உரிமைகளைப் பற்றியும் பேசும் எவரும் ‘இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும்’ எதிரானவர்கள் ஆவர். எனவே, அவர்கள் ‘சதித் திட்டத்தின் கூட்டணியை’ச் சேர்ந்தவர்களும், ‘தேச விரோதிகளும்’ ஆவர். எனவே, இந்திய அரசியல் சட்டத்தின் படி, அவர்களுடைய சுதந்திரத்தை வெட்டிக் குறைக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

நமது நாட்டு மக்களுடைய இயற்கை வளங்களும், நிலமும் தங்களுடைய தனிப்பட்ட சொத்து எனவும், அவர்கள் அவற்றை ஈவு இரக்கமின்றி சூறையாடுவதற்கானவை என்றும் கருதும் ஆளும் பெரு முதலாளி வகுப்பினருடைய எண்ணத்தைத் தான் ஜெட்லி வெளிப்படுத்தியுள்ளார். இந்த சூறையாடலையும், கொள்ளையையும் கேள்வி கேட்டு, தங்களுடைய உரிமைகளைக் கோரும் தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள், இளைஞர்கள், பழங்குடி மக்கள், ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்கள் என அனைவரும் “சதித்திட்டக் கூட்டணியை”ச் சேர்ந்தவர்களும், “தேச விரோதி”களும் ஆவர்.

“நாட்டுப் பற்று” என்ற பெயரில், பாஜக அரசாங்கம், கல்லூரி வளாகங்களில் அரசியல் கேள்விகளைப் பற்றி விவாதங்கள் நடத்துவதைத் தடை செய்து அதை நியாயப்படுத்தி வருகிறது. ஆசிரியர்கள், அவர்களுடைய கருத்துக்களுக்காக துன்புறுத்தப்படுகிறார்கள் மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள். மக்களிடையே வேண்டுமென்றே வெறியைத் தூண்டிவிட்டு, இந்தியாவும், இந்திய மக்களும் சந்தித்து வரும் பிரச்சனைகளின் தீர்வு குறித்து மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருக்கும் அனைவரையும் தேச விரோதிகளாக நடத்தப்பட்டு வருகிறார்கள்.

உண்மை என்னவென்றால், இந்தியாவில் எண்ணெற்ற தேசங்களும் தேசிய இனங்களும் இருக்கின்றன. ஆனால் இந்திய அரசியல் சட்டம் தேசங்களும், தேசிய இனங்களும் இருப்பதை அங்கீகரிக்கக் கூட இல்லை, அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பது பற்றி பேச்சுக்கே இடமில்லை. கருத்துரிமை உட்பட நமது மக்களுடைய மனித உரிமைகளை அரசியல் சட்டம் பாதுகாப்பதில்லை.

அரசியல் பிரச்சனைகளை, ஒடுக்குமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய “சட்ட ஒழுங்குப் பிரச்சனை”யாக மாற்றுவதன் மூலம், நமது நாட்டில் எழுந்து வரும் மோதல்களுக்குத் தீர்வு காண முடியாது. மாறாக, மாறி மாறி வந்த அரசாங்கங்கள் இப்படிப்பட்ட ஒரு போக்கைப் பின்பற்றிய காரணத்தாலே தான், இந்திய மக்களுடைய ஒற்றுமையும், ஐக்கியமும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது. ஆளும் வகுப்பினர்தான் குற்றவியலான தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள், மக்களுடைய மனித, சனநாயக, தேசிய உரிமைகளை உயர்த்திப் பிடிப்பவர்கள் அல்ல.

Pin It