நாடாளுமன்றம் ஒரு தனிநபருக்கோ அல்லது எந்த ஒரு கட்சிக்கோ சொந்தமானது அல்ல. அது மக்களின் சொத்து.

மக்களின் நலனும், அவர்களின் வளர்ச்சியும், நாட்டின் வளர்ச்சியும் குறித்துப் பேசி, விவாதித்து முடிவெடுக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம். மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே வைத்துக் கொள்ளப் பார்க்கிறது.

எந்த ஒரு சட்ட முன்வடிவு கொண்டு வந்தாலும் அது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளை அனுமதிப்பதில்லை. முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் கூட அங்கு விவாதிக்க வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை.

மூன்று வேளாண் சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த போதும்....

குடியுரிமைத் திருத்தச் சட்ட முன்வடிவு கொண்டு வந்த போதும்....

லக்கீம்பூர் வேளாண் மக்கள் ஊர்வலத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலை பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்த போதும்....

அண்மையில் ஆதார் அடையாள அட்டை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் சட்டமுன்வடிவு கொண்டு வந்த போதும்....

பெண்களின் திருமண வயதை 18 இல் இருந்து 21 ஆக உயர்த்தும் சட்ட முன்வடிவு நாடாளுமன்ற இரு அவைகளில் கொண்டு வந்த போதும், அவைகள் குறித்து விவாதிக்க விடாமல் எதிர்க்கட்சிகளை ஓரம் கட்டிப் புறக்கணித்தது கண்டனத்திற்குரியது. இது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும்.

அங்கு வாக்கெடுப்பும் முறையாக நடைபெறவில்லை. கூச்சல் குழப்பங்களுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு என்று சொல்லி நிறைவேற்றப்படுவதில் எந்த ஒரு நடுநிலையும் இருப்பதாகத் தெரியவில்லை. இது நாடாளுமன்றத்தின் மாண்புக்கு இழுக்கைத் தருவதாக அமையும்.

இனி வரும் காலங்களில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளை மதித்து, அவைகளுடன் விவாதம் செய்து, முறையாக வாக்கெடுப்பு நடத்தி, சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

எதேச்சதிகாரம் எப்போதும் நிலைக்காது. மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Pin It