உலகில் உள்ள ஆட்சி முறைகளில் ஆகச்சிறந்த ஆட்சி முறை மக்களாட்சி என்னும் ஜனநாயகம்தான். மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி, கம்யூனிச ஆட்சி, ராணுவ ஆட்சி போன்ற ஆட்சி முறைகளில் மக்களுக்காக இயற்றப்படும் சட்டங்கள் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப் படுகின்றன. பலதரப்பட்ட பார்வைகளும், கருத்துகளும், வித்தியாசமான கோணங்களும் அங்கு விவாதிக்கப் படுவதில்லை. ஆனால் ஜனநாயகத்தில் மட்டும் ஒவ்வொரு சட்ட முன்வரைவும் நீண்ட நெடிய விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டுப் பல்வேறுக் கருத்துகளும் முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
அப்படிப்பட்ட விவாதங்கள் நடைபெறும் நாடாளுமன்றம்தான் ஜனநாயகத்தின் உயர்பீடம். அங்கு ஒவ்வொரு சட்ட முன்வரைவும் தாக்கல் செய்யப்பட்டு, நீண்ட விவாதங்கள் நடத்தப்பட்டு, பல்வேறு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டு, திருத்தங்களைச் செய்த பின்னர் வாக்கெடுப்பு நடத்தி, அதை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி அவரது ஒப்புதல் பெற்றுத்தான் சட்ட வடிவம் பெறுகின்றது.
பார”தீய” ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், குறிப்பாக நரேந்திர மோடி இரண்டாம் முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னால் அந்த மக்களாட்சி மாண்புகள் அனைத்தும் புதைகுழிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சரான நரேந்திரமோடி உலகம் சுற்றி உல்லாசப் பயணம் போவதிலும் விதவிதமான விலை உயர்ந்த உடைகளை உடுத்துவதிலும் காட்டும் ஆர்வத்தை நாடாளுமன்றத்திற்கு வருவதிலும், விவாதங்களில் பங்கேற்பதிலும் காட்டுவதில்லை.
ஒரு நாளும் இல்லாத திருநாளாக இம்முறை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகின்ற நேரத்தில் ஒன்றிய தலைமை அமைச்சர் மோடி, “எந்தப் பிரச்சினை குறித்தும் விவாதம் நடத்தத் தயார்!” என்று கூறினார்.
ஆனால் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் சட்ட முன்வரைவை எந்தவித விவாதத்துக்கும் உட்படுத்தாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றினார். “எந்தப் பிரச்சினை குறித்தும் விவாதம் நடத்தத் தயார்” என்ற மோடியின் அறைகூவலுக்கு என்ன பொருள் என்று அவர்தான் விளக்க வேண்டும்.
மோடி இரண்டாம் முறை ஆட்சிப் பொறுப்பேற்ற பின் இதுவரையில் 6 நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் நடைபெற்றுள்ளன. அதில் 42 சட்ட முன்வரைவுகள் வெறும் 30 நிமிடங்களிலும் 19 சட்ட முன்வரைவுகள் பத்து நிமிடங்களிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த கூட்டத் தொடரிலும் 15 சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றப்பட்டன. அவை அனைத்தும் பத்து நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டன. இது தவிர 26 சட்ட முன்வரைவுகள் வெறும் அரை மணி நேரத்திற்குள் நிறைவேற்றப்பட்டன.
மழைக்கால கூட்டத்தொடரில் பத்து நிமிடங்களுக்குள் நிறைவேற்றப்பட்ட 14 சட்ட முன்வரைவுகளில்-
1.விரிவான விவாதம் நடத்த வேண்டிய பொதுக் காப்பீட்டுத் திருத்தச் சட்ட முன்வரைவு.
2.வங்கி மோசடி மற்றும் திவால் திருத்தச் சட்ட முன்வரைவு 5 நிமிடங்களிலும்,
3.தீர்ப்பாயத் திருத்தச் சட்ட முன்வரைவு 9 நிமிடங்களிலும்,
4.வரிவிதிப்பு சட்டம் தொடர்பான சட்ட முன்வரைவு 6 நிமிடங்களிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பொதுக் காப்பீட்டுச் சட்ட முன்வரைவை நிலைக் குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் 22 நிமிடங்களில் அந்தச் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு சட்டம் ஆகிவிட்டது.
அதிமுக்கியத்துவம் வாய்ந்த சட்ட முன்வரைவு கூட அப்படியே விவாதம் இன்றி நிறைவேற்றப்படுகின்றது. இது ஜனநாயகத்திற்குப் பெரும் கேடு. விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும்தான், ஜனநாயகத்தின் மூச்சுக்காற்றாகும். அவை மறுக்கப்படும்போது அதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல; சர்வாதிகாரம். நீண்ட விவாதங்கள் இன்றி சட்டங்கள் நிறைவேறுவது குறித்து உச்சநீதிமன்றமே தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
ஏன் விவாதங்கள் இல்லை என்று கேட்டால் ஒன்றிய அரசுத் தரப்பில் சொல்லப்படும் காரணங்கள் மிகவும் வேடிக்கையானவை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்பதுதான் அரசின் விருப்பம். எதிர்க்கட்சிகளின் நோக்கமும் அதுவாகவே இருப்பதால் அதில் விவாதிக்க என்ன இருக்கிறது, எனவே விவாதம் தேவையில்லை என்கிறார்கள். அதே வேளாண் சட்டங்களை நிறைவேற்றும்போது அரசுத் தரப்பும் எதிர்த் தரப்பும் நேர் எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தன. அப்போதும் விவாதம் நடத்தப்படவில்லை. எது எப்படி இருந்தாலும் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறாது என்பதுதான் பாஜக அரசின் நடைமுறை ஆகிவிட்டது. விவாதங்கள் இல்லாத நாடாளுமன்றம் சுவாசம் இல்லாத மனிதனுக்குச் சமம்.
இது போதாதென்று, கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதங்களுக்கு இடம் கொடாமல் எதேச்சதிகாரம் ஆக நடந்துகொண்ட மாநிலங்களவைத் தலைவரைக் கண்டித்து அவரது மேசையின் முன் வந்து நியாயம் கேட்ட 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இப்போது கூட்டத்தொடர் முடியும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாதவாறு விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
இல்லாத 2ஜி சிக்கலை முன்வைத்து ஒரு இமாலயத் தொகை ஊழல் நடந்ததாகக் கூறி அன்றையக் கூட்டத் தொடர்களை நடத்தவிடாமல் அழிச்சாட்டியம் செய்த சத்தியசீலர்களான பாஜகவினர், இன்று விவாதம் நடத்த நியாயம் கேட்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தற்காலிகமாக நீக்கி வைப்பது மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பது போல் உள்ளது.
எதேச்சதிகார மதவெறி பாஜகவிடம் ஜனநாயகத்தை எதிர்பார்ப்பது ‘எருக்கன் செடியில் ரோஜா பூ பூக்கும்’ என்று எதிர்பார்ப்பது ஆகும்.
- பொள்ளாச்சி மா.உமாபதி