புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்? அம்பேத்கர் மீதான அவர்களது கொடூரமான காழ்ப்புணர்ச்சியை உள்துறை அமைச்சர் அமிர்ஷா கடந்த 17ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசுகையில் வெளிப்படுத்தி இருக்கிறார். அதுவும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு சட்டத்தைப் பெருமைப்படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளப்பட்ட விவாதத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா ‘‘எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று இப்போதெல்லாம் பேசுவது ஒரு ‘‘பேஷனாகி'' (Fashion) விட்டது. அத்தனை தடவை அவர்கள் அதனை சொல்வதைவிட கடவுள் என்று சொல்லிக் கொண்டே இருந்தால், சொர்க்கமாவது கிடைக்கும்'' என்று பேசியுள்ளார்,

ஜனநாயகத்தின் மையப் புள்ளியாக திகழும் நாடாளுமன்றத்தில், அமித் ஷா தனது அவதூறு கருத்துக்களால் பாபாசாகேப் அம்பேத்கரைக் களங்கப்படுத்தியுள்ளார். இது பாஜகவின் ஜாதிவெறி மற்றும் தலித் எதிர்ப்பு மனநிலையை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. இது நமக்குப் புதிதன்று. "ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எஸ். கோல்வால்கரும் அரசமைப்புச் சட்டம், தேசியக் கொடி, அதில் உள்ள அசோக சக்கரம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்தார். 1949 டிசம்பர் 11 ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் கொண்டுவந்த இந்து தொகுப்பு சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாடு முழுவதும் 79 கண்டனக் கூட்டங்களை நடத்தி, தலைநகர் டெல்லியில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக மிகப் பெரிய கண்டனப் பேரணி நடத்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், பிரதமர் நேரு ஆகியோரது உருவ பொம்மைகளை கொளுத்தியதை எவரும் மறந்திட இயலாது. அதன் தொடர்ச்சியாகத்தான் தனது மூல அமைப்பான ஆர்.எஸ்.எஸ். - இன் அடிநீரோட்டமாக என்றும் ஓடிக் கொண்டிருக்கும் கருத்துகளை எரிச்சல் மிகுதியால் வெளிப்படுத்தி இருக்கிறார் அமித்ஷா. பாஜகவின் சித்தாந்தமே அம்பேத்கருக்கு எதிரானது. அம்பேத்கர் அரும்பாடுபட்டு உருவாக்கிய அரசியல் சாசனத்தை ஒழித்துக் கட்டுவதுதான் பாஜகவின் திட்டம். ஒட்டுமொத்த இந்திய தேசமும் இதனை நன்றாகவே உணர்ந்துள்ளது. மனுதர்மத்தை (மனுஸ்மிருதியை) ஏற்கக் கூடியவர்களுக்கு அம்பேத்கர் எரிச்சலூட்டக் கூடிய ஒவ்வாமையாகத்தான் இருப்பார்.

அரசியல் சாசனத்துக்கு எதிரான கருத்துகளை அமித்ஷா பேசியிருக்கிறார்.

இந்திய தேசம் முழுக்க பல கோடி மக்களால் கொண்டாடப்படும் புரட்சியாளர் அம்பேத்கருக்கு எதிரான இந்தக் கருத்திற்கு நாடு முழுக்கக் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தை இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடக்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் திமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய, அம்பேத்கரிய, இடதுசாரி அமைப்புகள் போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறது. நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் அமித்ஷாவுக்கு எதிரான தங்களது கண்டனக் கருத்துக்களைப் பதிய வைத்து வரும் நிலையில் "நான் அப்படியாக பேசவில்லை. காங்கிரஸ் எனது கருத்தைத் திரித்து வெளியிட்டு இருக்கிறது" என்று தனது கருத்திலிருந்து அமிர்ஷா பின்வாங்கி இருப்பதும், -”நாங்களும் அம்பேத்கரை மதிக்கிறோம் காங்கிரஸ் கட்சியின் கடந்த கால செயல்பாடுகள் பற்றி தான் அமித்ஷா பேசினார் " என்று பிரதமர் நரேந்திர மோடி பேசி இருப்பதும் அவர்களது இரட்டை வேடத்தை மீண்டும் அம்பலப்படுத்தி இருக்கிறது.

அம்பேத்கர் அம்பேத்கர் என்று முழங்கும் எங்களுக்கு அமித்ஷா சொல்வது போல சொர்க்கம் நரகத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் இன்றைக்கு அமித்ஷாவின் இந்த எதிர்மறைப் பிரச்சாரத்தின் விளைவாக அம்பேத்கர் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

அம்பேத்கரின் தலைமையில் உருவான அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ள சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவ கொள்கைகளை மோடி அமித்ஷா கும்பலிடம் இருந்து பாதுகாக்க அரசமைப்புச் சட்ட நெறியைச் செயல்படுத்த ஜனநாயக சக்திகள் கைகோர்க்க வேண்டிய உடனடித் தேவையை அமித்சாவின் செய்கை உணர்த்தி தெளிவுபடுத்தி இருக்கிறது.

- திருப்பூர் மகிழவன்