தமிழ்நாட்டில் தமிழ் இலக்கியம் குறித்து நடக்க இருந்த கருத்தரங்கம் தமிழக அரசாலேயே தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. “தமிழ் இலக்கியங்கள் மற்றும் இந்து மதப் புனித நூல்களை இழிவுபடுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது” என்று பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கண்டனங்களைப் பதிவிட, அதைக் கட்டளையாக ஏற்றுத் தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் உடனடியாக அதனை ஆதரித்துக் கருத்து வெளியிட, கல்லுரி நிர்வாகத்தினர் நிகழ்ச்சியைத் தள்ளி வைத்துள்ளனர். அவர்களுக்கு யாரைத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக அமர்த்த வேண்டும் என்று தெரிந்திருக்கிறது.

“தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண் வன்கொடுமைகள்” என்னும் தலைப்பில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ் ஆய்வுத் துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் டிசம்பர் 6, 7 ஆகிய நாட்களில் நடத்தப்பட இருந்தது.

mafoi pandiarajanஇக்கருத்தரங்கைத்தான் தடுத்திருக்கிறார்கள். நம்முடைய காவியங்கள் காப்பியங்கள் மீது காவிக்கும்பலுக்கு ஏன் இந்த அக்கறை? தமிழை ‘நீச’ பாஷை என்று தீட்டுக் கழித்தவர்களுக்குத் தமிழ் இலக்கியங்கள் மேல் ஏன் இந்தப் பாசம்?

இந்தக் கேள்விகளுக்குத் தந்தை பெரியார் எழுப்பிய கேள்வியிலிருந்து விடையைக் காணலாம்.

“இன்றைக்கும் தொல்காப்பியம் இருக்கிறது. அதுவும் இலக்கியம்தான் அதிலும் ஆரியம் புகுந்திருக்கிறது. விளம்பரமாக இருக்கும் மற்ற இலக்கியங்கள் இராமாயணம், பாரதம், பெரியபுராணம், தேவாரம், திருவாசகம் இவைதான். பெரும்பாலானவை வடமொழியிலிருந்து காப்பியடிக்கப்பட்ட நூல்கள். மற்றவை அவற்றை அனுசரித்துச் செய்யப்பட்டவை. ஆரியர் வருகைக்கு முன்பு தமிழர் பண்பு எப்படி இருந்தது, இன்றைக்கு எப்படி இருக்க வேண்டியதாகும் என்பதைக் காட்ட நமக்கு இலக்கியம் இருக்கிறதா?” (விடுதலை 3.9.1956)

ஆம், ஆரியம் புகுந்ததால் ஏற்பட்ட புண்கள்தாம் தமிழ் இலக்கியங்களில் காணப்படுபவை. அந்தப் புண்களை அடையாளம் காட்டவே இக்கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கருத்தரங்கம் நடைபெற்றால் அதில் தாக்கப்படுவது ஆரியர்களின் வருண தருமமும், மனு தருமமுமே ஆகும். தமிழ் இலக்கியங்களில் பெண் வன்கொடுமைகளுக்கு, ஆரியப் பண்பாடு கடைபிடிக்கப்பட்டதே காரணம் என்னும் உண்மை நிறுவப்பட்டுவிடும். தமிழ் வேறு, இந்து மதம் வேறு என்பது தெளிவாகத் தெரிந்து விடும்.

கலைஞர் அவர்கள் பூந்தோட்டம் என்ற தலைப்பில் ஆற்றிய உரையில்,

“சிலப்பதிகாரம் முள் இடை ரோஜா மலர் !

கம்பராமாயணம் முள் இடை கள்ளிமலர் !”

என்று அழகாகத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் ஆரியக் கலப்பை எடுத்துரைத்தார்.

தமிழ் இலக்கியங்களில் முள்ளாய்க் குத்திக் கொண்டிருக்கும் ஆரிய நச்சுக் கலப்பைத் தமிழர்கள் அறிந்து விடக் கூடாது, அறிவு பெற்று விடக் கூடாது என்பதே அவர்கள் நோக்கம்.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளும் வழக்கம் அவர்களுக்கு என்றுமே இருந்ததில்லை. கருத்தரங்கம் முடிந்ததற்குப் பின்னர், தங்கள் கூற்றுகளை ஆதாரங்களோடு எடுத்துரைத்து மறுக்கவேண்டியது தானே. ஒரு பக்கம் நம்முடைய கருத்துரிமையைத் தடை செய்யும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் பொய்யானவற்றை உருவாக்கும் பணிகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் தான் ‘திருக்குறள் மனுதருமத்தின் சாரம்’ என்று பொய்யான நூலை வெளியிடுகிறார்கள். நாம் அந்நூலுக்குக் கருத்தால் தான் பதிலடி கொடுத்தோம்.

இலக்கியங்களில் கைவைப்பதோடு மட்டும் அவர்கள் நின்றுவிடவில்லை. அறிவியலிலும் தங்கள் கைவண்ணத்தைக் காட்டுகிறார்கள்.

இந்திய அறிவியல் கழக (Indian Science Congress) கருத்தரங்குகளில் அவர்கள் சமர்ப்பித்த கட்டுரைகளும் ஆற்றிய உரைகளும் உலகம் முழுவதும் கேலிக்குள்ளான நிகழ்வுகளை நாம் கடந்த நான்கு ஆண்டுகளில் பார்த்தோம். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய அறிவியல் கழக மாநாட்டில், ஆகாய விமானங்களை வேத காலத்திலேயே இங்குள்ள ரிஷிகள் கண்டுபிடித்ததாக ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. அது உலகம் முழுவதும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இந்தியாவில் பிறந்த நோபல் பரிசு பெற்ற வேதியியல் அறிஞர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் இந்திய அறிவியல் கழக மாநாட்டை ‘சர்க்கஸ்’ என்று விமர்சிக்கும் அளவிற்கு அது அமைந்திருந்தது. மேலும் பிதாகரஸ் தேற்றத்தையும், அல்ஜீப்ராவையும் இந்தியர்களே கண்டுபிடித்து உலகிற்கு அளித்தார்கள் என்றும், மாட்டுச் சாணத்தில் இருக்கும் ஒரு பாக்டீரியா, எந்தப் பொருளையும் 24 காரட் தங்கமாக மாற்றும் தன்மை கொண்டது என்றும், மகாபாரதத்தில் பயன்படுத்திய தலைக்கவசம் “மார்ஸ்” கோளில் கிடைக்கும் என்றும் பல அறிவுக்கு ஒவ்வாத உளறல்களை இந்திய அறிவியல் மாநாட்டில் அரங்கேற்றினார்கள். நவீன மருத்துவத்தை விட, சங்கு ஊதுவதன் மூலமாக நாம் உடல்நலத்தோடு வாழ முடியும் என்று ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார். மேலும் ‘சிவபெருமானே இந்த உலகின் மிகச்சிறந்த சுற்றுச்சூழல்வாதி’ என்றும் ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க இருந்தார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியப் பிரதமரான நரேந்திர மோடி அவர்கள் மகாபாரதக் கதையில் வரும் கர்ணனையும், யானைமுக இந்துக் கடவுளான கணேசனையும் சுட்டிக்காட்டி இங்கே மரபணு அறிவியலும், நவீன ப்ளாஸ்டிக் சர்ஜரியும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்தன என்று இந்திய அறிவியல் கழக மாநாட்டில் பேசியது உலக ஊடகங்களில் இந்தியாவின் மானத்தை வாங்கியது. இராமாயண மகாபாரத அருங்காட்சியங்கள், ஆய்வுகள் எனத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அறிவியல் உலகத்திற்குள்ளேயே பாம்பாக நுழையும் ஆரியம், இலக்கியத்தையா விட்டுவைக்கும்? தமிழ் இலக்கியங்கள் அறிவின் வழி சீர்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆரியப் பண்பாட்டினர் நம்முடைய அரசாங்கத்தைக் கொண்டே நமக்கு எதிரான வேலைகளைச் செய்வது வரலாற்றின் தொடர்ச்சி ஆகும்.

அதிலும் மாஃபாய் பாண்டியராஜன் என்கிற ஒருவரை அவர்கள் கலை, பண்பாடு மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக வைத்திருப்பது எந்தப் பண்பாட்டை வளர்ப்பதற்கு என்பது மீண்டும் ஒரு முறை தெளிவாக விளங்குகிறது.

நீட் தேர்வை தமிழகத்தில் தடை செய்ய இயற்றப்பட்ட இரண்டு சட்டமுன்வடிவுகள் இன்னும் குடியரசுத் தலைவரின் கையொப்பம் பெறாமல் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கொள்கை முடிவை எடுக்காமல் இன்று அந்த ஆலை மீண்டும் செயல்படத் தொடங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று இருக்கிறது. கஜா புயலால் மக்கள் வாழ்விழந்து தவிக்கின்றனர், இவ்வளவு வேலைகள் இருக்க இவற்றையெல்லாம் செய்யமுடியாமல் திருச்சியில் ஒரு கல்லூரியில் நடைபெறவிருக்கும் கருத்தரங்கத்தை தடுத்து நிறுத்தியதுதான் இந்த அரசின் ஆகச்சிறந்த சாதனையாக இருக்கிறது.

Pin It