ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள நிலத்தடி நீரில் மாசு ஏற்படுகிறதா? மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதா? என்பதைப் பத்து நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும்.

ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் தாமிரக் கழிவுகளை வெளியேற்ற வேண்டும். இப்படிச் செய்தால் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதில் தவறில்லை. இப்படிச் சொல்கிறது தேசியத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக்குழு அறிக்கை.

தூத்துக்குடி மீளவிட்டானில் அமைந்துள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர், காற்று மாசுபடுகிறது.

ஆலையில் இருந்து நச்சு வாயு கசிவு ஏற்பட்டதால் அதைச் சுற்றியுள்ள மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாக கந்தக&டை &ஆக்ஸைடு வெளியேறி அதைச் சுற்றியுள்ள சிற்றூர் வாழ் பொதுமக்கள் கண்ணெரிச்சல், தொண்டை வலி, மூச்சுத் திணறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இதுவரை இந்த ஆலையில் 82 முறை நச்சு வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இப்படி ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்படும் பெரும் பாதிப்புகள், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை நசித்துக் கொண்டிருக்கிறது. காசநோய், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஆலையால்.

இதனால் தூத்துக்குடி வாழ்மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு ஆலைக்கு எதிராக நடத்திய மே மாத 100 நாள் போராட்டம் சாதாரணமானதன்று.

அந்தப் போராட்டத்தில் பொதுமக்களில் 13 பேர் காவல் துறையினால் குறிவைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதை நாளிதழ்கள், ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின.

இவ்வளவிற்கும் பிறகு ஆலையை இழுத்து மூடுகிறோம் என்று சொல்லிக் கொண்டு கலெக்டரின் மூலம் ‘சீல்’ வைத்தது தமிழக அரசு. ஆனால், இதுகுறித்துச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வாயிலாகக் கேட்டிருந்தும் கூட, அதைச் செய்யாமல் அதைக் கிடப்பில் போட்டது தமிழக அரசு.

இதுவே இன்று வேதாந்தா நிறுவனத்துக்குச் சாதகமாகி, சில நிபந்தனையின் பேரில் ஆலையைத் திறக்கலாம் என்று சொல்லுமளவிற்கு வந்து விட்டது.

நீறு பூத்த நெருப்பை எரிபொருள் ஊற்றி அணைக்க முடியாது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள், ‘கஜா’ புயல் வேகத்தில் மீண்டும் ஒரு போராட்டம் நடத்த, இந்த அறிக்கை வழி வகுத்திருக்கிறது என்பதை அரசு இப்போதாவது உணர வேண்டும்.

Pin It