அதிமுக சார்பில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கி இருக்கிறார் திருவாளர் எடப்பாடி பழனிசாமி. கூடவே, வெளிப்படையான கும்பல் வன்முறையைத் தூண்டி விட்டு, தான் கூட்டுச் சேர்ந்திருக்கும் பாஜகவின் வடநாட்டு அரசியல் பாணியைத் தமிழ்நாடு அரசியல் களத்தில் தொடக்கி இருக்கிறது அதிமுக. இது ஓர் ஆபத்தான போக்காகும். அதாவது திருவாளர் பழனிசாமியின் அநாகரிகமான வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் பேச்சை நாடுமுழுவதும் அனைத்துத் தரப்பினரும் வன்மையாகக் கண்டித்திருக்க வேண்டும். அரசும் உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவுமே நடைபெறவில்லை. மாறாக சமூக ஊடகங்களில் எதிரெதிர் கருத்துகளைப் பதிவிட்டதோடு அனைத்துத் தரப்பினரும் இந்தப் பிரச்சனையின் பின்விளைவுகளைப் பற்றிய கவலை இல்லாமல் ஏறக்குறைய கடந்து போய்விட்டனர். இதன் விளைவாக, அடுத்த ஒருசில நாட்களிலேயே பழனிசாமியின் தூண்டுதலால், வன்முறை மனோபாவத்தை திருச்சி துறையூரில் செயல்படுத்தியிருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.

admk attack on ambulance

எடப்பாடி பழனிசாமி பேச இருந்த பகுதி வழியாக வந்த ஆம்புலன்ஸ் வண்டியை மறித்து வாகனத்தையும், வாகனத்தின் உள்ளே இருந்த ஓட்டுநர் மற்றும் மருத்துவப் பணிப்பெண்ணையும், சரமாரியாகத் தாக்கி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட காட்சி உண்மையில் கவலையை, அச்சத்தை ஏற்படுத்துகிறது.

அதிமுகவினருக்கு இதுபோன்ற வன்முறை ஒன்றும் புதிதல்ல. 1991 - 96 ஆட்சிக் காலத்தில் வரலாறு காணாத ஊழலையும், வெளிப்படையான கொள்ளை, அதிகார அத்துமீறலிலும் ஈடுபட்டது ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி. மக்களின் பெரும் வெறுப்புக்கு ஆளான ஜெயலலிதா 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டார்.

ஜெயலலிதா மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் வழக்குகள் பதியப்பட்டன. அதில் ஒன்று தான் கொடைக்கானல் ப்ளஷன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்தது.

எப்போதும் சட்டத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காத அதிமுக தொண்டர்கள் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் திரண்டு வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் , அமைதியும், சட்டம் - ஒழுங்கும் சீரழிக்கப்பட்டன. அதிமுகவினரின் இந்த வன்முறையில் 50 க்கும் மேற்பட்ட பேருந்துகள் தாக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்தனர்.

2000 ஆம் ஆண்டு பிப்ரவரி 02 ஆம் நாள் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்த மூன்று கல்லூரிப் பேருந்துகளும் தருமபுரி புறநகர் பகுதியில் தடுத்து நிறுத்தித் தாக்கப்பட்டன. அதில் ஒரு பேருந்து தீ வைத்தே எரிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட பேருந்தில் சிக்கிக் கொண்ட மாணவர்களின் மரண ஓலம் அந்தப் பகுதியையே அதிரச்செய்தது. சக மாணவர்களும் பேராசிரியர்களும் போராடி அனைவரையும் மீட்டனர். ஆனால், ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி என்கிற மூன்று மாணவிகளை உயிரோடு காப்பாற்ற முடியவில்லை. எரிந்த கரிக்கட்டைகளாக, உயிரற்ற உடல்களாகவே அந்தப் பிள்ளைகள் மீட்கப்பட்டனர்.

இப்போதும் பழனிசாமி பொதுக் கூட்டத்தில் வெளிப் படையாகப் பேசுகிறார், அடுத்தமுறை ஆம்புலன்ஸ் வண்டி வந்தால், அதில் நோயாளி இல்லை யென்றால், அதே

ஆம்புலன்ஸில் ஓட்டுநரையே நோயாளியாக அனுப்பி வைக்கப் படுவார் என்று. இது எவ்வளவு வன்மையான, நாகரிகமற்ற , அரசியல் முதிர்ச்சி அற்ற பேச்சு.

அடுத்த இரண்டாம் நாள் ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தாக்கி நோயாளியாக அதே ஆம்புலன்ஸ் வண்டியில் அனுப்புகிறது இந்த கும்பல். இதுவாவது கடுமையான நடவடிக்கைக்கு, கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டதா? இல்லையே. எந்த ஒரு பொது ஊடகமாவது இந்த வன்முறைப் பேச்சைக் கண்டித்து எழுதியதா? பேசியதா? இல்லையே.

ஆட்சி அதிகாரத்தைப் பெற எந்த எல்லைக்கும் போவதற்குத் துணிந்திருக்கிறது பாஜக எனும் பிரிவினை, வன்முறை, பயங்கரவாத செயல்களையே நம்பியிருக்கிற சக்தியோடு கூட்டுசேர்ந்து தமிழ்நாட்டில் வன்முறை மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிற பதவி வெறிதான் பழனிசாமியின் கண்களில் தெரிகிறது.

 வன்முறை, சமூகவிரோத, சட்ட விரோத அதிமுகவின் முகத்திரையைக் கிழித்து மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி அந்நியப் படுத்தவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு சமூகச் செயற்பாட்டாளருக்கும் இருக்கிறது. காலத்தே அதைச் செய்ய வேண்டும்.

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்" என்பது திருவள்ளுவரின் எச்சரிக்கை நினைவில் கொள்வோம்!!

- காசு. நாகராசன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.