எல்லா வகையிலும் பாஜகவைப் பின்பற்றும் தமிழக அரசு, தேர்வாணையத் தேர்வுகளிலும் அதே வழியில் சென்று கொண்டிருக்கிறது. அங்கே, அன்று, மத்திய பிரதேசத்தில் "வியாபம்" ஊழல்! இன்று இங்கே, தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வில் (டிஎன்பிஎஸ்சி) முறைகேடு!
சில ஆண்டுகளுக்கு முன், டிஎன்பிஎஸ்சி நடத்திய குழு 2 (குரூப் 2) தேர்வுகளில் வினாத்தாள்கள் கசிய விடப்பட்டன. அதனால் மீண்டும் அத்தேர்வுகள் நடத்தப்பட்டன. அதனைச் சரி செய்கிறோம் என்று சொல்லி, இப்போது குழு 4 தேர்வில், வினாத்தாள்கள், கண்காணிப்புப் புகைப்படக் கருவிகள் முன் முத்திரையிடப்பட்டு, தேர்வு தொடங்கும் வேளையில் உரியவர்கள் முன் திறக்கப்பட்டன. எல்லாம் ஒழுங்காக நடப்பதுபோல் ஒரு தோற்றம் அளிக்கப்பட்டது.
ஆனால் இப்போதுதான் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. அன்று, வினாத்தாளில் கசிவு என்றால், இன்று விடைத்தாளில் மோசடி. 5000 மையங்களில், 16 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். குரூப் 4 தேர்வு என்பது, சாதாரணப் படிப்புடைய, சாதாரண வேலைகளுக்காக நடத்தப்படும் தேர்வு. இதிலேயே இவ்வளவு பெரிய மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், கீழக்கரை பகுதிகளில் பலர் இம்மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. இத் தேர்வில், நீண்ட விடைகள் எழுத வேண்டிய தேவை இருக்காது. ஒரு வினாவும், அதற்கு எதிரே நான்கு விடைகளும் இருக்கும். அவற்றுள் எது சரியானதோ அதனைக் குறிக்க வேண்டும். அவ்வளவுதான். இதில் எப்படிப் பிழை நடக்கும்?
மேஜிக் பேனா என்று ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் எழுதுவது, சில மணி நேரங்களிலேயே மறைந்து விடுமாம். பிறகு, விடைத்தாள் கட்டைப் பிரித்து, எது சரியான விடையோ அதில் டிக் செய்து விடுவார்களாம்.
அறிவியல் எதற்கெல்லாம் பயன்படுகிறது பாருங்கள்!
இரண்டு மையங்களில் மட்டும்தான் தவறு நடந்துள்ளது என்று தேர்வாணையம் அவசரம் அவசரமாகச் சொல்கிறது. பிற மையங்களில் என்ன சோதனை செய்து பார்க்கப்பட்டது? இந்த மோசடியில் இரண்டு தாசில்தார்களும், நூற்றுக்கு மேற்பட்ட தேர்வர்களும்தான் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. எந்த விசாரணையும் இல்லாமல், இவர்களே தீர்ப்பு எழுதி விட்டனர்.
இவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளது என்றால், இதற்குப் பின் ஒரு பெரிய பின்னணி இருந்தே தீரும். எனவே இது முறைப்படி விசாரிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மறுதேர்வு நடத்தப்படுவதும் மிகத் தேவையான ஒன்றாகவே உள்ளது!
பொதுவாகத் தேர்வு எழுதுகின்றவர்கள்தாம், வெற்றியும் தோல்வியும் அடைவார்கள். ஆனால் இங்கு ஒரு தேர்வே தோல்வியடைந்துள்ளது!