சட்டம் - ஒழுங்கு சரியில்லை!

நாடு முழுவதும் போதை கலாச்சாரம் பரவி விட்டது!

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை!

சிறுமி முதல் முதியோர் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்! கொலை, கொள்ளை தொடர்கதையாக இருக்கிறது! என்று, கடந்த திராவிடமாடல் ஆட்சியின்போது பாஜகவின் அண்ணாமலய் தொடங்கி எடப்பாடி பழனிசாமி வரை பலரும் கத்திக் கொண்டிருந்தார்கள்.

2021 - 2026 திராவிடமாடல் ஆட்சியில் செயல்படுத்தப் பட்ட மக்கள் நலத்திட்டங்கள், தொழில் - வேலை வாய்ப்புகள் மற்றும் உற்பத்திப் பெருக்கம், பொருளாதார முன்னேற்றம், உள்கட்டமைப்புகள், கல்வி - மருத்துவம் போன்ற துறைகளில் பல மடங்கு சாதனை என வளர்ந்து கொண்டிருந்த தமிழ்நாட்டின் உண்மை நிலையை மறைத்து தமிழ்நாடு முழுவதும் வன்முறையும், கொலை வெறியும், பாலியல் கொடுமையும், ஜாதி ஆணவப் படுகொலைகளும் மட்டுமே நடைபெறுவதைப் போல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்தார்கள்.

அவற்றை எல்லாம் தொலைக்காட்சிகள் 'பிரேக்கிங் நியூஸ்' போட்டு மக்களைத் தடுமாற வைத்தார்கள். தேர்தல் முடிவுகளையே திசை திருப்பினார்கள்.

இப்போது நாடு முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் தடுக்கப்பட்டு விட்டதா? பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நின்று விட்டனவா?

சட்டம் - ஒழுங்கு முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா ?

இல்லையே!இப்போதும் செய்தித்தாள்களில் பக்கம் பக்கமாக மேற்கண்ட குற்றங்கள் செய்திகளாக வருகின்றன. குறிப்பாக பல இடங்களில் தெருச் சண்டைகளிலும் பாலியல் குற்றங்களிலும் விஜய் கட்சியின் பொறுப்பாளர்களே ஈடுபட்டு, அதுவும் இப்போது அம்பலப்பட்டு வருகின்றது.

இவற்றை எல்லாம் ஏன் தூய சக்திகளால் தடுக்க முடியவில்லை?

போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்களை விடுவிக்க வேண்டும்! பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சிந்தனையில் இருந்து ஆண்களை மாற்ற வேண்டும்! வன்முறை, கொலை - கொள்ளை என்கிற கொடூர குற்றங்கள் நிகழாத வண்ணம் சமூகத்தை சீர்திருத்த வேண்டும்! இவையெல்லாம் சமூகத்தில் செய்யப்பட வேண்டிய பணிகள். இவற்றை எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சியும் தனியே செய்து விட முடியாது. மக்கள் நலனில் அக்கறை கொண்டு தேர்தல், பட்டம், பதவி, பணம் எதற்கும் ஆசைப்படாத, சமூகப்பற்றும் அக்கறையும் உள்ள சமூக இயக்கங்கள் மட்டுமே சமூக மாற்றத்திற்கான பணிகளை செய்ய முடியும் .

அப்படிப்பட்ட சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்புகளைத் தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமு கழகம் செய்தது. மக்கள் நலத்திட்டங்கள் மூலமாக சமூக சீர்திருத்தத்திற்கான படிக்கற்களை கட்டமைத்தது. அறிவுசார் நூலகங்கள் அமைக்கப்பட்டன. பள்ளிகளில் இடை நிற்றலைத் தவிர்க்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பள்ளிப்படிப்பு முடிந்த பிள்ளைகள் உயர்கல்வி கற்பதற்கும் கல்லூரிப் படிப்பு முடிக்கிற மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள் - வேலை வாய்ப்புக்கான பாதையைக் காட்டவும் நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. எண்ணற்ற முதலீடுகளைக் கொண்டு வந்து புதிய புதிய தொழிற்சாலைகளை அமைத்து பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலமாக சமூகத்தை முன்னோக்கி நகர்த்தினார் மு க ஸ்டாலின் என்கிற திராவிடத் தலைவர்.

வழமையான சமூகச் சிக்கல்களை ஒரு மக்கள் நல அரசுக்கு எதிரான ஆயுதமாக மாற்றி, சமூக மாற்றத்திற்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஓர் ஆட்சியைத் தோற்கடித்து விட்டு இப்போதும் தொடர்கிற இந்த சமூக அவலங்களைக் கண்டும் காணாதது போல் பலரும் ஒதுங்கிப் போகிறார்கள்.

ஆனால், நாம் அப்படி ஒதுங்கிப் போக முடியாது. காரணம், நமக்கு சமூகப் பொறுப்பும் அக்கறையும் இருக்கிறது. இந்தச் சமூகம் மானமும் அறிவு உள்ள சமுதாயமாக வாழ வேண்டும் அதற்காக நாம் பணியாற்ற வேண்டும் என்கிற கடமை உணர்ச்சி இருக்கிறது. எனவே, சமூகத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து நாம் கவனத்தில் கொள்கிறோம்! கவலையோடு பரிசீலிக்கிறோம்! என்றைக்கும் நாம் தோற்றுப் போக மாட்டோம்! காரணம், நாம் வெறும் கட்சிக்காரர்கள் இல்லை, கொள்கைக்காரர்கள்!

- காசு.நாகராசன்