இருபதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் காலத்தில், தமிழ்மொழியின் வளர்ச்சி நிலைகளில் கவிஞர் புதுவைச்சிவம் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கவிதைகள், இசைப் பாடல்கள், நாடகங்கள், சிறுகதைகள், கட்டுரைகள்,கடிதங்கள், மொழிபெயர்ப்பு என அவரது படைப்புகள் பல்வேறு இலக்கிய வகைமைகளிலும், வகைகளிலும் வெளிப்பட்டுள்ளன. தன்னுடைய படைப் புருவாக்களின் மூலம், திராவிட இயக்க இலக்கிய வரலாற்றில் தனித்துக் குறிப்பிடத்தக்க தடம் பதித்துள்ளார் புதுவைச் சிவம். புதுவைச்சிவத்தின் பன்முகப் பங்களிப்புகளையும், படைப்புலகத்தையும் ஆராய்ந்து மதிப்பிடுவது திராவிட இயக்க வரலாற்றுத் தேவை மட்டுமல்ல. தமிழிலக்கிய மறுமலர்ச்சிக் கால ஆய்வுகளுக்கும் அவசியமான ஒன்று.

pudhuvai sivamகவிஞர் புதுவைச்சிவம் என்று அழைக்கப்படும் ச. சிவப்பிரகாசம் அவர்கள் 1930ஆம் ஆண்டில் தனது 22 ஆவது அகவையில் எழுதத் தொடங்கியுள்ளார். அவருடைய எழுத்துலக நுழைவு கட்டுரை வடிவிலேயே அமைந்தது. அவரது முதல் கட்டுரை புதுவை முரசு இதழில் வெளிவந்தது. பாரதிதாசன், புதுவைச்சிவம், ம. நோயல், அல்போன்ஸ் லகாஷ் ஆகியோரின் கூட்டு முயற்சியில் நடத்தப்பட்ட 'புதுவை முரசு' என்னும் இதழ் இரண்டாண்டுகள் வெளிவந்தது.

கட்டுரைகளில் தொடங்கிய பதுவை சிவத்தின் எழுத்துலகம் மிக விரைவிலேயே படைப்பிலக்கியத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி விடுகிறது. இந்நாட்களில் பாவேந்தரிடம் தனிப்பட்ட முறையில் யாப்புப் பயின்ற அவர் விரைவில் பாட்டெழுதத் தொடங்கி விடுகிறார். அவர் மனதை ஈர்த்திருந்த பாரதி, பாரதிதாசன் போலவே சிந்துப் பாடல்களைத்தான் அவர் தொடக்க காலத்தில் எளிமையாகப் படைத்திருக்கிறார். அவரது ஐந்து பாடல்கள் கொண்ட தொகுதி "புதுவை நெசவுத் தொழில் ஏழையர் எழுச்சிப் பாடல்" என்ற தலைப்பில் 1932ஆம் ஆண்டிலேயே புதுவை முரசு அச்சகமான கலாநிதி பிரசில் அச்சேற்றப்பட்டுச் சிறு வெளியீடாக வந்துள்ளது. தொடர்ந்து அவரது படைப்புலகப் பயணத்தில் வெள்ளமெனப் பெருக்கெடுத்தக் கவிதைகள் ஒன்பது தொகுதிகளாக வெளிவந்தன.

சீர்திருத்த இயக்கத்தின் பொறுப்பாளராகவும், அவ்வியக்கக் கவிஞராகவும், எழுத்தாளராகவும், விளங்கியவர் புதுவை சிவம். உலக விஷயங்களைத் தமக்கு உணர்த்திவரும் ஆசிரியராகப் பெரியாரையும், தீந்தமிழில் யாப்புப் பயிற்றுவித்த பாரதிதாசனை மற்றொரு ஆசிரியராகவும் புதுவைச்சிவம் குறிப்பிட்டுள்ளார். இவ்வடிப்படையில் பாரதிதாசனைப் போலவே பல நாடகங்கள் இயற்றிய புதுவைச்சிவம், அவை அனைத்தையுமே சுயமரியாதை இயக்கக் கொள்கை விளக்கமாக அமைப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார். சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கக் காலக் கட்டத்தில் மக்கள் விரும்பிப் பார்க்கின்ற அளவில் இயக்கக் கொள்கைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் நாடகங்களினூடே இழையோடச் செய்திருக்கிறார்.

புதுவைச் சிவம் மறைந்த பின்னர் 1993ஆம் ஆண்டில் "கவிஞர் புதுவை சிவம் இலக்கியப் பேரவை" என்ற அமைப்பு புதுவைத் தமிழறிஞர்களால் உருவாக்கப்பட்டது. புதுவைச்சிவம் பிறந்தநாள், அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்து, 1997ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது. புதுவை அரசின் கலைப் பண்பாட்டுத்துறை மூலம் கவிதை நூல்கள் தொகுக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டிலும், புதுவைச் சிவத்தின் நாடகங்கள் தொகுக்கப்பட்டு 2000ஆம் ஆண்டிலும் வெளியிடப்பட்டன. 2002ஆம் ஆண்டில் புதுச்சேரி அரசால் புதுவைச் சிவம் முழு உருவச்சிலை புதுச்சேரி, காமராசர் சாலையில் அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் அவரது நினைவு நாளும், பிறந்த நாளும் புதுவை அரசின் செய்தி விளம்பரத் துறையால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம், புதுவைச்சிவம் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 2003ஆம் ஆண்டு வெளியிட்டது. அதே நிறுவனத்தில் புதுவைச்சிவம் இலக்கியப் பேரவை சார்பில் "புதுவைச் சிவம் அறக்கட்டளை" 2004ஆம் ஆண்டு நிறுவப்பட்டு ஆண்டுதோறும் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. கவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டை (2007-2008) புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கொண்டாடின. புதுவைச்சிவம் படைப்புகளை தமிழக அரசு அவரது நூற்றாண்டில் நாட்டுடைமை ஆக்கியுள்ளது. புதுவை,சென்னைப் பல்கலைக்கழகங்கள் நூற்றாண்டுக் கருத்தரங்கை நடத்தின. நூற்றாண்டை ஒட்டிப் புதுவைச் சிவம் நினைவாக அருங்காட்சியகமும், வளைவுத் தூணும் அமைக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

- முனைவர் சிவ. இளங்கோ

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.