பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். கணித ஆசிரியர் வகுப்பு மாணவர்களை இரண்டாகப் பிரித்து வைத்திருந்தார். ‘தேறும் கேஸ்கள்’ , ‘தேறாத கேஸ்கள்’ என்று. என்னையும் என் நண்பர்கள் சிலரையும் தேறாத கேசில் சேர்த்துவிட்டார். அன்று மாலை பற்றி முடித்து வீட்டிற்குப் போகும் போது வழியில் அழுது கொண்டே போனேன். எப்படியாவது பத்தாவது பாஸ் பண்ணிவிடவேண்டும் என்று ஆசைப்பட்டேன். பக்கத்து ஊரில் டியூசன் எடுப்பதைக் கேள்விப்பட்டு நானும் என் நண்பர்களும் போய்ச் சேர்ந்தோம். அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சரவணன் எனும் அண்ணன் ஏசுநாதர் ஆலயமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஓலைக் குடிசையில் டியூசன் எடுத்தார்.

அவர் தான் முதன் முதலில் எனக்குக் கவிதையை அறிமுகப்படுத்தினார். இரண்டு நோட்டுகள் நிறைய கவிதைகள் எழுதிவைத்திருந்தார். அவரைப் பார்த்து நானும் கவிதை எழுதத் தொடங்கினேன். அவரைவிட அதிகமாக எழுதினேன். எல்லாம் ஓசை...... ஓசை...... ஆதிக்கம் கொண்ட கவிதைகள். அவற்றில் ஒன்றுகூடத் தேறவில்லை. கிருத்துவரான அவர் மூலம் ஏசுநாதர் கீர்த்தனைகளும் பைபிளும் அறிமுகமாகின. அதனுடைய கவிதை நயத்துக்காக ஏசுநாதர் பாடல்களை விரும்பிப் பாடுவேன்.

ஏற்கனவே பாட்டி சொன்ன கதைகள் அடித்தளமாக இருந்தன. இயலாமைப் பொழுதுகளில் அம்மா வைத்த ஒப்பாரிப் பாடல்களின் துயரம் என்னை வெகுவாகப் பாதித்துவிடும். இந்தத் தருணங்களையெல்லாம்தான் கவிதைகள் என் நிலத்திலும் சொட்டு சொட்டாக இறங்கிய தருணங்களாக நினைக்கிறேன்.

கல்லூரி சேர்வதற்கு முன்பு ‘போலச் செய்தல்’ கவிதைகளை எழுதிக் குவித்து வைத்திருந்தேன் அவை குப்பை என்று பிறகுதான் தெரிந்தது. செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழிலக்கியம் படித்துக் கொண்டிருந்த போதுதான் எனக்குப் புதுக் கவிதைகள் அறிமுகமாயின. கவிஞர் மு. மேத்தாவின் ‘கண்ணீர் பூக்கள்’ தொகுப்பு குறித்து அப்போதைய தமிழ்த்துறைத் தலைவர் சி. என். குமாரசாமி வகுப்பில் பேசினார். அன்றைய சூழலில் எனக்கு மேத்தாவின் கவிதைகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. கவிஞரும் பேராசிரியருமான முனைவர் பா. உதயகுமார், முனைவர் மங்கையர்க்கரசி, பேரா. மா. உத்திராபதி போன்றோர் என்னை ஆற்றுப்படுத்தினார்கள். சக மாணவர் கவிஞர். இரத்ன. அமல்ராஜ் நண்பராக அமைந்தார். இருவரும் கவிதைகள் குறித்து சண்டை போட்டுக் கொள்வோம். மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த வேறு துறை மாணவர் ஒருவர் அவரது கவிதை நூலை கல்லூரியின் எதிரில் வெளியிட்டார். அந்த மாணவர் வேறு யாருமில்லை...... ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தின் இயக்குநர் பி.வி. பிரசாத். அந்த நூல் வெளியீட்டு விழாவில் த.மு.எ.ச.வைச் சேர்ந்த கவிஞர். சோலை பழனி, இன்குலாபின் ‘மனுசங்கடா நாங்க மனுசங்க’ பாடலைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போதுதான் எனக்கு முதன் முதலாக முற்போக்கு இலக்கியத்தின் கதவு திறந்தது.

பிறகு, மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. தமிழிலக்கியம் படித்தபோது முற்போக்குத் தோழர்களின் அறிமுகம் கிடைத்தது. ‘மாணவர் முன்னோடி’, ‘மக்கள் பண்பாடு’ இதழ்களில் ‘பாரதீயன்’ எனும் புனை பெயரில் ஒரு சில கவிதைகள் எழுதினேன். கவிஞர் பச்சியப்பன், பொன். எழிலரசு, நான் மூவரும் சேர்ந்து ‘உளி’ என்கிற கையெழுத்துப் பிரதியை மு. மேத்தாவின் கையால் வகுப்பறையில் வெளியிட்டோம். ஒரே இதழோடு நின்று போனது. மாநிலக் கல்லூரியில் அறிமுகமாகி ஒன்று சேர்ந்த நண்பர்கள் பச்சியப்பன், கங்காதரன், பொன். எழிலரசு, தி. பரமேஸ்வரி, அமல்ராஜ், கஜேந்திரன், சாரோன் ஆகியோர் இன்றும் என் இலக்கியப் பயணத்தில் துணை நிற்கிறார்கள்.

குமுதம் இதழில் பணியாற்றியபோது குமுதம் இணையதளத்திலும் இதழிலும் கவிதைகள் எழுதினேன் என்றாலும் புத்தகம் போடும் அளவுக்கு அப்போது கவிதைகள் இல்லை. பிறகு, ‘கல்கி’, ‘புதிய பார்வை’ போன்ற வெகுசன இதழ்களிலும் ‘கல்வெட்டு பேசுகிறது’ போன்ற சிற்றிதழ்களிலும் எழுதினேன். சிற்றிதழ், தீவிர இடதுசாரி இதழ், வெகுசன இதழ், இணைய இதழ் எனப் பல தளங்களிலும் எழுதினேன் என்றாலும் எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் என்னால் அக்கவிதைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டு வர முடிந்தது.

என்னோடு பயின்ற நண்பர்கள் இலக்கியத்திலும் ஊடகத்திலும் பரவலாக அறியப்படுகின்ற _ பேசப்படுகின்ற ஆளுமைகளாக பரிணமித்திருந்தபோது நான் அடையாளமற்றிருந்தது பெரும் அவஸ்தையாகவே இருந்தது.

பெரிதாகப் பதிப்பகங்களின் படிகளை ஏறியிறங்கவில்லை. நண்பர்கள் கவிஞர். பச்சியப்பன், பா. ரவிக்குமார் உதவியுடன் ‘மித்ர’ பதிப்பகத்தை அணுகினேன். எழுத்தாளர் எஸ்.பொ. வும் அவரது புதல்வர் ‘இந்ர’வும் என் முதல் கவிதை நூலை வெளியிட ஒப்புக் கொண்டனர். கவிதைகளின் ஒழுங்கமைவில் பச்சியப்பன் _ தி. பரமேஸ்வரி _ ச. விசயலட்சுமி மற்றும் என் துணைவியார் மேரி வசந்தி ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ‘உதிரும் இலை’ எனும் அழகான தலைப்பைத் தேர்ந்தெடுத்தவர்கள் என் துணைவியார் மேரி வசந்தியும் தோழி ச. விசயலட்சுமியும். கவிஞர். கனிமொழி சமகாலக் கவிதைகள் குறித்த ஒரு பொதுவான அணிந்துரையை ‘உதிரும் இலைக்கு’ வழங்கினார்.

குமுதம் இதழில் வேலை பார்த்த சமயம், குமுதத்திற்கு கவிதை கொடுத்தபோது பொறுப்பிலிருந்த ஒருவர், “கவிதை நன்றாக இருக்கிறது. பெயர்தான் பாமரத்தனமாக இருக்கு. பெயரை மாத்திக்கங்க’’ என்றார். ‘நான் பட்டிக்காட்டில் பிறந்தவன்தானே, பாரீஸில் பிறந்தவனா?’ என்று நினைத்துக் கொண்டு பெயரை மாற்றவில்லை. ‘முனுசாமிகளும் எழுதுகிறார்கள்’ என்று தெரியட்டும் என்பதற்காக விட்டுவிட்டேன். தொகுப்பாக வரும்போது ‘ஜெ’ எனும் கிரந்த எழுத்து உறுத்தியதால் என் குழந்தை ‘யாழினி’ இணைத்துக் கொண்டு ‘யாழினி முனுசாமி’யாகி விட்டேன்.

‘உங்கள் நூலகம்’, ‘புத்தகம் பேசுது’, ‘கவிதாசரண்’, ‘நடவு’ உள்ளிட்ட ஏறக்குறைய இருபது இதழ்களில் மதிப்புரை விமர்சனம் அறிமுகம் வெளிவந்தன. பழமலய், கோசின்ரா, லதா ராமகிருஷ்ணன், வே. எழிலரசு போன்ற பலர் எழுதியிருந்தார்கள். அந்த விமர்சனங்களைத் தொகுத்து ‘உதிரும் இலையும் உதிரா பதிவுகளும்’ எனும் நூலாக வெளியிட்டுள்ளேன். என் முதல் பிரவேசமான ‘உதிரும் இலைக்கு’க் கிடைத்த வரவேற்பே என்னை நம்பிக்கையுடனும் வேகமாகவும் தொடர்ந்து இயங்க வைத்திருக்கிறது என உறுதியாக நம்புகிறேன். 

Pin It