சமீபத்தில் தன் விருப்பமான ஆசுவாசக்கூடடைந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபாவிற்கு தமிழகமெங்கும் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்புகளின் சார்பாக நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது தமிழ்ச்சூழலில் புதியதொரு நிகழ்வம்சமாகவே பார்க்கப்படுகிறது. முன்னதாக மறைந்த தமிழ்ப் படைப்பாளிகள் பலருக்கும் பரந்துபட்டளவில் இதுபோன்று மனமுவந்து ஆத்மார்த்தமாக நடத்தப்பெற்ற அஞ்சலி நிகழ்வுகள் சொற்பமே. இப்போதைக்கு இதுவொரு ஆரோக்கியமான செயல்பாடுதான் எனினும் பிரான்சிஸ் கிருபாவின் உரைநடைக்கவிதை எனும் நவீன வடிவிலெழுதப்பட்ட ‘கன்னி’ நாவலுக்கு திருச்சியிலும் சென்னை­யிலுமாக இரண்டே அரங்க நிகழ்வுகள் மட்டுமே நடந்தேறியதாக நினைவு. ஒருசில முக்கியமான விமர்சனக் கட்டுரைகளைத் தவிர மாற்றுக்கருத்துகளை முன்வைத்துகூட அந்நாவலுக்கு பெரியளவில் விமர்சனங்கள், கருத்துரைகள் வெளிப்படவில்லை. அவரது கவிதைத் தொகுப்புகளுக்கும் இதேநிலைதான் நிலவியதென்பதை இந்நேரம் எண்ணிப் பார்த்து துக்கித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

francis krubaசில வருடங்களுக்கு முன்பு பிரான்சிஸ் கிருபாவின் படத்தை முகப்புப் பக்கமாகத் தாங்கிய ‘குதிரைவீரன் பயணம்’ இதழை அவருக்கான சிறப்பிதழாக யூமா வாசுகி வெளிக்கொணர்ந்திருந்தார். தமிழினி வெளியீடான ‘கொங்குதேர் வாழ்க்கை’ கவிதைத் தொகுப்பில் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்ற கவிதைகளில் பிரான்சிசுடையவையும் அடக்கம். அவரது மறைவுக்குப் பிறகு தற்போது ‘தமிழினி’ மின்னிதழ் பிரான்சிஸ் கிருபா சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. பிரான்சிஸ் படைப்புகள் குறித்து அவ்வப்போது சில கட்டுரைகளை வெளியிட்டு வந்த ‘தமிழ் இந்து திசை’ நாளிதழ் பிரான்சிஸ் கிருபாவுக்கான அஞ்சலியை சிறப்பாகவே முன்னெடுத்திருந்தது.

ஆனால் பிரான்சிஸ் அறிந்துகொள்ளும் வகையில் அவர் வாழ்ந்த காலத்தில் அவரது படைப்புகள் குறித்து இங்கு நிகழ்த்தப்பட்டவை ஒப்பீட்டளவில் போதுமானவையல்ல என்பதே கசப்பான நிதர்சனம். பிரான்சிஸ் கிருபாவின் ‘சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வில் ‘கன்னி’ நாவல் போதுமான அங்கீகாரத்தை பிரான்சிசுக்குப் பெற்றுத் தராத மனவருத்தத்தை யூமா வாசுகி வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டபோது உள்ளபடியே கனத்த மௌனமே அங்கு நிலவியது.

அவரது படைப்புகள் அதிகளவில் வாசிக்கப்பட்ட நிலையிலும் ஒப்பீட்டளவில் ஏனைய கவிஞர்களின் படைப்புகளுக்கு நிகழ்த்தப்பெறும் உரையாடல்கள் உங்கள் விஷயத்தில் ஏன் அப்படியேதும் நிகழவில்லை என இதுகுறித்து அவரிடம் நானொரு முறை கேட்டபோது ‘இங்கே எல்லாரும் கள்ள மௌனம் சாதிக்கிறாங்க’ என்று மட்டும் சொன்னார். தன்னையோ தன் படைப்புகளையோ ஒருபோதும் முன்னிறுத்திக்கொள்ள முனையாத படைப்பாளியாகவே தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பிரான்சிஸ் வேறெப்படி பதிலுரைக்க இயலும்?

கணங்கள்தோறும்

என்னை நானே

தண்டித்துக்கொண்டிருக்கும்

போது

ஏன்

நீயேனும் கொஞ்சம்

என்னை மன்னிக்கக்கூடாது!

பிரான்சிஸ் கிருபாவின் இந்தக் கவிதையை மேலோட்டமாகப் பார்த்தால் காதல் கவிதை என்பதாகவே புரிந்துகொள்ளும் சாத்தியம்தான் அதிகம். ஆனாலும் இம்மன்னிப்புக் கோரலை அவர் வாழ்வினிடத்தும் மரணமிடத்தும் சகமனிதர்களிடத்தும் சமூகத்திடத்தும் கேட்பதாகவும்கூட அர்த்தப்படுத்திக் கொள்ளவியலும். ‘என்னை இப்படியே விட்டுவிடுங்கள்’ என்ற இறைஞ்சுதலாகவும் மன்றாடுதலாகவும் கருத இடமுண்டு. தான் அனுபவிக்க நேரும் வலியை தாளமுடியாத அவஸ்தையை மனமுவந்து ஏற்பது போன்றதொரு பாவனையாகவும் இக்கவிதையைப் பொருள் கொள்ளலாம்.

தமக்கான இலக்குகள் நாலாவிதத்திலும் சிதைவுற்று ஏதும் செய்யவியலாது உழலும் தருணங்களில் சில கலைஞர்கள் தன் இயலாமையை வெளிப்படுத்த மனமில்லாமல் தம் இருப்பையே தங்கள் இயல்பானதாக வரித்துக் கொள்ளும்படி நேர்கிறது. எண்ணற்ற படைப்பாளிகள் இந்த சுழலில் சிக்கிச் சின்னாபின்னமாகிப் போவது தமிழ்ச்சூழலில் தவிர்க்கவியலாததாகவே இருந்து வந்திருக்கிறது.

‘வீணாக அழிந்தாலும் கலைஞன் நான்’ எனும் விக்ரமாதித்யனின் கவிதை வரிகள் வெளிப்படுத்த முனைவதும் இந்நிலையைத்தான். வீணாக அழிவதை எவரொருவர்தான் விரும்பி ஏற்பார்?

கொஞ்சமும் சுடர்விட்டுவிட வாய்ப்பளியாமல் காலம் நெட்டித்தள்ளிய இருளில் வழியேதுமின்றி தன்னைப் புதைத்துக் கொண்டதைப் போன்றதே பிரான்சிஸின் வாழ்வு. அவரைப் பற்றி உலவும் பல்வேறு கதைகளும் கட்டுக்கதைகளும் எந்த நியாயமுமில்லாமல் அவர்மீது சுமத்தப்படும் பாரச்சிலுவைகளே.

நிழலன்றி ஏதுமற்றவன் என்று தன்னையே படிமமாக்கிக் கொண்ட கவிஞர் பிரான்சிஸ் கிருபா கடந்த கடந்த செப்டம்பர் 16ம்நாள் இரவு வாழ்நாளெலாம் சஞ்சரித்துக் கொண்டிருந்த தன் மாயவுலகத்திலிருந்து முற்றிலுமாகத் தன்னை விடுவித்துக்கொண்டார். மரணம் ஒருவகையில் அவருக்கான விடுதலை என்பதோடு தான் சுமந்தலைந்த சிலுவையைத் தானே இறக்கி வைத்துவிட்ட நிம்மதி.

தன் விருப்புக்கேற்ப மொழியை வளைத்துத் தன் சொற்களால் அதனோடு பகடையாடியவன் இனியெப்போதும் அச்சொற்களாலேயே சுடர்விட்டுப் பிரகாசிப்பதை எவரால் தடுக்கவியலும்? கவியின் இருப்பை என் செயும் காலம்?

2003ஆம் ஆண்டுவாக்கில் நான் தமிழினியில் பணியாற்றிக்கொண்டிருந்த போது பிரான்சிஸ் கிருபாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘வலியோடு முறியும் மின்னல்’ அச்சுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அவ்வேளை தமிழினி அலுவலகத்தில்தான் அவரை முதலில் சந்திக்க வாய்த்ததும் உரையாடியதும். அப்போது தமிழினி பதிப்பகம் ‘மழை’ என்றொரு இதழை வெளியிட்டு வந்தது. அப்போது தயாராகிக்கொண்டிருந்த அவ்விதழில் ‘அத்தைக்கன்னி’ என்ற அவரது சிறுகதை இடம் பெற்றிருக்கிறதா? என்று பிரான்சிஸ் கேட்டார். அச்சிறுகதையே வசந்தகுமார் அண்ணாச்சியின் வேண்டுகோள்படி பின்னர் ‘கன்னி’ நாவலாகப் பரிணமித்தது.

தொடர்ந்து நீடித்த அவருடனான நட்பினடிப் படையில் 2005ல் எனது திருமணத்தையொட்டி நிகழ்ந்த எனது நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். அக்காலத்தில் எங்கள் நண்பரொருவருக்கு காவிரிக்கரையை ஒட்டிய தென்னந்தோப்பொன்று இருந்தது. அதன்பின்னர் பலமுறை பிரான்சிஸ் கிருபா அங்கு வந்து காவிரியில் குளித்துக் குதூகலித்துத் தங்கிச் சென்றிருக்கிறார். இவ்விடத்திற்கு கவிஞர் விக்ரமாதித்யன், கோணங்கி, யூமா வாசுகி, கைலாஷ் சிவன், அ.மார்க்ஸ் போன்றோரும் அவ்வப்போது வந்து தங்கிப்போவதுண்டு.

இவ்வருட பிப்ரவரி மாதம் நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சியில் பிரான்சிஸ் கிருபாவைச் சந்தித்தபோது ‘என்னவாயிற்று ஏறக்குறைய இறைவன் நாவல்’  என வினவினேன். சற்றே உடல் தளர்ந்திருந்த அவர் ‘மும்பைக்குப் போயிட்டு வரணும், பல இடங்களுடைய பெயர்கள் மறந்துவிட்டன பார்க்கலாம்’ என்பதாகச் சொல்லிவிட்டு ‘நம்ம தென்னந்தோப்பு ஞாபகம் அப்பப்ப வரும்' என்றார். நான் சற்று அமைதியாக இருந்துவிட்டு ‘தோப்பே நம்ம கைவிட்டுப் போச்சி பிரான்சிஸ்’ என்றேன். ‘தோப்பு போகட்டும் காவிரி அங்ஙனயேதான இருக்கு’ என்றார். சிரித்துக் கொண்டே கலைந்தோம்.

சில வருடங்களுக்கு முன்பு தோப்புக்கொரு முறை வந்திருந்தபோது பேனாவும் பேப்பரும் கேட்டு வாங்கிய பிரான்சிஸ் ‘கிளியெடுத்துத் தந்த விதியோ?’ என்ற ஒரு வரியை மட்டுமெழுதி அப்படியே நிறுத்தியிருந்தார். பின்னர் அவ்வரி தொடரவோ முழுமையடையவோ இல்லை. பிரான்சிஸின் மரணச் செய்தி கிடைத்தபோது ஏனோ இவ்வரி நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. கிளியெடுத்துத் தந்த விதியென்பது வாழ்வா? சாவா? என்ற ஐயத்தை யாரிடம் கேட்டுத் தெளிவதோ? யானறியேன்.

- ஜி.சரவணன்