jeyakandan kssubramanianகாலண்டரில் ஆண்டுகளின் ஏறுவரிசையில் ஏழு என்பதன் ஆட்சி (1970-79)யிருந்தபோது, இங்கிருந்த அரசியல், பண்பாட்டுத் தளத்தையும், தமிழ் இலக்கியப் பரப்பையும் பொதுவாக ஒரு கண்ணோட்டம் விடலாம்.

வரலாற்றின் நீண்ட பரப்பில், ஒரு பத்துஆண்டு என்பது பெரிது அல்லதான்; ஆனால், அதேபோது சிறியது என்று ஒதுக்கிவிடமுடியாது. சிலபோது, குறிப்பிட்ட சிறு கால எல்லைக்குள் வரலாற்றின் பிடிப்பு மிக இறுக்கமாக இருக்கக்கூடும்.

நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையளவிலும் தன்மையளவிலும் அந்த வரலாற்றுக்கட்டம் மிகக் கூர்மையுடையதாக இருத்தல் கூடும்.

எழுபதுகள் என்ற பத்தாண்டுக் காலம் இந்த வகையில் உலக அரங்கிலும் சரி, இந்திய நாட்டிலும் சரி, தமிழ்நாடு என்ற மாநில அளவிலும் சரி, குறிப்பிடத்தக்கதாகவே உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கலை, இலக்கியத் துறைகளில் இந்த எழுபதுகள் அழுத்தமான தடயம் பதித்துள்ளன.

இந்த எழுபதுகளின் தொடக்கத்தில் சிலி நாடு வீழ்ந்தது. ஏகாதிபத்திய சக்தி, வெற்றி பெற்றது. அதிபர் ஆலண்டே கொல்லப்பட்டார். புரட்சிக்கவிஞர் பாப்லோ நெரூடா கொல்லப்பட்டார். இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். சிலியில் வெற்றி பெற்ற ஏகாதிபத்தியம் எகிப்திலும் வெற்றி பெற்றது.

நாசருக்குப் பின்வந்த அன்வர் சாதத்தை (Anwar Sadat) அமெரிக்க வல்லரசு தன்னுடைய ஆளாக ஆக்கிக் கொண்டுவிட்டது. ஆனால், இத்தகைய வெற்றிகள் பெற்ற ஏகாதிபத்தியம், வியட்நாமில் மிகவும் பரிதாபகரமாகத் தோற்றுப் போயிற்று.

பத்தாண்டு காலமாகப் பணபலத்துடனும் படை பலத்துடனும் போரிட்ட அமெரிக்கா, வியட்நாம் தேசபக்த வீரர்களிடம் தோற்றுப் போனது. இரண்டு வியட்நாம்களும் சோஷலிச அமைப்பின் கீழ் ஒரே நாடாயின.

இந்தப் பத்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மறறொரு அம்சம், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் முதலிய ஏகாதிபத்திய சக்திகளும், அது தவிர அவற்றுடன் சீனாவும் கைகோத்துக் கொண்ட ஒரு நவீன கூட்டணியாகும். உலக அரங்கில் இவை, சோஷலிச சமதர்மக் குடியரசுகளையும், புதிய தேசிய விடுதலை சக்திகளையும் எதிர்த்தன.

முக்கியமாக, உலகின் முதல் சோஷலிச நாடாகிய சோவியத் யூனியனை எதிர்ப்பதில் இந்த நவீன கூட்டணி, மிக ஒற்றுமையாகச் செயல்பட்டது.

இதனடிப்படையில்தான், அமெரிக்காவின் ஆதிக்கப் படைகளிடமிருந்து வெற்றி பெற்று, தனது நாட்டைப் புனர் நிர்மாணிக்கத் தொடங்கிய வியட்நாம் மீது சீனா படையெடுத்து. இறுதியில் சீனா தோல்வியுற்றாலும்கூட அது தனது உண்மை சொரூபத்தைக் காட்டவே செய்தது.

உலக அரங்கில் ஒரு சோஷலிச நாட்டை இன்னொரு சோஷலிச நாடு ஆக்கிரமித்ததை அன்று கண்டோம். வெகு மக்கள் சார்ந்த இயக்கங்களிலும் முதலாளித்துவ ஏடுகளிலும், அதிதீவிர இடதுசாரிப் புராண நாயகனாகச் சித்திரிக்கப்பட்ட மாசேதுங் காலமானார்.

இந்தியாவைப் பெரிதும் பாதித்த வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் முக்கியமானது, பங்களாதேசப் பிரச்சினையாகும். இந்தியா இதில் நேரடியாகத் தலையிட்டது. வெற்றியும் பெற்றது. ஏழாவது கடற்படை என்று அமெரிக்கா பயமுறுத்தியபோது, சோவியத் நாட்டின் இந்திய நேசக்குரல் அதனை விரட்டியடித்தது.

போருக்குப்பின் நாட்டு நிர்மாண வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது, விடுதலை நாயகன் முஜிபுர் ரஹ்மானை, ஏகாதிபத்திய சக்தி கொன்று பழிதீர்த்துக் கொண்டது. இதுபோலவே, பாகிஸ்தான், அமெரிக்காவின் கொடூரக் கரங்களிலிருந்து மீட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியபோது, அதிபர் பூட்டோவின் ஆட்சியைக் கவிழ்த்தி, அவரையும் அந்த சக்தி கொன்று பழி தீர்த்துக் கொண்டது.

இவை உலக அரங்கில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகள். ஏகாதிபத்திய சக்தியினையும், சோஷலிச சக்தியினையும் மக்கள் அடையாளங் கண்டுகொள்ளத் துணைபுரிந்த நிகழ்ச்சிகள் இவை. இந்த எழுபதுகளில், சோஷலிச சக்தியானது, தனது திறனையும் கௌரவத்தையும் மேலும் பன்மடங்கு உயர்த்திக் கொண்டது. இதன் நாயகனாய் சோவியத் நாடு விளங்கியது.

இந்திய நாடு என்ற அளவில் எழுபதுகளில் மிக முக்கியமான நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கது, ஜெயப்பிரகாஷ் நாராயணனின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஆகும். இடையில் சர்வோதய இயக்கத்திலும் சாம்பல் பள்ளத்தாக்கிலும் ஈடுபட்டிருந்த ஜெயப்பிரகாசர். 1972 பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டு விவகாரங்களில் மிகத் தீவிரமாக இறங்கினார். ‘முழுப்புரட்சி’ என்று பேசினார்.

கம்யூனிஸ்டுகளைத் தனிமைப் படுத்திவிட்டு, காங்கிரசைக் கீழிறக்கிவிட்டு ஒரு, ‘நூதனமான’ அரசியல் பொருளாதார அமைப்பிற்கு அறைகூவல் விடுத்தார். இளைஞர்களை மட்டுமின்றி ராணுவத்தினரையும் இவர் அழைத்தார். 1974இல், அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது.

‘மிசா’ சட்டத்தின் கீழ் தலைவர்கள் பலர் சிறையில் வைக்கப்பட்டனர், 20 அம்சத் திட்டம் என்ற ஒன்று அன்றைய அரசினால் தீட்டப்பட்டது. ஆனால் அவசரநிலைக் காலத்தின் இறுதியில் பல கொடுமைகள் இழைக்கப்பட்டன.

1976இல் மீண்டும் பொதுத் தேர்தல். ஜெயப்பிரகாசரின் முயற்சியால் இந்திரா எதிர்ப்பு சக்திகள் வேறு எந்த லட்சியமுமின்றி - ஒன்று சேர்கின்றன ஜனதா என்ற பெயரில். இந்திரா தோற்க, ஜனதா வெற்றி பெற்றது.

ஆனால் ஜெ.பி. கண்ட ஜனதா, ஜெ.பி.யை உதாசீனப்படுத்துகிறது. ஜெ.பி.யின் வீழ்ச்சி சமதர்ம லட்சியப் பிடிப்பற்ற நிலையில் தவிர்க்க முடியாததாகிறது. சந்தர்ப்ப வாதத்திற்காகக் காத்திருந்த ஜனதா, முறையாக ஆள முடியாத நிலையில் உடைந்து போய் விடுகிறது. மீண்டும் இந்திராவின் எழுச்சியை இந்தியா காண்கிறது.

எழுபதுகளின் இடையில் வந்த அவசர நிலைக்காலம், இந்திய வரலாற்றினை ஒரு அசைப்பு அசைத்துவிட்டுச் சென்றுவிட்டது. அதன்பின் ஏற்பட்ட அரசியல் விளைவுகளில் இந்திராகாந்தி தாக்குப்பிடித்து நிற்க, முற்போக்கு முகாமும், அதே போல் பிற்போக்கு சக்தியும் செயலற்றுப் போயின.

நடுத்தர மக்களுடைய சிந்தனையை இந்தக் காலம் வெகுவாகப் பாதித்தது. கட்சிகளின் மறு சிந்தனைகளும், கட்சிகளின் உடைவுகளும், தலைவர்களின் திக்பிரமைகளும், அவர்களின் கட்சித் தாவல்களும், பெரிய தலைவர்கள் எல்லாம் செல்லாக்காசாக ஆன நிலைகளும், இந்திய அரசியலில் சிந்தனைக்குரியவைகளாக ஆயின.

தமிழ்நாட்டின் சமூக அரசியல் தளங்களிலும் எழுபதுகளின் காலக்கட்டம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. அண்ணாதுரையின் மறைவுக்குப்பின், கருணாநிதி, தமிழக அரசியலில் தனி நாயகனாய் ஆண்ட காலம், எழுபதுகளின் முதற்பாதியாகும். அது தி.மு.கழகத்தினருக்கு ஒரு பொற்காலம்.

யாராலும் தட்டிக் கேட்க முடியாத நிலையிலிருந்த கருணாநிதியை அவருடைய கட்சியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் கேள்வி கேட்டார். லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு மிகப் பெரிதாக எழுந்தது. தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க. பிறந்தது. 1976இல் நடந்த தேர்தலில் கருணாநிதியின் தி.மு.க. தோற்றது. அரசியலில் அதிகம் அனுபவமில்லாத எம்.ஜி.ஆர். முதலமைச்சரானார்.

இந்த எழுபதுகளின் பிற்பாதியில் தமிழகம் மிகப் பல போராட்டங்களைக் கண்டது. என்.ஜி.ஓ.க்கள், ஆசிரியர்கள், போலீஸ்காரர்கள், விவசாயிகள் என்று பல திறத்தாரும் பலகாலம் போராடினர். இதில் விவசாயிகளின் எழுச்சி மிகவும் குறிப்பிடத்தக்கது. அரசியல் சார்பற்றதாகிய நாராயணசாமி நாயுடுவின் விவசாய சங்கம், தமிழக அரசியலில் ஒரு மறைவான பெரும் சக்தியாக வளர்ந்தது.

இவ்வாறு எழுபதுகளின் காலகட்டம், பல்வேறு நிலைகளில் குறிப்பிடத்தக்கதாகவும் கூர்மை பெற்றதாகவும் விளங்குகிறது. மக்களின் பொதுவான நடைமுறை வாழ்க்கையை இது பாதிப்பது போலவே, அவர்களின் சிந்தனையையும் பாதிக்கிறது. குறிப்பாகக், கலை இலக்கியவாதிகளின் சிந்தனைப் போக்கினை, இத்தகைய நிகழ்ச்சிகளும், நடைமுறையுண்மைகளும் வெகுவாகப் பாதிக்கின்றன. இப்பாதிப்பு, படைப்புக்களிலே தெரியவரும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்று.

வரலாற்றின் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் அப்படி அப்படியே கலை இலக்கியத்தைப் பாதிக்கின்றன என்பது இதன் பொருள் அல்ல. கலையாதல் அல்லது கலைப்படைப்பாகுதல் என்பதல்ல. எதுவாயினும் அது, மாற்றம் அல்லது மறுஉருவம் பெற்றாக வேண்டும் (Transformation).

மேலும் எழுபதுகளின் காலகட்டம், அதே காலகட்டத்தினைச் சேர்ந்த கலை இலக்கியத்தின் பாதிப்புக்களுக்குக் காரணமாகின்றது. அந்த அந்தக் காலகட்ட இலக்கியப் பாதிப்புக்கள் அல்லது புதிய போக்குகள் யாவும், அதே காலகட்டத்து வரலாற்று நிகழ்ச்சிகளின் பாதிப்புக்கள் மட்டுமே என்று சொல்ல முடியாது.

எழுபதுகளின் காலகட்டத்து இலக்கியத்திலுள்ள போக்குகளுக்கு அறுபதுகள் காரணமாக இருக்கலாம். அதற்கும் சற்று முன்னைய நிலையில் 50கள் கூடக் காரணமாக இருக்கலாம். அதுபோல எழுபதுகளின் வீச்சு, எண்பதுகளின் இலக்கியங்களிலே காணக்கூடும். 90களில் கூட அது தொடரக் கூடும்.

வரலாற்றுக்கால நிகழ்ச்சிகளையும், இலக்கியப் போக்குகளையும் ஒரே காலகட்டத்தில் வைத்துப் பார்ப்பது, ஒரு வசதிக்காக மட்டுமே - மேலும், பாதிப்புக்களுக்கு வாய்ப்புகள் ஓரளவு அதிகம் உண்டு என்பதால் மட்டுமேயாகும்.

வரலாற்று நிகழ்ச்சிகளின் பாதிப்பு என்ற அடிப்படையில் இலக்கியத்தைப் பார்க்கப் போனால், சிறுகதைகளில் இத்தகைய பாதிப்பு குறைவாகவும், நாவல்களில் சற்று அதிகமாகவும் இருக்கக் காணலாம். காரணம், சிறுகதைகளின் எல்லைப்பரப்பு மிகவும் குறுகியது. பலவற்றை நேரடியாகப் பேசுவது இயலாது.

நாவலுக்கோ, பரப்பு எல்லை அதிகம். எனவே நிகழ்ச்சிகளின் நேரடியான பாதிப்புக்கு அது இடம் தருகிறது. உதாரணமாக, இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் மற்றும் அவருடைய தந்திரபூமி, ஜெயகாந்தனின் ஊருக்கு நூறுபேர் இப்படிச் சிலவற்றைச் சொல்லலாம்.

ஆனால் இவற்றிலும் நேர்நேர் ஒப்புமையைக் காண முற்படக்கூடாது. நிகழ்ச்சிகளைக் கற்பனைப்படி மங்களலாக்கித் தர வேண்டியுள்ளது இலக்கியத்தில். அதனை மறந்துவிட முடியாது. நாடகத்தில், வரலாற்று நிகழ்ச்சிகளின் தாக்கம் ஏனையவற்றை விட வேகமாகவே விழுகிறது.

ந.முத்துச்சாமி, இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் நாடகங்களில் இதனைக் காணலாம். ஆனால் இங்கும் பாதிப்பின் அழுத்தமும் வேகமும் அதிகம் உண்டே தவிர, நேர்நேர் ஒப்புமையை அப்படியே பார்க்க முடியாது. இக்காலப் பகுதியின் இறுதியில் காந்திகிராமம் பேராசிரியர் ராமானுஜம், நவீன நாடகங்கள் நடத்த, பட்டறைகள் தொடங்கினார்.

நாடக வளர்ச்சியில் புதிய ‘பரிமாணம்’ ஏற்படத் தொடங்கியது. தமிழின் தெருக்கூத்துப்பாணியும், மேலைநாட்டு நவீனபாணியும் கலந்து தெருக்களிலும் சிறு அரங்குகளிலும் நாடகம் நடத்துகின்ற போக்கு முகிழ்த்ததைக் காணமுடிகிறது.

பாதிப்புக்களை, நேர் நேராக, ஏனைய இலக்கியங்களினும் கூடுதலாக நாம் காண்பது, கவிதைகளில் தான். கவிதைகள், பிறவற்றிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுக் கருவிகளாக அமைபவை. மக்களுடன் நேரடியாக உடனுக்குடன் பேசக்கூடியவை. எனவே நடைமுறை நிகழ்ச்சிகள் கவிஞர்களை விரைவாகப் பாதிக்கிறது.

குறிப்பாகப் புதுக்கவிதைகளில் இதன் வீச்சினை நிறையக் காணலாம். சிலிநாட்டு வீழ்ச்சி பற்றி, வியட்நாமின் வெற்றி பற்றி, பங்களாதேசத்துப் போர் பற்றி, அவசர நிலைப் பிரகடனம் பற்றி, சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்கள் பற்றி, பெல்ச்சி, விழுப்புரம் போன்ற பலவிடங்களில் நடந்த அரிஜனங்கள் மீது ஏவப்பட்ட கொடூரங்கள் பற்றி இப்படிப் பல செய்திகள் புதுக்கவிதைகளில் நேரடியாக இடம் பெறுதலைக் காணலாம். அதிலும் குறிப்பாக முற்போக்குக் கவிஞர்களிடையே இதன் பாதிப்பு மிக அதிகம்.

இனி, இந்த எழுபதுகளின் காலகட்டத்திலுள்ள பொதுவான இலக்கியச் சூழ்நிலை என்ன - இலக்கியப் போக்குகள் என்ன - அவற்றின் திசைவழியென்ன என்பதைக் காணலாம். இதனை ஒரு Survey மாதிரிக் காண்பதும், மதிப்பீட்டின் அடிப்படையில், சில முக்கிய நிலைகளை அனுமானம் செய்தலும் அறுதி செய்தலும் இங்குப் பெரிதும் உதவி செய்யும்.

கவிதையுலகைப் பொறுத்த அளவில் எழுபதுகளின் காலம் புதுக்கவிதையின் காலம்தான். ஐம்பதுகளின் இறுதியில் தொடங்கி அறுபதுகளில் வளர்ந்த குழந்தை, எழுபதுகளில்தான் பெரியவன் ஆகிறான்.

பழைய புதுக்கவிஞர்களாகிய ந.பிச்சமூர்த்தி, சி.மணி, வேணுகோபாலன், பசுவய்யா முதலியவர்களின் செல்வாக்கு தேய, புதிய புதுக்கவிஞர்களாகிய நா.காமராசன், மீரா, சிற்பி, புவியரசு, மேத்தா, கங்கைகொண்டான், பரிணாமன், இன்குலாப், கலாப்ரியா, நா.ஜெயராமன் முதலிய கவிஞர்கள் முகிழ்த்திருக்கின்றனர். நிறைய எழுதுகிறார்கள். நிறையத் தொகுப்புக்கள் வெளிவந்தன. இவர்கள் பற்றி நிறையப் பேசப்பட்டன.

எழுபதுகளின் புதுக்கவிதைக்காலம், பொதுவாக முற்போக்குத் திசையை நோக்கியமைந்ததாகும். ஆயின் இவர்களில் பரிணாமன், இன்குலாப் முதலிய சிலருக்குத்தான் தத்துவார்த்தமான சார்புநிலை உண்டு.

எனினும் ஏனைய பிறரும், பொதுவாக மனிதகுல முன்னேற்றம், சமதர்மம் போன்ற முற்போக்குக் கொள்கைகளில் நம்பிக்கையுடையவர்களே. இவர்களில் பலர் அறிவுஜீவிகள், இளைஞர்கள். இவர்களுள்ளும் சிற்பி, மீரா, நா.காமராசன் முதலியவர்கள் ஆரம்பத்தில் திராவிடர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர்கள்.

தமிழ், தமிழினம், இயற்கை, பொருளாதாரம் பொதுவான முன்னேற்றம் என்று, சீர்திருத்தம் என்று பாடிக் கொண்டிருந்தவர்கள். பின்னர், தி.மு.கழகம் பதவிக்கு வந்த பின்னர். எதிர்பார்த்த எந்தத் திட்டமும் அரசிடம் இல்லாமையும், கொள்கைச் சூனியம் ஏற்பட்டமையும் இவற்றைக் கண்ட இவர்கள், புதிய திசை நோக்கி வளரத் தொடங்கினார்கள்.

இவர்களுடைய இந்த வளர்ச்சி தமிழிலக்கியப் போக்கில் ஏற்பட்ட திசைமாற்றத்தின் ஒரு நல்ல அடையாளமாகும். இதனைப் பேராசிரியர் நா.வா. உணர்ந்தார். அவர் மீரா பற்றி எழுதிய கட்டுரையும், தொடர்ந்து புதுக்கவிதைகளின் முற்போக்குத் திசை வளர்ச்சி பற்றி எழுதிய எழுத்துக்களும், புதுக்கவிதைத் துறையை மேலும் முற்போக்கு வழியில் வளரச் செய்தன. எதிர் எதிரான முகாம்களின் போக்குகளுக்கு ஒரு தீர்க்கமான கண்ணோட்டம் தந்தது.

இந்தப் புதுக்கவிதைக்காரர்களில் பலர் ‘வானம்பாடிகள்’ என்ற குழுவாக இயங்கினர். ஆனாலும் இவர்களிடையே தத்துவார்த்த சார்புநிலை ஆழமாக, வேரூன்றாததாலும், சிந்தனை ஒற்றுமை இல்லாததாலும் இவர்கள் சிதறுண்டனர். அதன்பின் தொடர்ந்து வந்த, எழுபதுகளின் இறுதி, புதுக் கவிதையின் வீழ்ச்சிக்காலம் தான்.

ஏதோ சடங்கு போல சிலர் எழுதுகிறார்கள். ஆனால் இவை பெரிதும் நமக்கு முந்தியவர்களை அப்படியே பிரதிபலித்துச் செல்லுகின்றனவே தவிர, புதிய வளத்தைத் தேடிப் பெறவில்லை. எனவே எழுபதுகளின் காலகட்டத்தில் புதுக்கவிதைகளின் பெரு வாழ்வினையும் இறுதியில் அதனுடைய வீழ்ச்சியினையும் காணுகிறோம்.

எழுபதுகளின் காலகட்டத்தில் சர்வதேச அரங்கிலும், தேசம், மாநிலம் ஆகிய அரங்குகளிலும் தொடர்ந்து நிகழ்ந்த, பல கூர்மையான நிகழ்ச்சிகளின் காரணமாகவும், மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசவுடைமையாதல், நிலச் சீர்திருத்தச் சட்டங்கள், பரவலான தொழிற்சாலையமைப்புகள், நவீன விவசாயம் போன்ற பொருளியல் நிலைகள் காரணமாகவும், இந்தியாவில் ஒருவகையான விழிப்புணர்ச்சியைக் காணுகிறோம்.

இலக்கியவாதி தன்னைச் சுற்றியிருப்பவற்றை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குகிறான். தான் கவனித்தவற்றின் மேல் ஒருவித ஈடுபாட்டோடு இலக்கியம் செய்யத் தொடங்குகிறான். இதனை எழுபதுகளின் காலகட்டத்தில் நிரவலாகக் காணலாம்.

இதன் காரணமாக, இக்காலகட்டத்தில் யதார்த்தவாதம் (Realism) பரவலாகப் பரிணமித்துள்ளது. சிறுகதை எழுத்தாளர்களிடையே இதனைக் காணலாம். இன்னும் குறிப்பாகக் கூற வேண்டுமானால், இந்தக் காலகட்டத்தில் கிராமங்களைக் கண்டு சித்திரிக்க வேண்டும் என்ற போக்கு இவர்களிடையே காணப்படுகிறது.

அறுபதுகளில் ‘கதவுகள்’ தொகுப்பை வெளியிட்ட கி.ராஜநாராயணன், எழுபதுகளில், கன்னிமை, வேட்டி ஆகிய தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து பூமணி, வண்ணநிலவன், வீர.வேலுச்சாமி, பா.ஜெயப்பிரகாசம் முதலியோர் கிராம வாழ்க்கை சிலபோது இயல்பு நவிற்சியும் (Naturalism) சிலபோது யதார்த்தவாதமும் மிளிரச் சித்திரிக்கின்றார்கள். ஆ.சந்திரபோஸ், ஜோதிர்லதா கிரிஜா, லிங்கன், ஜெயந்தன், அஸ்வகோஷ், சு.சமுத்திரம், தாமரை செந்தூர்பாண்டி ஆகியோர் மனிதகுல நேயவுணர்வோடு எழுதுகின்ற ஏனைய எழுத்தாளர்கள் ஆவர்.

எழுபதுகளின் காலம், சிறுகதைகளைவிட அதிகமாக, நாவல்களுக்கே உரிய காலம் என்று சொல்ல வேண்டும். எண்ணிக்கையால் மட்டுமின்றி, பரிமாண அளவுகளினாலும் நாவல்களின் வளர்ச்சி இந்தக் காலகட்டத்தில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

இந்தக் காலகட்டத்தில் அபரிதமான வளர்ச்சி அதாவது பிரபல்யம் பெற்ற நாவலாசிரியர் சுஜாதாதான். அறுபதுகளின் இறுதியில் தொடக்க முயற்சிகள் உண்டெனினும் எழுபதுகளிலேயே அவர் பெரும் எழுத்தாளர் ஆகியுள்ளார். விஞ்ஞான அறிவு, சாகசம், பாலியல் ஆகியவற்றைக் கலந்து எழுதுவதில் தமிழில் ஒரு ‘சாதனை’யை ஏற்படுத்தியவர் இவர்.

இலக்கியம், சமூகம் பற்றிய ஆழமான அறிவுடைய இவர், நசிவு சக்திகளுக்குத் துணை போகின்ற, ஈரடி பின்னால் காலடி எடுத்து வைக்கின்ற நாவல்களை எழுதினார் என்பது துரதிர்ஷ்டவசமானது. ஜனரஞ்கப் பத்திரிகைகளுக்கு, இவர் நன்றாகத் தீனி போட்டார். இந்தப் பாதையில் போகின்ற இன்னும் இருவர், சிவசங்கரி, இந்துமதி. சுஜாதாவிடம் காணுகின்ற விஞ்ஞான அறிவு இவர்களிடம் இல்லை.

ஆனால் பெண் எழுத்தாளர்களாகிய இவர்களிடம் பாலியல் முதலியன தாராளமாக உண்டு. இவர்களும் எழுபதுகளின் கண்டுபிடிப்புக்களேயாவர். இவர்களுள் சிவசங்கரி, அறுபதுகளின் இறுதியில் கணையாழி, தீபம் ஆகிய இலக்கியப் பத்திரிகைகளில் சில நல்ல சிறுகதைகள் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய பின்னோக்கிய வளர்ச்சி, ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்குப் புதுவரவு. இதுபோல, இலக்கியப் பத்திரிகைகளில் சில நல்ல கதைகள் எழுதிப் பின்னர் வியாபார ரீதியான ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு அந்தப் பத்திரிகா தர்மத்திற்கு ஆளாகிப் போய்விட்டவர்கள், ஜெயந்தன், பாலகுமாரன், சுப்பிரமணிய ராஜு ஆகியோர்.

இவர்களுக்கு நேர் மாறாக, முன்னோக்கி முற்போக்குத் திசையில் வளர்ச்சி பெற்றவர் ராஜம் கிருஷ்ணன். இவருடைய வளர்ச்சி, மிகவும் குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் பிராமணிய சமூக நிலைமை. திராவிடர் இயக்க நசிவுப் போக்குகள், காந்தீயம் என்ற அடிப்படைகளில் எழுதியவர் இவர்.

பின்னர் சில பகுதிகளில் வாழ்கின்ற சில சமூகப் பிரிவுகளின் வாழ்வு முறைகளை ஆய்ந்து பார்த்து எழுதத் தொடங்கினார். இது அவருக்கு, யதார்த்த இலக்கியக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தித் தரத் தொடங்கியது. அமுதமாகி வருக, குறிஞ்சித்தேன், வளைக்கரம் ஆகியன இப்படிப்பட்டன. வளைக்கரம், சோவியத் நாடு - நேரு பரிசைப் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து அவருடைய உலகக் கண்ணோட்டத்திலும், லட்சியத்திலும் ஒரு தீர்க்கமான அணுகல்முறை ஏற்படுகிறது. அவருடைய ‘அலைவாய்க் கரையில்’ என்ற நாவலும் ‘கரிப்பு மணிகள்’ என்ற நாவலும், முற்போக்கு இலக்கிய முகாமிற்குக் கிடைத்த புதிய வரவுகள். அரசியல் சார்பு நிலையில்லாத ஒரு எழுத்தாளர், வாழ்க்கை பற்றிய உண்மை நிலையும் (sincereity) மனிதகுலநேயமும், நடைமுறை வாழ்வைச் சித்திரிப்பதில் ஆர்வமும், ஒரு பரந்த உலகக் கண்ணோட்டமும் உடையவராயிருப்பின் அவருடைய படைப்புக்கள் இந்த வழியில்தான் அமைதல் கூடும் என்பதற்கு ராஜம் கிருஷ்ணன் ஒரு நல்ல உதாரணம்.

எழுபதுகளில் புதிதாக நாவலாசிரியர்களாக முகிழ்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்; பொன்னீலன், சின்னப்ப பாரதி, ஐசக் அருமைராசன், நாஞ்சில் நாடன், விட்டல்ராவ் முதலியவர்கள். பொதுவாக இவர்கள், யதார்த்தப் போக்குக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இங்குச் சொல்லியாக வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க நாவல்கள் என்று சொல்லப்போனால் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கா எங்கே போகிறாள், மூங்கில் காட்டு நிலா, இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல், தந்திரபூமி, தி.ஜானகிராமனின் மரப்பசு, அகிலனின் எங்கே போகிறோம்,

பொன்னீலனின் கரிசல், கொள்ளைக்காரர்கள், புதிய மொட்டுக்கள், சின்னப்ப பாரதியின் தாகம், டி.செல்வராஜின் தேனீர், ஆதவனின் காகித மலர்கள், நீல.பத்மநாபனின் உறவுகள், அசோகமித்திரனின் தண்ணீர், ர.சு.நல்லபெருமாளின் போராட்டங்கள், ஐசக் அருமைராசனின் கீறல்கள், நாஞ்சில் நாடனின் தலை கீழ்விகிதங்கள், கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், வண்ணநிலவனின் கடல்புரத்தில், ராஜம்கிருஷ்ணனின் அலைவாய்க் கரையில், கரிப்பு மணிகள், அறந்தை நாராயணனின் ஜக்கா, வாரந்தோறும் வயசாகிறது முதலியவற்றைச் சொல்லலாகும்.

இந்தப் பட்டியலில் காணப்படும் நாவல்கள் ஒரே தரத்தையுடையனவோ, ஒரே லட்சியப் போக்குடையனவோ அல்ல என்பதையும் இங்கு நினைத்துப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

எழுபதுகளின் காலகட்டத்தில் நாவல்கள் நல்ல வளர்ச்சி பெற்றது போலவே விமரிசனத் துறையும் கூர்மை பெற்றது என்று சொல்ல வேண்டும். அறுபதுகளின் இறுதியில் தோன்றிய ‘ஆராய்ச்சி’ இதழ், எழுபதுகளின் முதற்பாதியில் தமிழ் விமரிசன உலகில் ஒரு முற்போக்கு முகாமைக் கட்டுவதற்கு உதவியது.

கல்கி, கிருத்திகா, தி.ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, ஆர்.ஷண்முகசுந்தரம், நீல.பத்மநாபன் ஆகியோர் பற்றிய நல்ல விமர்சனங்கள் வந்தன. 1973இல் வெ.சாமிநாதன் என்பவர் ஒரு பக்கமும், பேராசிரியர் நா.வா.வும் வெ.கிருஷ்ணமூர்த்தியும் மறுபக்கமும் இருந்து உள்வட்டம் பற்றியும் வெளிவட்டம் பற்றியும் நடத்திய விவாதங்கள் விமரிசன உலகில் தீர்க்கமான பாதைகளைக் காட்ட முயன்றன.

விமரிசனத் துறையில் இந்தக் கால கட்டத்தில் குறிப்பிடத்தகுந்தது விமரிசனம் என்ற பெயரில் தனி மனித நிந்தனைகள் பரிமரிக் கொள்ளப்பட்டன என்பதாகும். இது, உள்வட்டம் பேசும் சுத்த இலக்கியவாதிகளிடமும் மற்றும் அதிதீவிரம் பேசும் சிந்தனையாளர்களிடமும் காணப்பட்ட போக்காகும்.

கலை, கலைக்காகவே அதாவது கலையின் அழகுக்காகவே என்று பேசும் விமரிசகர்களாகிய க.நா.சு., சி.சு.செல்லப்பா, வெ.சாமிநாதன், தாமு சிவராமு ஆகியோரிடம் இது குழாயடிச் சண்டையாகக் காணப்படுவதைக் காணலாம். யார் யாரை

எந்த நேரத்தில் தாக்கிக் கொள்ளுகிறார்கள் அல்லது அரவணைத்துக் கொள்கிறார்கள் என்று யூகிக்கமுடியாத அளவிற்கு இந்த ‘நூதன விமரிசனம்’ அமைந்திருந்தது.

விமரிசனங்களின் வளர்ச்சிக்கு இடம் கொடுத்தவை, சிறு பத்திரிகைகள் என்று கூறப்படும் இலக்கியப் பத்திரிகைகளாம். எழுபதுகளின் காலம் இலக்கியப் பத்திரிகைகளின் காலம் எனல் வேண்டும். ஒருவகையில் இவை புற்றீசல் போல் ‘ஙொய்’ என்று கிளம்பின. இவற்றில் சில தனி நபர்களால், சில, நண்பர் குழுக்களால் வெளிவந்தன.

இவற்றில் பல, விற்பனைக்காக அல்லாமல் தனிச்சுற்றுக்களாக வெளிவந்தவை. பணம் இழப்பது உறுதி என்று தெரிந்தும் - நீண்ட நாள் இம்முயற்சி வாழாது என்று தெரிந்தும், வெளிவந்த இப்பத்திரிகைகளின் எண்ணிக்கையைப் பார்க்கின்றபோது, எழுபதுகளில் இலக்கிய முயற்சி அபரிமிதமாக இருந்தது என்பதையே காட்டும்.

இவற்றில் பெரும்பாலும் புதுக்கவிதைகளும், விமரிசனக் கட்டுரைகளும். சிறுகதைகளும் வெளிவந்தன. சிலவற்றில் அரசியல் கட்டுரைகளும் உடன் சேர்ந்து காணப்படும். அறுபதுகளின் இறுதியில் தொடங்கி, எழுபதுகளின் முதற்பாதியில் செல்வாக்குப் பெற்றிருந்த ‘வானம்பாடி’யின் வீச்சு இப்பத்திரிகைகளில் யாதாயினும் ஒருவகையில் பரவலாகக் காணப்படக்கூடும்.

இக்காலகட்டத்தைச் சேர்ந்த இலக்கிய - சிறு பத்திரிகைகள் கசடதபற, அஃக், ஞானரதம், சிகரம், கண்ணதாசன் (2), பிரக்ஞை, சதங்கை, உதயம், கார்க்கி, பாலம், கொல்லிப்பாவை, கோகயம், நெறிகள், விழிகள், மகாநதி, வைகை, பொன்னி, சாதனா, சகாப்தம், சமூக நிழல், சுவடு, காற்று, புதிய வானம், படிகள், பரிமாணம், யாத்ரா, இலக்கிய வெளிவட்டம், விவேக சித்தன், சிவப்புச் சிந்தனை, நோக்கு... பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவற்றில் சாதனை செய்தவை மிகச்சிலவேயாகும். இவை தவிர ‘தாமரை’யைப் பின்பற்றி செம்மலர் என்ற பத்திரிகை முறையாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

இவற்றில் சில, நவீனத்துவவாதம் (modernism) பேசுப¬வ் சில, முற்போக்குச் சிந்தனை கொண்டவை. ஆயினும், இவையனைத்துமே பொதுவாக இலக்கியப் பசியும், சோதனையார்வமும், கொண்டவை. முக்கியமாக, பெரும் பத்திரிகை நிறுவனம் என்பவற்றிற்கெதிராக கலகக் கொடி தூக்கி எழுந்தவை இவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில், பெரும் பத்திரிகைகள் யாவும் அத்திபூத்தாற்போல சில நல்ல கதைகளை வெளியிட்டாலும், அவை பொதுவாக, ஃபார்முலாக் கதைகளையும், நசிவுக் கதைகளையுமே அதிகம் வெளியிட்டன. எழுபதுகளின் இறுதியில் பெரும் பத்திரிகையுலகிலும் வியாபாரப் போட்டி பெருக ஆரம்பித்தது. இதயம் பேசுகிறது, குங்குமம் ஆகிய புதிய பத்திரிகைகள் பிறந்தன.

ஆனால், புதிய இலக்கிய வளர்ச்சிக்கு இவை மேலும் ‘குந்தகம்’ விளைவித்தனவே தவிர, ஆரோக்கிய நிலையை ஏற்படுத்த இவை முனையவில்லை; இவற்றின் நோக்கமும் அதுவல்ல. குமுதம் என்பதன் பிரபலத்துவ ஃபார்முலா பாணிதான் இவற்றின் பாணியும்.

இத்தகைய ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு எதிராகக் கலகக் கொடியுயர்த்தி சிறு இலக்கியப் பத்திரிகைகள் தோன்றியது போலவே, பெரும் பதிப்புத்துறை நிறுவனங்களுக்கு மாறாக, கலகக்கொடி தூக்கியது போல புதிய பதிப்பு வெளியீட்டு முயற்சிகளும் இந்தக் கால கட்டத்தில் முகிழ்த்தன.

மீராவின் அன்னம். அகரம் ஆகியனவும், ராமகிருஷ்ணனின் ‘க்ரியா’வும் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை. இவை தரமான நூல்களை, மிக அழகுற அச்சிட்டு வெளியிட்டன.

இதுதான் எழுபதுகளின் காலகட்டத்தில் காணப்படுகின்ற இலக்கியச் சூழல். இதனுடைய பொதுவான திசை வழியைப் பார்க்கும் போது முன்னர் நாம் ஆங்காங்கே குறிப்பிட்டுக் காட்டியது போல - எண்ணிக்கை அளவிலும் சரி, தரம், கட்டமைப்பு அடிப்படையிலும் சரி, முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புக்கள் மற்றும் தீவிர வாசிப்புக்களைத் தேடும் எழுத்துக்கள் உயர்ந்து வந்துள்ளன என்பதில் ஐயமில்லை.

- தி.சு. நடராசன்

Pin It