பெரியாரின் பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை என தமிழ்ச் சமூகத்திற்கு அவர் செய்த ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் அதே வேளையில், பெரியார் மீது சில திறனாய்வுகளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள், கட்சியின் இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் முன் வைத்தார். 

இது குறித்து, அண்மையில் வெளிவந்த ‘கருக்கல்’ என்ற திங்களிதழுக்கு (மார்ச்-ஏப்ரல் 2012), த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் வழங்கிய செவ்வியில் கூறியதை இங்கு பதிகிறேன். 

பெரியாரை விமர்சிப்பதால் ஒருவர் பிற்போக்குவாதியாகிவிடுவார் என்று சொன்னால் அது பெரியாரின் பகுத்தறிவுவாதத்திற்கு உகந்ததாக இருக்காது. பெரியார் பக்தி மார்க்கத்திற்கே உரியதாக இருக்கும். காரல் மார்க்சிலிருந்து பெரியார் வரை அனைவரும் திறனாய்வுக்கு உட்பட்டவர்களே.  

பெரியாரின் பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகியவை குறித்த கருத்துகளும் அவற்றிற்காக அவர் நடத்திய போராட்டங்களும் தமிழர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கிறது. அதற்காக அவரை த.தே.பொ.க. பாராட்டுகிறது. ஆனால் இனம், மொழி, தேசியம், தேசம் குறித்த அவரின் கருத்துகள் முழுக்க முழுக்க தமிழினத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் எதிரானவை.  

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று அவர் தொடர்ந்து கூறி வந்தது, தமிழைப் புறந்தள்ளிவிட்டு ஆங்கிலத்தைப் படிக்குமாறும் வீட்டில் கூட வேலைக்காரியுடன் ஆங்கிலத்தில் பேசும் நிலை வரவேண்டும் என்றும் பெரியார் கூறிய கருத்துகள் போன்றவை மொழியியல் குறித்த அறிவியலுக்கு எதிரானவை. ஆங்கிலத்தின் மீது அவருக்கு இருந்த மூட நம்பிக்கைக்கான சான்று.  

ஆரியர்கள் திணித்த திராவிடம் என்ற திரிபுக் கருத்தியலை ஏற்று அவர் பரப்பியது தமிழினத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் இனத்தின் பெயரான தமிழர் என்பதையே மறுக்கவும் மறைக்கவும் பெரியாரின் கருத்துகள் துணை செய்தன. தேசியம் என்பதே பாசிசம் என்று அவர் வரையறுத்தார். அதுவும் சமூக அறிவியல்படி பிழையான கருத்து.  

தமக்கு மொழிப்பற்றோ, இனப்பற்றோ கிடையாது என்று திரும்பத்திரும்பக் கூறினார். ஆரியத்தை எதிர்த்து இன அரசியல் நடத்திய பெரியாருக்கு தமக்கான ஓர் இன அரசியல் வேண்டாமா? இனப்பற்று இல்லை என்று சொல்வது சரியா? தமிழர் மரபையும் தமிழர் இலக்கியச் செழுமையையும் முற்றிலுமாகப் பெரியார் எதிர்த்தார். இவை போன்ற அவருடைய பிழையான கருத்துகளைத்தான் த.தே.பொ.க. விமர்சிக்கிறது. நான் ஏற்கெனவே சொன்னது போல் பெரியார் அளித்த பங்களிப்பை நன்றியோடு ஏற்றுக்கொண்டே இந்த விமர்சனத்தைச் செய்கிறோம்” 

இவ்வாறு பெரியார் மீது முன்வைக்கப்பட்ட பல திறனாய்வுகளையும் பெரியாரியவாதிகளால், அவதூறு என்றும் புனைவுகள் என்றும் தொடர்ந்து புறந்தள்ளி வந்தனரே ஒழிய, தர்க்கப் பூர்வமாக எதிர்க்கவில்லை. அவற்றுக்கு உரிய விடை எதுவும் அளிக்கப்படவில்லை. 

பெரியார் முன்வைத்த ‘திராவிட’க் கருத்தியல், தென்னகத்துப் பார்ப்பனர்களையேக் குறிக்கிறது என்பதற்கான பல ஆதாரங்களை முன்வைத்து, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில், வரலாற்றியல் ஆய்வாளர் முனைவர் த.செயராமன், பழந்தமிழர் இலக்கிய ஆய்வாளரும், இயக்குநருமான தோழர் ம.செந்தமிழன் ஆகியோர் பல கட்டுரைகளை எழுதினர். இவற்றுக்கும் பதில் கிடையாது. 

ஆனால், தொடர்ந்து இவற்றை மறுக்காமல் இதற்குரிய தர்க்கப்பூர்வமான பதில்கள் எதனையும் அளிக்காமலும் இவற்றை அவதூறு என்று கடந்து செல்லவே விரும்புகின்ற பல ‘பகுத்தறிவு’வாதிகள் பெரியாரை இன்றும் கடவுளாக நினைத்து வழிபட முற்படுகின்றனர். 

சாதி ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக, பொத்தாம் பொதுவாக அனைவரும் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களுக்குச் செல்லுங்கள் என்று பெரியார் இட்ட கட்டளை, நகரமயமாதலை மேலும் மேலும் தீவிரப்படுத்தி கிராமங்களை அழித்தொழிக்கத் துடிக்கும் உலகமயமாக்கலுக்கு கருத்தியல் ரீதியாக மறைமுகமாக உதவி புரிகின்றது. நகரமயமாக்கல் சாதியை ஒழித்துக் கட்டப் பயன்படவில்லை, ஒளித்து வைத்துக் காட்டத்தான் பயன்படுகின்றது என்பதை நடைமுறையில் நாம் உணர்ந்துள்ள நிலையில், ‘கிராமங்களை ஒழித்தால் சாதி ஒழியும்’ என்று கூறிய பெரியாரின் கருத்தை எப்படி அங்கீகரிக்க முடியும்? 

இதைத் தொடர்ந்தே, தேவிகுளம், பீரிமேடு உள்ளிட்ட தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வந்த தாலுக்காக்கள் கேரளாவுக்கு தாரை வார்க்கப்படுவது குறித்து தனக்கு கவலையில்லை என்று அறிவித்தது, எவ்வித நிபந்தனையுமின்றி காங்கிரசை ஆதரித்தது என பெரியார் மீது திறனாய்வு செய்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில், கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். (காண்க: தேவிகுளம் பீரிமேடு மீட்பும் திராவிட குழப்பங்களும், http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18791&Itemid=139

periyar_cartoon_620

அக்கட்டுரையில், தோழர் பெ.மணியரசன் பெரியார் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அவற்றுள் கீழ்க்கண்டவை முக்கியமான சில கேள்விகள் ஆகும். 

  1. ம.பொ.சி. தேவிகுளம் பீரிமேட்டை மீட்க வேண்டுமென அழைத்த கூட்டுப் போராட்டத்தில் கலந்து கொள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி ஆகியவற்றை நிபந்தனைகளாக விதித்த பெரியார், காமராசரையும் காங்கிரசையும் ஆதரிக்க ஏன் அவர் எந்த நிபந்தனைகளையும் போடவில்லை?  
  1. 1957, 1962 தேர்தல்களில் காங்கிரசு வெற்றிக்காக உழைக்க ஏன் இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி ஆகியவற்றை நிபந்தனைகளாக பெரியார் போடவில்லை? 
  1. 1965-இல் மாணவர்கள் நடத்திய மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை காங்கிரசு ஆதரவு நிலையிலிருந்து கொண்டு பெரியார் ஏன் எதிர்த்தார்? 

மேற்கண்ட கேள்விகளுக்கு பெரியாரியவாதிகளிடம் உரிய பதில்கள் இல்லை. மாறாக, தோழர் பெ.மணியரசன் சுட்டிக்காட்டிய இச்செய்திகள் அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டு அவதூறு என்று மறுத்தனர். 

தேவிகுளம், பீரிமேடு தாலுக்காக்கள் பறிபோவது பற்றி தனக்கு கவலையில்லை என்று பெரியார் 11.10.1955 நாளிட்ட தினத்தந்தி இதழில் பேட்டி கொடுத்ததை தோழர் பெ.மணியரசன் சுட்டிக்காட்டிய போது, அப்பேட்டியே பொய் என்று 'பகுத்தறிவு' கொண்டு மறுத்துப் பேசினர் சிலர். தி.க.வின் ஏடான 'விடுதலை'யில் வெளிவந்தால் மட்டுமே அப்பேட்டி சரியானதென்றும், 'தினத்தந்தி' இதழுக்கு பெரியார் அப்படியொரு பேட்டியே வழங்கவில்லை என்றும் மெத்தப் படித்ததாக நினைத்துக் கொண்டுள்ள 'சில' மேதாவிகள் முழங்கினர். 

கடவுள் மறுப்பை தனது கொள்கையாக கொண்ட பெரியாரையே இன்று கடவுளாக நினைத்து வழிபடுகின்ற மனநிலை கொண்ட இந்த 'மேதாவி'களுக்கு இப்பேட்டி உவப்பானதாக இருக்காது தான். இருந்தாலும், இதனை தவிர்க்காமல் வெளியிட்டே ஆக வேண்டும், பெரியார் மீதுள்ள இவர்களது ஐயத்தைப் போக்க வேண்டும் என்ற நோக்கில், தினத்தந்தியில் வெளியான பெரியாரின் பேட்டியை அந்நாளிதழ் வடிவிலேயே இங்கு வெளியிடுகிறோம். பெரியார் இப்பேட்டியில் கூறியிருப்பது சரிதானா என்பதை இப்பேட்டியை முழுமையாக படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். 

periyar_inerview_700

'விடுதலை' இதழில் வெளிவந்தால் மட்டுமே இது சரி என்றும் வேறு இதழ்களில் வெளிவந்தால் இது பொய் என்றும் கூறுபவர்கள், 'பொய்'யான பேட்டியை வெளியிட்டமைக்காக தினத்தந்தி இதழை கண்டித்தார்களா? அல்லது கண்டிப்பார்களா? 

இந்த ஆதாரங்களையும் பெரியார் பக்தர்கள் முழுமையாக உள்வாங்குவார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. இவற்றையும் அவதூறு என்றும் புனைவு என்றும் கருதி ஓடத் துடிப்பதற்கு முன், அவர்கள் அடிக்கடி உச்சரிக்கும் 'பகுத்தறிவு' கண் கொண்டு இதனை பரிசீலிக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்! 

தோழமையுடன்,

க.அருணபாரதி

தலைமைச் செயற்குழு உறுப்பினர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Comments

24 comments

24
jo.tamilselvan
அருமையானக் கட்டுரை. சிந்திக்கத் தூண்டுகின்ற கட்டுரை. பெரியார் சிலைக்கு மாலை போட்டு கும்பிடும் கூட்டத்திற்கு சாவுமணி அடிக்கின்ற கட்டுரை. அவர்கள் சிந்திக்க வேண்டும். சிறிய வட்டத்தைத் தாண்டி வெளியேறி சிந்திக்க வேண்டும். அப்பொழுதுதான் பகுத்தறிவு அவர்களுக்கு வரும்.
அ,கா,ஈஸ்வரன்
விமர்சனத்தை எதிர்ப்பதென்பது பகுத்தறிவுக்கு உகந்ததே அல்ல.

நான் எனது "மதத்தைப் பற்றி மார்க்சியம்" என்ற நூலில் பெரியாரைப் பற்றி விமர்சனத்தை தொடங்கியுள்ளேன்.

அ.கா.ஈஸ்வரன்

9283275513
பகலவன்
பெரியார் வாதி களுக்கு சரியான கட்டுரை .பெரியார் சொன்னார் பெரியார் சொன்னார் என்று சுற்றி திரியும் பகுத்தறிவாலர்களே பெரியார் என்ன சொண்னார் என்று சிந்தியுங்கள்
பா.யோகேஷ்வரன்
"(தமிழ்)தேசியவாத சிமிழுக்குள் அடைக்க முடியாததல்லவா பெரியாரின் தலையாய சிறப்பு" ‍‍அ.மார்க்ஸ்.

சத்திய வாக்கு...
raja
at 90's veeramani, then Kolathur Mani, SUPA Veerapandian, Ve.Mathimaran explain detailed for the above mentioned issues. Also thiyagu who is nearest to maniarasan also cleared the statement and standard taken by (Periyar) aiya. But this parpana thamilarkal always critisised periyar.

That is why this people not reach peoples and unable to arrange separate diaz.Instead they occupy the place of diaz given by dravida supporters.
durai ilamurugu
விமாசரிக்கக்கூடாத தலவர்கள் யாரும் இல்லை பெரியார் , மார்க்சு மாஒ இப்படி பட்டியலியட்லாம் ஆனால் தமிழ் தேசியவாதிகள் பல் இடங்க்களிலும் ப்ரியார் தமிழர் இல்லை என்பதை முதன்மைப்ப்டுத்தியே அவரை விமரிசித்துவருகிறார்கள் தமிழ்ப்,பற்று இல்லாதவர் ஆங்கிலத்தைப்,படிக்க சொன்னவர் ஏன் ? அவர் தமிழரில்லை ஆங்கிலத்தைப் படிப்பதால் என்ன கேடு வந்துவிடப் போகிறது?

இது பெரியாரின் கேள்வி. பெரியார் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று - அவர் ஆங்கிலத்திற்கு அதிகம் இடம் அளித்தார். தமிழை விட்டு விட்டு ஆங்கிலத்தைப் படியுங்கள் அதிலேயே பேசுங்கள் என்று கூறினார் என்பதாகும். இதிலும் பெரியார் தன்னுடைய காலத்திற்கு ஏற்ற வகையில் தமிழனின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே கூறினார்.

ஆங்கிலத்தை கற்று தமிழன் நல்ல தொழிலுக்கு சென்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்; அதுவே அவனுடைய இழிவினைப் போக்கும் வலிமை படைத்து என்று கருதினார். அவருக்கு தமிழன் வாழ்க்கை தான் முக்கியம். தமிழன் வாழ்ந்தால்தான் தமிழ் வாழமுடியும் என்று கருதியவர் பெரியார். மொழியை விடவும் மனிதன் முதன்மையானவன் என்பது மனித நேயம் உள்ள அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்தே ஆகும். அரசியலுக்காக அதை அப்படியே திருப்பிப்போட்டு தமிழ் இருந்தால்தான், வாழ்ந்தால்தான் தமிழன் வாழமுடியும் என்று எழுதுகிற, கருதுகிற கூட்டத்தில் இன்று பல முற்போக்குவாதிகளூம் கரைந்து விட்டது மிக்க வருத்தம் அளிக்கிறது. ஈழத்தில் இன்று தமிழனே இல்லை. தமிழ் அங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லாம் தங்களுடைய வாழ்க்கைக்கு ஆங்கிலத்தையே பயன்படுத்துகிறார்கள். இணையத்தில் எழுதுவதற்கு மட்டும் தமிழை பயன்படுத்துகிறார்கள். அதுவும் ஒருங்குறியில் ஊணீசோடே மட்டும் தான். ஆங்கிலம் அறியாமல் இருந்தால் ஒருங்குறியில் ஊணீசோடே பயன்படுத்த இயலுமா?

இன்றைக்கும் அறிவியல் தொழில் நுட்பம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்த மொழி ஆங்கிலமே என்பதில் ஐயமில்லை. கால்செண்டர் முதல் மென்பொருள் தொழில் வரை அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்த மாணவர்கள் மாதம் மூவாயிரம், நாலாயிரம், ஐந்தாயிரம் வரை பொருள் ஈட்டுவதற்கு உதவுவது ஆங்கிலமே. அதற்கு சாளரம் அமைக்காமல் பாதை திறக்காமல் லத்தின், ஹீபுரூ, சீனம்,மலாய், செர்மன், ஜப்பான் போன்ற மொழிகளுக்கா சாளரம் அமைப்பார்கள்? இதில் திராவிட இயக்கம் செய்த தவறு என்ன? பெரியார் செய்த தவறு தான் என்ன? தமிழ்த் தேசியர்கள் மண்ணுக்கு ஏற்ற மார்க்சியர்கள் என்றெல்லாம் மார்த்தட்டிக்கொண்டு திரியும் கூட்டம் தங்களுடைய வயிற்றுப் பிழைப்பிற்கு என்ன செய்கிறது.? மார்க்சையும், லெனினையும் தமிழ் படித்தால் போதாது மொழி பெயர்ப்பில் குளறுபடி செய்து கருத்தை திருத்தியிருப்பார்கள். எனவே ஆங்கிலத்தில் அந்த நூல்களை படிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்களே! அது எப்படி? ஆங்கிலத்திற்கு வழியே வைக்காவிட்டால் அந்த நூல்களை படிப்பது எவ்விதம்?. மார்க்சும் மூலதனம் நூல் முழுவதையும் ஒரு தமிழ் தேசியர் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். ஆங்கில அறிவு இல்லாமல் அவரால் எப்படி இதை செய்ய முடியும்?.

இதைவிட வேடிக்கை இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் மார்க்சின் தாய் மொழியான ஜெர்மனி மொழியில் தான் அவருடைய நூல்கள் எழுதப்பட்டன. எனவே அந்த மொழியை கற்று அதன் பிறகு அந்த நூல்களை படிப்பது சாலச்சிறந்தது. சே குவராவின், காஸ்ட்ரோவின் எழுத்துக்களை எல்லாம் அவை எழுதப்பட்ட ஸ்பானிஸ் மொழியில் தான் படிக்க வேண்டும் என்பதற்காக சிலர் ஸ்பானிஸ் மொழி இந்தியாவில் எங்கு பயிற்றுவிக்கப்படுகிறது என்று தேடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆகவே தாங்கள் ஒரு சிறப்பான செயலை செய்ய வேண்டும், புதியவற்றை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தேவை ஏற்படும்போதெல்லாம் ஆங்கில மொழியை நாடுவதில் தமிழ்த் தேசியர்களும் பெரியார்வாதிகளும் மற்ற யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. ஆனால் இதையே மற்றவர்கள் செய்தால் மொழிப் பற்று இல்லாதவன் ஆங்கில அடிவருடி என்று இழித்தும் பழித்தும் உரைப்பார்கள். இது என்ன நீதி?

எல்லா தகவல்களும் தொழில் நுட்பமும் அறிவியல் செய்திகளும் தமிழுக்கு வந்து சேர்ந்த பிறகு மற்றவர்கள் படித்துக்கொள்ளட்டும். நாம் ஆங்கிலம் கற்று அவற்றை முதலில் தெரிந்து கொள்வோம் என்ற புதிய வகை பார்ப்பனியம் தானே இது. எல்லாம் தமிழுக்கு வரும் வரை மற்றவர்கள் கையை கட்டிக்கொண்டும் இருக்க வேண்டும். இவர்கள் சட்டாம்ப்பிள்ளையாக மாறி ஆங்கிலம், ஸ்பானிஸ் மொழியில் இருந்து எடுத்துக்கொடுப்பார்கள். அதை மற்றவர்கள் படிக்க வேண்டும்.! ஏன்? நானே ஆங்கிலம் கற்று அதை நேரடியாக கற்றுக்கொள்கிறேன். நடுவில் நீ என்ன தரகு வேலை செய்வதற்கு என்று கேட்டால் இனத் துரோகி, மொழித்துரோகி என்ற பட்டம் தான்!. இதைத்தான் பெரியார் உடைத்தார். சூத்திர தமிழன் முன்னேற வேண்டுமானால் ஆங்கிலம் கற்க வேண்டும். அதில் உள்ள அறிவியல் செய்திகளை மனதில் வாங்கிப் படி. அதில் வாழ்க்கைக்கு உரிய செய்திகள் பல அடங்கி உள்ளன என்று தமிழனுக்கு அறிவுரை கூறினார். இதில் என்ன பிழை? அதையும் அவர் வற்புறுத்தவில்லையே!. இது என்னுடைய கருத்து. சரியென்று பட்டால் ஏற்றுக்கொள். இல்லை என்றால் தள்ளிவிடு என்று தானே கூறினார். இதை விட எளிதாக சுதந்திரமாக ஒரு கருத்தை ஒரு மனிதர் எவ்விதம் சொல்ல இயலும்?

இந்த கருத்தை மட்டும் தனியே எடுத்துக்கொண்டு தமிழ்த் தேசியர்கள் ஆடுகின்ற ஆட்டம் ஆப்பசைத்த குரங்கின் ஆட்டம் தோற்றுவிடும். அவர்களுடைய ஆங்கிலம் வேண்டாம் தமிழ் மட்டும் போதும் என்ற கூச்சலானது உள் நோக்கம் உடையது. கீழ்த்தட்டு மக்களும், தலித்களும் மற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் ஆங்கிலம் படித்து விடுவார்களே, விட்டார்களே. இனி நமது கருத்து நாட்டாமை செல்லுபடி ஆகாதே என்ற மன உளைச்சலில், வயிற்றுக்கடுப்பில் இருந்து எழுந்ததுதான். மற்றபடி இந்த கூச்சலுக்கும் தாய்மொழிப் பற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அயல் மொழியை கற்றுக்கொள்வதனால் மட்டும் ஒருவன் தாய்மொழிப் பற்று அற்றவன் ஆகி விடுவானா? அப்படி என்றால் பன்மொழிப்புலவர் என்று பெயர் பெற்றுள்ள பல அறிஞர்களும் (எ.கா. பரிதிமாற்கலைஞர், கா. அப்பாதுரையார், மொழி ஞாயிறு, தேவநேயப் பாவாணர்) போன்றவர்கள் மொழிப்பற்று அற்றவர்களா? தனித்தமிழ் என்று முழங்கிய தேவநேயப் பாவாணர் ப்.ஓ.ள், ம்.ஓ.ள், என்ற பட்டங்களுக்கு உரிய தேர்வை எந்த மொழியில் எழுதினார்?

யாருக்கும் எளிதில் விளங்கா வண்ணம் எழுதுவதே சிறந்த தமிழ்த் தொண்டு என்ற கருத்தையே தன் வாழ்நாள் கொள்கையாக கடைபிடித்த மறைமலை அடிகள் என்ற வேதாசலனார் தம்முடைய எல்லா தமிழ் நூல்களுக்கும் ஆங்கிலத்தில் முன்னுரை எழுதுவதை ஒரு பெருமையாகக் கருதினாரே. அது ஏன்? "செந்தமிழ் நாடெனும் போதினிலே" என்று கவி பாடிய சுப்ரமணிய பாரதி இந்து பத்திரிக்கைக்கு கடிதங்களையும், கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் எழுதியது ஏன்? எனவே தனித்தமிழ் தூய தமிழர், செந்தமிழே இனியது என்று கூறிய பெருமகனார் யாரும் தமிழோடு தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ளவில்லை. ஆங்கிலத்தையும் துணைக்கொண்டே தங்களுடைய ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வளப்படுத்தி இருக்கிறார்கள். அதை சில நேரங்களில் ஒளிவு மறைவாகவும் சில நேரங்களில் வெளிப்படையாகவும் செய்திருக்கின்றனர். ஆனால் பெரியார் இதை வெளிப்படையாக சொன்னார்; உரக்கச்சொன்னார். அப்படி சொன்னதற்காக பெரியார் மீது செருப்பைத் தூக்கி வீசியவர்களும், சேறுவாரி பூசியவர்களும் அவர் காலத்திலேயே இருந்திருக்கிறார்கள். இது ஒன்றும் புதுமை இல்லையே.

தமிழனுக்கு தேவையானது என்று தான் கருதியதைத்தான் அவர் சொன்னார். அந்த ஒன்றையே பிடித்து தொங்கிக் கொண்டு பெரியார் தமிழன் இல்லை. தமிழ் பற்று கொண்டவன் இல்லை என்று கிளிப்பிள்ளை பாடம் சொல்வது போல் திரும்பத்திரும்ப சொல்வது; அதையே ஒரு காரணமாகச் சொல்லி பெரியார் தமிழுக்கும் தமிழ் இசைக்கும் அதைவிட சிறப்பாக தமிழனுக்கும் செய்த தொண்டுகளை மறைப்பது இந்த நோக்கிலே தமிழ்த் தேசியர்கள் செயல்படுவதும் பெரியாரை முதுகில் குத்துவதும், அதை பெரியார் பெயர் சொல்லியே கட்சியை நடத்தும் பெரியார்வாதிகள் கைகட்டி வேடிக்கை பார்ப்பதும்!!! பெரியார் அவர்கள் தமிழ் தமிழ் என்று கூறுகின்ற தமிழ்ப்புலவர்களைப் பற்றி மிகச்சரியாக கணித்து வைத்திருக்கிறார். வயிற்றுப் பிழைப்புக்கு என்று தமிழைப் படித்து புலவர் பட்டம் பெற்று (தற்போது முனைவர், முது முனைவர்) பெற்றிருக்கும் ஒரே காரணத்தினால் தங்களுக்கு உலகம் முழுவதுமே தெரியும் என்று வெற்று கூச்சலிடும் கிணற்று தவளைகளைப் பார்த்து பெரியார் கைக்கொட்டி சிரிக்கிறார்.

அவர் புலவர் என்று சொல்லுகின்றபோது சங்ககாலப் புலவன் முதல் இந்த காலப் புலவன் வரை எல்லோரையும் உள்ளடக்கியதுதான். சங்கப்பாடல்களில் பெரும்பான்மையானவற்றில் என்ன கருத்து இருக்கிறது? நாலு வரி தமிழில் பாடி அதில் இரண்டு வரி அரசனைப் புகழ்ந்து மீதமுள்ள இரண்டு வரியில் தன்னுடைய ஏழ்மை நிலைமையை எடுத்துச்சொல்லி எனக்கு காசு கொடு, சோறு போடு என்று கேட்டவை தானே!! பெரும்பாணாற்றுப்படையும், சிறுபாணாற்றுப்படையும் நமக்கு கூறுகின்ற செய்தி இதுதானே.! ஒரு அரசனிடமிருந்து பொருளை இரந்து பெற்றுச்செல்லும் புலவன் எதிரில் வருகின்ற மற்றொரு புலவனைப் பார்த்து "நீ இந்த அரசனிடம் செல். அங்கு உனக்கு பொருள் கிடைக்கும் பசிப்பிணி மருத்துவன் இந்த இடத்தில் உள்ளான். அவனிடம் சென்றால் சோறு கிடைக்கும் என்று சோற்றுக்கு வழிகாட்டிய இலக்கியங்கள் தானே அவை. அவற்றைப் படிக்கும் ஒரு இளைஞனுக்கு என்ன பெரிய பொது அறிவு கிடைத்துவிடும். அதே போல் தானும் இரந்துண்டு வாழலாமே என்ற வழிமுறைதானே மனதில் உறைக்கும். இத்தகைய இலக்கியங்கள் மிகுதியாக இருக்கும் தமிழ்மொழி இலக்கியத்தை பெரியார் போன்ற தன்மானம் உள்ளவர்கள் சாடியதில் என்ன தவறு?

மனிதனை வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டிய இலக்கியங்கள் தமிழ் மொழியில் இல்லை. திருக்குறள் ஒன்றைத்தவிர வேறு எதுவும் இல்லவே இல்லை. எனவே திருக்குறளை மட்டும் படித்தால் போதுமானது என்று பெரியார் சொன்னதும் அவை பரப்புவதற்காக பெரியார் செய்ததும் பகுத்தறிவு உள்ள எந்த மனிதனும் ஒத்துக்கொள்ளாக்கூடிய செய்திகள் தானே. மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழ் மொழியை விட்டு விட்டு தோன்றி நானூறு ஆண்டுகளே ஆன ஆங்கில மொழியைப் போய் ஆதரிக்கிறீர்களே நீயெல்லாம் தமிழனா என்று பெரியாரை நோக்கி எள்ளி நகையாடினர். பெரியார் திருப்பிக்கேட்டார். நானூறு ஆண்டுகளே ஆன ஆங்கில மொழியை வைத்துக்கொண்டு அவன் உலகம் முழுவதும் ஆண்டான். அறிவியல் புதுமைகள் பல செய்தான். மூவாயிரம் ஆண்டுகள் ஆன தமிழ் மொழியை வைத்துக்கொண்டு நீ என்ன செய்தாய்? பெரியாரின் இந்தக்கேள்வி உண்மையானது தானே! இதற்கு யாராவது பதில் கூற முடியுமா?
அதி அசுரன்
பெரியார் அளித்ததாக தினத்தந்தியில் வந்துள்ள நேர்காணலை வெட்டி ஒட்டி திரித்து மணியரசன் கட்டுரை எழுதியிருந்தார். விடுதலையில் இந்த பேட்டி வெளியிடப்பட்டிருந்தால் அதை உண்மையான பேட்டியாகக் கருதி பதில் அளிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் நல்ல வாய்ப்பாக தினத்தந்தி பேட்டியை முழுமையாக வெளியிட்டு விட்டார்கள். இதை தொடக்கத்திலேயே செய்திருந்தால் இவ்வளவு விவாதம் தேவையில்லை. அதிலேயே பெரியாரின் நிலைப்பாடு தெளிவாக வந்துவிட்டது.

இந்த தினத்தந்தி நேர்காணல் உண்மையாக இருந்தால் இதன்படி பெரியாரது நிலைப்பாடு மிகச்சரியான பெரியாரியல் நிலைப்பாடுதான். தினத்தந்தி நேர்காணல் பொய் என்று விடுதலையைப் பார்த்த பிறகு தெரிந்தால், இப்படி ஒரு வெளிப்படையான அறிவிப்பை பெரியார் செய்யாததற்காக அவரைக் கண்டிப்போம்.

பொய்யாகவாவது தினத்தந்தி பெரியார் நிலைப்பாடு என பெரியாரியல் கண்கொண்டு சரியாகக் கணித்து செய்தி போட்டதற்காக தினத்தந்தியைப் பாராட்டுவோம்.

பெரியார் தன்னைப் பற்றி விளக்கமாகவே தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். "நான் விடுதலைக்காகப் போராடுபவனே ஒழிய விஸ்தீரணத்துக்காகப் ( பரப்பளவு) போராடுபவன் அல்ல"

"கன்னியாகுமரி மாவட்ட அளவுக்கு எனக்கு சுதந்திரமான ஒரு நாடு கிடைத்தால்கூட போதும். அந்தப் பரப்பில் முதலில் சாதியை ஒழித்துவிட்டு பிறகு மற்றவற்றைப் பார்ப்போம் " என்ற ரீதியிலான கருத்தைக் கொண்டவர் பெரியார். தமிழர்களின் சுதந்திரத்துக்கும், சுயமரியாதைக்கும் போராடிய பெரியார், பார்ப்பன அடிமைகளிடம் நல்லபெயர் வாங்க முடியாது.

புலிவேட்டைக்குப் போகிறவனிடம் வழியில் போன எலியை ஏன் வேட்டையாடவில்லை எனக் கேட்கிறீர்கள்.
அன்பு தனசேகர்
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் பெரியார் இல்லை. வீடு வீடாக அவரைவிட விமர்சனம் செய்யப்பட்டவர் வேறு எந்த தலைவரும் இருக்கமாட்டார்கள். பார்ப்பனர்கள் வர்ணாசிரம எதிர்புக்காக அவரை வெறுத்து ஒதுக்கினார்கள். பார்ப்பனர் அல்லாத சாதி இந்துக்களோ அவருடைய சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு ஆகியவற்றுக்காக தள்ளி வைத்தார்கள். தாலி, திருமணக் கொள்கைகளுக்காக பெண்கள் அவரை ஏற்றுக்கொள்ளவே இல்லை. பொது உரிமை பேசியதற்காக கம்யூனிஸ்டுகள் அவரை விமர்சனம் செய்தார்கள். தலித்துக்களோ அவர் சாதி இந்துக்களின் தலைவர் என்று வெறுத்துக்கொண்டு வருகிறார்கள். (உண்மையில் அப்படி இல்லை என்பது வேறு செய்தி). தமிழ்மொழிப் பற்றாளர்கள் மற்றும் புலவர்கள் அவருடைய தமிழ் இலக்கிய புராண குப்பைகளை போட்டு உடைத்தற்காக சாடினார்கள். இந்திய அரசியலாளர்கள் அவருடைய இந்திய எதிர்ப்புக் கருத்துக்களுக்காக இருட்டடிப்பு செய்தார்கள் . பழமைவாதிகள் அவருடைய பெண்ணிய ஆதரவுக் கருத்துக்களுக்காக அவதூறு பர்ப்பினார்கள். மேற்கண்டவர்கள் கொண்ட பழமைவாத கருத்துக்கள் மனித சமூகத்திற்கு நலம் பயக்கவில்லை என்பதற்காக பெரியார் அக்கருத்துக்களை கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இறுதிவரை எதிர்த்தார்கள். ஆனால் அவர்களைப் போலவே இன்று தமிழ் தேசியம் பேசுபவர்களும் எதிர்க்கிறார்கள் அவர்களுக்கு மேற்சொன்ன (பழமையான) கருத்துக்கள் தேவையோ என்னவோ தெரியவில்லை. மேலும் பெரியாருடைய கருத்துக்களை வெளியிட என்றும் வெகுமக்கள் பயன் படுத்திய நாளிதழ்களோ, இதழ்களோ இல்லை என்பது வெள்ளிடைமலை. ஆக இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சம உரிமை, சம ஈவு, சம தர்மம், சம வாய்ப்பு ஆகியவற்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கியதால் தனது மூத்திரச் சட்டியை சுமந்து எப்பதவிக்கும் ஆசைப்படாததால் அவரின் கருத்துக்கு தேவை இருந்தது. கிராமம் நகரம் என்று நீங்கள் சொன்னவற்றைப் பற்றிய சிறிய விளக்கம். பெரியார் பேசியதாக 11.11.1924ல் குடியரசில் வெளிவந்த கட்டுரையிலிருந்து “ கிராமம் என்கிற எண்ணத்தையும் பெயரையும் அதற்கு ஏற்ற பாகுபாட்டையும் பாகுபாட்டு முறையையும் வைத்துக்கொண்டு நீங்கள் என்னதான் கிராமச் சீர்திருத்தம் செய்தாலும் பறையன், சக்கிலி எல்லாம் எப்படி அரிசனன் ஆனானோ அது போலவும் ஆதிதிராவிடனானானோ அதுபோலத்தான் மாற்றம் ஏற்படுமே ஒழிய பறையன் மற்ற மனிதர்களைப் போல மனிதன் ஆனான் என்கின்ற மாற்றம் எப்படி ஏற்படாதோ அது போல கிராம சீர்திருத்தம் செய்யப்படுவதால் நல்ல கிராமம் ஆயிற்று என்றுதான் ஏற்படுமே ஒழிய மற்றபடியான நகரத்தன்மையும், நகர மக்கள் அனுபவிக்கும் உரிமையும் அனுபவிக்க முடியவே முடியாது. ஏனெனில் நகரத்தின் அமைப்பும் அவசியமும் வேறு, கிரமத்தின் அமைப்பும் அவசியமும் வேறு ” . மேற்சொன்ன பெரியாரின் கூற்றில் பறையன் மனிதனாக்கப்படவேண்டும் என்ற கருத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளுங்கள் சாதி ஒழிப்புக்கான முதல் திட்டமாகவும் அவர் இதை வைக்கவில்லை.வெட்டி ஒட்டும் வேலையை செய்யாமல் எந்த கால கட்டத்தில் பேசப்பட்டது அப்போது தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை என்ன என்பதையும் அவதானியுங்கள். தமிழ், தமிழர் ஒற்றுமை தமிழ் தேசம் என்பதை பெரியார் கொள்கையாளர்களுக்கு யாரும் சொல்லித்தரவேண்டியது இல்லை. தமிழ் தேசம் அமைய பெரியாரியம் எந்த அளவில் தடையாக இருக்கும் என்பதும் எங்களுக்கும் விளங்கவில்லை அப்படி தமிழ் தேசியம் பேசிய மா.பொ.சி, சி.பா.ஆதித்தானார் போன்றவர்கள் இந்திய தேசியத்தில் கரைந்து பதவிகளுக்காக சீரழிந்தார்கள் என்பதை தெரிந்துதான் பேசுகின்றீர்களா?. தமிழர் உரிமைகளுக்கான போராட்டமாக இருந்தாலும், ஈழத்தமிழருக்கான போராட்டங்களாக இருந்தாலும் பெரியாரின் இயக்கங்கள் என்ன விலை கொடுத்து உள்ளன என்பதை முதலில் நீங்கள் மறைக்காதீர்கள். நாங்கள் கேரளாவிலோ, ஆந்திரவிலோ, கர்நாடகாவிலோ களம் அமைக்கவில்லை பெரியார் உழைத்த தமிழகத்தில் அதற்கான தேவை இருக்கிறது என்பதால் பணியாற்றுகிறோம் தமிழ்தேசியத்திற்காகவெனவே (ஏ௯ச்லுசிவெ) பணியாற்றும் உங்களையும் மதிக்கிறோம் ஏனெனில் எந்த லாபமும் கருதாமல் பணியாற்றுவது எவ்வளவு கடினம் என்பது எங்களுக்கு தெரியும் தோழமையுடன் பணியாற்றுவோம். வெட்டி ஒட்டும் வேலைகளை செய்யாமல் ஆரோக்கியமாக கருத்துக்களை முன் வையுங்கள். பெரியார் காலத்தில் இல்லாத ஈழம், சுற்றுச்சூழல், மரணதண்டனை ஒழிப்பு, உலகமய எதிர்ப்பு ஆகியவற்றை நோக்கியும் பெரியார் இயக்கங்கள் நடை போடுகின்றன. பெரியார் எங்களுக்கு ஒன்றும் ம்ய்த் இல்லை. பெரியாரின் பணியையும் செயல் திட்டத்தையும், நோக்கத்தையும் பாருங்கள் ஒரு கட்டுரையில் வெளிவந்துள்ள ஒரு சில வரிகளை மட்டுமே பிடித்து தொங்கிக்கொண்டு இருக்காதீர்கள். முழுமையான செய்திகள் வெளிவரும் போது நீங்கள் அதில் மூழ்கடிக்கப்படக்கூடிய ஆபத்து இருக்கின்றது. உதாரணத்திற்கு ஒன்று: அருகோ அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன் அவரின் எழுகதிரில் ஓர் கட்டுரையை எழுதி இருந்தார். 1944 சேலம் மாநாட்டிற்கு முதல் நாள் பெரியாரிடம் திராவிடர் கழகம் என்ற பெயரை சூட்டுமாறு ராஜாஜியிடம் சத்தியமூர்த்தி அய்யர் தொலைபேசியில் கூறினார் ராஜாஜியின் பேச்சைக் கேட்டு அதன் பின்னரே பெரியார் திராவிடர் கழகம் என பெயர் சூட்டினர் என்று எழுதி இருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் சத்தியமூர்த்தி 28.03.1943லேயே இறந்துவிட்டார் என்பதுதான்.
sanjay
பெரியாரின் சிந்தனை என்ன என்று கேட்போருக்கு ஒற்றை வார்த்தையில் பதில் இருக்கிறது. அதுதான் சுயமரியாதை. இதற்கு எதிராக மக்களை மழுங்கடிக்கும் அனைத்தையும் குறிப்பாக சாதியம், பிராமணியக் கொள்கை, மூடப்பழக்க வழக்கங்கள், திருமணச் சடங்குகள், தெய்வம் உள்ளிட்டவை அனைத்தையும் பெரியார் மிகக்கடுமையாக எதிர்த்தார். பெரியார் வாழ்ந்த காலத்தில் மொழி, தேசியம், தமிழர் என்று பேசி கடுமையான போராட்ட முறைகளிலிருந்து வசதியாக ஒதுங்கிக் கொள்ளவோ அல்லது அரசியலில் ஆதாயம் பெறவோ பலர் எத்தனித்தார்கள். அவரின்(பெரியாரின்) போராட்டம் முழுக்க முழுக்க சாதிய பாகுபாடுக்கு எதிரானதும், பார்ப்பனிய எதிர்ப்பும் மட்டும்தான். இதற்காக அவர் பின்பற்றிய சில கோட்பாடுகள் (அவை இப்போதைய சிந்தனையாளர்களுக்கு&அல்லது சாதிய பிரச்சனையை திசை திருப்பி விடுவோருக்கு வேண்டுமானால்) தவறாக இருக்கலாம். மேல்தட்டு சாதியினர் மிக முக்கியமான பொறுப்புக்களில் இருக்கும்போது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதே என்று சுதந்திரநாளையே கறுப்புநாளாக அனுஷ்டிக்கச் சொன்னவர் பெரியார். ஆகவே திசை திருப்பல் வேலைகள் வேண்டாம். பெரியாரின் பார்வையிலிருந்து பிரச்சனையை நோக்குங்கள். அவர் எதற்காகப் புறப்பட்டார் என்பது புரியும். மற்றபடி உங்கள் விமர்சனங்கள் ஆரோக்கியமானதே. கொஞ்சம் நமக்காக பாடுபட்டவர்களின் கருத்துக்களை அவர்கள் எந்த நோக்கத்திலிருந்து சொன்னார்கள் என்கிற ரீதியில் சிந்தியுங்கள். நன்றி
அன்புடன்
சஞ்சய்
durai ilamurugu
பெரியார், மார்க்சு முதல் யாரும் விமர்சனத்திற்கு அப்பால் உள்ளவர்கள் அல்லர் சிலதமிழ்த் தேசியாவாதிகள் அப்படி இருக்கலாம்
பெரியாரை தைழுக்கு எதிரி ,அவர் தமிழர் அல்லர் வடுகர் , அதனால் தமிழப்பற்று இல்லாதவர் அதனால் ஆங்கிலத்தைப்,படிக்கச் சொன்னார் என்ற வாதத்தைதான் எதிர்க்கிறோம்
ஆங்கிலத்தைப் படிப்பதால் என்ன கேடு வந்துவிடப் போகிறது?

இது பெரியாரின் கேள்வி. பெரியார் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று - அவர் ஆங்கிலத்திற்கு அதிகம் இடம் அளித்தார். தமிழை விட்டு விட்டு ஆங்கிலத்தைப் படியுங்கள் அதிலேயே பேசுங்கள் என்று கூறினார் என்பதாகும். இதிலும் பெரியார் தன்னுடைய காலத்திற்கு ஏற்ற வகையில் தமிழனின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே கூறினார்.
ஆங்கிலத்தை கற்று தமிழன் நல்ல தொழிலுக்கு சென்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்; அதுவே அவனுடைய இழிவினைப் போக்கும் வலிமை படைத்து என்று கருதினார். அவருக்கு தமிழன் வாழ்க்கை தான் முக்கியம். தமிழன் வாழ்ந்தால்தான் தமிழ் வாழமுடியும் என்று கருதியவர் பெரியார். மொழியை விடவும் மனிதன் முதன்மையானவன் என்பது மனித நேயம் உள்ள அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்தே ஆகும். அரசியலுக்காக அதை அப்படியே திருப்பிப்போட்டு தமிழ் இருந்தால்தான், வாழ்ந்தால்தான் தமிழன் வாழமுடியும் என்று எழுதுகிற, கருதுகிற கூட்டத்தில் இன்று பல முற்போக்குவாதிகளூம் கரைந்து விட்டது மிக்க வருத்தம் அளிக்கிறது. ஈழத்தில் இன்று தமிழனே இல்லை. தமிழ் அங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லாம் தங்களுடைய வாழ்க்கைக்கு ஆங்கிலத்தையே பயன்படுத்துகிறார்கள். இணையத்தில் எழுதுவதற்கு மட்டும் தமிழை பயன்படுத்துகிறார்கள். அதுவும் ஒருங்குறியில் ஊணீசோடே மட்டும் தான். ஆங்கிலம் அறியாமல் இருந்தால் ஒருங்குறியில் ஊணீசோடே பயன்படுத்த இயலுமா?

மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழ் மொழியை விட்டு விட்டு தோன்றி நானூறு ஆண்டுகளே ஆன ஆங்கில மொழியைப் போய் ஆதரிக்கிறீர்களே நீயெல்லாம் தமிழனா என்று பெரியாரை நோக்கி எள்ளி நகையாடினர். பெரியார் திருப்பிக்கேட்டார். நானூறு ஆண்டுகளே ஆன ஆங்கில மொழியை வைத்துக்கொண்டு அவன் உலகம் முழுவதும் ஆண்டான். அறிவியல் புதுமைகள் பல செய்தான். மூவாயிரம் ஆண்டுகள் ஆன தமிழ் மொழியை வைத்துக்கொண்டு நீ என்ன செய்தாய்? பெரியாரின் இந்தக்கேள்வி உண்மையானது தானே! இதற்கு யாராவது பதில் கூற முடியுமா?

மேலும் பெரியார் தேவிக் குளம் பீர் மேடு கேட்கவில்லை என்று சொல்லுவதும் சரியே "அவர் கன்னியாகுமரி அளவு என்று குறைவாககொடுத்தாலும் எனக்கு தனி நாடாக கொடு " என்று கூறினார் இங்கு அழுத்தம் தனித்தமிழ் நாடு என்பதில் தான் அதன் அளவில் அல்ல முழுமையாக வேண்டும் அல்லது முழுமை யாக அழிவொம் என்று (பல இய்க்கங்கள் அழிந்த பிறகும் )கூறுவது முறையாகாது
த.வெ.சு. அருள்
துரை இள முருகு, அன்பு தனசேகர், சஞ்சய், ஆகியோருக்கு மிக்க நன்றி! தங்களுடைய கருத்துக்கள் சேமித்து வைக்க உகந்தது. பெரியாரைப் பற்றி திரிபு வாதம் செய்து த.தே.பொ.க. வினர் தம் தரத்தை குறைத்து கொள்கின்றனர். பெரியார் இல்லாத தமிழ் தேசியம் முழுமை பெறாது. அது வேண்டவும் வேண்டாம்.

வேண்டாம் இது போன்ற விஷ பரிட்சை.
க.அருணபாரதி
ஆங்கிலத்தை ஒருபோதும் தமிழர்கள் படிக்கக் கூடாது என்று தமிழ்த்தேசியர்கள் யாரும் வாதிட்டதுமில்லை. வாதிட முன்வரவும் இல்லை. ஆனால், தமிழ்த் தேசியர்கள் ஆங்கிலத்தை வெறுப்பவர்கள் என்பது போல கருதிக் கொண்டு திரு. துரை இளமுருகு பலவாறு பேசிக்கொண்டிருக்கிறார்.

1938இல் இந்தி எதிர்ப்பை கையிலெடுத்த பெரியார், இந்திக்கு பதிலாக தமிழை முதன்மை படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத்தை முன்வைத்தார் என்பது தான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் குற்றச்சாட்டு. தாய்மொழிவழிக் கல்வியே மனித வாழ்வை மேம்படுத்த உதவும் என்ற வகையில், தமிழ்வழிக் கல்வி, தமிழ் ஆட்சி மொழி, வழக்கு மொழி என தமிழ்நாட்டில் தமிழை முதன்மைப்படுத்த வேண்டிய பெரியார் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளித்ததன் காரணமாகத் தான் இன்றைக்கு தமிழர்கள் ஆங்கில அடிமைகளாக உள்ளனர் என்பதை நாம் உற்று நோக்க வேண்டும்.

அதே போல, 'பகுத்தறிவுவாதம்' என்று பெரியார் கூறியவை உண்மையில் மேற்கத்தியமயமாக்கமாகத் தான் இருந்தது. சாதியை ஒழிக்க வேண்டுமானால் கிராமங்களை ஒழியுங்கள் என்று பெரியார் பேசியமை, கிராமங்கள் அழித்தொழிக்கப்பட்டு நகரங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற உலகமயப் பொருளியல் சூதாடிகளின் பெருவிருப்பத்திற்கு இன்று பெரிதும் நன்மை பயக்கும் கூற்றாகவே உள்ளது. மேலும், நகரங்கள் இன்றைக்கும் சாதியை ஒழித்துவிடவில்லை என்பதையும், நகரங்கள் சாதியை ஒளித்து வைக்கவே பெரிதும் உதவுகின்றன என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

சாதி ஒழிப்புப் போராட்டத்தை பொறுத்தவரை, தமிழ்த் தேச விடுதலையினூடாக தான் சாதி ஒழிப்புப் போராட்டம் நடைபெற வேண்டுமே தவிர வெறும் சாதி ஒழிப்புப் போராட்டம் தனித்தோ, அல்லது சாதி ஒழிப்பைப் புறக்கணித்த தமிழ்த் தேச விடுதலைப் போராட்டம் தனித்தோ நடைபெறுவது தமிழ் மக்களுக்கு நிச்சயம் பயன் தராது என்பதே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் நிலைப்பாடு. இதற்கு நடைமுறை உதாரணம் வேண்டுமெனில், தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பகுதிகளில் சாதி ஒழிப்பை எப்படி எளிமைபடுத்தினார்கள், விரைவுபடுத்தினார்கள் என்பதை கவனிக்க.
Guest
இந்தக் கட்டுரைக்குப் பதில் அளித்துள்ளவர்களின் பதில்களைக் கொண்டே பெரியாரின் ஆதரவாளர்கள் மற்றும் பார்ப்பன ஆதரவாளர்களிடையே இக்கட்டுரை எழுப்பியுள்ள தாக்கங்களை மணியரசன் மதிப்பிடுவது நல்லது. பார்ப்பன ஆதரவாளர்கள் வெறும் வாழ்த்துக்களையும் பெரியாரியர்கள் உண்மையான வாதங்களையும் கவனியுஙகள். பெரியார்
சுயமரியாதை சமதர்மமம் ராஜதுரையும் வ.கீதா தொகுத்து வழங்கியுள்ள புத்தகம் தெளிவான பெரியாரி.ன் கருத்து மாற்றங்களைத் தொகுத்து வழங்குகிறது.
durai ilamurugu
தமிழ்த்தேசிய தலைவர்கள் எப்படி சாதியை ஒழித்தனர் என்பதை தஞ்சை மண் நன்றாகவே அறியும்!!
அதைவிட விடுதலைப்,புலிகள் சாதிய ஒழிப்பை எப்படி எளிமைப்,படுத்தினார்கள் ( என்ன ஒரு எச்சரிக்கை உணர்வு ! சாதியை ஒழித்தார்கள் சொல்ல கூட முடியவில்லை) என்பதை ஈழத்தமிழர்களும் குறிப்பாக ஈழத்த் தலித்களும் நன்றாகவே உணர்வார்கள் ஆயினும் முதல் முறையாக பின்னுட்டங்களுக்கு விடை சொல்லுவது என்பதை செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்!
அதி அசுரன்
குமரி மாவட்டத்தின் 5 தாலுக்காக்கள் தமிழ்நாட்டோடு இணைந்தது பற்றி நீங்கள் கொடுத்துள்ள பேட்டியில் கேள்வி கேட்டுள்ளனர். அதற்குப் பெரியார், அது குறித்து மிகவும் மகிழ்வதாகவும், வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

தேவிகுளம் பீர்மேடு குறித்து சொன்னதாக வந்த செய்தியை வைத்து பெரியாரைக் குற்றம் சொல்பவர்கள், அதே பிரிவினையில் குமரி மாவட்டம் பற்றி மகிழ்ந்து சொல்வதை அடிப்படையாக வைத்து பெரியாரை எல்லைப் போராட்ட வீரராகச் சொல்ல முடியுமா? அல்லது தமிழ்தேசிய வாதி என்றாவது சொல்லமுடியுமா?

நீங்கள் அண்மையில் ஈரோட்டு வழக்கில் விடுதலையான செய்தியிலேயே குறிப்பிட்டிருப்பது போல பெரியார் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர். அவரது நேர்காணல்களில் உண்மையாக சொல்லியிருப்பார் என்று நம்பகமில்லாத ஓரிரு வரிகளை வைத்து அவரது ஒட்டுமொத்தமான உழைப்பையும் எடை போடுவீர்களானால், அவருக்கே அந்த நிலையானால், கிசுகிசுச் செய்தி போல கட்டுரை வெளியிடும் மணியரசனின் எழுத்துக்களை வெட்டி ஒட்டி அவருக்கெதிராகவே எவ்வளவவோ செய்திகள் வெளியிடலாம்.

ஒரு தலைவரின் அடிப்படையான கொள்கைகள் - செயல்பாடுகளை வைத்து அவரது பார்வையை நிலைப்பாடுகளை அரசியல் அறிவே இல்லாத எவனும் எடைபோட்டுவிடுவான். வணிக ரீதியிலான நாளிதழ்களில் வரும் செய்திகளை வைத்து ஒரு வரலாற்றுத் தலைவரை எடைபோடும் உங்களது போக்கை பார்த்து முதலில் சிரிக்கிறோம். அதற்கு மேல் உங்கள் கேள்விக்கு பதில் சொல்வதே தவறு என நினைக்கிறோம்.

எதற்கெடுத்தாலும் ஆவணம் - திட்டம் என்பீர்களே? பெரியாரின் ஆவணம், நமது குறிக்கோள் என்ற தலைப்பில் நூலாக வந்துள்ளது. அதை வைத்து பெரியரைப் பேசுங்கள். பெரியாரின் திட்டங்கள் குடி அரசிலும், ஈ.வெ.ராமசாமியாகிய நான் ஆகிய தொகுப்புகளில் வந்துள்ளன. அவற்றை வைத்து பெரியாரை விமர்சனம் செய்யுங்கள்.

எல்லைப் பிரச்சனையில் பெரியாரின் நிலைப்பாடு என்ன என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. இதைப் பலமுறை இதே இணைப்பில் தெரிவித்து விட்டேன்.

கன்னியாகுமரி மாவட்ட அளவில் ஒரு நாடு கிடைத்தால்கூட போதும் ஆனால் அது சுதந்திர நாடாக இருக்க வேண்டும்.

நான் விஸ்தீரணத்துக்காகப் போராடுபவன் அல்ல. விடுதலைக்காகப் போராடுபவன்

என்பது போன்ற எண்ணமுடையவர். அவரிடம் போய் எல்லைப்பிரச்சனையில் நீ என்ன செய்தாய்? என்ன செய்தாய்? என்றால் கேட்பவன் தான் முட்டாள்.

இரண்டு நாட்களுக்கு முன் தி.மு.க நடத்திய மின் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் த.தே.பொ.க ஏன் கலந்துகொள்ளவில்லை. அப்படியானால் நீங்கள் மின் கட்டண உயர்வுக்கு ஆதரவானவர்களா? என்று ஒருவன் கேட்டால் அவனை நீங்கள் எப்படிப் பார்ப்பீர்களோ அதே போலத்தான் உங்களை நாங்கள் பார்க்கிறோம்.
ஜீவன்
பெரியார் சொன்னதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் என்று யாருக்கும் எந்த அவசியமும் இல்லை. அவரிடமும் அனேக முரண்பாடுகள் உள்ளன. அதை சுட்டி காட்டினால் யாரும் ஏற்று கொள்ளவும் போவதில்லை. மதவாதிகளை போலவே, "பெரியார் சொன்னதே வேதவாக்காக" எடுத்து கொண்டு மழுமட்டைகளாக வாழ பழகி கொண்டார்கள். உலகில் எல்லாமே மறுபரிசீலனைக்குரியதே. அதற்கு பெரியாரும் விதிவிலக்கல்ல.
puthiyamaadhavi
பெரியார் எனக்கும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரில்லைதான். ஆனால் பெரியார் தமிழ் மொழியை ஏன் காட்டுமிராண்டிகளின் மொழி என்று சொன்னார் என்றால் இந்த மொழி சாதிக் காப்பாற்றும் மொழி என்பதாலும்
அறிவியலை எப்போதும் இரண்டாம் நிலைக்குத் தள்ளியதாலும் தான். தமிழ் மொழியை விமர்சித்தப் பெரியார்தான் திருக்குறளை அச்சிட்டு வெளியிட்டார் மலிவு விலையில்.. தன் இதழ்களுக்கு குடியரசு, விடுதலை என்று கலப்படமில்லாத தமிழ்ப் பெயர்களை வைத்தார். தேவீகுளம் பீர்மேடு பறிபோனதற்கு காங்கிரஸ் கட்சியும் நடுவண் அரசான
காங்கிரஸ் கட்சியை எதிர்த்து குரல் கொடுக்க முடியாத தமிழக காங்கிரஸு தலைவர்களும் தான் காரணம்!

தமிழனாக இதை அணுகாமல் ஒரு காங்கிரசுக்காரனாக மட்டுமே இப்பிரச்சனைகளை அணுகிய காமராஜ் அவர்களே காரணம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் விமர்சிக்காமல் பெரியார் சொன்னதை மட்டுமே விமர்சிக்கும் போது தான் பெரியார் தமிழரில்லை என்ற கோணத்தில் இம்மாதிரி விமர்சனங்கள் வைக்கப்படுகின்றதோ என்ற எண்ணம் வருகிறது. மற்றபடி பெரியார் தன் தினத்தந்தி பேட்டியில் சொல்லியிருப்பது நிச்சயமாக விமர்சனத்திற்குரியது தான். அதில் மாற்றுக்கருத்தில்லை.
மனோகரன்
தமிழ் சாதி காப்பாற்றும் மொழி என்ற கருத்து பகுதறிவிக்கு உகந்ததா?
தமிழ் சாதியை காப்பாற்றும் என்பது அவரவர் நிலைபாடுகளே.
எதார்த்தமாக பார்த்தோமேயானால், ஆங்கிலத்தை பேசி கொண்டு மனதில் சாதி வன்மம் கொண்டு இருப்போரை எவ்வாறு அழைப்பது?
சாதிகொடுமைகளுக்கு மிக முக்கிய காரணம் இந்து மதமே ஆகும். அதை நாம் எடுத்து சொல்வதற்கு பதிலாக தமிழ் சாதி காப்பாற்றும் மொழி என்பது மூட நம்பிக்கையே.
க.அருணபாரதி
தோழர் புதியமாதவி அவர்களே..

பெரியாரின் பூர்வீகம் கன்னடம் என்பதால் தான் பெரியாரை விமர்சிக்கிறோம் என்பது தவறானது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இவ்வாறான நிலைப்பாட்டை ஒருபோது எடுத்ததுமில்லை.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் நான் கூறியிருப்பதைப் போல, பெரியாரின் பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை என தமிழ்ச் சமூகத்திற்கு அவர் செய்த ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் அதே வேளையில் தான், பெரியார் மீது சில திறனாய்வுகளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முன் வைக்கிறது.

பெரியார் முன்வைத்த திராவிடம் என்ற கருத்தியல் தமிழ்ச் சமூகத்திற்கு கேடு விளைவிப்பதாக அமைந்துள்ளதை தான் த.தே.பொ.க. சுட்டிக் காட்டுகிறது.

பெரியாரைப் போல, பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் குடியேறி, இன்றும் வீட்டில் மட்டும் வேற்றுமொழிப் பேசி, தமிழராய் தம்மை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பல்வேறு சமூகத்தவரையும் தமிழர் என்றே த.தே.பொ.க. அங்கீகரிக்கிறது.

ஒவ்வொரு மொழிபேசும் மக்களுக்கும் ஒவ்வொரு மாநிலம் என்ற வகையில், இந்திய அரசு மொழி வாரிப் பிரிவினை மேற்கொண்ட 1956 நவம்பர் 1இக்குப் பிறகு, தமிழ்நாட்டில் குடியேறிய வேற்று இனத்தவரைதான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அயலார் என்று குறிப்பிடுகின்றது.

இதற்கு மாறாக, பெரியாரை கன்னடர் என்பதால் அவரை விமர்சிப்பது தவறானது என்பதே த.தே.பொ.க.வின் கருத்து!
kavi
1. பெரியார் நாடகம் நடத்தி வசுல் செய்தவர்கள் த.தே.பொ.க.
2. சென்னையை மீட்ட ம.பொ.சி. யால் (அப்போது முதலமைச்சர் ராசாசி), தேவிமேடு, பீர்குளம் பகுதியை ஏன் மமீட்க முடிய வில்லை? (முதலமைச்சர் காமராசர்)
Kaarunyan, Palladam
தலைப்பே கட்டுரைக்குள்ளாக நுழையசெய்தது. பெரியாரைப்பற்றி மிக சுலபமாக இந்த தகவல் தொழில் நுட்ப உலகில் விமர்சிக்கலாம். தவறில்லை. ஆனால் பெரியார் என்ற உயர்ந்த மனிதர் ஆம் மனிதர் கடையனுக்காக குரல் கொடுத்த காலம் கல்வி வளர்ச்சி இல்லாத தகவல் தொழில் நுட்பம் இல்லாத காலம். தாழ்த்தப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்க யாரும் முன் வராத காலம். ஆனால் அதற்காக இப்போது விமர்சிக்கக்கூடாது என்று சொல்ல முடியாது. ஆனால் பெரியாரை தெய்வமாய் மாலை இடுவது, சிலையை வணங்குவது, பெரியார் தத்துவத்தை வைத்துக்கொண்டு வியாபாரம் செயவது அரசியல் செய்வது கண்டிக்கதக்கது.
திராவிடன்
படு முட்டாள்தனமான கட்டுரை. இந்தியை எதிர்த்தவர் ஆங்கிலத்தை ஏன் ஆதரித்தார்னு கேட்பதே சுத்த பேத்தல். தொடர்பு மொழின்னு சொல்லித்தான் இந்தியை திணிக்கப் பாத்தானுங்க. ஆங்கிலத்த தொடர்பு மொழியா வச்சிக்க உலகம் பூராத்தையும் தொடர்பு கொள்ளலாம்னாரு பெரியார்.

பீர்மேடு, தேவிகுளத்தை தாரை வார்த்ததுல சமபங்கு காமராசருக்கும் இருக்கு. உங்களுக்கு காமராசர் பச்சைத் தமிழர். பெரியார் கன்னடர் என்பதால் மட்டும் நாங்கள் எதிர்க்கலைன்னு ஏன்யா புழுகுறீங்க. இதே நேர்மையோட காமராசர ஏன் விமர்சிக்கல? உங்க தமிழ்தேசியத்துல நாடார் தேசியமும் ஒருபாகமோ!
Karthikeyan Raju
அவர் ஏன் கவலை இல்லை என்று சொன்னார்? வேளை செய்வதற்க்கா தமிழர்கள் அங்கு வந்தார்களே ஒழிய அது மலையாளப்பகுதி என்று சொன்னாதால் தானே அவர் அதைப்பற்றி கவலை கொள்ளவில்லை....!!!
saivam
கீழே உள்ள தரவுகளை பார்க்கவும் .
பெரியார் ஆந்திரா குல்டி . தமிழை அழிக்க வந்த அவதாரம்.
Dravidian Illusions and Tamil Identity Part-1 to part 8. Reference tamilan TV.
இத பார்த்த பிறகும் எவனும் பெரியார் பத்தி பேச மாட்டான்.
https://www.youtube.com/watch?v=5yhlMx65m1Y
https://www.youtube.com/watch?v=R4AQ3m3yWvo
https://www.youtube.com/watch?v=hlS3eTMGqRk
https://www.youtube.com/watch?v=qfhC_i5jf8E
https://www.youtube.com/watch?v=iVGkLfCdaMI
https://www.youtube.com/watch?v=rp0zhLcELSk
https://www.youtube.com/watch?v=mD5eSwRe4p8
https://www.youtube.com/watch?v=FnwKIqqh5l8
evr in nokkam enna ?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.