‘‘நான் ஏகலைவனைப் போன்றவள்தான். ஆனால், குருதட்சணையாக என் கட்டை விரலை இழக்க மாட்டேன். ஏனென்றால், துரியோதனர்களை நான் அழித்தாக வேண்டும்!’’

Uma Bharathiபாரதீய ஜனதாக் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட உமாபாரதியின் காவியப்பாங்கான சபதம் இது!

உமாபாரதி ஆர்.எஸ்.எஸ்.சின் (ராஸ்ட்ரீய சுயம் சேவக்) செல்லப் பிள்ளை என்று கருதப்பட்டவர். பாரதீய ஜனதாக் கட்சியின் அதிரடி நடவடிக்கையால் உமா பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அவரைக் காப்பாற்ற முன் வராதா என்கிற தொனியில், ‘‘நீங்கள் ஆர்.எஸ்.எஸ்.சுக்குப் பிரியமானவர் அல்லவா?’’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது -

‘‘அது (ஆர்.எஸ்.எஸ்.) `உயர்ந்தோருக்கான’ `உயர்ந்த’ அமைப்புத் தான். நான் அதனிடமிருந்து கற்றதெல்லாம் ஏகலைவனைப் போலத் தான்’’ என்று அறிவித்த உமா, இதிகாசத்தில் வரும் ஏகலைவனைப் போல் நான் என் கட்டை விரலை இழக்க மாட்டேன் என்றும் தன் நிலையை அறிவித்திருக்கிறார். (`தி வீக்’ - டிசம்பர் 12, 2005)

உமாபாரதியின் இந்த ஏகலைவன் ஒப்பீடு விரிந்த அளவில் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சங்கப் பரிவாரங்களெல்லாம் மாணவர்களென்றால், இந்தப் பரிவாரங்களுக்கெல்லாம் பயிற்சியளிக்கும் குருபீடத்தில் இருப்பது ஆர்.எஸ்.எஸ்.தான்.

ஆர்.எஸ்.எஸ். `ஆசிரமத்தில்’ `உயர் குலத்தோருக்கு’ மாத்திரமே இட முண்டு. உமாபாரதி போன்ற `பிற் படுத்தப்பட்டவர்கள்’ புராணத்தில் வரும் ஏகலைவனைப் போல் தூரத்தில் நின்று பக்திப்பூர்வமாகப் பார்க் கலாமே தவிர, குருவின் பயிற்சியும் ஆசியும் கிடைக்காது.

பார்ப்பனரல்லாதார் எத்தனை ஆற்றல் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும். சூத்திரர்கள் தலைமை தாங்க ஆசைப்படலாமா? அதை வர்ணாஸ்ரம தர்மம் அனுமதிக்குமா? இந்த மனுதர்ம விதிக்கு மாறாக வீழ்ந்து பணிந்து கிடக்க வேண்டிய கூட்டத்திலிருந்து விழிப்புற்றெழும் எவரையும் குருபீடம் விட்டு வைக்காது. ஆனால், மிகச் சாதுரியமாகச் சதிவேலையைத் தொடங்கும். சரியான நேரத்தில் பணிந்து நிற்கும் ஏகலைவன்களிடம் குருதட்சணையாகக் கட்டைவிரலைக் கேட்கும். ஆர்.எஸ்.எஸ். அப்படித்தான் நடந்துக் கொள்ளும் என்பதை உமாபாரதி அறிந்தே வைத்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். என்பது பார்ப்பன நலன்களுக்கான பார்ப்பனப் பாசறையே என்பதை மிக நளினமாக – R.S.S. is great organization of great people என்று கூறியிருக்கிறார்.

உண்மையில் ஆர்.எஸ்.எஸ். மாத்திரமல்ல சங்கப் பரிவாரங்கள் அனைத்துமே, சங்கப் பரிவாரங்களுக்குள் வராத அக்கிரகாரத்துக் கும்பல் அனைத்துமே - தம்மை உயர்ந்தோராகவும், தலைமை தாங்கப் பிறந்தவராகவும், ஆளப் பிறந்த நமக்குத் தொண்டூழியம் செய்யப் பிறந்தவர்களே பிற சாதியார் என்று கருதும் ஆதிக்க மனோபாவத்தில் ஊறிப் போனவர்கள் என்பதால் பார்ப்பனர் அல்லா தார் எழுச்சி பெறுவதை நசுக்கியே தீருவார்கள். இப்போது ஏகலைவனாக உமா பாரதி நிற்கிறார்.

‘‘ஆனால் நான் அந்தக் கால ஏகலைவனைப்போல் ஏமாற மாட்டேன். கட்டை விரலைக் காணிக்கை தந்து வஞ்சத்தில் விழ மாட்டேன். ஏனென்றால், எனக்கு எதிரான துரியோதனர்களை என் கையாலேயே அழிக்க வேண்டும்’’ என்று பாஞ்சாலியாகச் சபதம் பூண்டிருக்கிறார்.

Uma Bharathi and Vajbayeeஉமாபாரதியின் அரசியல் கொள்கைகளோ, அந்த அரசியல் கட்சிக்கு அவர் செலுத்திய பங்களிப்போ நமக்கு உடன் பாடானதில்லை.

ஆனால், பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த ஒரு பெண்மணி, ஆதிக்க சக்திவாளின் கோட்டையில் வளைந்து பணிந்து குழைந்து கும்பிட்டுக் கிடக்காமல் ஒரு போராளியாகவே பீடு நடைபோடுவது நம் கவனத்தை ஈர்க்கவே செய்கிறது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உமாபாரதி பிற்பட்ட லகோதி சமூகத்தைச் சேர்ந்தவர். கருத்துக்களை வெளியிடுவதில் அச்சமின்மை; காரியமாற்றுவதில் தயக்கமின்மை, கேட்போரை வசீகரிக்கும் நாவன்மை - இந்த அம்சங்களால் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், பத்திரிகைகள் மத்தியில் ஆதரவையும் தனித்துவத்தையும் பெற்றார்.

ஆரியமாயையிலும், பாமரத்தனத்திலும் மயங்கிக் கிடக்கும் மக்கள் மத்தியில் சாதுக்களும், சடாமுடிகளும், மதச்சின்னங்களுடன் திரியும் எவரும் மரியாதைக் குரியவராகி விடுகிற சமூக அமைப்பில், ஓர் இளம் பெண் துறவுக் கோலத்தோடும், துணிச்சலான அரசியல் முழக்கங்களோடும் பொது வாழ்க்கைக்கு வரும் போது, துறவுக்கோலம் தன்னல மறுப்பாகவும், அரசியல் முழக்கம் அர்த்தமுள்ள பொறுப்பாகவும், மக்களால் அங்கீகரிக்கப்படுவதால், தவிர்க்க முடியாத தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்து விட்டார். ஆன்மீக மார்க்கம், இயக்கம் என்கிற ஒப்பனைகளுடன் இயங்கும் சங்கப் பரிவாரங்களும், அவற்றின் அரசியல் பிரிவாக ஆட்சி அதிகாரத்துக்குப் போராடும் பாரதீய ஜனதாக் கட்சியும், எத்தனை இதமாக `இந்துத்துவம்’ பேசினாலும், தேனில் குழைத்து `தேசியப் பெருமிதம்’ பொழிந்தாலும், இந்தக் கூட்டம் அனைத்தும் `கணவாய்ப் பிரவேசங்களே!’

பார்ப்பனப் பாசறைகளே என்று சிந்திக்கிற மக்கள் அடையாளம் காட்டுவதால், உமாபாரதி, கல்யாண் சிங், வெங்கைய நாயுடு, பங்காரு லட்சுமணன், திருநாவுக்கரசர் போன்ற பிற்படுத்தப்பட்ட - மண்ணின் மைந்தர்களை அரவணைத்துக் கொண்டு, இதோ, ‘‘எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் நிறை; எல்லோரும் இந்நாட்டு மன்னர்’’ என்று `பொதுத்தன்மை’ வாய்ந்த, பேருள்ளம் கொண்ட அமைப்பாகத் தன்னைக் காட்டிக் கொள்வது அவசியத் தேவையாகி விடுகிறது.

இப்படித்தான் மத்தியப் பிரதேசத்தில் தனது `அன்னிய முகத்தை’ மறைப்பதற்கு உமாபாரதியை ஒரு முகமூடியாகப் பயன்படுத்திக் கொண்டது பா.ஜ.க.

முகமூடி முடிவெடுக்கக் கூடாது. செருப்பு தானே நடக்கக் கூடாது. ஒப்பனை ஒருபோதும் உறுத்தக்கூடாது.

உமாபாரதியோ நான் முகமூடியல்ல; அணியவும் கழற்றிவிடவுமான செருப்பல்ல; கழுவிக் கரைத்துவிட ஒப்பனைச் சரக்கல்ல. எனக்கென்றொரு சுயத்தன்மை உண்டு; சிந்திக்கும் ஆற்றல் உண்டு என்பதை பா.ஜ.க.வுக்கு அவ்வப்போது உணர்த்தி, உறுத்திக் கொண்டே இருந்தார். ஆனாலும் பா.ஜ.க.வுக்கு அவர் தேவைப்பட்டார். மத்தியப் பிரதேசத்தில் இப்போது பா.ஜ.க. அமர்ந்திருக்கும் ஆட்சி பீடம் உமாபாரதியால் பெறப்பட்டது. தேர்தலில் வென்று அவர்தான் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

நாம் முகமூடி என்று கருதியவர் முழு மனிதராகி விட்டால்? ஒப்பனையே சிறையாகி விட்டால்? அச் சத்துடனேயே உமாபாரதி முதல்வரான `அசம்பா விதத்தை’ தாங்கிக் கொண்டிருந்தது பா.ஜ.க. உமாபாரதி முதல்வரான சில மாதங்களிலேயே கன்னடத்தில் ஏற்கனவே அவர் மீது தொடரப்பட்ட ஒரு வழக்கு விசாரணைக்கு வந்த போது, இதுதான் சமய மென்று உமாபாரதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கைச் சந்திக்க வேண்டும் என்கிற சூழலை உருவாக்கி அவரைப் பதவியிலிருந்து வெளியேற்றியது.

உமாபாரதி மீது போடப்பட்ட வழக்குகளைவிடப் பயங்கரமும், தீவிரத் தன்மையும் வாய்ந்த வழக்குகள் அத்வானி மீதும், குஜராத் முதல்வர் மோடி மீதும் உண்டு.

இவர்கள் நாச சக்திகள் என்று நாடும் அறியும், சட்டத்துக்கும் தெரியும். ஆனால், இந்தக் குற்றவாளிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. ஒருபோதும் சொன்னதில்லை. உமாபாரதிக்கு `தார்மீக’ ஒழுக்கம் போதிக்கப்பட்டு அவர் பதவி துறந்தார்.

ஆனால், வழக்கு இல்லை என்றான போதிலும் உமா பாரதிக்கு முதல்வர் பதவி இல்லை என்கிற நிலையை பா.ஜ.க. தலைமை உருவாக்கியது.

‘‘மக்களின் உணர்ச்சியைத் தூண்டி, பரபரப்பான அரசியல் நடத்த விரும்பும் உமாபாரதிக்கு முதல்வர் போன்ற பொறுப்புள்ள பதவிகளை வகிப்பதும், சிறந்த ஆட்சியை வழங்குவதும் எளிதல்ல. அதனால் கட்சிப் பணிக்கு அவரை முழுமையாகப் பயன்படுத்த கட்சி விரும்புவதாக’’ வெங்கைய நாயுடு போன்றவர்கள் மெல்லிய குரலில் பேசினார்கள்.

பாமர மக்களின் அறியாமை மீதும் மத நம்பிக்கை மீதும் கட்டப்பட்டு பயங்கரவாதப் படுகொலைகள் மூலம் அரசியல் சக்தியாக மாறிய பா.ஜ.க. பொறுப் புணர்ச்சி, நல்லாட்சி என்று பேசுவது கபட நாடகமே! பொறுப்புள்ள முதல்வர் பதவிக்கு உணர்ச்சி வழி அரசியல் வாதியான உமாபாரதி பொருத்தமானவர் அல்ல என்பது பொறுப்புள்ள வாதம் என்றால், அடல் பிகாரிக்கும் அத்வானிக்கும் பா.ஜ.க. முழுமைக்குமே அது பொருந்தும்.

உண்மையில் உமாவிடம் பா.ஜ.க. விரும்புவதும் எதிர் பார்ப்பதும் பொறுப்புணர்ச்சியல்ல. புயல் கிளப்பும் சாகசங்கள். பா.ஜ.க.வின் அக்கிரகார விகாரத்தை மறைக்கும் `அற்புத’ சாகசங்கள்.

BJPசரியாகச் சொல்வதானால் - `கடமையைச் செய்பலனை எதிர்பாராதே!’ - கீதை சொல்கிறது.

‘‘உழைப்பு சூத்திரர்க்கு; உல்லாசம் பார்ப்பனர்க்கு’’ - மனுதர்மம் வலியுறுத்துகிறது.

பாரதீ, புரிந்துகொள் என்றே பா.ஜ.க. அறிவுறுத்துகிறது.

இந்த இதிகாச - தர்ம விளக்கங்கள் உமாவுக்கு மாத்திரமல்ல; வெங்கையாவுக்கும் திருநாவுக்கரசு போன்ற சூத்திரர்களுக்கும்தான்.

பா.ஜ.க.வில் சூத்திரர்கள் சேர்க்கப்படுவதும், அவர்களுக்குச் சில பதவிகள் - பொறுப்புக்கள் தரப்படுவதும் இந்திய தேசிய உணர்வையோ இந்து மத உணர்வையோ தட்டி எழுப்புவதற்காக அல்ல.

முசுக்கொட்டைச் செடி வளர்ப்பது பட்டுப் பூச்சிகளின் மீது கொண்ட பாசத்தால் அல்ல.

கோமாதா பூஜை நடத்துவதும், பசுவதைத் தடைச்சட்டம் கொண்டு வருவதும் ஜீவகாருண்யத்தால் அல்ல.

பா.ஜ.க.விலுள்ள `பட்டுப் பூச்சிகளும்’ `பசுமாடுகளும்’ இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

`மனுஸ்மிருதி’யின் சாரப் பொருள்தான் `இந்துத்துவம்.’

உமாவும் `இந்து’தான், அத்வானியும் இந்துதான். ஆனால், உமா ஒரு `லகோதி.’

வெங்கையாவும் வாஜ்பேயியும் `இந்து’தான். ஆனால், வெங்கையா ஒரு `நாயுடு’.

திருநாவுக்கரசும், இல.கணேசனும் இந்துதான். ஆனால், திருநாவுக்கரசர் ஒரு `மறவர்.’

பங்காருவும் `இந்துதான்’ சங்கராச்சாரியும் இந்துதான். ஆனால், பங்காரு ஒரு `பஞ்சமர்.’

`லகோதி’யும், நாயுடுவும், மறவரும் பஞ்சமரும் `இந்து’ என்பதால் ஒன்றாகிவிட முடியுமா?

`இந்து’ என்பது மத அடையாளம் என்றால் அது மானுடம் காக்க வந்ததல்ல; பேதம் பிரித்து வேதம் காக்க வந்ததே!

`இந்து’ என்பது பூர்வீக (இன) அடையாளம் என்றால் அது ஆரியருக்கான தல்ல; திராவிடருக்கானதே!

உமாவும், வெங்கையாவும், பங்காருவும், திருநாவுக்கரசரும் மத அடிப்படையில் தங்களை `இந்து’ என்று கருதினால் - `நாங்கள் கேவலமான இழிபிறவிகளே’ என்று ஒப்புக் கொள்வதாகும்.

வரலாற்றுப் பாரம்பரிய (இன) அடிப்படையில் தங்களை `இந்து’ - சிந்து சமவெளி நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் - என்று கருதினால், `பாரம்பரியப் பெருமைகளை அன்னியரிடம் விட்டுவிட்ட கோழைகள்’ என்று ஒப்புக் கொள்ள நேரிடும்.

நாங்கள் `இழிபிறவிகளும்’ அல்ல, `கோழைகளும்’ அல்ல என்பதை ஆரியத் தலைமைக்கு உணர்த்தும் `பொருள் விளங்காப் புரட்சி’தான் உமாபாரதியின் கிளர்ச்சியும், கேள்விகளும்.

தன்மீது `ஒழுங்கு நட வடிக்கை’ என்கிற பெயரில் சூழ்ச்சி வலை பின்னப் பட்டதும் கொதித்துப் போன உமாபாரதியின் கேள்விகள் அர்த்தம் செறிந்தவை.

1. ‘‘என்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க `அவர்களுக்கு’ என்ன அருகதை இருக்கிறது?

2. குஜராத் - ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜ.க. அரசுகளுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட வழக்குகளில், பா.ஜ.க. அரசுக்கு எதிராக வாதாடினாரே அருண் ஜேட்லி அவர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. தொழில் முறையில் கட்சிக்கு எதிராகக் கட்சி கட்டினால் அது நியாயமாகி விடுமா?

3. குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு எதிராகக் கட்சிப் பத்திரிகையில் மகாஜன் எழுதினாரே, அவர்மீது ஏன் நடவடிக்கை இல்லை?

4. டெல்லியில் நடந்த தேர்தலில் பா.ஜ.க.வின் தோல்விக்கு அதன் உள் கட்சிப் பூசல்களே காரணம் என்று கூறி பொது மக்கள் மத்தியில் கட்சியின் பெருமையைச் சிதைத்தாரே சுஷ்மா அவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

5. பாகிஸ்தான் மண்ணில் நின்று கொண்டு ஜின்னாவுக்குப் புகழாரம் சூட்டிய தன் மூலம் பரிவார் அமைப்புகளையெல்லாம் தலைகுனியச் செய்தாரே அத்வானி, அவர்மீது ஏன் நடவடிக்கை இல்லை.

6. குஜராத் கலவரங்கள் தேசிய அவமானம் என்றாரே வாஜ்பேயி அவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?
இவ்வாறான கேள்விகளுடன் உமா நின்று விட வில்லை.

7. கட்சிக்குள் சாதி, மத, இன வேறுபாடுகள் களையப்பட வேண்டும்.

8. கட்சிக் கட்டுப்பாடு என்றால் அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

9 கட்சி விதிமுறைகள் புதிதாக வகுக்கப்பட வேண்டும். அதை மீறுவோர் யாராக இருந்தாலும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உரியவராக வேண்டும்.

- என்றும் நிபந்தனைவிதித்தார். இவை ஏற்கப்படுமானால் `கர்வம் கொண்ட’ சில தலைவர்களின் திருப்திக்காக மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருக்கிறேன் என்று கட்சிக்கும் எழுதினார்; பகிரங்கமாகவும் அறிவித்தார். உமாவின் நிபந்தனைகள் கட்சியின் அஸ்திவாரத்தையே தகர்த்துவிடும் அஸ்திரங்கள் என்பது தலைமைக்குத் தெரியாதா?

Uma Bharathi‘‘சூத்திரர்களை அடக்கிவை, அல்லது அழித்து விடு’’ என்பதுதான் `அவர்களுக்கு’ மனு விதித்த விதி. உமாபாரதி பா.ஜ.க.வி லிருந்து முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டார். நீக்கப்பட்ட சேதியைக் கேள்விப்பட்டதும், இடிந்துவிடவில்லை உமா.

‘‘நான் மக்களுடன் இருக்கிறேன்; மக்கள் என்னுடன் இருக்கிறார்கள். என்னை யாரும் அவர்களிடமிருந்து அப்புறப்படுத்திவிட முடியாது!’’ என்கிற பிரகடனத்துடன் போபாலிலிருந்து அயோத்திக்கு `ராம் யாத்திரை’ தொடங்கிவிட்டார். (சீதைக்கே நியாயம் வழங்காத ராமனா இந்த பாரதிக்குப் பரிகாரம் சொல்லப் போகிறான்!) உமா பாரதி பா.ஜ.க.வின் பக்தி மிகுந்த தொண்டராய், ஆற்றல் மிகுந்த பிரச்சாரகராய், அலங்காரப் பொருளாய் இருந்திருக்கலாம். ஆனால், அவர் அந்தக் கட்சியின் தோற்றுவாய்களையும், உள்ளடக்கக் கூறுகளையும், அறிவிக்கப்படாத இலக்குகளையும் சரியாகப் புரிந்துக் கொண்டவர் அல்ல.

‘‘முத்துக்களை எடுத்துப் பன்றிகளுக்கு முன் போடக் கூடாது’’ என்றொரு பழ மொழி உண்டு. தமிழ் நாட்டில் கலைஞரோ முத்துக்களைவிட உன்னதமான தம் இதயத்தையும் இயக்கத்தையும் பா.ஜ.க.வுக்கு முன் வைத்தார். சிந்திக்கத் தெரிந்த மக்களால் தீண்டத்தகாத கட்சியாக இருந்த பா.ஜ.க.வையும் மனிதத் தன்மையுடன் அணுக வேண்டும் என்கிற திறந்த மனத்துடன் தோழமைக்கரம் நீட்டினார்.

அது அவசரகதியில் எடுக்கப்பட்ட அரசியல் பிழையாகவும் மாறியது.

பா.ஜ.க.வுடன் தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் கூட்டணி கண்டது நினைத்துப் பார்க்க முடியாத தவறுதான். ஆனால், ஆதாயம் பெற்ற பா.ஜ.க.வே அந்தத் தலைவர்களைக் கண்ணீரில் மூழ்கடித்தால்?

அநாகரிகமான முறையில் ஒரு நள்ளிரவில் அந்த மாபெரும் தலைவரை - முத்தமிழறிஞரை - தமிழினத்தின் இதயமே விம்மி வெடிக்கும் விதத்தில் கைது என்கிற பெயரில் இழுத்துச் சென்றார்கள். உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. பா.ஜக. தலைமையோ பழி தீர்க்கும் வன்மத்துடன் அந்தக் கொடிய சம்பவத்தை ரசித்துக் கொண்டது. அந்த இரவின் அந்தியில் தான் முரசொலிமாறனும் இரக்கமற்றவர்களின் முரட்டுக் கரங்களால் நசுக்கி வீசப் பட்டார். அது ஒரு படு கொலையாகவே முடிந்தது.

இந்த விபரீதங்களைத் தடுக்கச் சென்ற டி.ஆர்.பாலுவும் ஒரு குற்றவாளியைப் போல் இழிவும் இம்சையும் தாங்கிய நிலையில் கைது செய்யப்பட்டார்.

கலைஞரைக் கைது செய்தது குறித்தோ, மத்திய அமைச்சர்களான மாறனையும் பாலுவையும் கைது செய்தது குறித்தோ விசனமோ விசாரணையோ இல்லாமல் வேடிக்கை பார்த்தார் வாஜ்பேயி.

தொடர்ந்து `வாஜ்பேயியின் செல்லப்பிள்ளை’ என்பது மாதிரிச் சித்திரிக்கப்பட்ட வைகோ `பொடா விலே’ கைது செய்யப்பட்டார்.

அரசியல் - கருத்து முரண்பாட்டை இங்கே `பொடா’ மூலம் பழிதீர்க்கும் கொடூரம் நடக்கிறது என்று உண்மை நிலவரங்களை உருக்கத்துடன் பிரதமர் வாஜ்பேயிக்கு எழுதுகிறார் வைகோ. பரிவோ, பதற்றமோ கொள்ளவில்லை பிரதமர். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் வைகோவைச் சந்திக்க நேர்ந்தபோது, ‘‘நீங்கள் எழுதிய கடிதங்களையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன்’’ என்றார் வாஜ்பேயி.

படித்து, ரசித்து, பத்திரப்படுத்தி வைப்பதற்கு சிறையிலிருந்து வைகோ எழுதியது, `அராபிய இரவுக் கதைகள்’ அல்ல. அரசியல் பிழைத்தோரின் அராஜகத்தால் ஜனநாயகத்தின் சிறகுகள் முறிக்கப்படும் பேராபத்தை எதிர்த்து, படுகளத்திலிருந்து எழுதிய இரத்த வரிகள். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உல்லாசப் பயணங்களால் உலகம் சுற்றியவர், ‘‘பார்த்தேன், படித்தேன், பத்திரமாக வைத்திருக்கிறேன்’’ என்றால் எத்தனை விஷமத்தனமான வக்கணை!

இதே வாஜ்பேயி, அத்வானி பரிவாரங்கள் ஒரு கொலைக் குற்றத்துக்காக சங்கராச்சாரி கைது செய்யப்பட்டதும் துடிக்கின்றன; வெடிக்கின்றன; வீதிக்கு வந்து போராட்டம் நடத்துகின்றன.

முன்னர் நடந்த கொடுமைகளைக் கண்டும் கொட்டாவி வந்ததேன்? சங்கராச் சாரி கைது என்றதும் பதைப்பும் தவிப்பும் வந்ததேன்?

கலைஞர், மாறன், பாலு, வைகோ அனைவரும் `சூத்திரர்கள்!’ சங்கராச்சாரியோ, `சொந்த இனம்’, `ஒரே இரத்தம்!’

திராவிட - ஆரியப் போராட்டத்தில் - முடிவுறாத இந்தத் தொடர் கதையில் - எழுதப்படாத இரகசியங்கள் எத்தனையோ உண்டு. உமாபாரதிக்கு இப்போது அனுபவங்கள் சில படிப்பினைகளைத் தந்திருக்கும். அவர் அயோத்திக்குச் செல்வதால் ஆகப்போவது ஒன்றும் இல்லை! அயோத்தி இராமன் நம்மவனும் அல்ல; நல்லவனும் அல்ல. நான் ஏகலைவன். ஆனால், என் கட்டை விரலை இழக்க மாட்டேன். அந்தத் துரியோதனர் கூட்டத்தைச் சங்காரம் செய்வேன் - என்றாரே, பாரதி, அந்த சபத்தின் உறுதி இந்திய அரசியலில் ஓங்கி ஒலித்தால், வரலாற்றுப் பிழைகளையெல்லாம் சரிசெய்து விடலாம். பொறாமைப் போர்களற்ற புதியதோர் உலகம் காணலாம்!

சிறு விளக்கம்: உமா பாரதியின் எதிரிகள் துரியோதனர்கள் என்றால், உமா, பாண்டவர் பிரிவா? புராணத்தில் நடந்த குருச்சேத்திரப் போர் சொத்துரிமைக்காக நடந்த பங்காளிச் சண்டை.

வரலாற்று ரீதியான திராவிட ஆரியப் போர் பங்காளிச் சண்டையல்ல.

ஜனநாயகத்துக்கும் - பாசிசத்துக்குமான போர்; மனிதாபிமானத்துக்கும் - இன வெறிக்குமான போர்; மனு தர்மத்துக்கும் - மனித தர்மத்துக்குமான போர்.

இதில் மத மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடும் போதே பாதை பளிச்செனத் தெரியும்.

`ஆரிய மாயையிலிருந்து விடுபடு’ - இதுவே வரலாறு கற்பிக்கும் பாடம். 

(தமிழ்ச் சான்றோர் பேரவை செய்திமடல் - ஜனவரி 2006ல் வெளியான கட்டுரை)

- ஆனாரூனா