கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி 2025 பிற்பகுதியில் பல்வேறு விதமான தேர்தல் முன்முயற்சிகள், வியூகங்கள், சூழ்ச்சிகள் எல்லாம் தொடங்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு! ஆனால் இந்த முறை, இப்போதே அவை தொடங்கிவிட்டனவோ என்று எண்ணத் தோன்றுகிறது!

இனிமேல்தான் என் விளையாட்டு ஆரம்பம் என்று நடிகை குஷ்பூ சொல்லி இருப்பதை வைத்து இதனை நாம் எழுதவில்லை. அது வெறும் விளையாட்டுச் செய்திகளில் இடம்பெற வேண்டிய ஒன்று என்பதை நாம் அறிவோம்!

ஒரு வாரம் அல்லது பத்து நாள்களுக்கு முன்பு, ஏலகிரி மலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், மருத்துவர் ராமதாஸ் அவர்கள் திமுக கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் சிலரோடு ஒரு சந்திப்பை நிகழ்த்தி இருக்கிறார் என்று ஒரு செய்தி கசிகிறது! அதற்குப் பிறகுதான் கூட்டணியில் உள்ள தலைவர் ஒருவர், சற்று வேறுபட்டு அறிக்கை தந்திருக்கிறார் என்பதாகவும் கூறுகின்றனர்! கட்சி வேறுபாடுகளைக் கடந்து, வன்னியர்கள் யாவரும் ஓரணியில் திரண்டு, அண்டம் நடுநடுங்க, ஆகாசம் கிடுகிடுங்க போராட்டம் நடத்த வேண்டும் என்பது மருத்துவரின் திட்டமாம்!udhayanithi and mk stalinஅருந்ததியர்களுக்கான முன்னுரிமை இட ஒதுக்கீட்டை மறுப்பது என்பதும் ஒருவிதமான சலசலப்பை இன்று ஏற்படுத்தி உள்ளது. இது சட்டென்று முடிவுக்கு வந்துவிடுமா அல்லது வளர்ந்து பேருருவம் கொள்ளுமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது!

சாதிச் சங்கங்களைத் தங்களோடு இணைத்துக் கொண்டு, ஒரு சாதி - மதக் கூட்டணியை உருவாக்குவது பாஜகவின் திட்டமாக இருக்கலாம்!

யாரோடும் கூட்டணி இல்லை, எங்கள் வழி தனி வழி , நாங்கள் மாற்றுக் கட்சியை உருவாக்கவில்லை, மாற்று அரசியலை உருவாக்கவே வந்திருக்கிறோம் என்றெல்லாம் வாய்ப்பந்தல் போட்ட ஒரு கட்சி, இப்போது உண்மையை உணரத் தொடங்கி இருக்கிறது என்று கூறுகிறார்கள்! இனிமேல் நம் உறவுகள் நாகரிகமாகவும், கண்ணியமாகவும் பேச வேண்டும் என்ற ஞானோதயமும் அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளதாம். அது திருச்சியில் வாங்கிய அடியின் எதிர் விளைவு என்று அந்தக் கட்சிக்காரர்கள் சிலரே கூறுகின்றனர்!

தனித்தே போட்டி என்னும் வீராப்பை அந்தக் கட்சி வீசி எறிந்துவிட்டு, சித்தப்பாவோடு கூட்டணி அமைத்துக் கொள்ள முயற்சிகள் நடக்கின்றன என்றும் கூறுகின்றனர். பேச்சு வார்த்தைகள் ஏறத்தாழ முடிந்து விட்டன என்றும் செய்தி வருகிறது!

இவற்றுக்கிடையில், வரும் செப்டம்பர் இறுதியில் விக்கிரவாண்டியில் ஒரு நடிகர் வந்து குதிக்கப் போகிறார் என்பதாக ஏடுகள் எழுதுகின்றன.

இவை அனைத்தும் உண்மையாகவே இருந்தாலும், நாம் அச்சப்பட வேண்டியதில்லை. திமுகழகம் என்னும் ஆலமரமே, அடுத்த தேர்தலிலும் மேலும் தன் கிளைகளை விரிக்கும், விழுதுகளை இறக்கும்! 40க்கு 40 என்னும் இலக்கில் வெற்றி பெற்ற நாம், அடுத்த தேர்தலில் 200 என்னும் கணக்கிலும் வென்றே தீருவோம்!

மிதிபட்டு அழியும் எதிரிகள் காரியம்! உதித்தே தீரும் உதய சூரியன்!!

- சுப.வீரபாண்டியன்