முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் கைது செய்யபட்டுள்ளார்.

 சட்டபடி கைது நடவடிக்கை நடந்துள்ளதாக மத்திய ஆளும் தரப்பினர் சொல்கிறார்கள். ஆனால் அப்படித் தெரியவில்லை.

உச்சநீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது, அவரைக் கைது செய்தது சட்டபடியா என்று தெரியவில்லை.

ஒரு ‘கிரிமினலை’ கைது செய்யவது போல இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சராய் இருந்த ஒருவரைக் கைது செய்ய, சி.பி.ஐ அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்திருக்கிறார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது.

2010ஆம் ஆண்டு ஒரு என்கவுண்டர் வழக்கில் அமித்ஷா கைது செய்யப்பட்டார். அப்போது ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தார்.

இப்பொழுது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார். உள்துறை அமைச்சராக இருப்பவர் அமித்ஷா. ஒரு வகையில் இந்த கைது நடவடிக்கை பழிவாங்கும் வகையில் இருக்கிறது.

ஊழல் குறித்து விசாரிப்பதும், கைது போன்ற நடவடிக்கைகளும் சட்டபடியானவைதான். ஆனால் அது குறித்த அணுகு முறை விவாத்திற்கு உள்ளாகிறது.

இந்தக் கைது நடவடிக்கையில் காட்டிய வேகம் அசாத்தியமானது, பதற்றமிக்கது.

இந்த மத்திய அரசு ஜனநாயகத்தை மதித்து ப.சிதம்பரத்தைக் கைது செய்ய காட்டிய அதே வேகத்தை, ஆளும் தரப்பு, ஆளும் தரப்புக்கு ஆதரவானவர்கள் மீது ஏன் காட்டவில்லை?

கர்நாடகாவின் முதலமைச்சர் எடியூரப்பா மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவர் இதுவரை கைது செய்யபடவில்லை. மாறாக பா.ஜ.க அவரை ஒரு மாநிலத்தின் முதல்வராக்கியிருக்கிறது.

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் அலுவலகத்தில் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய சிபிஐ, பின்னர் அமைதியாகி விட்டது.

தமிழக அமைச்சர் குட்கா புகழ் விஜயபாஸ்கர் இன்னும் வெளியில்தான் இருக்கிறார்.

இவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவானவர்கள் என்பதனால் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை, அதற்கான வேகமும் இல்லை.

இந்தியாவின் பிரதமர் இது குறித்தெல்லாம் பேசமாட்டார், விளக்கம் தரவும் மாட்டார். அவர் தான் இந்தியாவில் இருப்பதில்லையே.

நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க, அவைகளையெல்லாம் கவனிக்காமல் மக்களுக்கு எதிராக இருக்கும் மத்திய பாஜக அரசின் இந்த கைது நடவடிக்கையும், அதில் காட்டிய வேகமும், அணுகுமுறையும் மக்களை முகம் சுழிக்க வைத்து விட்டன.

Pin It