ஒரே நாடு ! ஒரே தேர்தல்! ஒரே மதம்! ஒரே கல்வி ! ஒரே ஆதார் அட்டை ! ஒரே வரி ! ஒரே ரேஷன்! ஒரே உணவு! ஒரே உடை ! என்று இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒற்றைக் கலாச்சாரம் என்கின்ற திசையை நோக்கிச் செல்கின்ற பாஜக அரசு இப்போது ஒரே நதிநீர் ஆணையம் என்கின்ற ஒன்றைத் திணிக்க முயல்கிறது. பன்முகத் தன்மைதான் இந்தியாவின் அடித்தளம்- அடையாளம். அந்த அடையாளத்தைச் சிதைத்து ஒற்றைக் கலாச்சாரம் என்பது பாசிசப் போக்கு.. உடல் என்பது கை , கால், வயிறு, இதயம், தலை, கண், காது, என்று பல்வேறு உறுப்புகளைக் கொண்டிருக்க வேண்டும் . ஒவ்வொன்றும் சரியாகச் செயல்பட வேண்டும் . ஒரே ஒரு உறுப்பு மட்டும் மொத்த உடலாகாது, ஆக முடியாது. அதுபோல்நமது நாடு பல்வேறு கலை, இலக்கியம், மொழி, பழக்கவழக்கங்களைக் கொண்டது. அவை பாதுகாக்கப் பட வேண்டும். ஒற்றைக் கலாச்சாரம் ஆபத்தில் தான் போய் முடியும்.

farmers 525தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அதன் மிகப்பெரிய பிரச்சினை காவிரி நதிநீர்ப் பங்கீடுதான்.1924 இல் வெள்ளையர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட காவிரி நதி நீர் ஒப்பந்தம் 1974இல் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசின் தமிழக விரோதப் போக்கால் அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் இழுத்தடிக்கப் பட்டது. அதன் பின் நெருக்கடிநிலையில் கழக அரசு கவிழ்க்கப்பட்டுக் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது .அதன் பின் 13 ஆண்டுகாலம் எம்ஜிஆரின் ஆட்சியில் முறையான எந்த முடிவும் எட்டப்படவில்லை. 1989இல் மீண்டும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபின், மத்தியில் சமூகநீதிக் காவலர் விபி சிங் அவர்கள் பிரதமரான பின் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதனுடைய இறுதிப் தீர்ப்பு வெளியாக 17ஆண்டுகள் பிடித்தன. 2007இல் வெளியான நடுவர்மன்றத் தீர்ப்பு பல்வேறு தடைகளைத்தாண்டி 2013இல்தான் அரசிதழில் வெளியானது. காவிரி இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற நான்கு நாளில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை இதுவரை நிறைவேற்றாமல் இருப்பதுடன், அந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசே உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கி விட்டதால் தமிழகத்தின் உரிமை அநியாயமாக, மனிதாபிமானமின்றி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்போது  ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம் என்கிறது பாஜக அரசு..இது குறித்துத் திமுக தலைவர் தளபதி முக ஸ்டாலின் அவர்கள் கூறுகையில், "தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீதியைக் கால வரம்பு இன்றி ஒத்தி வைப்பத்தற்கான மிகப்பெரிய அபாய அறிவிப்பாக இது இருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழகத்திற்கு இறுதித் தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய உரிமைகள் மேலும் பல ஆண்டுகள் கால தாமதம் ஆகும் நிலை திட்டமிட்டு ஏற்படுத்தப் படுகிறதோ என்ற பலத்த சந்தேகம் தமிழக மக்களுக்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் எழுகிறது. ஆகவே இனியும் காவிரி நதிநீர் உரிமைக்காகத் தமிழகத்தைக் கால வரையறையின்றிக் காத்திருக்க வைக்க மத்திய அரசு மேற்கொள்ளும் இந்த பாரபட்சமான முயற்சியைக் கைவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் உடனே அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பங்கீடு பிரச்னையைத் தீர்க்க ஒரே தீர்ப்பாயத்தை அமைப்பதற்கான சட்டத் திருத்த முன்வடிவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டாலும், காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார். மத்திய அரசு தருகின்ற இவ்விதமான உறுதிமொழிகளை நம்ப முடியுமா?

முன்னர் இருந்த Finance Commission என்னும் நிதிக்குழு ஆணையத்தைக் கலைத்துவிட்டு நிதி ஆயோக் என்னும் திட்டத்தை முன் வைத்தனர். அதனால் இப்போது மாநிலஅரசுகள் தங்கள் உரிமைகளை, நிதித் தேவைகளை கேட்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதுபோலவே நீட் தேர்வு பிரச்சனையிலும் தமிழகத்துக்கு ஓராண்டு காலநீட்டிப்பு என்று முதலில் கூறிய மத்திய அமைச்சர்கள், அதனை அந்த ஆண்டே கொண்டு வந்து தமிழகத்தை வஞ்சித்தனர்.

ஒவ்வொன்றிலும் ஏற்கனவே இருந்த அமைப்புகளை மாற்றி, சிதைத்து, புதிய அமைப்புகளைக் கொண்டு வந்து அவற்றின் மூலம் மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறித்து வருகிறது. தனக்கு எந்த விதத்திலும் ஆதரவாக இல்லாத தமிழ்நாட்டை வஞ்சித்துக் கெடுப்பது பாஜகவின் செயல் திட்டமாக உள்ளது. தமிழர்கள் விழித்து எழவேண்டிய காலம் இது.

பாஜகவின் இந்த பாசிசப் போக்குகளைப் பார்க்கும்போது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு

அகந்தைக் குரங்கு தாவும் - அதன்

அழகைக் குலைக்க மேவும்

கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து

குரங்கும் விழுந்து சாகும்.

- பொள்ளாச்சி மா.உமாபதி