ஒருவன் உள்ள வரையில் - குருதி

ஒரு சொட்டுள்ள ஒருவன் உள்ளவரையில்...

வஞ்ச நரிகள் புலிக்காட்டை ஆளுமோ?

வடக்கர் எம்மை ஆளவும் மாளுமோ?

அஞ்சும் வழக்கம் திராவிடர்க் கில்லை

ஆள்வலி தோள்வலிக்குப் பஞ்சம் இல்லை!

ஒருவன் உள்ளவரையில்...

- இவை, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் எச்சரிக்கை வரிகள். இது அன்றைக்கும், இன்றைக்கும் மட்டுமல்ல என்றைக்கும் பொருந்துகிற வரிகள்.

சத்தியமூர்த்திகளையும், ராஜகோபாலாச்சாரிகளையும், வைத்தியநாத ஐயர்களையும் எதிர்கொண்டு நின்று வளர்ந்ததுதான் திராவிட இயக்கம்.tr balu on tamilnadu governorமொகலாய படையெடுப்பு, ஆங்கிலேயப் படையெடுப்பு என்றெல்லாம் எழுதுகிற வரலாறு, ஆரியர் வருகை என்கிறது. இதுதான் திட்டமிட்ட வரலாற்று மோசடி. 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக ஒன்றியம் தயாராகிக் கொண்டிருந்தது.

இந்திய அளவில் அரசியல் அரங்கின் போக்கையே மாற்றுகிற வல்லமையோடு அன்றைக்கு அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சொன்னார் “எங்களுடைய பிரதமர் வேட்பாளர் சோனியா காந்தி” என்று. மொத்த இந்தியாவும் பதறியது. அன்றைக்கு ஆட்சிக் கட்டிலில் இருந்த பாஜக இன வெறுப்பு அரசியலை உக்கிரமாக கையிலெடுத்தது.

சோனியா காந்தி இத்தாலியை பூர்வீகமாக கொண்டவர் என்பதால், “அந்நியர்களை அனுமதியோம்” என்கிற முழக்கத்தை முன்னெடுத்தது பாஜக.

ஊடகவியலாளர்கள் தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் கேட்டார்கள் “அந்நியரை ஏற்க மாட்டோம் என்கிறார்களே!”

 கலைஞர் தமக்கேயுரிய இயல்பான, கேலியான புன்னகையோடு பதில் அளித்தார் “அன்னியர் யார் என்பதற்கான வரையறையை எங்கிருந்து தொடங்கலாம்? எத்தனை ஆண்டுகளில் இருந்து தொடங்கலாம்?” இந்த எதிர் கேள்வி பாஜகவின் ஆட்சியையே வீழ்த்தியது என்பதுதான் கடந்த கால வரலாறு.

 இந்த மண்ணுக்குள் நுழைந்து ஆக்கிரமித்திருக்கிற அந்நியர்கள் ஆரியர்களே என்ற வரலாற்றுப் பார்வை 2004 ஆம் ஆண்டு அரசியல் முடிவுகளை மாற்றியது.

இப்போது தங்கள் புராணப் புரட்டுகளை எல்லாம் வரலாறு என்றும், வரலாறுகளை எல்லாம் இருட்டடிப்பு செய்தும் அதிகாரத்தில் இருந்தபடி ஏகடியம் பேசுகிற கூட்டத்தின், தமிழ் நாட்டின் பிரதிநிதியாக இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

 நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாடு விரட்டியடித்த சனாதன தர்மத்தை தூக்கிக்கொண்டு, தமிழ்நாட்டு தெருக்களில் கதாகாலட்சேபம் செய்வது போல பேசிக் கொண்டு இருக்கிறார் அவர்.

தமிழ்நாடு என்கிற பெயர், அந்த ராஜ்பவன் சுகபோகியின் தூக்கத்தை கெடுக்கிறது. பெரியார் சொல்வார் “கள்ளு குடித்தவனை தேள் கொட்டியது போல” என்று அப்படி அதிகார போதையோடு சனாதன வெறியேறிய ரவியானவர் பேச்சு உளறலாக இருக்கிறது.

தமிழ்நாடு என்ற பெயர் அறிஞர் அண்ணாவால் சட்ட மன்றத்தில் தீர்மானமாக எந்த எதிப்பும் இல்லாமல் நிறைவேற்றி, அன்றைய குடியரசுத் தலைவரால் ஒப்புதல் வழங்கி எங்கள் மண்ணுக்குச் சூட்டப்பட்ட அதிகாரப்பூர்வப் பெயர் என்பது கூடத் தெரியாமல், தமிழ்நாட்டைத் தமிழகம் என்று முதலில் சொல்லி, பின்னர் தட்ஷ்சன் பிரதேஷ் என்று மாற்ற முயல்கிறாரா ஆளுநர் ரவி.

இது அடிமைகள் ஆட்சியின் காலம் அல்ல. நீங்கள் சொல்வதைக் கேட்க. டில்லி ஏகாதிபத்தியத்தை உலுக்கி எடுத்த திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் ஆட்சி, திராவிட மாடல் ஆட்சியின் காலம், இது. புரட்சிக் கவிஞர் சொல்வது போல, ஒருவன் உள்ளவரையில்... எவருக்கும் அஞ்சும் வழக்கம் திராவிடர்க்கு இல்லை!

இது, தமிழ்நாடு! தமிழர் நாடு! ஓங்கிச் சொல்வோம்

தமிழ்நாடு வாழ்க!

- கா.சு.நாகராசன்

Pin It