கீற்றில் தேட...

srilanka crisisமக்களின் ஒருங்கிணைந்த கூட்டு வாழ்வே நாடாகும். நாடு என்பது வரைபடத்தில் இல்லை, அங்கு வாழும் மக்களின் உணர்ச்சிகளின் தொகுப்பே என்று கூறுவார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

பல தரப்பட்ட மக்களின் தேவை மற்றும் அதற்கான உற்பத்தி, மிகை உற்பத்தியின் ஏற்றுமதி, பொருட்களின் இறக்குமதி எனப் பல முக்கிய செயல்பாடுகள் அந்த நாட்டின் பொருளாதாரப் போக்கைத் தீர்மானிக்கும்.

அடிப்படைவாதம் என்பது அந்தக் கூட்டு வாழ்விற்கு வேட்டு வைக்கும் சித்தாந்தமாகும்.

 மக்களின் இயல்பான தேவைகள், மதம் மற்றும் பண்பாட்டுத் தொடர்பான பொருளியல் வாழ்வை வெகுவாகச் சிதைப்பதே அதன் நோக்கம்.

எடுத்துக்காட்டாக நமக்கு அருகில் இருக்கும் இலங்கையின் பொருளாதாரச் சிக்கலை எடுத்துக் கொள்ளலாம்.

சிறுபான்மையினரின் வாக்கு தேவையில்லை என்று கூறி ஆட்சியில் அமர்ந்த கோத்தபய ராஜபக்சே அரசை எதிர்த்து, தமிழர்கள் மட்டும் அல்ல சிங்களர்களும் போராடுகின்றனர்.

 மக்களைப் பிளந்து அரசாண்டு விடலாம் என்று எண்ணிய அரசிற்கு எதிராகப் பதவியை விட்டு விலக வலியுறுத்தி அனைத்து மக்களும் இன்று ஒன்றாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்குப் பல்வேறு காரணங்கள் காட்டப்பட்டாலும், மக்களை ஒன்றாய்க் கருதி அரவணைக்காத அரசிற்கும், நாட்டிற்கு ஆதரவாக அனைத்து மக்களையும் ஒன்று திரட்ட முடியாமல் போனது முதன்மைக் காரணமாகக் கொள்ள வேண்டும்.

இக்கட்டான நேரங்களில் மக்கள் ஆதரவைத் திரட்டி நாட்டுக்காகச் சரியான திட்டங்களை வகுத்து, அதன்படி மக்களுடன் இணைந்து செயலாற்றக் கூட முடியாமல் அந்த நாடு திண்டாடி வருகின்றது. இன்னும் சொல்லப் போனால், அந்த அரசால் இப்பொருளாதார வீழ்ச்சியை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகின்றது. அதை எதிர்த்துச் செயல்பட முடியவில்லை என்பதே களநிலை.

இலங்கையின் இந்தப் போக்கில் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும்.

 இலங்கையைப் போலவே இந்திய ஒன்றியமும், சிறுபான்மையினர் (இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள்) வாக்குத் தேவையில்லை என்று, ஒரு பகுதி இந்தியாவைப் புறக்கணித்து விட்ட ஆட்சியாகவே உள்ளது. இந்த அரசு பதவி ஏற்றது முதல் நாட்டின் பொருளாதாரக் குறியீடு (ஜி.டி.பி) வீழ்ச்சியையே சந்தித்து வருகின்றது.

இதில் 2016-இல் இருந்து இந்திய ஒன்றியம் எந்த ஒரு காலாண்டிலும் முன்னேற்றத்தைச் சந்திக்கவில்லை. முற்றான வீழ்ச்சியையே சந்தித்து வருகின்றது. அதிலும் 2020-இல் வரலாற்றில் காணாத அளவாக -7.252 இந்தியா ஜி.டி.பி கணக்கிடப்பட்டுள்ளது.

இந்திய ஒன்றிய துணைக்கண்டத்தில் பல தரப்பட்ட மக்களும் அவரவர் பண்பாட்டிற்கு ஏற்ப வாழ்க்கை முறையும் அதை ஒட்டிய பொருளாதாரம் என பன்முகத் தன்மை நிலவி வருகின்றது.

 இதில் ஒரே நாடு ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே ஒரே எனப் பல ஒரே-கள் கேட்டுவிட்டோம். இது பொருளாதாரத்தையும், நாட்டையும் வெகுவாகச் சிதைக்கும் வழியே அன்றி வேறில்லை. பல தரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் தேவை மக்களுக்கு உள்ளது. இதில் உற்பத்தி செய்யும் மக்கள் மற்றும் பெற்றுக்கொள்ளும் மக்களின் வாங்கும் திறனையும் இந்த அரசின் கொள்கை வெகுவாகப் பாதிக்கிறது.

கொரனாவை மட்டும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் எனக் காட்ட இயலாது.

 2016-இல் இருந்தே வெளிப்படையாகத் தெரிந்துவிட்ட ஒன்றே. பொருளாதாரத்திற்குப் பல விளக்கங்கள் கொடுத்தாலும், அது மக்களின் வாங்கும் திறனுடன் நேரடித் தொடர்புடையது. நாட்டில் உள்ள மக்களின் வாங்கும் திறன் அரசின் பாசிசக் கொள்கையால் பலவீனம் அடைந்திருக்கிறது.

 இதே நிலை நீடித்தால் இலங்கையில் ஏற்பட்ட அரசுக்கு எதிரான போராட்டங்கள் இங்கும் ஏற்பட வாய்ப்பு இருப்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களின் எண்ணங்களுக்கும், வாழ்வாதாரத்திற்கும் முதன்மை கொடுப்பதே ஒரு நல்லரசுக்கு அடையாளம் என்பதை பா.ஜ.கவின் மோடி அரசு உணர வேண்டும்.

- மதிவாணன்