அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் டாக்டர் ராபர்ட் கால்டுவெல். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (1856) என்ற நூலை எழுதி உலகப் புகழ் பெற்ற இவர், தமிழில் எழுதிய நூல் ‘பரதகண்ட புராதனம்’ (1871).

வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய அருமையான விமர்சனங்களையும், விளக்கங்களையும் இந்நூலில் காணலாம். வேதங்களையும், இதிகாசங்களையும், புராணங்களையும் மூன்று பாகங்களாகச் சொல்லி இருந்தாலும் அவைகளை ஒப்பீடு செய்கிறார் கால்டுவெல்.

caldwell book on bharathakanda purathanamரிக் வேதத்தில் பாடிப் புகழ்ந்த இந்திரன், அக்கினி, சோமன், உஷை போன்ற கடவுள்கள் வால்மீகியின் இராமாயணம், வியாசரின் மகாபாரதம் ஆகிய இதிகாச காலத்தில் இல்லை, மறைந்து போனார்கள். மாறாக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுள்கள் இங்கே வந்து விட்டார்கள்.

ரிக் வேதத்தில் யாகம் (வேள்வி) தான் முதன்மையானது. இதிகாசத்தில் யாகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுக் காடுகளில் தவம் செய்வது முன்னிலையில் வந்து நின்றது.

ரிக் வேதத்தில் விஸ்வாமித்திரர், வசிஸ்டர் இருவரும் சுதாஸ் என்ற பார்ப்பன மன்னனுக்கு இராஜகுருவாக, புரோகிதராக இருந்தார்கள். 500 ஆண்டுகளுக்குப் பின் இராமாயணத்தில் அவர்கள் இருவரும் தவக்கோல ரிஷிகளாகக் காட்டப்படுகிறார்கள்.

இராமாயணம் எழுதிய வால்மீகி 500 ஆண்டுகளுக்கு முன்னரே ரிக் வேத ரிஷியாய் இருந்தார் என்பதெல்லாம் முரணாக இருக்கிறது.

இராமனின் மகன் லவன், குசன் என்ற இருவர் என்பது தவறு. லவகுச என்பது ஒரே பெயரே ஒழிய இருவர் இல்லை. வால்மீகி, இராமாயணம் சொல்லும் போது அருகே இருந்து அந்தக் கதையை மனப்பாடம் செய்து, ஊர்தோறும் பாடி கதையைப் பரப்பும் வேலையைச் செய்த அரண்மனைக் கவிராயர்களில் ஒருவரே இந்த லவகுச.

இராமயணமும், மகாபாரதமும் கதைகளின் தொகுப்பு. அவை கற்பனைகள். இராமாயணம் எழுதியவருக்குத் தென்னிந்திய மக்களைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. சில ரிஷிகள் விந்திய மலைக்குத் தெற்கே வந்திருக்கிறார்கள். அவர்களின் தோற்றமும், பிற நடவடிக்கைகளும் ஏற்றுக் கொள்ள முடியாமல் அந்த ரிஷிகளை இங்குள்ள திராவிட மக்கள் விரட்டியடித்தார்கள். அதனால் திராவிட மக்களை எதிரிகள் எனறும் ‘இராட்சதர் ‘ என்றும் ‘குரங்குகள்’என்றும் இராமாயணத்தில் எழுதி விட்டார்கள்.

இப்படித்தான் புராணங்களும் என்று தன் விமர்சன விளக்கங்களை இந்நூலில் தருகிறார், கால்டுவெல்.

யாகம், ரிக்வேத காலத்திற்கு உரியது.

தவம், இராமாயண காலத்திற்கு உரியது.

தீர்த்த யாத்திரை, மகாபாரத காலத்திற்கு உரியது.

கோயில் பூசைகள், புராண காலத்திற்கு உரியது.

 இந்தக் காலங்களில் எல்லாம் பேசப்படாத, எழுதப்படாத இந்து மதம் என்பது இங்கே தனியாக நிற்கிறது என்பதை இந்நூலைப் படிப்பவரின் சிந்தனையில் கொண்டு வந்து நிறுத்துகிறார், டாக்டர் இராபர்ட் கால்டுவெல்.

நூலைப் பதிப்பித்தவர்: பொ.வேல்சாமி.

வெளியீடு: என்.சி.பி.எச்.

- எழில். இளங்கோவன்

Pin It