பிரதமர் நாற்காலிக்காகக் கனவு காண்பவர்களின் பட்டியல், உத்திரப்பிரதேசத்தில் இருந்து குஜராத் வழியாகத் தமிழகம் வரை நீளுகிறது-.

காங்கிரசும், பாரதிய ஜனதாக் கட்சியும் இதில் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாகப் பா.ஜ.க.வில் குடுமிப்பிடி சண்டை நடந்து கொண்டிருக்கிறது.

அடல் பிகாரி வாஜ்பேயியைப் பிரதமராக முன்மொழிந்த லால் கிஷன் அத்வானி, அவரைப் பிரதமர் ஆக்கிவிட்டு, தான் துணைப் பிரதமராக அமர்ந்தார்.

எப்படியாவது தான் பிரதமர் ஆகிவிட வேண்டும் என்று ரதயாத்திரை நடத்திய அத்வானியின் கனவைக் கலைத்ததோடு அல்லாமல் மண்ணையும் போட்டுவிட்டார் குஜராத் நரேந்திர மோடி.

பா.ஜ.க.வின் எந்த ஒரு முடிவும், அக்கட்சியின் தனித்துவமான முடிவாக இருந்ததில்லை. அக்கட்சியின் எந்த ஒரு கொள்கை சார்ந்த முடிவும், அக்கட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்.சின் பிடியில்தான் இருக்கிறது-.

குருதி நெடி முடைநாற்றத்தால் பெயர் பெற்ற மோடியின் இந்துத்துவச் செயல்பாடு ஆர்.எஸ்.எஸ்.சுக்குப் பிடித்துப் போனது.

பா.ஜ.க.தான் முடிவு செய்ய வேண்டும், ஆர்.எஸ்.எஸ் ஆலோசனை வழங்கும். ஆனால் தலையிடாது எனச் சொல்லிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்., அடுத்த பிரதமர் மோடிதான் என்பதை அழுத்தமாகப் பா.ஜ.க.விடம் சொல்லியிருப்பதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை. 2017 வரை குஜராத் முதல்வராகவே நீடிக்க விரும்புகிறேன் என்று, ஆசிரியர் விழா ஒன்றில் பொத்தாம் பொதுவாகப் பேசிய நரேந்திர மோடி, அதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவும் இல்லை, தன்னைப் பிரதமர் நாற்காலிக்கு முன்னிறுத்தும் ஆர்.எஸ்.எஸ்.சை மறுக்கவும் இல்லை.

மோடியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தா விட்டால், நாமே நமது விக்கெட்டை வீழ்த்துவது போலாகும் என்று சந்தடி சாக்கில் அருண் ஜெட்லி ஒரு திரியைக் கொளுத்திப்போட, வெடித்துவிட்டார் அத்வானி.

மோடிக்கு எதிராக அத்வானியின் போர்க்கொடி உயர்ந்துவிட்டது. அத்வானிக்கு ஆதரவாக சுஷ்மா சிவராஜ், முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் அணிவகுத்து விட்டார்கள்.

பா.ஜ.க.வின் தலைவர் ராஜ்நாத் சிங் மோடியின் ஆதரவாளர். ஆர்.எஸ்.எஸ்.சின் முடிவை நிறைவேற்றத் துடிப்பவர். ஆனாலும் அத்வானியால் கட்சி பிளவுபட்டு விடுமோ என்ற அச்சம் காரணமாக, நிதின் கட்காரியைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, சுஷ்மா, ஜோஷி, அத்வானி என்று சமாதான முயற்சியில் அலைந்து கொண்டிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்.சின் அழுத்தம் பா.ஜ.க. விரைந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளிவிட்டது. இவ்விதழ் வெளிவரும் வேளையில், பா-.ஜ.க., தன் இறுதி முடிவை அறிவித்திருக்கக் கூடும்.

இந்துத்துவா கொள்கையை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அல்லது மறைத்துக் கொண்டு மோடி என்கிற தனி மனிதரை முன்னிறுத்தி அரசியல் செய்ய முயல்கிறது பா.ஜ.க. இந்த மோடி வித்தை எந்த அளவுக்குப் பயன்படும் என்பதை இன்னும் சில மாதங்களில் அறிந்துகொள்ளலாம்.

Pin It