உயிரைக் கொடுத்துப் போராடினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ‘ உயிருக்காக’ ஒரு பெரும் மக்கள் போராட்டம், தென்தமிழ்நாட்டின் வங்கக்கடல் கரையோரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பேரழிவை விளைவிக்கக்கூடிய அணுஉலைக்கு எதிராக, அமைதி வழியில் அந்த மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு, இடிந்தகரையிலும், கூடன்குளத்திலும் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். கடந்த செப்டம்டர் 11இல் தொடங்கிய அம்மக்களின் போராட்டம், மத்திய அரசிடம் பேசுவதற்காக, ஒருசில நாள்கள் கைவிடப்பட்டு, மீண்டும் இரண்டாம் கட்டமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களில், தமிழ்நாட்டில் மட்டுமே இரண்டு அணுமின் நிலையங்கள் உள்ளன. கல்பாக்கம் அணுமின் நிலையம் 1984 முதல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கூடன்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்பட தயாராகிக் கொண்டிருக்கிறது. அது செயல்படக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம். ஆபத்தான அணு உலையை மூட வேண்டும் என்பது மக்களின் ஒற்றைக் கோரிக்கை. நாட்டின் வளர்ச்சிக் காகத்தானே இதுபோன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம், பிறகேன் அதை எதிர்க்க வேண்டும், ஆபத்து எதில்தான் இல்லை. தொழிற்சாலைக் கழிவுகளால் ஆபத்தில்லையா? என்கிற கேள்வி இயல்பாகக் கேட்கப்படுகிறது. அதிலும் ஆபத்து இருக்கிறது. ஆனால் கழிவுகளைச் சுத்திகரித்தல் என்பதன் மூலம் அதைச் சரிசெய்ய முடியும். ஆனால் இலட்சக் கணக்கான ஆண்டுகளானாலும் அழியாத அணுமின் நிலையக் கழிவுகளை என்ன செய்வது? பீப்பாய்களில் அடைத்து, நாடாளு மன்றத்தின் மைய மண்டபத்தில் பாதுகாப்பாக வைத்துவிடலாமா?
அணு உலைகளில் பல வகைகள், பல்வேறு தொழில்நுட்பங்கள், பயன்பாடுகள் என விஞ்ஞான விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. நாட்டின் மின் தேவையை சரிசெய்வதற்காகத்தான் அணுமின் நிலையங்கள் என்கிறது இந்திய அரசு. ஆனா0ல், ஏறத்தாழ 25 ஆண்டுகள், 100 கோடிகளை செலவிட்டாலும், நாட்டின் மொத்த மின்தேவையில் 9 விழுக்காட்டைக் கூட நிறைவு செய்ய முடியாது இந்த அணுமின் நிலையங்களால் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். அரசின் உண்மையான தேவை மின்சார உற்பத்தி அன்று, அதன் உபரிப் பொருளாகக் கிடைக்கும் பூளுட்டோனியமே என்பதும் அவர்கள் முன்வைக்கும் வாதம். புளுட்டோனியம் என்ன அவ்வளவு பெரிய பூதமா என்றால், ஆம் மனிதர்களை உயிரோடு விழுங்கும் பூதத்திற்கு உயிர் கொடுப்பது அதுதான். அணுகுண்டு தயாரிப்பில் புளுட்டோனியம் முக்கிய இடத்தைப் பெறுகிற காரணத்தால்தான், அணுஉலைகளுக்காக மாரடித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
உலக அரங்கில் தன்னை வல்லரசாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற மனநோயால் பீடிக்கப்பட்டிருக்கும் இந்திய அரசிற்கும், ஆட்சியாளர்களுக்கும் சாதாரண மக்களின் உயிரும், வாழ்வும் ஒரு பொருட்டாகப் படுவதில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் கூடன்குளம் பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங் அரசு காட்டும் பிடிவாதப்போக்கு. தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், “ பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், கூடங்குளம் அணுமின் திட்டத்தில் அரசும், மக்களும் ஒரே நிலையில்தான் உள்ளனர் ” என்று கூசாமல் சொல்கிறார் . வாழ்வா தாரத்தைத் தவிர்த்துப் பார்த்தால் அந்த மக்களிடம் மிச்சப்படுவதற்கு என்ன இருக்கிறது? அணுக் கதிச் வீச்சின் ஆபத்தை உலக நாடுகள் உணர்ந்து, அவற்றின் ஆற்றல் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய முடிவெடுத் திருக்கின்றன. சீனா இனிமேல் புது அணுஉலைகளுக்கு அனுமதி கொடுப்பதில்லை என்று முடிவு செய்துள்ளது. ஆனால், சீனப் பெருமை பேசும், இந்தியப் பொதுவுடைமை இயக்கத் தோழர் தா. பாண்டியன், ‘ மக்களின் வரிப்பணம் வீணாகிவிடும் ’ என்று கவலைப்படுகிறார்.
ஏற்கனவே, இலங்கைக் கடற்படையினரின் காட்டுமிராண்டித் தனத்தி னாலும், அதைக் கண்டுகொள்ளாத இந்திய அரசின் கையாலாகாத்தனத் தினாலும், கரணம் தப்பினால் மரணம் என்றாகிவிட்டது தமிழக மீனவர்களின் வாழ்வு. இதில், குப்புறத்தள்ளிய குதிரை குழியையும் பறித்த கதையாக அணுமின் நிலையத்தை நிறுவி அவர்களின் தலைமுறையையே தலைதூக்க விடாமல் செய்யத் துடிக்கிறது மத்திய அரசு. அணுமின் நிலையக் கழிவுநீர் கடலில்தான் விடப்படும். ஆறுகள்தான் கடலில் சென்று கலக்க வேண்டும். அணுக்கழிவுகள் கலக்கலாமோ?
ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், பா.ம.க. ஆகிய கட்சிகள் அணுமின் நிலையம் தேவையில்லை என்கின்றன. ஒன்றியப் பொறுப்பாளரைக் கூட அனுப்பாத ஜெயலலிதா, ஓட்டு கேட்பதற்காகத் தூத்துக்குடிக்குப் போகநேர்ந்ததால், அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ‘ நான் மக்கள் பக்கம்’ என்று கூறியிருக்கிறார். அதை முதலமைச்சராகச் சொன்னாரா அல்லது அ.தி.மு.க. பொதுச்செயலாளராகச் சொன்னாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.காங்கிரசைச் சேர்ந்த தங்கபாலு, மக்களின் அச்சத்தைப் போக்கிவிட்டு, அவர்களின் சந்தேகத்தை தீர்த்துவிட்டுப் பிறகு பணிகளைத் தொடங்க வேண்டும் என்று ஆலோசனை சொல்கின்றார்.
அந்த மக்கள் என்ன சந்தேகத்தை அரசிடம் கேட்டார்கள் என்று தெரியவில்லை. அணுமின் நிலையப் பணி இடங்களில் எங்களுக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவீர்கள் என்று கேட்டார்களா? விபத்துகள் ஏற்பட்டால், எவ்வளவு இழப்பீடு தருவீர்கள் என்று கேட்டார்களா? வாரிசு அடிப்படையில் வேலை கொடுப்பீர்களா என்று கேட்டார்களா? இது எதையும் அவர்கள் கேட்கவில்லை. அவர்களின் ஒரே கோரிக்கை, அணுமின் நிலையம் தேவையில்லை, அதை மூட வேண்டும் என்பதுதான். அணு உலைகள் பாதுகாப்பானவை என்னும் பல்லவியை, ஜப்பானின் புகு´மோவிற்குப் பிறகும் பாடிக் கொண்டிருப்பவர்களை என்ன சொல்வது?
உருட்டி உருண்டையாக்கி அணுகுண்டாகப் போட்டால்தான் அழிவு என்பதில்லை. அணுவின் கழிவு கூட மனித குலத்தை அழித்துவிடும். 1945இல் ஹிரோசிமோவிலும், நாகாசாகியிலும் விதைக்கப்பட்ட விபரீதம் இன்னும் தொடர்வதை அறியாதவர்களா நாம்? போபால் விசவாவு கசிவின் வீரியத்தை உணராதவர்களா நாம்? மேரி க்யூரி, இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற புகழ்மிக்க விஞ்ஞானி. யுரேனியம், பொலேனியம் என்னும் அவருடைய கண்டுபிடிப்புகள் கதிர் வீச்சு மூலகங்கள். அவருடைய ஆய்வு முழுவதும் கதிரியக்கம் பரவியிருக்கும் ஆய்வுக் கூடத்தில்தான். கதிர் வீச்சின் தாக்கத்தால், கண் பார்வை பாதிக்கப்பட்டு, ஏற்பட்ட பெர்னிசியஸ் அனீமியா என்னும் நோயினால் அவர் இறந்தார் என்கிறது வரலாறு. அவர் அன்று பயன்படுத்திய குறிப்பேடுகளில் இன்றளவும் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இத்தனை உண்மைகளில் ஒன்று கூடவா ஆட்சியாளர்களுக்கு உரைக்கவில்லை?
மின்சாரம்தான் நோக்கம் என்றால், அதற்கு எத்தனையோ வழிகள் இருப்பதாகக் கூறுகிறார்களே, அவற்றைப் பரிசீலிப்பதுதானே? வெப்ப நிலப்பகுதியான இந்தியாவில், சூரியசக்தியை முறையாகப் பயன்படுத்தி மின்சாரம் பெறலாம்தானே! கையில் இருக்கிற வெண்ணெயை மறந்துவிட்டு நெய்க்கு அலையறான் பாரு என்று ஒரு சொலவடை சொல்வார்கள். அப்படித்தான் இருக்கிறது இந்திய அரசின் செயலும். வெறும் பொருளாதார வல்லுனராக இருந்தால் மட்டும் போதாது, மக்கள் நலனில் பொறுப்போடும் நடந்து கொள்ள வேண்டும்.