கூடங்குளமா? குடிமக்கள் நலமா? என்கிற கேள்வி இன்று தமிழகம் முழுக்க பேசப்பட்டு வரும் ஐயங்கலந்த விவாதமாக இருக்கிறது. அணுஉலை என்பது கூடங்குளம் அல்லது தமிழக மக்களின் பிரச்சினை மட்டும் அல்ல, இது ஒட்டுமொத்த இந்திய மக்களின் வளர்ச்சிக்கே சவால் விடும் பிரச்சினையாகும். ஏனெனில் பல்வேறு நாடுகள் தங்கள் நாடுகளிலுள்ள அணுஉலைகளை முடும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன. இன்னும் அமெரிக்க உட்பட பல நாடுகள் புதிய அணுஉலைகளை திறப்பதில்லை என முடிவெடுத்துள்ளன.
2011 மார்ச்சில் ஜப்பானில் ஏற்பட்ட புக்குஷிமா அணுவிபத்தைப் பார்த்து கூடங்குளம் மக்கள் பயந்தும், வெளிநாட்டவரிடம் பணம் வாங்கிக்கொண்டும், இப்படி போராடுகிறார்கள் என்று மத்திய அரசு பொதுமக்களை கோழைகளாக்கியும், அவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் பேசுகிறது. கல்பாக்கத்தை ஒட்டியுள்ள மீனவக்குடும்பங்கள் இன்னும் தைராய்டு புற்று நோயினாலும், ரத்தப்புற்று நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதை மூடிமறைத்து விட்டு, கூடங்குளம் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று அறிக்கை விடுகிற மத்திய அரசு, கல்பாக்கம் அணுஉலை பாதுகாப்பு மற்றும் பாதிப்புகள் சம்பந்தமான வெள்ளையறிக்கையை பயப்படாமல் உடனே வெளியிடுமா?
கோவாவிற்கு மேற்கே ஜெய்தாபூரில் 9900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய உலகிலேயே பெரிய அணுஉலை அமைக்கும் வகையில் இந்தியா அரசு பிரான்சுடன் ஒப்பந்தம் போட்ட பொழுது, உயிரைப்பறிக்கும் அணுஉலைக்காக, பசுமையான விளைநிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று போராட்டம் நடத்திய ஜெய்தாபூர் விவசாயிகளையும், மீனவர்களையும் பிரான்சோடு கைகோர்த்து கொண்டு சுட்டுப் பொசுக்கிய போதும், போபால் விசவாயு விபத்தில் பலியான பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் மரணத்துக்கு காரணமான அண்டர்சென்-ஐ காட்டிகொடுக்க மறுக்கிறபோதும், மக்களிடம் கேட்காமலேயே மக்கள் வரிப்பணத்தில் அமெரிக்க, பிரான்சு, ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் அணுஒப்பந்தம் போட்டபோதும், கறுப்புப் பணத்தை மீட்டு வருவதற்கு இதுவரையில் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதித்துவரும் மத்திய அரசிடம், இவை எல்லாவற்றுக்கும் யாரிடம் பணம் வாங்கினீர்கள் என்று பொதுமக்களாகிய நாங்கள் கேட்கலாமா? பொதுமக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நீங்களெல்லாம் மனிதர்களா? இல்லை மடையர்களா? என்றே தெரியவில்லை.
2011 புக்குஷிமா அணுவிபத்தைப் பார்த்துவிட்டுத்தான், தங்கள் நாட்டு மக்களின் நலன் கருதி ஜெர்மனி 2022க்குள்ளும், சுவிட்சர்லாந்து 2020க்குள்ளும் தங்கள் நாடுகளிலுள்ள எல்லா அணு உலைகளையும் மூடுவதாக அறிவித்தன. ஜெர்மனி இப்படி ஒரு முடிவை அறிவித்து விட்டு, அதே தினத்தில்தான் இந்தியாவில் அணு உலை திறக்க ஒப்பந்தம் போட்டது என்றால், இந்திய மக்கள் என்ன இளிச்சவாயர்களா? இல்லை, இல்லை மத்திய அரசு நம்மை இளிச்சவாயர்களாக்கிவிட்டது.
ஈழத்தில் ஒரு இலக்கம் தமிழர்கள் இன அழிப்பு படுகொலை செய்யப்பட்டபோதும், இலங்கை இராணுவத்தினரால் இந்திய பெருங்கடலில் 500-க்கும் மேற்பட்ட தமிழக(இந்திய) மீனவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டபோதும், கண்முடி, கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்த்த இதே மத்திய அரசு, இன்று கூடங்குளம் உலையில் விபத்து ஏற்படும் சூழலில் குடிமக்களுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் என்கிற நம்பிக்கை நமக்கு எள்ளளவும் இல்லை. மேலும் கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 45% தமிழக மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று கலாம் தெரிவித்துள்ளார். மீதியுள்ள 55% மின்சாரம் நமது(கிருஷ்ணா, பாலாறு, முல்லைப்பெரியாறு நீர்வளங்களை கொடுக்க மறுப்பதை மன்னித்தாலும்) உறவுகளான அண்டை மாநில மக்களுக்கு கொடுப்பதில் கூட நமக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்கு மாறாக, தமிழ் மக்களின் உயிரை பணயம் வைத்து உற்பத்தி செய்யப்படும் அந்த 55% மின்சாரமும் அரசியல்வாதிகளின் கைக்கூலிகளான பணப்பெருச்சாளிகளின் தொழிற்சாலைகளுக்கு பங்கு வைக்கப்படுகின்றன என்பதை நினைக்கும்போது தான் நெஞ்சம் பதறுகிறது.
மேலும் கூடங்குளத்துக்கு செலவழிக்கப்பட்டுள்ள ரூ.13,171 கோடியில் ரூ.6,755 கோடியை இந்தியா முதலீடு செய்ய, மீதமுள்ள ரூ.6,416 கோடியை ரஷ்யா 4% வட்டியில் நமக்கு கடனாக வழங்குகிறது. இதனால் வருங்காலத்தில் இந்தியா ரஷ்யாவிடம் கடன்பட்டு கிடக்கும் நிலை ஏற்படும். கூடங்குளம் அணுஉலைக்காக மத்திய அரசுக்கு ஆமாசாமி போட்டு நிற்கும் அரசியல் கட்சிகளிடம் சில கேள்விகளை கேட்க விரும்புருகிறேன்... கூடங்குளம் உலையை மூடினால் இந்த ரூ.13171 கோடி வீணாகும் என்று கூறிவரும் 'மக்கள் வரிப்பணத்தை ஆட்டையை போடாத' இந்த அரசியல் கட்சிகள், இந்த ரூ.6,416 கோடி கடன் தொகைக்கு பொறுப்பேற்குமா?
மின்பற்றாக்குறையால் தான் அணு உலைகள் அவசியப்படுகின்றன என்று மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கும் அரசியல் கட்சிகள், அவை நடத்தும் கட்சி மாநாடுகளுக்கும், இல்ல வைபவங்களுக்கும், தங்கள் தொழிற்சாலைகளுக்கும் திருட்டு மின்சாரம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான யூனிட் மின்சாரத்தை சரமாரியாக செலவழிக்கிறார்களே, அதை நிறுத்துவார்களா? இந்தியாவிலுள்ள அனைத்து அணுஉலைகளின் பாதுகாப்பு மற்றும் பாதிப்புகள் சம்பந்தமான வெள்ளையறிக்கையை வெளியிட குரல் கொடுப்பார்களா? இவை எல்லாவற்றாலும் பார்க்கும்போது மத்திய அரசின் நிலைப்பாடு என்பது ரஷ்யாவின் இலாபமா? அல்லது இந்தியா மக்களின் நலமா? என்கிற ஐயத்தை எழுப்பியுள்ளது.
பொதுமக்களாகிய நம்மிடமும் சில குறைகள் இருப்பதை நாம் உணரவேண்டும். மின்சாரத்தை சிக்கனப்படுத்த வேண்டியது அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, குடிமக்களாகிய நாமும்தான். எனவே உபரியாக மின்சாரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு மின்சாரத்தை சிக்கனப்படுத்த முனைப்புடன் செயல்பட வேண்டும். இது மின்சாரத்திற்கு மட்டுமல்ல. நீர்,நிலம், காற்று என அனைத்திற்கும் பொருந்தும். எனவே இவை உட்படஎல்லா இயற்கை வளங்களையும் மாசுகள் அண்டாமல் பாதுகாத்து, அளவோடு பயன்படுத்தி, அதிகமாக மிச்சப்படுத்தி வருங்கால சந்ததியினரின் வாழ்வை வளமாக்குவோம். வருங்காலம் நம்மை வாழ்த்தும்....
- வாசு.க.தமிழ்வேந்தன்