தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை பார்வதி அம்மையார் அவர்களைத் தன் வீட்டில் தன் நேரடிப் பராமரிப்பில் 4 ஆண்டுகள் வைத்துப் பாதுகாத்தவர் மருத்துவர் கு.இராசேந்திரன் அவர்கள். நமது கருஞ்சட்டைத் தமிழர் இதழுக்காக அவரின் இல்லத்தில் தோழர் அன்புத் தென்னரசன் அவரைச் சந்தித்தபோது...

அய்யா வணக்கம்! முதலில் உங்களைப் பற்றிச் சிறிது சொல்லுங்கள்.

வணக்கம்! இதே முசிறிதான் என்னு டைய சொந்த ஊர். நான் ஒரு மருத்துவர். வயது 50 ஆகிறது. இதைத் தவிர சிறப்பா ஒன்னும் சொல்றதுக்கில்ல.

ஏன் அப்படிச் சொல்றீங்க? தமிழீழ தேசியத் தலைவர் குடும்பத்தோடு உங்களுக்கு ஒரு நெருக்கமான உறவு இருந்திருக்கு. அது சிறப்பான செய்தி இல்லையா?

ஆமாமா. தலைவரை நான் அண்ணான்னுதான் சொல்லுவேன். அதுபோல தலைவரோட அம்மா அப்பாவையும் நான் அம்மா அப்பான்னுதான் கூப்பிடுவேன். அம்மா அப்பா ரெண்டு பேரும் தமிழ்நாட்டுல இருக்கும்போது 4 வருசம் எங்கவீட்டுலதான் இருந்தாங்க.

அதைப்பற்றிக் கொஞ்சம் விரிவா சொல்லுங்க !

1986 ஆம் வருசத்தில அப்பா திருச்சிக்கு வந்துட்டாரு. பிறகு 3 வருசத்துக்குப் பிறகுதான் அம்மா வந்தாங்க. அம்மா கப்பல்ல வந்தாங்க. அவுங்களக் கூட்டிட்டு வந்தவரு பெரியண்ணா மனோகரன்.

நேர உங்க வீட்டுக்குதான் வந்தாங்களா?

இல்ல இல்ல... அய்யாவையும் அம்மாவை யும் மனோ அண்ணா, அவரைப் பெரியண்ணான்னுதான் நான் சொல்லுவேன்.. அவருடைய சகோதரி வினோதினி வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. அங்கதான் அவுங்க இருந்தாங்க.

அப்படீன்னா பெரியவங்க ரெண்டு பேரும் எப்ப உங்ககிட்ட வந்தாங்க?

அப்பாவும் அம்மாவும் வினோதினி வீட்லதான் இருந்தாங்க. நான் அவுங்களப் போய்ப் பாத்துட்டு வருவேன். அப்படியிருக்கும்போது 1999 ஆம் வருசம் மார்ச் 8 ஆம் தேதி அன்னைக்கு அம்மாவுக்கு ரொம்ப உடம்புக்கு முடியாமப் போயிருச்சி. அன்னைக்குத்தான் அவங்க வலது காலும் கையும் செயலிழந்திருச்சு. அதாவது பக்கவாதம். உடனே அவங்கள சி.எஸ்.ஐ மிசின் ஆஸ்பத்திரியில சேர்த்து 10 நாள் பார்த்தாங்க.அந்த நேரத்தில வினோதினி கனடாவுக்குப் போக ஏற்பாடாகி இருந் துச்சி.அவுங்க, அம்மா அப்பாவ கூடவே கனடாவுக்குக் கூட்டிட்டுப் போறதா சொன்னாங்க. ஆனா அம்மா அப்பா ரெண்டுபேரும் அங்க போக விரும்பல்ல. நாங்க ராசேந்திரன் கூடவே இருக்கிறோம் அப்ப டீன்னு அவங்க சொல்லிட்டாங்க. அதனால மார்ச் மாசம் 18 ஆம் தேதி நான்போய் அம்மா அப்பாவ எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன். அம்மா கை கால் அசையல. அதனால்அவங்கள தூக்கிட்டு வந்தோம். பிறகு 2003 ஆம் வருசம் மே மாசம் அவங்க இலங்கைக்கு விமானம் மூலம் போறவரைக்கும் எங்க வீட்டுலதான் இருந்தாங்க. நான் மருத்துவராக இருந்ததால, நானே அம்மாவுக்கு வைத்தியம் பார்த்தேன். அம்மா இலங்கைக்குப் போகும்போது அவங்க கைகால் எல்லாம் நல்லா செயல்பட்டு, பழைய நிலைமைக்கு வந்துட்டாங்க.

தலைவரைப் பற்றி அவருடைய அம்மா அப்பா ஏதாவது பேசுவாங்களா உங்க கிட்ட?

அப்படியயல்லாம் அவுங்க எதுவும் பேசமாட்டாங்க. ஆனா ஒரு விசயம். அண்ணா சின்ன வயசில இருந்தே நாட்டப்பத்தியும், மக்களைப் பத்தியும் தான் அதிகம் பேசுவராம். அவருடைய போக்கு சிங்கள அரசுக்கு எதிரா அமைஞ்சி போச்சி. அவர் இயக்கம் கட்டி ஆயுதம் ஏந்தினதுல அப்பாவுக்கு அண்ணாமேல ரொம்ப மனஸ்தாபம். காரணம் மகன்மேல அப்பா வைச்சிருந்த பாசம்தான். ஆனா அண்ணா பெரும்பாலும் அப்பாவைப் பார்க்கவே மாட்டாராம். எதுக்கு அப்பவோட மனஸ்தாபப்படனும்னு ஒதுங்கி இருப்பார் போல இருக்கும். பிரபாகரன் என்னுடைய மகன் அப்பிடீன்னு அப்பா யார்கிட்டயும் தம்பட்டம் அடிக்கமாட்டார். ஒரு மாவீரர் தினத்தன்னைக்கி ஈழத்துல ஈகைச் சுடர் ஏற்றும்போது அங்கே இருந்த அப்பா, தானும் ஒரு ஈகைச் சுடரை ஏந்தி அகவணக்கம் செஞ்சி பிறகு கையயடுத்துக் கும்பிட்டாராம். அதுக்குப் பிறகு மகனின் மாவீரர் உரையைக் கேட்டுப் பூரிப்படைந்தாராம்அப்பா. இதை ஒரு முறை அப்பா என்னிடம் சொன்னார். அதுபோல சர்வதேச நிருபர்கள் கிளிநொச்சியில அண்ணாவை நேர்காணல் எடுத்தபோது, அண்ணன் பேசிய பேச்சு, சொன்ன பதில்களை எல்லாம் சன்நியூஸ் தொலைக்காட்சியில் ஆடாமல், அசையாமல் முழுவதும் பார்த்த தையும் அப்பா சொன்னார்.

பெரியவர்கள் பற்றி வேறு செய்திகள்...?

அப்பா எப்பவும் அவருடைய வேலையை அவரேதான் செய்வார். அம்மா உடம்புக்குச் சரியில்லாம இருந்தபோது அம்மா வின் மலசலத்தைக் கூடத் தன் கையாலதான் அவர் எடுத்தாரு. அந்தளவுக்கு அவர் மத்தவங்களுக்குத் தொந்தரவு தரக்கூடாதுன்னு நெனைப்பாரு. மரக்கறிகளை விரும்பி சாப்பிடுவாரு. எனக்கு ஒரே ஒரு விசயம்தான் ரொம்ப வருத்தமா இருக்கு.

என்னது அது?

எனக்கு முசிறியில ஒரு ஏக்கர் 20 சென்ட் காணி இருக்கு.அப்பாவும் அம்மாவும் அவங்க இறந்தபிறகு அவுங்க உடல்களை என்னுடைய இடத்தில அடக்கம் செய்யனும், அங்க ஒரு நினைவாலயம் வைக்கனும், அத மகன் பிரபாகரன் வந்து பாக்கனும் அப்டீன்னு எங்ககிட்ட சொல்வாங்க. என்ன கொடு மையோ தெரியல்ல, அது நிறைவேறாம போச்சு. அப்பா ஈழத்துல இறந்த செய்தி கிடைச்சதும் துடிச்சிட்டேன். அவரு உடலை இங்க கொண்டுவந்து என் காணில அடக்கம் செஞ்சு நினைவாலயம் வைக்க முடியல. அவரு உடல இங்க கொண்டு வர திருமாவளவன், சிவாஜிலிங்கம் போன்றவர் கள்கிட்ட பேசினேன். கனடாவுல இருக்கிற வினோதினி கூட பேசினேன். இலங்கை அரசு தராதுன்னு அவங்க சொல்லிட்டாங்க. பிறகு என்ன செய்ய?

ஐயா வேற ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?

அம்மாவும் அப்பாவும் எங்கவீட்ல இருக்கும்போது கவிஞர் காசி ஆனந்தன் இங்க வந்தாரு. அவர் அம்மா அப்பாகிட்ட பேசிட்டுப் போகும்போது என் கையப் பிடிச்சி, “தலைவரைத் தாங்கிய வயிற்றைத் தாங்க எங்களுக்குப் பாக்கியம் கிடைக்கவில்லை. அந்தப் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது” என்று கண்ணீர் மல்கச் சொன்னாரு. என்னோட ஒரு புகைப்படமும் எடுத்துக்கிட்டாரு. இப்பொழுதும் அந்த வார்த்தை எனக்கு நெஞ்சில் நிறைந்திருக்கிறது. (இராசேந்திரன் அவர்களின் மனம் கனப்பது போலத் தெரிந்தது. நானும் கனத்த மனத்துடன் விடை பெற்றேன்).

- முசிறி மருத்துவர் ராசேந்திரன்

 

Pin It