சீனாவில் தற்போது தோன்றி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘கரோனா’ என்ற வைரஸ் நுண்கிருமியை விட மிகக்கொடிய ஆட்கொல்லி இந்த ஹைட்ரோகார்பன் திட்டம்.
வான் பொய்ப்பின் தான் பொய்யா காவிரியாறு, வறண்டு கிடக்கும் நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டம் மேலும் மேலும் விவசாய நிலங்களை முற்றிலுமாக அழிக்கப்போகும் சூழலை மத்திய அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
ஹைட்ரோகார்பன் திட்டம் நிறைவேற்றுவதற்காக சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்தோ, மக்களிடமிருந்தோ அனுமதியோ அல்லது கருத்தோ கேட்க வேண்டிய அவசியமில்லை என்று அண்மையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சொல்லிருக்கிறார்.
இது ஒரு சர்வாதிகாரியின் பேச்சாக இருக்கிறது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற நிலை படிப்படியாக மாறிக்கொண்டிருகிறது.
ஏறத்தாழ 1,000 அடிகளில் இருந்து 3,000 அடிகளுக்குக் கீழே இருக்கும் பாறைகளில் இருந்துதான் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட வேண்டும். இதற்காக பெரிய அளவில் கிணறு தோண்டி அந்தப் பாறைகளை உடைக்க வேண்டும்.
அப்படிச் செய்யும் பொழுது நிலத்துக்கு அடியில் இருந்து மோசமான, நச்சு வாய்வுகள் வெளியேறும். அது மக்களை மட்டுமல்ல மரம், செடி, கொடிகள், விலங்குகள் உள்பட சுற்றுச்சூழலை மாசுபடுத்தி கேடுகளை உருவாக்கும்.
அதுமட்டுமல்ல, பாறைகளை உடைப்பதற்காக நிலத்தடி நீரை அந்தப் பாறைகளின் மீது செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தும்போது நிலத்தடி நீர், நிலத்தில் இப்பொழுது இருக்கும் இடத்தை விட்டு மேலும் படுபாதாளத்திற்குப் போய்விடும்.
அப்படிப் போய்விட்டால் வரும் காலங்களில் மக்களுக்குக் குடிக்க ஒரு துளி நீர் கூட கிடைக்க வழியில்லாமல் போய்விடும் நிலை இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்க்கு எதிராக நடவடிக்கையைக் கண்டிக்காமலும், அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றாமலும் மவுனம் காத்துக் கொண்டிருக்கிறது எடப்பாடியின் அரசு.
மாறாக அமைச்சர் கருப்பன் மக்கள் வாழ்வைப் பற்றிச் சிந்திக்காமல் மத்திய அரசுக்கு ஆதரவாகக் குழல் ஊதிக் கொண்டிருக்கிறார்.
விவசாயிகள் இதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடுகிறார்கள்.
ஆனால், மத்திய பாஜக மோடி அரசு எதற்கும் அசையாமல் வன்மம் பிடித்துக் கொண்டிருப்பது மிக மிகக் கண்டிக்கத்தக்கது.
நானே ஒரு விவசாயிதான் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் தமிழக முதலமைச்சர் எடப்பாடியின் ஆட்சியில், தமிழகம் சஹாரா பாலவனத்தை விட மோசமாகிக் கொண்டிருக்கிறது.