சமூகத்தின் வேறுபட்ட நிலைகளிலுள்ளவர்களின் வாழ்க்கை ஒரு வழக்கில் வந்து சந்திப்பதைச் சொல்கிறது வழக்கு எண் 18/9 திரைப்படம்.
ஒரு தரப்பினரின் வசதி வாய்ப்புகளினால் வரும் வரம்புமீறல்கள், மற்ற தரப்பினரின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களையும், பாதிப்புகளையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.
கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்ட பெரும்பான்மை பாத்திரங்களை ஏற்றிருப்பவர்கள் புதுமுகங்கள் என்றால் நம்பத்தான் முடியவில்லை. பின்னே நடிக்கச் சொன்னால், வாழ்ந்திருக்கிறார்களே!
தருமபுரி மாவட்டத்தின் வறண்டுபோன விவசாய நிலத்தில் தொடங்கும் கதை, வடநாட்டு முறுக்குக் கம்பெனியின் எண்ணெய்ச் சட்டிக்குள் விழுந்து வெந்து, சிங்காரச் சென்னையின் சிறை ஒன்றில் முடிகிறது.
விவசாயிகள் இன்றளவும் சந்தித்து வரும், வறுமை, கடன், கந்துவட்டி போன்ற பிரச்சனைகளை படத்தின் அடித்தளமாக வைத்திருக்கிறார் இயக்குனர்.
கந்துவட்டி கொடுமை தாங்காமல் சிறுநீரகத்தை விற்க நினைக்கும் தந்தையைத் தடுத்து நிறுத்தி, சிறு வயதிலேயே வடநாட்டு முறுக்குக் கம்பெனிக்கு வேலைக்குச் செல்கிறான் கதாநாயகன் வேலு. படிப்பின் மீது மிகுந்த ஆர்வமிருந்தும், வறுமை அவனைக் குழந்தைத் தொழிலாளியாக்கிவிடுகிறது. அதே நேரத்தில் அளவுக்கு அதிகமான வசதி வாய்ப்புகள் இருக்கின்ற பிள்ளைகள், படிப்பில் அக்கறையின்றி இருப்பதையும், படத்தின் சென்னைக் களம் காட்டுகிறது. ஒரு சமூகத்தின் முரண்பட்ட நிலையைக் காட்டுகிறார் இயக்குனர்.
பாலியல் தொழிலாளிகளும் மனிதர்கள்தான் என்பதை ரோசி என்னும் பாத்திரத்தின் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு நமது பாராட்டுகள்.
பசியால் மயங்கிக் கிடக்கும் ஒருவனுக்கு (கதாநாயகன்) ஒரு வாய் உணவு கொடுக்கக் கூட மனமின்றி, கையில் உணவுப் பையுடன் கடந்து செல்லும், படித்த நல்லவர்களைவிட, சக மனிதனின் வலியறிந்து உதவும் மனிதாபி ‘மானமுள்ள’ ரோசி ஆயிரம் மடங்கு உயர்ந்தவர் என்பதை உரத்துச் சொல்கிறது அந்தக் காட்சி.
நன்றாக இருந்த காலத்தில், சதைக்கு அலைந்த இட்லிக்கடை நடத்தும் தாடிக்காரன், நோயால் பாதிக்கப்பட்ட பிறகு, ரோசியைப் பார்த்து, ‘கொஞ்சமாவது மானரோசம் இருக்கா’ என்று கேட்பது, ஆணாதிக்க சமூகத்தின் அசிங்கமான பக்கங்களுக்கு ஒரு சான்று.
திருந்தி வாழ நினைக்கும் ஒரு பாலியல் தொழிலாளியை வேட்டைநாய்களாய் துரத்தும் ஆண்களைக் கொண்டிருக்கும் இந்த சமூகம் குற்றவாளிகளின் சமூகம் என்று சொன்னாலும் தவறில்லை. கதாநாயகிக்கு அதிக காட்சிகளும் கிடையாது. நிறைய வசனங்களும் கிடையாது. ஆனாலும் கதாநாயகி ஜோதியைச் சுற்றித்தான் கதையின் ஓட்டம் இருக்கிறது.
சின்னச்சாமியாக வரும் சிறுவனின் இயல்பான நடிப்பு படத்தோடு நன்றாகப் பொருந்திப் போகிறது. பெண் வேடமிட்டு கூத்தில் ஆடும்போது, அவ்வளவு நளினம். நான்கு வரி வசனத்தை நாற்பது தடமை பேசியும், சரியாகப் பேசாத கதாநாகனையும், அதே வசனத்தை முகத்தில் உணர்ச்சிகளோடு அழகாக சின்னச்சாமி பேசுவதையும் காட்டும் காட்சி, புறக்கணிக்கப்படும் திறமைசாலிகளின் ஆதங்கத்திற்கு ஒரு சாட்சி.
பள்ளிக்கூடம் போகும் மகனுக்கு, கார், கைப்பேசி, அளவுக்கு அதிகமான பணம் என்று கொடுத்துவிட்டு, பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் அம்மாவின் பாத்திரம், நடைமுறையிலுள்ள பெரும்பான்மை பெற்றோர்களின் நகல். இப்படிப்பட்ட சூழலில் வளரும் பிள்ளைகள், என்னென்ன சீரழிவுகளில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று காட்டும் காட்சிகள் அத்தனையும் இன்று நடந்து கொண்டிருக்கும் உண்மைகளைப் பேசுகின்றன.
காவல் ஆய்வாளர் குமாரவேல் என்னும் பாத்திரம், முகம் காட்டாமல் வரும் அரசியல்வாதி பாத்திரம் ஆகியவை சட்டத்தின் நீதி ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருக்க யார் யார் காரணம் என்பதை உணர்த்துகின்றன.
படத்தில் ஒரு பாடல்தான் இடம்பெற்றிருக்கிறது. அப்பாடலில், வேலு ஜோதியின் மேல் கொண்டுள்ள காதலை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். சண்டைக் காட்சிகள் கூட இல்லை. அதைப்பற்றி நினைவே நமக்கு வராமல், கதை நம்மை அப்படியே உள்ளிழுத்துக் கொள்கிறது.
ஒரு சமூகத்தில், குற்றங்கள் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கின்றன. சில குற்றங்களில் தனி மனிதர்கள் குற்றவாளிகளாக நிற்கின்றனர். சில குற்றங்களில் சமூகமே குற்றவாளியாக நிற்கிறது. இந்தச் சங்கிலித் தொடரை உள்ளது உள்ளபடி படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
பெரிய கதாநாயகர்கள், பெரிய கம்பெனி, பிரம்மாண்டம், வெளிநாட்டுப் படப்பிடிப்பு இப்படி எதுவும் தேவையில்லை. நல்ல கதையும், நல்ல நடிகர்களும், கொஞ்சம் சமூக அக்கறையும் இருந்தாலே போதும் இதுபோன்ற சிறந்த படங்களைத் தருவதற்கு என்பதை தமிழ்த்திரை உலகம் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
மக்களும் அந்தப் படங்களை வெற்றிப் படங்களாக்கி, அவர்களுக்கு ஊக்கத்தைத் தந்து கொண்டிருக் கிறார்கள். இதே பாதையில் திரைப்படங்களும், மக்களின் ரசனையும் பயணிக்குமானால், உலகத் திரைப்பட விழாக்களில் இன்னும் அதிகமான அளவில் நம்முடைய படங்கள் பங்கேற்கும் என்பது உறுதி.
வில்லுப்பாட்டுக் கலைஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களைப் பார்த்து,
‘கவிஞர் அவர்களே!
வானைப் பாடுங்கள்
வையகத்தைப் பாடுங்கள்
தேனைப் பாடுங்கள்
திங்களைப் பாடுங்கள் - அதோடு
எங்களையும் பாடுங்கள்!’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னராம்.
நாமும் கேட்கிறோம்,
‘மதிப்பிற்குரிய இயக்குனர்களே!
காதலைச் சொல்லுங்கள்
கடவுளைக்கூடச் சொல்லுங்கள்
அறிவியலைச் சொல்லுங்கள்
அழகியலைச் சொல்லுங்கள் - அப்படியே
இதுபோன்று சமூகப் பிரச்சனைகளையும்
தொடர்ந்து படமாக்குங்கள்!’