அண்மையில் வெளிவந்திருக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பல வகைகளில் முக்கியத்துவம் பெறுவதாக அமைந் திருக்கின்றன. பத்திரிகைகளில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பற்றிய செய்திகள் ஒரு பக்கமும், தோல்வியடைந்த மாணவர்களின் தற்கொலைச் செய்திகள் மறுபக்கமும் வெளி வந்தன.

இது தோல்வி அன்று, தவற விடப்பட்ட வெற்றி வாய்ப்பு என்பதை முதலில் பெற் றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். காரணம் பெற்றோர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயத்தில்தான் பெரும் பான்மை மாணவர்கள் தற்கொலை முடிவுக்குப் போகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, இவ்வாண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மூன்று மாணவர்களைப் பற்றி நாம் பேசாமல் இருக்க முடியாது. அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வது, மற்றவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை தெளிவுபடுத்தும்.

அதில் இரண்டு பேர் சிறைக் கைதிகள். கைதிகள் சிறையில் இருந்த படியே படிப்பதும், தேர்வு எழுதி பட்டம் வாங்குவதும் நடந்து கொண்டு தானே இருக்கிறது. அப்படி யிருக்க இவர்கள் இரண்டு பேரின் தேர்வு முடிவுகளில் என்ன சிறப்பு இருக்கிறது? கண்டிப்பாக இருக்கிறது.

அவர்கள் இருவரும் தூக்குத் தண்டனைக் கைதிகள். அதுவும் தூக்கிலிடப்படுவதற்கு நாள் குறிக்கப்பட்டு, பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறவர்கள். அதை விட இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள். பேரறிவாளன், முருகன் ஆகிய இருவரும்தான் அவர்கள்.

தலைக்கு மேல் தூக்குக் கயிறு தொங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? பேரறிவாளன் 1200க்கு 1086 மதிப்பெண்களும், முருகன் 986 மதிப்பெண்களும் பெற்றிருக்கின்றனர். முருகன் கணக்குப் பதிவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார்.

கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்பட்டிருக்கும் நிலையிலும் இவர்கள் இருவரிடமும் வெளிப்பட்ட தன்னம்பிக்கையைப் பார்த்தாவது, வெற்றி வாய்ப்பைத் தவற விட்ட மாணவர்கள், மீண்டும் முயற்சிக்க வேண்டுமேயல்லாது, தற்கொலை செய்யும் சிந்தனைக்கு இடமளிக்கக் கூடாது. மூச்சடங்கும் வரை வாழ்வதற்கான கால அவகாசம் அனைவருக்கும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

உடல் உறுப்புக் குறைபாடுடையவர்கள் சாதிப்பதைப் பார்த்தும் கூட, எல்லா நலமும் கொண்டவர்கள் தன்னம்பிக்கை கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது?

இரண்டே முக்கால் அடி உயரமுடையவர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி பிரியா. ஆனால் திருக்குறளைப் போல ஆழமான அறிவுடையவர். பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டியனின் மகளான பிரியா பெற்ற மதிப்பெண்கள் 1200க்கு 1049. பொறியியல் படிக்க வேண்டும் என்பது இவரது விருப்பமாக இருக்கிறது.

இவர்களுக்கு நம்முடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்க்கையை நம்பிக்கையோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்!

Pin It