"நான் உன்ன அப்டி திட்டிருக்கேன்.... பின்ன எப்டி என்ன பிடிச்சது...."

vishakha singh"திட்டின உனக்கே என்ன பிடிக்கும் போது எனக்குப் பிடிக்காதா....?"

"அப்போ நிஜமா என்ன பிடிக்குமா.......!"

"நாலு குழந்தை பிறந்த பிறகு கூட கேப்ப போல...."

"ஹே .. நீ, இப்டி எல்லாம் பேசுவியா....ரோட்ல போகும் போது ஊமை மாதிரி போற..."

"பொண்ணுங்கன்னா அப்டிதான்.... யாரும் இல்லாதப்போ எல்லாத்தையும் கொட்டிடுவாங்க......"

"இங்க தான் யாரும் இல்லையே.... கொஞ்சம் கொட்டேன்..."

(கையை மடக்கி கொட்டுவது போல.... பாவனை செய்வாள்.... மஞ்சு....)

"ஹே.... விளாடாத..... ஆமா உன் பேர் என்ன....?"

"ஒ..... பேர் சொல்லலையா...."

(அவள் குரலிலேயே அவளைப் போலவே பாவனை செய்து அவனும் சொல்லுவான்......)

"சொல்லலியே...... "

(அவள் முகம் மூடி சிரிப்பாள்.....)

2009 அல்லது 2010 என் நண்பன் சிவகுமார் திருமணத்துக்கு வால்பாறைக்கு சொகுசு வேனில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். வேனுக்குள் ஒரு படம் போடுகிறார்கள்.

"என்ன படம்....?" கேட்கிறேன்.

படத்து பேர் "பிடிச்சிருக்கு" ன்னு சொல்றாங்க.

"வேற ஏதாவது போடுங்கப்பா" என்கிறேன்.

"வேற ஏதும் இல்ல விஜி இது தான் இருக்கு"ங்கிறாங்க...

சரி....என்ன பண்ணறதுன்னு பார்க்க ஆரம்பிக்கிறேன். அந்த ஹீரோ... படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே மூளைக்குள்ள பச்சக்குனு ஒட்டிக்கறான். பேர் அசோக். அதற்கு கொஞ்ச நேரத்தில் பேப்பரை எல்லாம் பேன் காற்றுக்கு பறக்க விட்டு தடுமாறியபடி அந்தக் கதை நாயகி அறிமுகமாகிறாள்.

ஒரு ஜொலிஜொலிப்பான பிரேமில் அந்த பெண் மஞ்சுவாக (கதாபாத்திரத்தின் பெயர்) மலர்கிறாள். படம் பார்க்க பார்க்க மனம் பறக்க ஆரம்பிக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பின் நிஜமாலுமே ஒரு காதல் கதை. இடைவேளை வரை.. காதலும்.. ..குறும்பும்.. விளையாட்டும்.. வேடிக்கையுமாக அந்த மஞ்சு என்கிற விஷாகா ஒவ்வொரு பிரேமிலும் என்னைக் கொள்ளை அடிக்க ஆரம்பிக்கிறாள். ஒரு காட்சியில் அவளும் அந்த ஹீரோவும் பேசும் வசனம் தான் இந்தக் கட்டுரையில் முதலில் நீங்கள் படித்தது.

அதே மென்சோக முகம் தான் விஷாகாவுக்கும். அதில் என் சோக முகமும் விஷாகாவுக்கு இருக்கும்.

இந்தப் பெயரே எனக்கு மிகவும் நெருக்கமாகி அதன் பிறகு என் கதை நாயகிகளுக்கு விஷாகா என்று பெயர் வைப்பதை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். விஷாவின் கண்களும் சிரிப்பும் தனித்துவம் வாய்ந்தவை. தமிழ் முகம் அவள் முகத்தில் மெல்லிசைக்கும். பண்ணிசைக்கும். காதலுடன் காதலனுக்காக காத்திருக்கையிலும் சரி.. அவனைப் விட்டு பிரிகையிலும் சரி... இறுதிக் காட்சியில் அப்பாவிடம், " என்னை விட்று நான் போய்டறேன்" என்று கோபம் காட்டுவதிலாகட்டும்.. கடைசியில் காதலனுடன் சேர்க்கையில் அவன், "எப்படி இது சாத்தியம்" என்று கேட்கையில், "எல்லாமே அம்மா தான்" என்று அம்மாவைக் கட்டிப் பிடித்து அழுகையிலாகட்டும்.... அளவெடுத்த நடிப்பு. அவள் சிரித்தால் நாம் சிரிப்போம். அவள் அழுதால் நாம் அழுவோம். அப்படி ஒரு உடல்மொழியும் பாவனையும் வாய்த்திருக்கிறது. தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டம்....இந்தப் படமும் சரியாய் போகவில்லை. அந்த இயக்குனர் கனகு அவர்களுக்கும் அடுத்து சரியான படம் அமையவில்லை.

விஷாகா மட்டும் "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தில் நடித்தார். எனக்குத் துளியும் அதில் விருப்பம் இல்லை. 96 மாதிரி படங்களில் நடிக்க வேண்டிய நடிகை, சந்தானம் படத்தில் நடிப்பதை எல்லாம் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

"பிடிச்சிருக்கு" படத்தில் ஒரு மான்டேஜ் பாடல் காட்சியில் லாரியில் ஜன்னலோரம் கதை நாயகனோடு உட்கார்ந்து கொண்டு காற்றில் கேசம் அசைய காதலில் திளைத்திருக்கையில்.. தெரியாமல் அவன் கை அவளை சுற்றி வளைத்து விட நாக்கு கடித்து ஐயோ என்பது போன்ற ஒரு பாவனை செய்யும் விஷாகாவை அதன் பிறகு தான் தீவிரமாகக் காதலிக்க ஆரம்பித்தேன்.

நீள் சதுர முகம் தான் விஷாகாவுக்கு. எதிர் வீட்டு பக்கத்து வீட்டுப் பெண் இல்லை விஷாகா. தூரத்து உறவு கூட இல்லை. "ஒரு கவிதை சொல்லேன்" என்று கன்னம் கிள்ளி கேட்கும் என் வீட்டு பெண்...விஷாகா.

"காற்றோடு சொல்லிப் போனாயே... எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே..."

பாடலில் கல்லூரி செல்கையில், நாயகன் அசோக்கை ரசிப்பது, காற்றில் ஜாடை செய்வது, முழுங்கி முழுங்கிப் பார்ப்பது...என காதலால் நிரம்பிய முகம் விஷாகாவுக்கு. ஆதலால் காதலிக்கலாம் என நம்பும் யாவும் எனக்கு.

"வண்ணங்கள் வண்ணங்கள் இல்லாமல் வாழ்ந்தேனே
தந்தாயே நிறமெல்லாம் அதனால் தானா"

என்ற வரியில் கருப்பு வெள்ளைக்கு செல்லும் காட்சியில் விஷாகா நீள் கனவின் மிச்சமென எனக்குத் தெரிந்தாள். மெல்ல வண்ணத்துக்குள் வரும் அவளுக்குத் தான் இந்த பூமி முழுக்க சொந்தம் போல நம்பலாம் நீங்களும். நம்பியவன் கூறுகிறேன்.

போனில் யாரிடமோ பேசுவது போல அசோக் "அண்ணா நல்லா இருக்கீங்களா...?" என்று கேட்டுக் கொண்டே விஷாகாவைப் பார்க்க, அது தனக்குத்தான் என்று புரிந்து கொண்டு, "ம்ம்ம்" என்று சிறு புன்னகையோடு சிறு வெட்கத்தோடு விஷாகாவின் தலையாட்டுதல் இருக்கே... காதலில் இருந்து ஒரு பய தப்பிக்க முடியாது என்று சத்தியம் செய்யும் பிம்பம் அது.

அதே பாடலில்... "ஏன் என்னை சீரழித்தாய்......." என்று வரும் வரியில் அந்தப் பாட்டு முடியும் இடம். அப்போது இசைக்கேற்ப அசோக் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிலக்கடலையை யாருக்கும் தெரியாமல் விஷாகாவிடம் கொடுப்பதற்கு கையை நீட்ட, விஷாகாவும் யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்று மெல்லச் சுற்றி தயக்கத்தோடு பார்த்து விட்டு கையை மட்டும் நீட்டி நிலக்கடலையை வாங்குகையில், நிலக்கடலையை கை மாற்றி விட்ட விரல்களால் அசோக் அவளின் உள்ளங்களில் தாளமிடும் இடம்... அதற்கு விஷாவின் முக பாவனை, ஜிவ்வென்று உச்சம் ஏறும் பாரதி சொன்ன அதே காதல் காதல் காதல்தான் .

அதே பாடலில் முதலில் வரும் ஏன் என்னை சீரழித்..........தாய்..... அந்த....... தா........ய் இழுத்து முடிக்கையில் அசோக்கைப் பார்த்து விட்டு தலையை கீழிருந்து இசைக்கு தகுந்தாற் போல மேல் நோக்கித் திரும்பும் விஷாவை... இப்போதைக்கு சிண்ட்ரெல்லாவின் கடைசி சிண்ட்ரெல்லாவாக இங்கே நிறுத்துகிறேன். இவளையும் மிஞ்சும் அழகி ஒருத்தியை எதிர்காலத்தில் சந்திக்க நேரும். மாறிக் கொண்டேதான் இருக்கும் இளமையும், சிந்தனையும். அதன் போக்கில் அதை விடுதல்தான் நலம். என் வாழ்வில் நான் ரசித்த இந்த எட்டு நட்சத்திரப் பெண்களை காலத்துக்கு தகுந்தாற் போல கொண்டாடி இருக்கிறேன். வாழ்வதின் பெரும் பங்கு, கொண்டாடுவது தான். திறமை எங்கு இருக்கிறதோ அங்கு அழகு தானாகக் கூடி விடும். அது இந்த எட்டு சிண்ட்ரெல்லாக்களுக்கும் பொருந்தும்.

சிண்ட்ரெல்லாக்கள் காலத்தின் கட்டாயங்கள். இது எல்லாம் இல்லாமல் சாதனை என்ன இருக்கிறது.

"செதுக்காமல் சிலைகள் கிடையாது...எடுக்காமல் புதையல் கிடையாது...." ரசிக்காமல் விஷாகா கிடையாது.

சிண்ட்ரெல்லாக்கள் இப்போதைக்கு முற்றும்.

- கவிஜி

Pin It