திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும், சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவும் கூட்டாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நாளில், கூட்டணிகளில் முதல் குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பெரிதும் பிரணாப் முகர்ஜிதான் என்று கருதப்பட்ட நேரத்தில், மம்தாவும், முலாயமும் வேறு மூவரின் பெயர்களைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்மொழிந்தனர்.

இன்றைய பிரதமர் மன்மோகன் சிங், மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மேனாள் நாடாளுமன்ற அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி மூவருள் ஒருவர் பெயர் முன்மொழியப்படுமானால், அந்த வேட்பாளருக்குத் தங்கள் ஆதரவு உண்டு என்று அவர்கள் அறிவித்தனர்.

அந்த அறிவிப்பு, இன்றைய மத்திய அரசு கவிழப்போவதற்கான முன்னோட்டம் என்றே கருதப்பட்டது. திரிணாமுல், சமாஜ்வாதி ஆகிய இரு கட்சிகளும் இப்படி எதிர்நிலை எடுக்குமானால், ஆளுங்கட்சியான காங்கிரஸ் முன்மொழியும் வேட்பாளர் வெற்றி பெற முடியாது என்பதே உண்மை. அந்நிலையில் ஆட்சி கவிழ்ந்து, மறுதேர்தல் வருவதும் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.

ஆனால் 48 மணிநேரத்திற்குள்ளாக, ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து 32 உறுப்பினர்களையும், உ.பி., சட்டமன்றத்தில் 224 உறுப்பினர்களையும் கொண்டுள்ள சமாஜ்வாதிக் கட்சி, காங்கிரஸ் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப் பட்டால், தாங்கள் ஆதரிப்போம் என்று அறிவித்தது. இனிமேல் திரிணாமுல் ஆதரவு இல்லையயன்றாலும் கவலை இல்லை என்ற நிலையில், உடனடியாகப் பிரணாப் பெயரைக் காங்கிரஸ் அறிவித்தது.

எதிர்பாராத வகையில், பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியிலும் குழப்பம் ஏற்பட்டது. அக்கூட்ட ணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, சிரோன்மணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் பிரணாப்பிற்கே தங்கள் ஆதரவு என்று கூறிவிட்டன.

சி.பி.எம். கட்சியும், காங்கிரஸ் கட்சியைத் தாங்கள் எதிர்த்தாலும், அக்கட்சியின் வேட் பாளரை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, தே.மு.தி.க. போன்ற கட்சிகள் தேர்தçலாப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன. இரு அவைகளிலும் சேர்த்து ஏழு உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள சி.பி.ஐ., சட்டமன்றத்தில் மட்டும் 29 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தே.மு.தி.க., ஆகியனவற்றின் அறிவிப்பு, பெரிய பாதிப்பு எதனையும் ஏற்படுத்தப் போவதில்லை.

இந்து நாளேடு, எழுதியுள்ளதைப் போல, பந்தயம் முடிந்த பின்னர், பாரதிய ஜனதா கட்சி, மேனாள் நாடாளுமன்ற அவைத் தலைவர் சங்மாவைத் தன் வேட்பாளராக அறிவித்தது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும், அனைத்து மாநிலச் சட்டமன்றங்களிலும் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, ஏறத்தாழ 65 விழுக்காடு வாக்குகள் பிரணாப் முகர்ஜிக்குக் கிடைக்கக்கூடும்.

எனவே, இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி என்பது உறுதியாகி விட்டது. முந்தைய குடியரசுத் தலைவர்கள் பன்னிருவரில், எழுவர் தென்னாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற ஐவர், பீகார், உ.பி., பஞ்சாப், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வர்கள். வங்காளத்திற்கு இப்போதுதான் முதன்முதலாக அப்பதவி சென்றடைய உள்ளது.

அந்த அடிப் படையிலும், நீண்ட அனுபவமும், நிறைந்த படிப்பும் உடையவர் என்ற முறையிலும், பிரணாப் முகர்ஜி அப்பொறுப் புக்குப் பொருத்த மானவரே. ஆனாலும் ஈழ விடுதலைப் போராட்ட நிகழ்வுகளில், அவருடைய பங்கு பல நேரங்களில் நம் கண்டனத்திற்குரியதாகவே இருந்தது. ஓர் அரசின் வெளிநாட்டுக் கொள்கையைப பொறுத்தே, வெளியுறவுத் துறை அமைச்சரின் நடவடிக்கைகள் இருக்கமுடியும் என்றாலும், அமைச்சரின் சரியான புரிதல்களும், செயல் பாடுகளும், அரசின் நிலைப்பாட்டைக் கூடச் சில வேளைகளில் மாற்றிவிடக் கூடும். ஆனால் பிரணாப்பின் புரிதலும், நடவடிக்கைகளும் அரசின் கொள்கையை மேலும் உறுதிப்படுத்தவே உதவின என்பதை மறுக்க முடியாது.

எனினும் பாரதிய ஜனதாக் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்க முடியாத சூழலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கியுள்ளார். மதவாத சக்திகளுக்கு ஊக்கம் அளித்துவிடக் கூடாத நிலையில், பிரணாப்பை ஆதரிப்பது தவிர்க்க இயலாத ஒன்றாகவே உள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் முக்கியப் பங்கு வகிக்கும், பாரதிய ஜனதாக் கட்சியுடன் இணைந்து பீகாரில் கூட்டணி ஆட்சி நடத்தும், அம்மாநில முதலமைச்சர் நித்திஷ் குமார் முடிவு இங்கு கூர்ந்து கவனிக்கத் தக்கதாக உள்ளது.

அவருடைய முடிவும், அதனையயாட்டி ஐக்கிய ஜனதா தளம் எடுத்துள்ள முடிவும், வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலை மட்டும் ஒட்டியதன்று என்பது புரிகிறது. 2014ஆம் ஆண்டு வரவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதாக் கட்சி, நரேந்திரமோடியைப் பிரதமருக்கான வேட்பாளர் ஆக்கும் முயற்சிக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அம்முடிவு அமைந்துள்ளது.

ஐக்கிய ஜனதாக தளத்தின் ஆதரவு இல்லாமல் பீகாரில், பாரதிய ஜனதாக் கட்சி சில இங்களில் கூட வெற்றி பெற முடியாது. பீகார் இல்லாமல் நாடாளுமன்ற வெற்றியும் சாத்தியமில்லை. தொடர்ந்து இரண்டாவது முறையாக அம்மாநிலத்தில், நித்திஷ் குமார் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார். இரண்டாவது முறை அங்கு ஜனதா தளக் கூட்டணி, ஐந்தில் நான்கு பங்கு இடங்களைக் கைப்பற்றியிருப்பது வரலாறு காணாத வெற்றியாகும். அந்த வெற்றிக்கு நித்திஷ் குமார் அரசின் மக்கள் நலத் திட்டங்களும், சாதனைகளுமே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

குஜராத் மாநிலத்தை நரேந்திர மோடி முன்னேற்றமடைய வைத்துள்ளார் என்று எல்லா ஊடகங்களும் ஓங்கி ஒலிக்கின்றன. ஆனால் பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சிறு அளவில் கூடச் சொல்லப்படவில்லை. இதற்கான காரணங்கள் குறித்து ஒரு தனிக் கட்டுரையே எழுதப்படவேண்டும். (அடுத்த இதழில்: ‘நரேந்திர மோடியும், நித்திஷ்குமாரும்’)

எனவே, வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில், பிரணாப் முகர்ஜி வெற்றி பெற உள்ளார் என்பதைவிட, இத்தேர்தலில் பா.ஜ.க. விற்கு வெற்றி வாய்ப்பு அறவே இல்லை என்பதும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் அக்கட்சியின் நம்பிக்கை சிதைந்து கொண்டுள்ளது என்பதுமே மதச்சார்பற்ற அனைவரின் மகிழ்ச்சிக்கும் உரியதாக இருக்கிறது. 

இன்றைய நாடாளுமன்றத்தில் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கை

கட்சி   நாடாளுமன்றம் (543)          மேலவை (250)

1. காங்கிரஸ்               206        71

2. பாரதிய ஜனதா கட்சி      116        49

3. சமாஜ்வாதி கட்சி              23          9

6. ஐக்கிய ஜனதா தளம்     20          9

4. திரிணாமுல் காங்கிரஸ்             19          9

5. திராவிட முன்னேற்றக் கழகம்            18          7

7. சி.பி.எம்.     16          11

9. சிவசேனா                11          4

8. அ.தி.மு.க.                9             5

10. தெலுங்கு தேசம்             6             5

Pin It