‘உள்ள யாரு, வெளிய நாங்க...உள்ள யாரு...வெளிய நாங்க...வெளிய நாங்க... உள்ள நீங்க...ஆனா யாரு நீங்க...வெளிய நாங்க...உள்ள நீங்க...நீங்க நீங்கதான்...நாங்க நாங்கதான்...நாங்க நாங்கதான்...நீங்க நீங்கதான்... த்தூ...இன்னிக்கு டீ குடிச்சா மாதிரிதாண்டா...’ (கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)

anna_hazare_ramdevஇதே மாதிரி உள்ளே வெளியே ஆடி முடிச்சி, இப்ப நின்னு ஆடுறதுக்காக ஒரு எடத்தத் தேர்ந்தெடுத்துட்டாரு நம்ம உண்ணாவிரதம் புகழ் அன்னா அசாரே. அதாங்க அந்நியன் அசாரே அரசியல்ல குதிக்கப் போறதா அறிவிச்சிருக்காரு.

ஊழல ஒழிக்கறதுக்காகவே அவதாரம் எடுத்திருக்கேன்னு சொன்னாரு. யாரோட ஊழல ஒழிக்க...இந்திய அரசியல்வாதிகளோட ஊழல. புது மாப்பிள்ளைக்கு என்னிக்குமே மவுசு கூடுதலாத்தான் இருக்கும். அப்படித்தான் மக்களும் இவரோட காந்தி குல்லாயப் பாத்து உண்ணாவிரதத்துல குத்த வக்கிறப்போ எல்லாம் குமிஞ்சாங்க. இவரும் காந்தி மாதிரியே கதராட கட்டிக்கிட்டு, தேசியக் கொடிய வேற ஆட்டிக்கிட்டு காத்தாட ராம்லீலா மைதானத்துல அப்படியே சாஞ்சிக்கிட்டும், படுத்துக்கிட்டும் போராடினாரு. நாங்கல்லாம் ஒரு செட்டுன்னு ஜூனியர் பாலையா கரகாட்டக்காரன் படத்துல சொல்வாரே, அத மாதிரி முன்னாள், இன்னாள்னு பலபேரு சேர்ந்து, அன்னா அசாரே குழுன்னு ஒன்ன உண்டாக்கிக்கிட்டாங்க.

ஊழலப் பத்திப் பேசுற இந்தியன் தாத்தா, ஏன் கருப்புப் பணத்தப் பத்திப் பேசமாட்டேங்குறாரு, அதிகார மையங்களா இருக்குற பெருமுதலாளிங் களைப் பத்தி ஏன் பேசமாட்டேங்குறாரு, பழங்குடி மக்கள் இந்திய அரசால வேட்டையாடுறதைப் பத்தியோ, அரசாங்கத்தோட அணுசக்திக் கொள்கையைப் பத்தியோ பேசாம, சேனங்கட்டுன குதிரை மாதிரி ஏன் லோக்பால் பின்னாடியே ஓடிட்டிருக்காரு - இப்பிடி பல ஏன்கள் எழுப்பப்பட்டு, ஒரு வழியா அவரோட நிலையற்ற தன்மை வெளிச்சத்துக்கு வந்துச்சி. மக்கள் பாத்தாங்க... ஆஹா... இது இயற்கையான வெளிச்சம் கிடையாது... சில ஊடகங்கள் ஊதி ஊதி ஏற்படுத்துன பெட்ரோமாக்ஸ் வெளிச்சம்னு புரிஞ்சிக் கிட்டாங்க. மெல்ல மெல்ல அசாரேவோட கடையில் கூட்டம் குறைஞ்சி, ஈயோட்டுற நெலம வந்ததும், அரசியல் மெளகாப் பொடியப் போட்டுப் புதுசாப் பலகாரம் சுடத் தொடங்கிட்டாங்க. இதாங்க கதச்சுருக்கம்.

‘எம் பொண்டாட்டி தாலியறுத்தா என்ன, எங்கம்மா கிட்ட கஞ்சி குடிப்பேன்’னு சொன்னானாம் ஒருத்தன். அரசியல்ல ஊழல் புரையோடிக் கெடக்குது, ஆனாலும் நாங்க அரசியல்ல குதிக்கப் போறோம்னு கெளம்பியிருக்காங்க போலத் தெரியிது.

சரி, ஒரு வழியா பூனைக்குட்டி வெளிய வந்திருச்சி. அது பால் குடிக்குமா குடிக்காதான்னு, பால் பாத்திரத்துக்குப் பக்கத்துல போகும்போது தெரிஞ்சிட்டுப் போகுது.

“லோக்பால் இயக்கம் ‘முழுப் புரட்சிக்கான’ இயக்கமாக மாற்றப்பட்டு விட்டதுன்”னு அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லியிருக்காரு. 1975இல் ஜெயப்பிரகாஷ் நாரயணன், இந்திரா காந்தியோட அரசுக்கு எதிரா ‘முழுப்புரட்சி இயக்கம்’னு ஒன்ன தொடங்குனாரு. ஜெயப்பிரகாஷ் நாராயணனோட இயக்கத்த, ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் உள்ளிட்ட இந்துத்துவ சக்திங்க சாதகமாகப் பயன்படுத்திக் கிட்டாங்க. அதமாதிரி மறுபடியும் ஒரு நெலய உருவாக்குற முயற்சிதான் லோக்பால் குழு முழுப்புரட்சிக் குழுவா மாறுனதுன்னு நெனைக்க எடமிருக்கா இல்லையா?

ஏன்னா, எத்தன காலத்துக்குத்தான் அயோத்தி ராமனக் காட்டி மக்கள ஏமாத்த முடியும் சொல்லுங்க! அசாரே கூட்டம் அப்பப்ப பா.ஜ.க.வோட பழம் விடுறது, அப்புறம் கா விடுறது எல்லாமே ...ச்சும்மா... லூலூலாயிக்கு. அந்தக் கூட்டத்துல இருக்குற அத்தன பேரும் அக்மார்க் ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள்னு நமக்குத் தெரியாதா என்ன?

“தேர்தல் வருது, இந்த நேரத்துல உண்ணாவிரதம் இருந்து ஏன் நேரத்த வீணாக்கனும்”னு அசராம அடிச்சிருக்காரு பாருங்க அசாரே...! இவரல்லவோ அரசியல்வாதி! ஏறத்தாழ பன்னென்டு மாசத்துக்கும் மேல ராம்லீலா மந்தையில குந்தியிருந்து நேரத்த வீணாக்குன மக்களுக்கு என்னமா குல்லா போட்டாரு பாத்தீங்களா...!

“அன்னா அசாரே குழு கட்சி தொடங்கும்னு” கெஜ்ரிவால் சொல்றாரு. “அரசியல் கட்சி தொடங்கவும் மாட்டேன். எந்தக் கட்சியிலும் சேரவும் மாட்டேன். தேர்தலில் நிற்கவும் மாட்டேன்”னு தல சொல்றாப்ல. உஷ்ஷ்...அம்மாடி... இப்பவே கண்ணக் கட்டுதே!

Pin It