‘உடைமைகள் இழந்தோம்

உரிமைகள் இழந்தோம்

உணர்வை இழக்கலாமா?’ எனக் கேட்கும் ஒரு திரைப்படப் பாடல்! இன்றைய ஈழத்தமிழர்களின் நிலை இப்படித்தான் உள்ளது.

eelam_people_320அங்கே அவர்கள், தங்கள் சொந்த மண்ணை இழந்திருக்கிறார்கள், ஊர் - உறவுகளை இழந்திருக்கிறார்கள், விலை மதிப்பில்லா உயிர்களை இழந்திருக்கிறார்கள், அடிப்படை உரிமைகளை இழந்திருக்கிறார்கள் - சுருக்கமாய்ச் சொன்னால் தங்கள் வாழ்வையும், வாழ்வுரிமைகளையம் இழந்து நிற்கிறார்கள்.

இத்தருணத்தில்தான், வரும் 12ஆம் நாள், டெசோ அமைப்பின் சார்பில், சென்னையில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு நடைபெறவிருக்கிறது. தலைவர் கலைஞர் தலைமையிலான டெசோ அமைப்பு உரிய நேரத்தில், உலகத் தலைவர்கள் பலரையும் அழைத்து இம்மாநாட்டை நடத்துகிறது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், முள்ளி வாய்க்கால் முகாம்கள் இன்னும் முற்றுமாய் மூடப்படவில்லை. முகாம்களை விட்டு வெளியில் வந்தவர்களும் தங்கள் வீடுகள் இருந்த தடம் பார்த்து நடக்க முடியவில்லை.

பாதியாய் நிற்கும் பனைமரங்கள், தரைமட்டமாகிக் கிடக்கும் தங்கள் வீடுகள், கால் வைத்தால் வெடிக்கும் கண்ணி வெடிகள் - இவற்றைத்தான் ஊர் திரும்பும் ஈழ மக்கள் காண நேர்கிறது. எங்கேனும் சில வீடுகள் இடிக்கப்படாமல் இருந்தால், அங்கே இராணுவத்தினர் குடியேறியுள்ளனர்.

திறந்தவெளிகளில், மரத்தடிகளில், தெருவோரங்களில் தமிழர்களின் குடும்பங்கள் அங்கே தள்ளாடுகின்றன.

ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வன்பறிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. சம்பூர், மன்னார், வவுனியாப் பகுதிகளில் மட்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பறிபோயுள்ளன.

நாடாண்ட தமிழன், வீடற்றவனாய் வீதியில் நிற்கிறான். அந்தத் தமிழனுக்கு அன்னைத் தமிழகம் தரும் ஆதரவுக் குரல்தான் இம்மாநாடு.

நிலங்கள் மட்டுமின்றி, நிலங்களுக்கு அடியில் கிடக்கும் மூலவளங்களும் சிங்களவர்களால் சுரண்டி எடுக்கப்படுகின்றன. நிலத்தின் மேலே உள்ள மரங்களும் வெட்டிக் கொண்டு போகப்படுகின்றன. சுண்ணாம்புக் கற்கள், ஆற்று மணல், காடுகளில் உள்ள பாரிய மரங்கள் அனைத்தும், தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கிலிருந்து, சிங்களவர்கள் வாழும் தெற்று நோக்கிச் செலுத்தப்படுகின்றன.

தமிழ் ஈழம் முழுவதும் ஒரு விதமான இராணுவ ஆட்சி நடைபெறுகிறது. ஐந்து தமிழருக்கு ஒருவன் என்னும் வகையில், அங்கே இராணுவச் சிப்பாய்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளாகவும், மாவட்ட ஆட்சியாளர்களாகவும், இராணுவத்தினர் அமர்த்தப்பட்டுள்ள கொடுமையை என்னென்று சொல்வது? யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் வீடுகளில் நடைபெறக்கூடிய சமூக நிகழ்ச்சிகளுக்குக் கூட, இராணுவ அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என்பது அங்கே சட்டமாக உள்ளது. வீட்டு விழாவிற்கு யாரையயல்லாம் அழைக்க இருக்கிறோம், அவர்கள் எந்த வகையில் உறவு, அவர்களின் முகவரி என்ன என்று எல்லாவற்றையும் எழுதிக்கொடுத்து அனுமதி பெற்ற பின்னர்தான், அழைப்பிதழே அடிக்க முடியும் என்னும் நிலை அங்கு உள்ளது.

வாழவும் வழியில்லை, தமிழர்களுக்கு அம்மண்ணில் பிழைக்கவும் வழியில்லை. பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் படிப்படியாகச் சிங்களவர்களுக்கு மாற்றிக் கொடுக்கப்படுகின்றன. சிறு கடைகள், உணவகங்கள், முடிதிருத்தும் நிலையங்கள் உள்ளிட்ட சிறு தொழில்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் ஏ - 9 நெடுஞ்சாலையின் இருபுறமும், தமிழர்களின் பெட்டிக்கடைகள் இருக்கும். இன்று அவை முழுவதும் சிங்களர்களின் கடைகளாக மாறியுள்ளன.

கட்டிடத் தொழில், கூலித் தொழில்களிலும் கூடச் சிங்களவர்களே இன்று நிறைந்து காணப்படுகின்றனர்.

கடல், அம்மக்களின் இன்னொரு தாய். அந்தக் கடலை நம்பியே பல்லாயிரக்கணக்கான ஈழ மீனவர்களின் வாழ்க்கை நடைபெறுகிறது. அதற்கும் இன்று பேரிடர் வந்துவிட்டது. திரிகோணமலை, மடுவன்கரை, மன்னார் பகுதிகளில் சிங்கள மீனவர்கள் இப்போது குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

வாழ்விழந்து, தொழில் - வணிகம் இழந்து வாடும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களும் சீரழிக்கப்பட்டு வருகின்றன.

புலிகளின் ஆளுமைக்குட்பட்டிருந்த காலத்தில், ஈழத்தில், திரும்பும் திசையயல்லாம் தமிழ் மணமே கமழ்ந்தது. இன்றோ, கடைகள், நிறுவனங்கள், சாலைகளின் பெயர்கள் அனைத்தும் சிங்கள மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு புத்த விகாரைகள் எழுப்பப்படுகின்றன.

ஈழச்சிக்கல் என்பது தமிழ் இனத்தின் சிக்கல் என்னும் நிலையில் இருந்து, மனித உரிமை மீறலாகவும், அனைத்துலகச் சிக்கலாகவும் இன்று பார்க்கப்படுகிறது. ஐக்கியநாடுகள் அவையும், உலக நாடுகளும் ஈழ மக்களின் துயர் துடைக்க முன்வர வேண்டிய காலகட்டம் இப்போது உருவாகியுள்ளது.

இந்நிலையில்தான், உலக அரங்கில் ஈழ மக்களின் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்க வழிசெய்யும் வகையில் டெசோ அமைப்பினால் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு வரும் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. மாநாட்டில், மத்திய அமைச்சர்கள் மற்ற மாநிலத் தலைவர்கள், உலக நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

ஈழ மக்களின் போராட்டத்தை இன்னொரு தளத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய இவ்வேளையில், தமிழர்களாகிய நாம் அனைவரும் மாநாட்டில் ஒன்று கூடுவோம் !

டெசோ மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் அயல்நாட்டினர்

அமைச்சர் ஒஸிக்கேனா போய் டொனால்டு, நைஜீரியா

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக நைஜீரியா வாக்களித்துள்ளது.

நசீம் மாலிக், ஸ்வீடன் நாடாளுமன்ற உறுப்பினர்

திரு நசீம் மாலிக் ஸ்வீடன் நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினரும், அந்த நாட்டின் பழமையானதும, மிகப் பெரியதுமான சோ´யல் டெமாக்ரடிக் கட்சியின் சர்வதேசப் பிரிவின் தலைவரும் ஆவார்.

மனித உரிமை ஆர்வலரான இவர் பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்த பல்வேறு கருத்தரங்கங்கள், ஆய்வரங்கங்களில் கலந்து கொண்டுள்ளார்.

ஸ்வீடன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ரோம், பெல்ஜியம் போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியன்(European Union) மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு ஐரோப்பியப் பாராளுமன்றம் என்ற அவை பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ளது. இந்த ஐரோப்பியப் பாராளுமன்றத்தில், ஐரோப்பிய நாடுகளின் கூட்டுக் கூட்டத்திலும், ஸ்வீடன் பாராளுமன்றத்திலும் தமிழ் ஈழப் பிரச்சினை குறித்துப் பேசுவதாக உறுதியளித்துள்ளார்.

முனைவர் கெமால் இல்திரிம், தூதர் - கிழக்கு ஐரோப்பியா மற்றும் துருக்கி சர்வதேச மனித உரிமை ஆணையம்.

சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் இலங்கையில் நடந்த பொதுத் தேர்தலின் போது, தேர்தல் பார்வையாளராக இலங்கைத் தேர்தல் ஆணையத்தால் அழைக்கப்பட்டு, அந்த தேர்தலின் போது நடந்த தவறுகளை, குறைகளைச் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது. நெல்சன் மண்டேலோ, பிடரல் காஸ்ட்ரோ போன்ற சர்வதேசத் தலைவர்கள் சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் ஆயுட்கால உறுப்பினர்களாக உள்ளனர்.

சர்வதேச மனித உரிமை ஆணையம், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஓ.ஐ.சி (OIC - Organization for Islamic Co - operation) மற்றும் அமெரிக்கக் கண்டத்திலுள்ள பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பான ஓ.ஏ.எஸ் (Organization of American States) ஆகியவற்றுடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பன்னாட்டு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஓ.ஐ.சி. யில் சவூதி அரேபியா, ஐக்கிய அரசு நாடுகள், பஹ்ரைன், ஈரான், குவைத், ஜோர்டான் போன்ற 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் உறுப்புநாடுகளாக உள்ளன. இந்த ஓ.ஐ.சி. அமைப்பானது ஐக்கிய நாடுகள் அவையின் UNTC (United Nations Treaty Collection) -ன் கீழ் இயங்கும் பன்னாட்டு அமைப்பு ஆகும்.

சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் தூதரான திரு கெமால் இல்திரிம் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்திலும் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பிலும் ஈழப் பிரச்சினை தொடர்பாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றிட முயல்வதாக உறுதியளித்துள்ளார்.

யுஸ்மாடி யூசுப், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்.

திரு யுஸ்மாடி யூசுப் அவர்கள் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராகவும், மலேசிய நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பீப்பிள்ஸ் ஐஸ்டிஸ் பார்ட்டியின் சர்வதேசப் பிரிவின் தலைவராகவும் உள்ளார்.

பீப்பிள்ஸ் ஐஸ்டிஸ் பார்ட்டி ஈழத்தமிழர்கள் மற்றும் மலேசியாவில் அகதிகளாகக் குடியேறியுள்ள ஈழத்தமிழர்களின் நலம் காக்க பல்வேறு நிதியுதவிகளையும் செய்துள்ளது. அண்மையில் இந்தக் கட்சியினர் ஈழத்தமிழர்களுக்காக நிதி சேகரித்துக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

மலேசிய நாடு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஏசியன் (ASEAN - Association of South East Asian Nations) அமைப்பின் நிறுவன உறுப்பினராகவும் (Founding Member), இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை, ஆசிய பசிபிக் பொருளாதார அமைப்பு (Asia - Pacific Economic Cooperation), Non - Alignment Movement, மற்றும் காமன்வெல்த் அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளது.

ஆனந்த் குருசாமி, அம்னெஸ்டி இன்டர்நேசனல்

நோபல் பரிசு பெற்ற மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேசனல் உலகப் புகழ் பெற்ற அமைப்பாகும். ஈழத் தமிழர்கள் தொடர்ந்து அங்குள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து பலமுறை கண்டனங்களைத் தெரிவித்துள்ள அம்னெஸ்டி இன்டர் நேசனல் அமைப்பு அவ்வப்போது இலங்கையில் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்டு வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வறிக்கைகளை ஐக்கிய நாடுகள் அவைக்கும், உலக நாடுகளின் பார்வைக்கும் கொண்டு வருகிறது. அம்னெஸ்டி இன்டர்நேசனல், டெசோ அமைப்புடன் இணைந்து ஈழ மக்களுக்காகப் பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளது.

அஃபிகோ முபாரக், தலைவர், நீதி மற்றும் உண்மைக்கான தேசிய ஆணையம், மொராக்கோ.

மொராக்கோ நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரான திரு டாய்டா முகமது அந்நாட்டில் அனைவரும் அறிந்த மனித உரிமை ஆர்வலர் ஆவார். இவர் தனிப்பட்ட முறையிலும், சர்வதேச மனித உரிமை ஆணையம் மற்றும் தான் பொறுப்பு வகிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் பல்வேறு ஈழ ஏதிலிகளுக்கு உதவியுள்ளார். ஈழப்பிரச்சினை குறித்து மொராக்கோ பாராளுமன்றத்தில் பேசித் தீர்மானம் நிறைவேற்ற ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார். 

--------------------------------------------------------------------------------------------------

தோழர் விடியல் சிவா மறைவு

விடியல் பதிப்பக உரிமையாளர் தோழர் விடியல் சிவா 30.07.2012 அன்று மறைந்தார்.

57ஆவது அகவையில் நம்மைவிட்டுப் மறைந்த விடியல் சிவா, தன்னுடைய மாணவப் பருவத்தில் திராவிடர்கழகத்தில் இணைந்து செயல்பட்டார். ஈழவிடுதலைப் போராட்ட ஆதரவாளர். மார்கோஸ் போன்ற போராளிகளை விடியல் பதிப்பகத்தின் மூலம் நமக்கு அறிமுகப்படுத்தியவர். இடதுசாரிச் சிந்தனை யுள்ள பல நூல்களை வெளிக்கொண்டு வந்ததில் இவரின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. எஸ்.வி.ராஜதுரை - வ. கீதா ஆகியோர் பெரியார் குறித்து எழுதியுள்ள விரிவான நூல்களை வெளியிட்டுள்ளார். விடியாத விடியலைத் தேடிச் சென்றுவிட்ட தோழருக்கு நம் இறுதி வணக்கம் !

Pin It