சென்னை மாநகராட்சியின் மேயராகப் பணியாற்றிய தங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று கருதுகிறீர்களா?

ஏன் இல்லை! இந்தியாவில் உள்ள மாநகராட்சிகளிலேயே, சென்னை மாநகராட்சி சிறந்த முறையில் சீர்திருத்தங்கள் செய்தமைக்காக இந்தியப் பிரதமர் முன்னிலையில், கிரிசில் விருது பெற்றுள்ளோம். மாற்றுத்திறனா ளிகளுக்கு ஆற்றிய மறுமலர்ச்சிப் பணிகளுக்காகNational Award for the Empowerment of Persons with Disablities என்ற தேசிய விருது கிடைத்துள்ளது. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதற்காக உலகத் தலைமைப் பண்பு விருது இலண்டனில் வழங்கப்பட்டது. சென்னையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, ஒரே நாளில் 155 வார்டுகளில், 155 முகாம்கள் நடத்தி 60,478 பேர்கள் புணர்வாழ்வுப் பயன்களைச் செய்ததற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் முதன்முறையாக சென்னை மாநராட்சி இடம்பெற்றது.  இவை எல்லாம் எங்கள் பணிக்குக் கிடைத்த அங்கீகாரம்தானே?

நீங்கள் மேயராக இருந்து ஆற்றிய பணிகள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

நிச்சயமாக! ரூபாய் 4000 கோடி மதிப்புடைய, சென்னை மாநகராட்சிக்குரிய நிலங்களை, அதன் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, அழகிய பூங்காக்கள் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரச் செய்தோம். சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் இருக்கும் 33 மயானங்களில் ஊதியம் ஏதும் இல்லாமல், வெறும் அடையாள அட்டையை மட்டும் வைத்துக்கொண்டு, பொது மக்களிடம் கையேந்தும் நிலையை மாற்றி, 183 பணியாளர்களை மாநகராட்சியில் நிரந்தரப் பணியாளர்களாகச்செய்து, வெட்டியான் என்ற அவர்களின் பெயர்களை மயான உதவியாளர்கள் எனப் பெயர்மாற்றம் செய்தோம். அவர்களுக்கு கையுறை, காலணி, சீருடைகள் வழங்கி, அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளை மாநகராட்சியே ஏற்க வகை செய்தோம். சென்னையின் 7 முக்கிய இடங்களில் மேம்பாலங்களும், ஜோன்ஸ் சாலையில் வாகனச் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல தங்கசாலை, ரங்கராஜபுரம், காக்ரோனி பேசின் சாலை, வியாசர்பாடி, ஸ்டான்லி மருத்துவமனை அருகில் எனப் பரவலாக மேம்பாலங்களும், சுரங்கப் பாதைகளும் அமைத்து, மக்கள் பயன் அடைந்து கொண்டிருக்கிறார்கள். இதுபோல இன்னும் பல பணிகளைச் செய்துள்ளோம்.

மாநகராட்சி அளவில் பெண்களுக்கு என்ன நலப்பணிகள் செய்யப்பட்டுள்ளன?

பெண்களுக்கு மகப்பேறு என்பது மிக முக்கிமான ஒன்று. சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் அதற்கான சிகிச்சைக்கு மிக முன்னுரிமை தரப்பட்டுள்ளது. உரிய சிகிச்சை வழங்கப்படுகிறது. பிறக்கும் குழந்தைகளுக்கு 24 மணி நேரத்தில் பிறப்புச் சான்று வழங்கவும், அந்தக் குழந்தைகளுக்கு இலவசமாக புது ஆடைகள், டவல், சோப்பு, பவுடர், அடங்கிய சிறப்புப் பைகளும், பாதுகாப்பு வலையுடன் கூடிய மெத்தையும் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஏழைத் தாய்மார்கள் பயன்பெற மருத்துவமனை களுக்கு நவீன லேப்ராஸ்கோப் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு சிறப்புச் சத்துணவு வழங்கும் திட்டமும், பிரசவத்தின்போது தொற்றுநோய் பாதிப்பினைத் தவிர்க்க ஒரே முறை உபயோகப்படுத்தும் மருத்துவ உபகரணங்கள் வழங்கவும் ‡ என்று தாய்மார்களுக்கான மகப்பேறு மருத்துவ வசதிகளைச் செய்து இருக்கிறோம்.

எதிர்காலச் சந்ததியரான மாணவர்களின் கல்வி குறித்து உங்கள் பணிகள்.

சென்னை மேல்நிலைப் பள்ளி களில் முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச மடிக் கணினி, பள்ளி மாணவர் கள் இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில் பயில பிட்ஜ் அமைப்பு மூலம் சிறப்புப் பயிற்சி அளிப்பது. மாண வர்கள், ஆசிரியர்கள் ஆங்கிலப் புலமை பெற  பயிற்சி வகுப்புகள் நடத்துதல், ஆசிரியர்களுக்குக் கணினி வழங்கி, அதன் மூலம் மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்துவது, மழலையர் பள்ளிகளில் மாண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்துவது, சமுதாயக் கல்லூரிகளில் பயிற்சிகளை முடித்திடும் மாணவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு வழங்கிட ஆணைகள் வழங்க வழிவகை செய்தல், நூலகம், மருத்துவ நோய் தடுப்பு மாத்திரைகள், மருத்துவப் பரிசோதனை, இலவசக் கண்பரிசோதனையும் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டங்களை உருவாக்கி இருக்கிறோம்.9500 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது சென்னையில். அதுமட்டுமல்ல, நுண்கலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தையும் மாணவர்களுக்குத் தொடங்கி வைத்துள்ளோம்.

மழைக்காலங்களில் சென்னை வாழ்மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் அதற்கான திட்டம், என்ன செய்திருக்கிறீர்கள்?

இது ஒரு முக்கியமான பிரச்சினை. மழைக்காலங்களில் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்திடச் சென்னை மாநகரில் ஜவஹர்லால் நேரு நகர்ப்புறப் புணரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1448 கோடியில், மழைநீர் வடிகால்வாய்களை மேம்படுத்தவும், புதிய மழைநீர் கால்வாய்களை அமைக்கவும், நீர்வழிப் பாதைகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதுபோல ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புறப் புணரமைப்புத் திட்டத்தின் கீழ், நகர்ப்புற அடிப்படை வசதிகள் திட்டத்தின் மூலம் 17 கோடி 81 இலட்சம் செலவில், கான்கீரீட் வீடுகள் கட்டுவதற்கான திட்டத்தில் 1370 பயனாளிகள் கண்டு அறியப்பட்டு வீடுகள் கட்டித்தரும் பணியும் இப்பொழுது நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதற்கான மேலும் பல திட்டங்கள் வரிவுபடுத்தப்பட திட்டமிட்டுள்ளோம்.

உங்கள் வெளிநாட்டுப் பயணம் பற்றி...

2009 டிசம்பரில், “உலகம் வெப்பமயமாதல்” குறித்த டென்மார்க் சர்வதேச மேயர்கள் மாநாட்டில் பேசியிருக்கிறேன். 2010 மே மாதம் ஜெர்மன்நாட்டில் நடைபெற்ற ‘பருவநிலை மாற்றம்’ குறித்த கருத்தரங்கில் இந்தியாவின் சார்பில் சிறப்புரை ஆற்றியிருக்கிறேன். 2010 அக்டோபரில் ‘நகரங்களை ஆற்றல் உடையனவாக்குதல்’ குறித்துத் தென்கொரிய இன்சியான் நகரில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டிருக்கிறேன். இப்படிப் போகும்போது அங்குள்ள நலப்பணிகளை கவனித்து சென்னை மாநகராட்சியிலும் அதை நடைமுறைப்படுத்த முயன்று இருக்கிறேன்.

இப்பொழுது நீங்கள் மீண்டும் மேயர் தேர்தலில்,சென்னை மாநகராட்சியில் போட்டியிடுகிறீர்கள். இது குறித்துச் சிறிது சொல்லுங்கள்.

நான் மீண்டும் சென்னை மாநகராட்சி மேயருக்கான தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறேன். என்னுடைய கடந்தகாலப் பணிகளை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இனியும் கூடுதலாக அவர்களுக்கு நான் பணியாற்ற வேண்டும். அதற்கான வாய்ப்பைத் தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு வழங்கியுள்ளார். சென்னையின் குப்பைகளை அகற்றி, குடிதண்ணீர் தட்டுப்பாடுகளைச் சரிசெய்து சாலைகளைப் புணரமைத்து, மின்சாரம் தொடர்பான தட்டுப்பாடுகளை ஒழுங்கு செய்வதும் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மக்கள் நலத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்திப் பணியாற்றுவதும் என்னுடைய தொடர் பணியாக இருக்கும். இந்த உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெருமளவில் வெற்றி வாகை சூடும். நானும் வெற்றி பெறுவேன்.

நேர்கண்டவர்: க.ச. தமிழ்
Pin It