கல்விக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தோழர் ஆனந்தன் ஆற்றிய உரையின் சாராம்சம்:

இந்தக் கருத்தரங்கில் பல கல்விமான்கள் கலந்து கொண்டுள்ளனர். கல்வி குறித்த அவர்களின் கருத்துக்கள் இரு தன்மைகளைக் கொண்டவையாக இருக்கும் வாய்ப்பினைக் கொண்டுள்ளன. ஒன்று கல்வி என்றால் என்ன என்பது குறித்த சித்தாந்தபூர்வக் கருத்தோட்டம். மற்றொன்று தற்போது நடைமுறையில் வழங்கப்படும் கல்வி எவ்வாறு முன்பிருந்ததைக் காட்டிலும் சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறது; அதனைக் குறைந்த பட்சம் முன்பிருந்த அளவிற்காவது காப்பாற்ற வேண்டும் என்ற கண்ணோட்டம். இவ்விரண்டில் முன்னதை கல்வியாளர்களின் கருத்துக்கே முழுமையாக விட்டுவிட்டுப் பின்னதை மட்டும் எடுத்துப் பேசுவது எனக்குச் சுலபமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

கல்வி அன்றும் இன்றும்

நாங்கள் பெற்ற பள்ளிக் கல்வியும் சரி கல்லூரிக் கல்வியும் சரி ஏழை, எளியவர் என்ற வேறுபாடின்றி அனைவரும் ஒரே வகையான பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெற்ற கல்வி. மாணவர்களுடைய பொருளாதார வேற்றுமை கடந்து நாம் அனைவரும் ஒரு நிறுவனத்தில் கல்வி பயின்றவர்கள் என்ற அடிப்படையில் ஒரு உயர்வகை நட்புணர்வு நிலவிய காலமது. பல்வேறு காரணங்களினால் இடையில் பள்ளிக் கல்வியை விட்டுவிட்டவர்களும் கூட தங்களைப் போலன்றி பின்னர்  கல்வியைக் கல்லூரி மட்டத்தில் தொடர்ந்து பல உயர் பொறுப்புகளில் அமர்ந்த பள்ளியில் தங்களோடு உடன் பயின்றவர்கள் குறித்து ஒருவிதப் பெருமித உணர்வுடன் வலம் வந்த காலமது. இன்று இந்த மாவட்ட ஆட்சியாளராக இருப்பவர் என் பள்ளித் தோழர்; இன்றைய இந்த புகழ் பெற்ற மருத்துவர் எனது பள்ளித் தோழர் என்று உவகை பொங்க நினைவு கூர்ந்து அந்த நினைவினைச் சக மனிதர்களோடு அவர்கள் பகிர்ந்து கொண்ட காலம் அது. வெளிப்படையாகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் நாமனைவரும் உடன் பயின்ற மாணவர் என்ற மாய வலையில் மனதார சிக்குண்டு ஒருவித ஆனந்த மயக்கத்தினை அனைவரும் கொண்டிருந்த காலமது.

ஆரம்பக் கல்வி உயர்கல்வி அனைத்திலும் தனியார்மயம்

ஆனால் இன்று அக்காலம் மலையேறிவிட்டது. கல்விப் பொறுப்பிலிருந்து அரசு கொஞ்சம் கொஞ்சமாகக் கைகழுவுவதன் விளைவாக பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியில் தனியார்மயம் கோலோச்சத் தொடங்கி விட்டது. வசதி படைத்தவர் வேலைக்கான கல்வியைத் தனியார் பள்ளிகளிலும் வசதி இல்லாதவர் எழுதப் படிக்கத் தெரிந்தவரை உருவாக்கும் கல்வியை அரசு பள்ளிகளிலும் பெறும் காலமாகக் காலம் மாறிவிட்டது. இது தனியார் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில்பவர்களைக் குறைவாக மதிப்பிட்டு மாணவர்களுக்கிடையே அவர்களை முன்பு ஒன்று சேர்த்த மாய வலைகளுக்குப் பதிலாக ஒரு நிரந்தரத் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டுள்ள காலம். பெயரளவிற்கு மாணவர் என்ற அடிப்படையில் நிலவிய மேலோட்டமான சமத்துவக் கண்ணோட்டமும் இன்று மறைந்து போய்க் கொண்டுள்ளது. பள்ளிக் கல்வியில் தொடங்கி கல்லூரிக் கல்வி வரை எங்கும் எதிலும் தனியார் மயம்; பணமிருந்தால் வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் கல்வியின் பக்கம் நெருங்கு  இல்லாவிடில் பள்ளிப்படிப்போடு நிறுத்திக் கொண்டு காவலாளி போன்ற வேலைகளில் திருப்தியடைய உன்னைத் தயார் படுத்திக்கொள் என்ற நிலை நம் கண் முன்னரே நம்மையும் அறியாமல் தடம் பதித்து வேரூன்றி நிலையும் பெற்றுவிட்டது.

அறிவைக் கண்டு அஞ்சும் அரசுகள்

அரசுகள் அறிவைக் கண்டு அஞ்சுகின்றன அதனால்தான் சமூக விஞ்ஞானக் கல்விப் பாடங்களை அகற்றுவதில் மும்முரமாக இருக்கின்றன. வரலாறு அசோகர் நட்ட மரங்கள் எத்தனை என்பதோடு அதைப் பயிலும் மாணவனது மனவோட்டத்தை நிறுத்தி விடுவதில்லை. எத்தனை அநீதியான அரசமைப்புகள் வரலாற்றில் தோன்றியுள்ளன அவற்றின் அழிவு எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பதையும் அதில் படிக்கலாம். நமது அநீதியான ஆட்சியாளர்கள், வரலாறு படிக்கும் மாணவர்களை இத்தகைய பாடம் புகட்டும் கல்வி நமக்கு எதிராகத் திரண்டெழச் செய்யும் என்று அஞ்சுகின்றனர்.

சமூகவியல் படிக்கும் மாணவர்கள் சமூகத்தில் இதற்கு முன்பிருந்த விஞ்ஞானப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்ட சமூக அமைப்புகளான அடிமை , நிலவுடமை அமைப்புகள் எவ்வாறு மாறி இன்றைய முதலாளித்துவ அமைப்பு தோன்றியுள்ளது என்பதைப் படிக்கின்றனர். அவர்கள் இன்றுள்ள முதலாளித்துவ அமைப்புகள் உட்பட அனைத்துமே மாறக்கூடியவை முதலாளித்துவம் மனித சமூக வளர்ச்சியின் கடைசி வார்த்தையல்ல என்பதைப் பயில்கின்றனர். ஆனால் முதலாளித்துவமே கடைசி வார்த்தை என்பதை அனைவரின் மனதிலும் அகலவியலாது பதிக்க விரும்பும் ஆட்சியாளர்களுக்கு அப்பாடப்பிரிவு பிடிப்பதில்லை.

பொருளாதாரம் படிப்பவர்கள் எவ்வளவு தூரம் கடிவாளம் போட்டுத் தங்களது கருத்தோட்டத்தைச் செயற்கையாக ஒருமுகப் படுத்தினாலும் அவர்களின் பார்வை வாங்கும் சக்திக் குறைவினை உருவாக்கிச் சந்தை நெருக்கடியைத் தோற்றுவிக்கும் முதலாளித்துவத்தின் அடிப்படைக் குணாம்சத்தை அறியாமல் போகாது. அங்கே முதலாளித்துவ ஆட்சியாளர்கள் பொருளாதாரக் கல்வி தோற்றுவிக்கவல்ல தங்களுக்கெதிரான அபாயத்தைக் கண்ணுறுகின்றனர். அதனால் அக்கல்வி போதிக்கப்படாமல் இருப்பதற்குத் தேவையான திரைமறைவு ஏற்பாடுகளைச் செய்கின்றனர். வரலாற்றுக் கல்வியை ஒழித்துக் கட்டிய வரலாறு இல்லாத மனிதராக ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இருக்கலாம். ஆனால் வரலாறும், பாரம்பரியமும் இல்லாதவர்களாக நாம் இருக்க முடியாது.

சந்தைத் தேவையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட கல்வி

புதிய கல்விக் கொள்கை தொடங்கி அரசு அறிவிக்கும் கொள்கைகள் அனைத்தும் ஒரே இலக்கைக் கொண்டவைகளாக உள்ளன. முதலாளித்துவச் சந்தைத் தேவையினை நிறைவேற்றிக் குறைந்த செலவில் முதலாளிகள் அதிக இலாபம் ஈட்ட வழிவகை செய்பவைகளாகவே அவை உள்ளன. அதற்காக அரசு செலவு செய்து கல்வி நிலையங்களை உருவாக்கி ஒரு காலத்தில் அவர்களுக்கு வழங்கியது. தற்போது மக்கள் தொகை முழுவதும் பாட்டாளி மயமாகிக் கல்வி கற்று அதன் மூலம் பணியமர்ந்து வாழ்க்கை நடத்துவதைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு பெரும் பகுதி மக்கள் வந்துவிட்டனர். அந்நிலையில் அதனை விற்றுக் காசாக்க பள்ளி முதல் கல்லூரி வரையிலான கல்வி முழுவதையும் உனக்குத் தாரை வார்க்கிறேன்; அதனை இலாபகரமான தொழிலாக்கி அதிகபட்ச இலாபம் ஈட்டிக்கொள் என்று தனியாருக்கு அரசு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது.

கல் ஒன்று மாங்காய் இரண்டு

இந்நிலையில் ஏழை மக்கள் அதனை எட்டிப்பிடிக்க முடியாதவர்களாகி தங்களுக்கென ஒரு கெளரவமான எதிர் காலத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியாதவர்களாகி வருகின்றனர். அவர்களது கெளரவத்தையும் தார்மீக முதுகெலும்பையும் முறிக்கும் வண்ணம் இலவசத் திட்டங்களை அறிவித்து ஒரு இரந்து உயிர் வாழ்வோர் மனநிலைக்கு மக்களை ஆட்சியாளர்கள் இட்டுச் செல்கின்றனர். அதன்மூலம் அவர்களது போர்க்குணத்தை ஒழிப்பதோடு தங்களது வாக்கு வங்கி அரசியலையும் வலுப்படுத்தும் விதத்தில் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கின்றனர்.

அரசுகள் எத்தனை கேவலமான நிலையில் இன்றுள்ளன என்றால் அவை அவற்றின் ஊழியர்கள் பெயரளவிற்கு இதுவரை செய்து வந்த கடமைகளைச் செய்யுமாறு கூட அவர்களை வற்புறுத்துவனவாக இல்லை, மாறாக தேர்தல் அரசியலில் எங்கள் கட்சிக்கு உதவி புரிந்தால் போதும் என்று எண்ணக்கூடிய நிலையில் உள்ளன. வருந்தத்தக்க விதத்தில் கல்வியின் பால் தங்களுக்கு உள்ள கடப்பாட்டினைக் காட்டிலும் ஆட்சியிலுள்ள கட்சியினரின் அரசியல் மேம்பாட்டின் பால் தங்களுக்குள்ள கடப்பாடே அதிகம் என்ற வகையில் ஆசிரியர்கள் செயல்படும் நிலையும் உருவாகியுள்ளது. ஆசிரியர் அமைப்புகள் கல்வியின் பால் வந்துள்ள தாக்குதலுக்கெதிராகவும் கல்வி மேம்பாட்டினை வலியுறுத்தியும் எடுக்கும் இயக்கங்களைப் போல் பல மடங்கு இயக்கங்களைத் தங்களது பொருளாதாரக் கோரிக்கையை வலியுறுத்தி எடுக்கின்றனர்.

ஒரு நல்ல ஆசிரியர் அவரது ஊதியத்தில் பத்து விழுக்காட்டிற்காவது நூல்கள் வாங்க வேண்டும் அதைக்காட்டிலும் கூடக் கூடுதலாக நூல்கள் வாங்கிப் படித்து ஒரு ஆசிரியர் என்ற ரீதியில் தாங்கள் மாணவர்களுக்குக் குறைவின்றி அறிவை வழங்க வேண்டும் என்ற விதத்தில் தங்களை வளர்த்துக் கொண்ட ஆசிரியர்கள் முன்பிருந்தனர். இன்று அத்தகைய ஆசிரியர்கள் அவ்வளவாக இல்லை. இன்று இந்தக் கருத்தரங்கில் கலந்திருக்கக் கூடிய ஆசிரியர்கள் சராசரித் தன்மையோடும் துறை மனநிலையோடும் தங்கள் துறையினர் மற்றும் தங்கள் அமைப்புகளின் கண் கூடான குறைகளைப் பூசி மெழுகக்கூடாது. கல்வியின் பாலான தங்களது அக்கறையைக் காட்டும் முகமாக இங்கு வந்து கலந்து கொண்டவர்கள் என்ற ரீதியல் துறை மனநிலை கடந்தவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். 

உழைக்கும் வர்க்க இயக்கத்துக்காரன் என்று கூறிக் கொண்டு ஆசிரியர்களைக் குறை கூறுகிறானே என்ற எண்ணம் பலருக்கு ஏற்படலாம். கடமையைச் சரிவரச் செய்யாதவர்கள் எந்த அமைப்பிற்கும் இடையூறாகவே இருப்பர். மேலும் அநீதியை எதிர்க்கும் தார்மீக உரிமை அற்றவர்களாகவும் அவர்கள் ஆகிவிடுவர். அதனால் தான் ஆசிரியரின் குறைகளை உரிமையுடன் சாட வேண்டியுள்ளது.

இன்றுள்ள சமூக அமைப்பு மாறும் போதே சரியான அனைவருக்குமான கல்வி என்ற நம் கனவு நிறைவேறும் என்பது உண்மையாக இருந்தாலும் அதையே கிளிப் பிள்ளைகள் போல் கூறிக் கொண்டிருப்பதும் சரியானதல்ல. முடிந்த விதத்திலெல்லாம் ஏழை மாணவர் பல தகவல்களை, பல்வேறு துறைகள் சார்ந்த அறிவினை அடைய வழி வகுக்கும் கணிணிக் கல்வியை நம்மால் முடிந்த அனைத்து முறைசாரா வழிகளிலும் நம் தரப்பிலிருந்தும்  அவர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். பெற்றோர், மாணவர் அமைப்புகளை முடிந்த அளவு கல்வி மேம்பாட்டிற்காகவும், கற்பித்தலின் குறைகளைச் சுட்டிக் காட்டவும் பயன்படுத்த வேண்டும்.

சம்பாதித்துக் குவிக்கும் பணத்தின் ஒரு சிறு பகுதியைக் கூட புத்தகம் வாங்கப் பயன்படுத்தாத கல்விப் புரவலர்கள்

இக்கருத்தரங்கிற்காக ஒரு நன்கு கற்ற பேராசிரியரை அணுகியபோது அவர் தனது அனுபவத்தை எங்களிடம் எடுத்துரைத்தார். “ஒரு தனியார் கல்லூரியில் அதிகபட்ச மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ச்சி பெறும் அளவிற்கு எம்.பி.ஏ. பாடப்பிரிவில் அவர்களைத் தயார் செய்தேன். அதன் பின்னர் அந்த கல்லூரி நிறுவனரிடம் நான் கேட்டேன் நூலகத்திற்கு புது நூல்கள் வாங்க நிதி ஒதுக்குங்கள் என்று. அவர் ஏளனமாக என்னிடம் கூறினார் நிறையப்பேர் தேர்வுபெற ஏற்பாடு செய்த அளவிற்கு நல்லது; அத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். புத்தகம் நூலகம் என்றெல்லாம் பேசாதீர்கள்”என்று. அதற்கு மேல் அங்கு பணியாற்ற எனக்கு மனமில்லை; நான் அவரிடம் பார்த்த வேலையை விட்டுவிட்டேன் என்றார். இதுதான் இன்று தனியார் கல்வி நிலையங்கள் நடத்துபவர்களின் மனநிலை. இவர்களைப் பற்றித்தான் நமது நீதிமன்றங்கள் கல்விக்காகத் தங்களது பொருளினைச் செலவழித்து கல்வியினை வளர்ப்பவர்கள் என்றும் அவர்களது சுயாதிகாரத்தில் அரசு தலையிடக் கூடாது என்றும் கூறுகின்றன. 

இந்த கருத்தரங்கிற்காகப் பல பேராசிரியர்களை நாங்கள் அணுகிய போது அவர்களில் பலர் கூறியது கல்வியைச் சூழ்ந்துள்ள சீரழிவுகளாக நீங்கள் கூறுவதெல்லாம் உண்மைதான். ஆனால் அந்தச் சீரழிவுகளை நீங்கள் என்ன செய்தாலும் போக்க முடியாது என்பதாகும். அப்படியானால் ஒன்றும் செய்யாது இருந்தால் அவை போய் விடுமா அல்லது இதைவிட மோசமாக ஆகாமல் இருக்குமா  கூறுங்கள் என்று அவர்களை நான் கேட்டேன். எதிர்பார்த்த படியே சஞ்சலத்துடன் கூடிய ஒரு புன்முறுவலே அவர்களிடம் இருந்து இதற்குப் பதிலாக வந்தது.

 

Pin It